பிளாக் செயின் பற்றி ஆஹா ஓஹோன்னு சொல்றீங்க, சரி ! அதெல்லாம் இருக்கட்டும். இப்போ நான் பிளாக் செயின் தொழில்நுட்பத்துக்குள்ள போணும். அதைக் கத்துக்கணும். பிளாக் செயின் டெவலப்பர் ஆகணும். அதுக்கு என்ன வழி ? இந்த வாரம் அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
நவீன தொழில்நுட்பங்களான ஆர்டிபிஷியல் இண்டலிஜெண்ட், மெஷின் லேர்னிங், பிக் டேட்டா, இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் எல்லாமே கணினி சார்ந்த தொழில்நுட்பங்கள். அதே போல தான் இந்த பிளாக் செயின் தொழில்நுட்பமும் கணினி சார்ந்த தொழில் நுட்பமே.
எனவே, கணினி சார்ந்த ஒரு பட்டம் பிளாக் செயின் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்களின் அடிப்படைத் தேவை. ஒருவேளை எம்சிஏ போன்ற முதுகலைப் படிப்பு இல்லாதவர்கள் கணினி இளங்கலையை வைத்துக் கொண்டு பிளாக் செயினுக்குள் நுழையலாம். பி.ஈ போன்ற எஞ்சினியரிங் படிப்பு படித்தவர்களும், எம்.ஈ போன்ற முதுகலை எஞ்சினியரிங் படித்தவர்களும் இதில் தாராளமாக நுழையலாம்.
கணினி மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் இந்த துறையில் நுழையலாம். ஒருவேளை அவர்கள் கணினி பட்டப்படிப்பு பெறாதவர்களாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், கணினி பட்டப்படிப்பு அவசியம். அது இல்லாத பட்சத்தில் கணினி மென்பொருள் துறையில் வேலை பார்த்த நல்ல அனுபவங்கள் இருந்தாலும் போதுமானது.
பழைய காலத்தில் ஒரு விதமான ஹேர்ஸ்டைல், ஜீன்ஸ் எல்லாம் வைத்திருந்தோம். பிறகு அவையெல்லாம் பழைய சங்கதிகளாகி, புதிய ஸ்டைல்கள் இடம்பிடித்தன. காலச் சுழற்சியில் பழைய ஸ்டைல்கள் புதிதாக மீண்டும் முளைத்து வரும். இது வாடிக்கை !
அதே போல, சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த கணினி மென்பொருள் சி++. பிறகு வந்த புதிய தொழில்நுட்பங்களின் அலையில் கொஞ்சம் அமுங்கிக் கிடந்தது. இப்போது மீண்டும் முளைத்து வந்து பிளாக் செயினுக்கு கைகொடுக்கிறது.
பிளாக் செயினில் அதிக சர்வர் சைட் ப்ரோக்ராமிங் தேவைப்படுவதால் இந்த சி++ மென்பொருள் முக்கியமானதாய் மாறிவிட்டது. அந்த மென்பொருளை கற்றுக் கொள்ளுங்கள். அது ரொம்பவே பயனளிக்கும். கணினி பாடம் படிப்பவர்கள் கல்லூரியிலேயே சி++ படித்திருப்பார்கள். எனவே அவர்களுக்கு அது பிரச்சினை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை சி++ தெரியாதவர்களெனில் ஜாவா படித்திருந்தாலும் பயனளிக்கும். ஜாவா மென்பொருளும், சி++ மென்பொருளும் ஆப்ஜக்ட் ஓரியண்டட் புரோகிராமிங் கான்செப்ட் என்பது மென்பொருட்களோடு பரிச்சயம் உள்ளவர்களுக்குத் தெரிந்த விஷயம் தான். எனவே சி++ தெரியாதவர்கள் ஜாவா மென்பொருளைக் கற்றுக் கொள்ளலாம்.
கிரிப்டோகிராஃபி (Cryptography) பற்றி தெரிந்து கொள்வது பிளாக் செயின் தொழில்நுட்பத்துக்கு நிச்சயம் கைகொடுக்கும். கிரிப்டோகிராபி தான் பிளாக் செயின் பரிவர்த்தனையின் மையமாய் இழையோடும் விஷயம். எனவே அதைக் குறித்த பயிற்சிகளை எடுக்கலாம். பாதுகாப்பு விஷயங்களைப் பொறுத்தவரை பிளாக் செயின் முன்னிலையில் இருப்பது நாம் அறிந்ததே. கிரிப்டோஎக்கனாமிக்ஸ் பற்றி படிப்பது பிளாக் செயின் பாதுகாப்பு கட்டமைப்புக்கு வலுவூட்டும்.
என்கிரிப்ஷன், டிகிரிப்ஷன் (Encryption, Decryption) தொழில்நுட்பம் இன்றைக்கு மிகப் பெரிய அளவில் மாற்றங்களை அடைந்துள்ளது. தகவல்கள் எல்லாம் டிஜிடல் மயமானதால் அதை பாதுகாக்க இந்த என்கிரிப்ஷன் நுட்பங்கள் தேவைப்படும். இவை மிகப்பெரிய மதிப்பு மிக்கவை. பிட்காயின் பயன்படுத்தும் என்கிரிப்ஷன் அல்காரிதத்தின் விலை 30 ஆயிரம் கோடி என கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, டிஸ்ட் ரிபியூட்டட் கம்ப்யூட்டிங் (distributed computing) பற்றித் தெரிந்து கொள்வதும், அதைக் குறித்த பாடங்களைப் படிப்பதும் பயனளிக்கும். டோரண்ட் இணையதளங்களைப பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். அது பீர் டு பீர் (peer-peer) எனப்படும் டிஸ்றிபியூட்டர் முறை தான். ஆனால் டோரண்ட் வசீகரிக்கவில்லை. அதிக பயன்பாடு இருந்தும் அது அதிக அளவு நம்பிக்கைக்குரியதாக மாறவில்லை. காரணம் பீர் கணெக்ஷன் கொடுப்பவர்களுக்கு அது எந்த பயனையும் அளிக்கவில்லை. அதே போல, வைரஸ்கள் நுழைவதை தடுக்க பாதுகாப்பு வசதிகளும் போதுமானதாக இல்லை.
டோரண்ட் என்றாலே இன்றைக்கு எல்லோரும் பயந்தடித்து ஓடக் காரணம் அது ஆபத்தானது எனும் சிந்தனை தான். பாதுகாப்பானதாகவும், பயனுள்ள வகையிலும் அது இருந்திருந்தால் இன்று அது மிகப்பெரிய உயரத்தை எட்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த டிஸ்ட்டிரிபியூட்டர் குறித்துப் படித்திருப்பது, அதைக் குறித்து அறிந்திருப்பது இவையெல்லாம் பிளாக் செயின் தொழில்நுட்பத் துறையில் நுழைய விரும்புபவர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்.
மெக்கானிசம் டிசைனர்ஸ் குறித்துப்( Mechanism designers ) என்பவர்கள் கிரிப்டோகிராஃபியையும், டிஸ்றிபியூட்டட் கம்ப்யூட்டிங்கையும் இணைக்கின்ற பணியைச் செய்பவர்கள். அதை நோக்கிப் பார்வையைச் செலுத்துவது பிளாக் செயின் துறையில் நுழைய நினைப்பவர்களுக்கு பெரிய உதவியாய் இருக்கும். அறிவியல் துறையில் இருப்பவர்கள் பயாலஜிகல் மெக்கானிசம் பற்றி தெரிந்திருப்பார்கள். நமது உடல் மிகப்பெரிய ஒரு பிளாக் செயின் அமைப்பு. நமது டி.என்.ஏ, உயிரியல் மெக்கானிசம் போன்றவற்றையெல்லாம் தெரிந்து கொண்டவர்கள் எளிதில் பிளாக் செயினையும் புரிந்து கொள்வார்கள்.
ஹைச் டி எம் எல் (HTML) பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அதைப் படித்து வைத்துக் கொள்ளுங்கள். எளிதான விஷயம். பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் இந்த ஹைச்.டி.எம்.எல் பயன்படுகிறது. கேஸ்கேடிங் ஸ்டைல் ஷீட் எனப்படும் சி.எஸ்.எஸ் (CSS) பற்றிய அறிவும் உங்களுக்கு பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் உதவும். அதே போல ஸ்மார்ட் கான்றாக்ட் (Smart Contract) பற்றியும் தெரிந்து வைத்திருங்கள்.
டிஜிடல் சிக்னேச்சர், சிக்னேச்சர் வெரிபிகேஷன் போன்ற விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது பிளாக் செயின் தொழில்நுட்பத்துக்கு உதவும். பிளாக் செயினில் டெவலப்பிங் ஸ்டைலை ‘டிட்டர்மினிஸ்டிக்’ ஸ்டைல் என்பார்கள். அதாவது மாறாத நிலையான ஒரு கட்டமைப்பு. ஒரு பரிவர்த்தனை எப்படி செயல்பட வேண்டுமோ அப்படித் தான் இன்றும் செயல்படும், நாளையும் செயல்படும். அதில் மாற்றம் இருக்காது. அதற்கேற்ப மென்பொருள் எழுதவேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக எந்த விஷயத்தைக் கற்றுக் கொள்ளப் போனாலும், அந்த தொழில்நுட்பத்தைக் குறித்த தகவல்களை முதலில் சேகரிக்க வேண்டும். இன்றைக்கு பிளாக் செயின் குறித்த கட்டுரைகள், நூல்கள், விளக்கங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் என எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கின்றன. நமது தேவைக்கேற்ப அவற்றைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். பிளாக் செயின் நுட்பத்தில் நுழையும் முன் இந்த கட்டுரைகள், வீடியோக்கள் பார்த்து அதைக் குறித்த ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அதன் பின் அதன் பயன்பாடுகள் குறித்த தகவல்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நமது டொமைன் பிளாக் செயினுக்கு ஒத்து வருமா இல்லையா என்பதைக் கண்டு கொள்ள இது பயன்படும். எங்கெல்லாம் பிளாக் செயின் பயன்படும், எங்கெல்லாம் பயன்படாது ? எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் போன்ற விஷயங்களையெல்லாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
சுருக்கமாக, ஒரு கணினி பட்டப்படிப்பு அல்லது கணினி துறையில் அனுபவம். கூடவே பிளாக் செயின் குறித்த புரிதல், அதன் தேவைகள் குறித்த புரிதல். அத்துடன் சி++, ஜாவா போன்ற மென்பொருள்களின் பரிச்சயம். இவை இருந்தால் போதும் பிளாக் செயினுக்குள் நுழைந்து பிரகாசிக்கலாம்.