பிளாக்செயின் மொபைல்
இன்றைய தொழில்நுட்ப உலகின் மாபெரும் வளர்ச்சி என ஸ்மார்ட்போன்களைக் குறிப்பிடலாம். கடந்த சில ஆண்டுகளில் அது கடந்துவந்த விஸ்வரூப வளர்ச்சி வியக்க வைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டின் தொழில்நுட்பத்தை விட பலமடங்கு வசீகரமான தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் களமிறங்குகிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ஸ்மார்ட்போன் ஒரு காட்டுத் தீயைப் போல ஏகப்பட்ட கருவிகளை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது என்று சொல்லலாம்.
கடிதம்,மின்னஞ்சல், ஆடியோ சிஸ்டம், வீடியோ பிளேயர், கேமரா, பிரவுசிங் சென்டர்கள் என இவை விழுங்கிய கருவிகள் எக்கச்சக்கம். இப்போது கணினிகளையும் இது தேவையற்ற பொருளாக மாற்றியிருக்கிறது என்பதே நிஜம். எனினும் இந்த மொபைல் தொழில்நுட்பத்தில் இதுவரை பிளாக்செயின் நுழையவில்லை. அந்த முதல் சுவடை, முதல் வெள்ளோட்டத்தை சமீபத்தில் ஹைச்.டி.சி நிறுவனம் நிகழ்த்தியிருக்கிறது.
தனிநபர் தகவல் பாதுகாப்பின்மை என்பது இப்போது சர்வதேசப் பிரச்சினையாகியிருக்கிறது. பிரபல நிறுவனங்களெல்லாம் இந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கின்றன. ஆளானப் பட்ட சுந்தர் பிச்சையே கைதி போல கோர்ட் முன்னால் விளக்கமளிக்க வேண்டிய சூழலை இது உருவாக்கியிருந்தது.
நமது மொபைலில், இணையத்தில் நாம் நிகழ்த்தும் எல்லாம் பரிவர்த்தனைகளும் திருடப்படலாம் எனும் சூழலே இன்று நிலவுகிறது. நமது மொபைலில் இருக்கும் ஸ்லீப்பர் செல்களான சென்சார்கள், ஜிபிஎஸ் டிராக்கர்கள், ஆப்கள் போன்றவையெல்லாம் நமது தகவலை எங்கெங்கோ அனுப்பிக் கொண்டிருக்கின்றன.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் பிரபல நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி லாபத்தைச் சம்பாதித்துக் கொடுக்கின்றன நமது தகவல்கள். பதிலுக்கு நமக்கு என்ன பயன் ? இந்த தகவல்களின் உரிமையாளர்கள் நாம் தானே ? சொந்தக்காரனுக்கு எந்த காப்பிரைட்டும் இல்லையா ? நமது தகவல்களினால் நமக்கு எந்த வருமானமும் இல்லையா ? இப்படிப்பட்ட கேள்விகள் எழுவது இயல்பு. இவற்றையெல்லாம் பிளாக் செயின் தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்கள் தீர்த்து வைக்கலாம் என்பது தான் வசீகர அம்சம்.
நமது நடத்தை, நமது ஷாப்பிங், நமது ஹெல்த், வங்கி பரிவர்த்தனை, நமது இணைய பயன்பாடு எல்லாமே ஏதோ ஒரு நிறுவனத்திடம் இருக்கிறதே தவிர, நம்மிடம் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. இதையே கொஞ்சம் மாற்றி சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய தகவலை இன்னொருவர் பயன்படுத்தினால் உங்களுக்கு அதற்குரிய ஒரு பலன் கிடைக்கிறது. எனில், உங்களுடைய தகவல் திருடப்படும் சூழல் மாறி நீங்களே உங்கள் தகவலை பகிரும் சூழல் உருவாகும் இல்லையா ? இதைத் தான் பிளாக் செயின் மொபைல் செய்யும் என்கிறார் ஹைச்.டி.சி நிறுவன தலைமை அதிகாரி ஃபில் சென்.
உங்களுக்குச் சொந்தமாக ஒரு நிலம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அதை யாரேனும் ஆக்கிரமித்தால் சும்மா பார்த்துக் கொண்டிருப்பீர்களா ? அப்படியானால் உங்களுடைய தகவலை யாரோ ஆக்கிரமித்தால் மட்டும் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் ? என அவர் கேள்வி எழுப்புகிறார். எப்படி கற்காலத்தில் உடல் வலிமை ஒரு மனிதனுடைய மதிப்பை நிர்ணயித்ததோ, இன்றைய யுகத்தில் தகவல்களே ஒரு மனிதனுடைய வலிமையை நிர்ணயிக்கின்றன. ஆனால் இதை யாரும் உணர்வதில்லை. தங்களுடைய தகவலினால் எந்த பயனும் இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள். அத்தகைய உதாசீனமே பெரும் நிறுவனங்களின் பலம்.
ஹைச்.டி.சி தனது மொபைலுக்கு எக்ஸோடஸ் 1 என பெயரிட்டிருக்கிறது. பைபிளில் எக்ஸோடஸ் என ஒரு நூல் உண்டு. எகிப்தில் அடிமைகளாய் இருந்த சுமார் இருபது இலட்சம் எபிரேயர்களை மோசே எனும் விடுதலை வீரர் விடுவித்துக் கொண்டு வரும் நிகழ்வு தான் அந்த நூலின் அடிப்படை. அந்த சிந்தனையின் அடிப்படையில் தான் இந்த மொபைலுக்கு எக்ஸோடஸ் எனும் பெயரை இட்டிருக்கின்றனர். இன்றைக்கு பல நிறுவனங்களுக்கு அடிமைகளாய் இருக்கும் பயனர்களை சுதந்திரமாக்கி விடும் புதிய தொழில்நுட்பம் இது என்கின்றனர்.
இந்த மொபைலில் நமது தகவல்கள் வேறெந்த நிறுவனத்துக்கும் செல்லாது. பேங்க் லாக்கர்களைப் பயன்படுத்துவோருக்கு தெரிந்திருக்கும். நம்மிடம் ஒரு சாவி இருக்கும். வங்கியில் ஒரு சாவி இருக்கும். இரண்டு சாவியையும் போட்டால் தான் லாக்கர் திறக்கும். இந்த பிளாக் செயின் தொழில்நுட்பமும் அத்தகைய ஒரு சாவியை பயனரிடமே கொடுக்கிறது. தேவையானவற்றை அந்த பாதுகாப்புத் தளத்தில் நாம் போட்டு வைக்கலாம். நாம் விரும்பாமல் அந்த தகவல்களை யாரும் எடுக்க முடியாது என்பது தான் எளிமையான புரிதல்.
பகிரப்படுகின்ற தகவல்கள் எல்லாமே யாரும் பிரதியெடுக்க முடியாத தொழில்நுட்பத்திலும், செக்யூரிடி கீ யுடனும் தான் பகிரப்படும் என்பதால் தகவல் பாதுகாப்புக்கு உத்தரவாதம். இது டிஜிடல் உலகில் இதுவரை சாத்தியமில்லாத ஒன்றாய் இருந்தது. பிளாக் செயின் தான் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் பாடகர்கள், எழுத்தாளர்கள், வீடியோ உருவாக்குபவர்கள் போன்றோர் தங்களுடைய தகவல்களை சொந்தம் கொண்டாடவும், லாபம் பார்க்கவும் முடியும். சைபர் தகவல் திருட்டு குறையும்.
மொபைல் கேமிங் எனப்படும் விளையாட்டு ஏரியாவிலும், பல சீரியசான வேலைகளை பிளாக் செயின் செய்யப் போகிறது. கிரிப்டோகிட்டீஸ் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு ஒன்று உருவாகிறது. அதில் நீங்களே டிஜிடல் பூனையை வளர்க்கலாம். விளையாடலாம். அதன் மதிப்பு பயன்பாட்டுக்கு ஏற்ப அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு பூனை ஒருவரிடம் மட்டும் தான் இருக்கும். காப்பியடிக்கவும் முடியாது. இதை நீங்களே டிஜிடல் வெளியில் விற்கலாம், உண்மையான பணத்துக்கு ! என விளையாட்டு ஏரியாவையும் ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கும் திட்டங்களுடன் பிளாக்செயின் களமிறங்குகிறது.
இலட்சக்கணக்கான கிரடிட் கார்ட் தகவல்கள் திருடப்பட்டன. இலட்சக்கணக்கான ஆதார் திருடப்பட்டன போன்ற தகவல்களை நாம் அடிக்கடி கேட்கிறோம். அத்தகைய சிக்கல் பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் நிகழாது. ஒட்டு மொத்த தளத்தை முடக்குவதோ, ஒட்டு மொத்த தகவல்களையும் திருடுவதோ சாத்தியமே இல்லை.
இப்போதைக்கு ஒரே ஒரு சிக்கல் தான் இந்த பிளாக் செயின் போன்களில். ஒருவேளை உங்கள் போன் திருடப்பட்டால் என்னவாகும் ? உங்களுடைய டிஜிடல் பணம் அதில் மட்டுமே இருக்கும். உங்கள் டிஜிடல் சாவி அதில் மட்டுமே இருக்கும். எனில் என்ன செய்வது ? அதுவே இப்போதைய மிகப்பெரிய சவால். அதற்கான தொழில்நுட்ப தீர்வுகள் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
முதல்கட்டமாக, சாவி தொலைந்து போனால் மீட்டெடுக்கும் வழிமுறையான சோஷியல் கீ ரெக்கவரி முறையை கொண்டு வருகிறது. இதொன்றும் கம்பசூத்திரமில்லை. பல ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஒரு மேப்பை பல துண்டுகளாகக் கிழித்து ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு துண்டை கொடுத்து வைப்பார்கள். எல்லாவற்றையும் சேர்த்தால் தான் முழு மேப் கிடைக்கும். அதே போல, நமது கீயை சின்னச் சின்ன துண்டுகளாகப் பிரித்து பலரிடம் கொடுத்து வைக்கும் வழிமுறையே இது.
ஒருவேளை கீ தொலைந்து போனால் நாமாகவே எல்லா துண்டுகளையும் எடுத்து, இணைத்து, கீயை கண்டுபிடிக்கலாம். ஒவ்வொருவரிடமும் ஒரு பாகம் மட்டுமே இருப்பதால் அவர்களால் அதை பயன்படுத்த முடியாது. யாரிடமெல்லாம் கொடுத்து வைத்திருக்கிறோம் என்பதும் நமக்கு மட்டுமே தெரியும். இது தான் அந்த சாவியை மீண்டெடுக்கும் வழிமுறை.
இந்த பிளாக் செயின் மொபைலுக்கென தனியே புதிய ஆப்கள் உருவாக்கப்பட வேண்டும். இவற்றை டிஆப்ஸ் ( டி சென்ட்ரலைஸ்ட் ஆப்ஸ்) என்கிறார்கள். இவை ஒரு தனிநபர் என்றில்லாமல் பீர் டு பீர் எனப்படும் தொழில்நுட்பத்தில் இயங்கும். இதனால் வேகமான சந்தைப்படுத்தல் சாத்தியமாகும்.
இந்த பிளாக்செயின் தொழில்நுட்ப போன் என்பது எதிர்காலக் கனவுகளுடன் சுவடு பதித்திருக்கும் அதி நவீன நுட்பம். இது வேகமெடுக்க நீண்ட காலம் ஆகலாம், ஆனால் ஒட்டு மொத்த மொபைல் பயன்பாட்டையே புரட்டிப் போடும் வலிமை அதற்கு உண்டு என்பது மட்டும் சர்வ நிச்சயம்
*
சேவியர்