மீம்ஸ்
மீம்ஸ்களால்
கட்டமைக்கப்படுகிறது
வாழ்க்கை.
காரணத்தோடும்
காரணமின்றியும்
மீம்ஸ்கள்
பிறந்து கொண்டே இருக்கின்றன
ஒரு
மழை இரவின்
புற்றீசல் போலவோ,
கவனமாய் செதுக்கப்பட்ட
பட்டாம்பூச்சி போலவோ
அவை
டிஜிடல் சிறகுகளால்
பறந்து திரிகின்றன
ஒரு கோபத்தில்
முளையை
அவை
நகைச்சுவைக் கால்களால்
நசுக்கி நகர்கின்றன
ஒரு துயரத்தின்
விதையை
அவை
குரூரச் சிரிப்பால்
குதறிக் கடக்கின்றன
ஒரு தோல்வியின்
கதையை
அவை
கிண்டலின் தூண்டிலில்
தூக்கிலிட்டுச் சிரிக்கின்றன.
மீம்ஸ்களால்
கட்டமைக்கப்படுகிறது
வாழ்க்கை.
அது
ஒரு நியாயத்தின் குரலையும்
நடுவீதியில்
நிர்வாணமாக்குகிறது
ஒரு
தார்மீகக் கோபத்தை
வன்மக் கரங்களால்
வலுவிழக்கச் செய்கிறது.
ஒரு
புரட்சியின் பாதச்சுவடை
புயல்ப்பாதங்களால்
புரட்டித் தள்ளுகிறது.
மீம்ஸ்களால்
கட்டமைக்கப்படுகிறது
வாழ்க்கை.
அங்கே
நிஜங்கள் மட்டுமல்ல
நிஜங்களின் நிழல்களும்
நிராயுதபாணியாகின்றன
*
சேவியர்
*