11
மாஞ்சு மாஞ்சு பிளாக் செயினைப் பற்றி இத்தனை வாரங்கள் எழுதக் காரணம் அது தொழில்நுட்ப உலகில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது தான். இன்னும் அது தொடர்ந்து வளரும் என்பதிலும் சந்தேகமில்லை. அதை ஒரு சின்ன புள்ளிவிவரத்தின் மூலம் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளலாம்.
2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருந்த பிளாக் செயின் வேலைவாய்ப்புகள், சரியாக ஒரு ஆண்டிற்குப் பிறகு 207 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2015ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 631% வளர்ச்சியடைந்திருக்கிறது. புள்ளிவிவரங்களின் அனுமானத்தின் அடிப்படையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இது இன்னும் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எதிர்காலத்தில் பிளாக் செயின் ஒட்டு மொத்த மக்களையும் இணைக்கின்ற ஒரு பாலமாக இருக்கும் என கணிப்புகள் சொல்கின்றன. வங்கிகளையோ, ஷாப்பிங் தளங்களையோ தனித்தனியே தொடர்பு கொள்ளும் நிலையைத் தாண்டி, பயனர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் நிலைக்கு பிளாக்செயின் பெரிதும் கைகொடுக்கும்.
கிரவுட் சோர்சிங் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பல இடங்களிலிருக்கின்ற, வல்லுநர்கள் இணைந்து ஒரு பணியைச் செய்வது இந்த கிரவுட் சோர்சிங் என சுருக்கமாய்ச் சொல்லலாம்.
ஒரு நிறுவனத்துக்கு ஆள் தேவையெனில் அதற்காக விளம்பரம் கொடுத்து, பயோடேட்டாக்களை பரிசீலித்து, ஆட்களை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து, அவர்களின் தகுதியை பரிசோதித்து, வேலைக்கு ஆர்டர் கொடுத்து, அவர்களை வேலையில் சேர்த்து , என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லி, வேலையை முடிப்பது ஒரு வகை. அதாவது, இப்போது இருக்கின்ற முறை. இது வழக்கமான முறை.
இன்னொரு வழி என்னவென்றால், “எனக்கு இந்த வேலையை முடிக்க வேண்டும். விரும்புவோர் முடித்துத் தரலாம்” என கேட்பது. உதாரணமாக் ஒரு மொபைல் ஆப் டெவலப் பண்ண வேண்டும் என நீங்கள் விரும்பினால் அதை பொதுவில் சொல்லலாம். உலகின் ஏதோ மூலையில் இருக்கின்ற ஒருவர் ஒத்துக் கொண்டு அந்தப் பணியைச் செய்வார், இன்னொரு மூலையில் இருக்கின்ற ஒருவர் அதை பரிசோதித்துப் பார்த்து ஓக்கே சொல்வார். உங்களுடைய வேலை முடிந்து விடும்.
இதன் மூலம் உங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் தலைவலியே இல்லை. வேலையும் சுமூகமாக நடக்கும். அமெரிக்காவிலுள்ள டெவலப்பரும், கனடாவிலுள்ள டெஸ்டரும் சேர்ந்து லண்டனிலுள்ள ஒரு நிறுவனத்துக்காக வேலை பார்க்கலாம். நேரமும் மிச்சம். சம்பளம் அவரவர் வங்கிக் கணக்குக்கு அனுப்பவும் செய்யலாம்.
இந்த கிரவுட் சோர்சிங் முறை சில இடங்களில் நன்றாக செயல்பட்டு வருகிறது. இன்னும் பல இடங்களில் இது மெல்ல மெல்ல பரவி வருகிறது. இதன் முழு வீச்சுக்கு பிளாக் செயின் தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே போல கிரவுட்ஃபண்டிங் என்பது இன்னொரு விஷயம். இது உலகெங்கும் இருக்கிற மக்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் வாங்கி, ஒரு பெரிய தொகையை உருவாக்கி, அதன் மூலம் ஒரு தொழிலைச் செய்வது. அதில் கிடைக்கின்ற லாபத்தை அப்படியே முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது. அத்தகைய கிரவுட் ஃபண்டிங் முறைக்கு இப்போது பிளாக் செயின் தொழில்நுட்பம் பெருமளவில் கை கொடுக்கிறது.
இதை ஒருமுறை வெள்ளோட்டம் விட்டபோது சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை இரண்டே மாதங்களில் மக்களிடமிருந்து பெற்று சாதித்துக் காட்டியது ஒரு நிறுவனம். வாங்கியவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் லாபம் அவர்களை வந்தடையும் என்பது திட்டம். செயல்படுத்திய விதங்களில் சில சவால்களை சந்தித்தாலும், இத்தகைய தொழில்நுட்பத்தால் கிரவுட் சோர்சிங் நிச்சயம் வெற்றியடையும் என்பதையே அது நிரூபித்துக் காட்டியது.
ஷேரிங் எக்கணாமி , பகிரும் பொருளாதாரம், முறையில் நம்மிடம் இருப்பதை யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்து உதவுகின்ற ஒரு முறையை பிளாக் செயின் உருவாக்கும். கடையில ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும்போது கைமாத்தாக பணத்தை பக்கத்தில் இருப்பவரிடம் வாங்குவது போல, டிஜிடல் வெளியில் யாரிடமிருந்து வேண்டுமானாலும் டிஜிடல் பணத்தை வாங்கி, பின்னர் திரும்பச் செலுத்தும் முறையை இது உருவாக்கும்.
டிஜிடல் பரிவர்த்தனை ஏற்கனவே பணமற்ற சமூகத்தை நோக்கி நடக்கிறது. இனிமேல் அது ஏடிஎம், கிரடிட் டெபிட் கார்ட் போன்றவை ஏதும் இல்லாத ஒரு இடத்தை நோக்கி நகரும். இந்த மாற்றத்தின் பின்னணியிலும் முன்னணியிலும் பிளாக் செயின் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.
எந்த நிறுவனத்துக்கும் மிக முக்கியமான பணிகளில் ஒன்று டாக்குமென்ட் மேனேஜ்மென்ட், அல்லது ஃபைல் மேனேஜ்மென்ட். பத்திரமாகவும் வைக்கவேண்டும், அழிக்கவும் முடியாது, கவனமில்லாமல் வைத்திருந்தால் சிக்கலில் மாட்டிக் கொள்வோம். என இது பல முனைகளிலும் கூர்மையாக இருக்கக் கூடிய விஷயம். அதை கவனமாகவும், பாதுகாப்பாகவும்,எளிதில் எடுக்கக் கூடிய வகையிலும் கையாள பிளாக் செயின் உதவுகிறது.
அதன் ஒரு பாகமாக நமக்குச் சொந்தமானவற்றை காப்புரிமை போல இணையத்திலும் பகிர ஒரே வழி இந்த பிளாக் செயின் நுட்பம் தான். பல ஆல்பம் தயாரிப்பாளர்கள் தங்களுடைய பாடல்களை இணையத்தில் பகிர இந்த தொழில் நுட்பத்தைத் தான் பயன்படுத்துகின்றனர். மைசிலியா ஆப் இதன் ஒரு சரியான உதாரணம் எனச் சொல்லலாம்.
மின்சாரத்தின் தேவை உலகெங்கும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பல விதங்களில் மின்சாரத்தை தயாரிக்கும் முறைகளும் பரவிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை எல்லா இடங்களிலும் படுவேகமாக பரவுகிறது. அப்படி சேமிக்கின்ற மின்சாரத்தை மற்ற இடங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் முறைக்கும் இந்த பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பல நாடுகள் பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றன. அமெரிக்காவிலுள்ள கான்சென்சிஸ் நிறுவனம் இதை வெள்ளோட்டம் விட்டு வெற்றியும் பெற்றிருக்கிறது.
தனிமனிதனுடைய அடையாளங்களை சோதித்தறிவது இப்போது மிகப்பெரிய சவால். ஆன்லைன் பரிவர்த்தனைகளின் மிகப்பெரிய சவாலே இது தான். இதை நிவர்த்தி செய்யும் வழிகளைத் தான் எல்லோரும் முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்த ரேஸில் முன்னால் இருப்பது பிளாக் செயின் தான். இப்போது ஏ.எம்.ஒய் எனப்படும் ஆன்டி மணி லான்டரிங், கே.ஒய்.சி எனப்படும் நோ யுவர் கஸ்டமர் போன்றவற்றையெல்லாம் பிளாக் செயின் தொழில்நுட்பத்தோடு இணைத்து அதை வலுப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.
இதைவிட பெரிய முயற்சியாக ஸ்டாக் எக்சேஞ்ச், பங்கு பரிவர்த்தனைகள் போன்றவற்றில் பிளாக் செயின் தொழில்நுட்பத்தை கொண்டு வரும் முயற்சியைச் சொல்லலாம். ஒருவருக்கொருவர் இதில் இணைந்திருக்க முடியும் என்பதால் செட்டில்மென்ட் விஷயங்களுக்கெல்லாம் நாள் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உடனுக்குடன் நடக்கும் என்பதை இதன் வலிமையாகச் சொல்கின்றனர்.
நம்பிக்கையின் அடிப்படையில் பண பரிவர்த்தனைகள் நடப்பது சவாலானது. சோதிக்கப்பட்டு, ஊர்ஜிதப்படுத்தப்பட்ட வழிவகைகளில் நடப்பதே பாதுகாப்பானது. காரணம் டிஜிடல் பரிவர்த்தனை என்பது இணைய வெளியில் நடப்பது. இங்கே ரகசியம் எனும் பேச்சுக்கே இடமில்லை. தகவல்களிலும், நாட்டின் பொருளாதாரத்திலும் கவனம் செலுத்தும் நாடுகள் பிளாக் செயினை வரவேற்கின்றன. உதாரணமாக சீனா தனது நிர்வாகம், கல்வி, பொருளாதாரம் என எல்லா இடங்களிலும் பிளாக் செயினை பயன்படுத்த தீவிர அலசல்களை மேற்கொண்டிருக்கிறது.
ஏன், அமெரிக்காவின் மிகப்பெரிய அரசு அமைப்பான எஃப்.டி.ஏ ஃபுட் அன்ட் ட்ரக் அட்மினிஷ்ட்ரேஷன் இப்போது பிளாக் செயினை பரிசோதித்துப் பார்த்திருக்கிறது.
பிளாக் செயின் இப்படி பல்வேறு இடங்களில் புதிதாக மூக்கு நுழைக்க ஆரம்பித்திருக்கிறது. அதை தொழில்நுட்ப உலகமும் வரவேற்கிறது. இவையெல்லாம் தொழில்நுட்ப உலகில் பிளாக் செயினின் ஆதிக்கத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது.
*
சேவியர்