தன்னம்பிக்கை : அடுத்தவன் என்ன சொல்வானோ ?

அடுத்தவன் என்ன நினைப்பானோஎன்ற கவலை இன்று பெரும்பாலான மனிதர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அடுத்தவர்களின் மன நிலைக்கு ஏற்ப தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும் அமைத்துக் கொள்பவர்களால் வெற்றி பெற முடியாது.  அடுத்தவர்கள் உங்களை விமர்சிக்கிறார்களென்றால் அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்கின்றனர் உளவியலார்கள். ஒன்று அவர்களுக்குத் தேவையான ஒன்று உங்களிடம் இருக்கிறது. அல்லது நீங்கள் இருக்கும் இடத்தை அடைய அவர்கள் விரும்புகிறார்கள். 

ஒருவர் ஒரு பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை புதுசு புதுசாக ஐடியாக்கள் தயாராக்குவது. அவரும் உற்சாகமாக அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார். ஆனால் அந்த வேலையிலிருந்து அவரை கொஞ்ச நாளிலேயே துரத்தி விட்டார்கள். “உன்னோட ஐடியாக்களெல்லாம் சின்ன புள்ளத் தனமா இருக்குஎன்பது தான் அவர்கள் சொன்ன காரணம். 

அந்த நபர் அவர்களுடைய விமர்சனத்தைப் பொருட்படுத்தவில்லை. அந்த சின்ன புள்ளைத் தனத்தை வைத்தே மிகப்பெரிய வெற்றியை அடைந்தார். அவர் தான் வால்ட் டிஸ்னி. மிக்கி மவுஸ்ஐத் தெரியாத குழந்தைகளும், பெரியவர்களும் இன்று இல்லை என்பதே நிலை ! சின்னப்புள்ளத் தனம் என விமர்சிக்கப்பட்டவர் வரலாற்றின் சிம்மாசனத்தில் வந்து அமர்ந்திருக்கிறார். அடுத்தவர்களுடைய விமர்சனத்தை தலையில் ஏற்றி தன்னுடைய தன்னம்பிக்கையை உடைத்திருந்தாரெனில் இன்று வால்ட் டிஸ்னி எனும் உலகப் பிரம்மாண்டம் இல்லாமலேயே போயிருக்கலாம்.

தண்ணி அடிக்கலேன்னா பிரண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க. தம் அடிக்கலேன்னா பசங்க நக்கல் அடிப்பாங்கஎன்பதற்காகவே அந்த கெட்ட பழக்கங்களில் விழுந்து விடும் இளைஞர்கள் எக்கச் சக்கம். அடுத்தவர்களுடைய விமர்சனங்களுக்காக தீய வழியில் செல்வதை விட, தனக்காக நேர் வழியில் நடப்பது எவ்வளவோ மேல் அல்லவா ?

தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அடுத்தவர்களுடைய விமர்சனங்களுக்கு ஏற்ப ஆடுகிறார்கள் என்பது அறிஞர்களின் கருத்து. அதாவது மகுடி ஊதும் பாம்பாட்டிக்கு முன்னால் தலையாட்டும் பாம்பைப் போல இவர்கள் விமர்சனங்களுக்குத் தக்கபடி தலையாட்டுகிறார்கள். கடைசியில் பாம்பாட்டியின் பெட்டிக்குள் முடங்கிப் போய் விடுகிறார்கள். வாழ்க்கை எனும் வசந்தத்துக்குள் உற்சாகமாய் உலவ இவர்களால் முடிவதில்லை. சுதந்திரச் சிறகுகளை பிறருக்காய் முறித்துக் கொண்டு வானத்தையே தொலைத்து விடுபவர்கள் இவர்கள்.

மைக்கேல் ஜோர்டன் அமெரிக்காவின் கூடைப்பந்து வீரர். அவரைத் தெரியாத விளையாட்டு வீரர்கள் இருப்பார்களா ? கிரிக்கெட் உலகின் பிராட்மேன் போல கூடைப்பந்து உலகின் ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன். அவர் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது அவரை கூடைப்பந்து அணியில் சேர்க்காமல் விரட்டி விட்டனர். சோகத்தில் வீட்டுக்குச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டு அழுதார். ஆனாலும் தனது கனவை அவர் கலைத்து விடவில்லை. தன்னால் நன்றாக விளையாட முடியும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். விளையாடினார். சாதனைகளின் எல்லைகள் வரை சென்றார். இன்று அவருடைய நுணுக்கங்கள்  விளையாட்டு வீரர்களுக்குப் பாடமாக இருக்கிறது ! பார்வையாளர்களுக்குப் பிரமிப்பாய் இருக்கிறது !! காரணம் அவர் விமர்சனங்களைக் கண்டு பயந்து ஓடவில்லை ! நத்தை ஓட்டுக்குள் தன்னுடைய திறமையை அடகு வைக்கவும் இல்லை.

“:ஐயோ இவன் ஒரு மக்குப் பையன். இவனுக்கு ஒண்ணுமே சொல்லிக் குடுக்க முடியாது. இப்படி ஒரு மக்குப் பையனை நான் பாத்ததேயில்லைஎனும் விமர்சனத்தை வாங்கியது யார் தெரியுமா ? தாமஸ் ஆல்வா எடிசன் ! “ஒழுங்கா காது கேக்காத இவனெல்லாம் என்னத்தை சாதிக்கப் போறான்என்று அவரைப் பற்றிப் பேசினார்கள். அவர் அதையெல்லாம் சட்டை செய்யவில்லை. இன்று உலகிலேயே அதிக கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருப்பவர் அவர் தான். 1093 பொருட்களுக்கான காப்புரிமை அவரிடம் இருக்கிறது. புகைப்படக் கருவி, மின்விளக்கு, வீடியோ கருவி என பல வியத்தகு விஷயங்களின் காரண கர்த்தா இவர் தான். இப்போது சொல்லுங்கள், அடுத்தவர்கள் சொல்வதற்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டுமா ?

விமர்சனங்கள் இரண்டு வகை உண்டு. ஒன்று நம்மை ஆக்கப்பூர்வமாய் சிந்திக்க வைக்கும் விமர்சனங்கள். அவை நமக்கு தூண்டுதலாய் இருக்கும். இதைத் தருபவர்களெல்லாம் நமது நலம் விரும்பிகள். பெற்றோர், நெருங்கிய நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களெல்லாம் இந்தப் பட்டியலில் வருவார்கள். இவற்றைக் கவனமுடன் கேட்டு நம்மை சீர் தூக்கிப் பார்ப்பது பயனளிக்கும். 

இன்னொரு வகை குதர்க்க விமர்சனங்கள். இவை பெரும்பாலும் தன்னம்பிக்கையற்ற மனிதர்களிடமிருந்தே வரும். அடுத்தவர்களை மட்டம் தட்டி நிம்மதி அடைவர்கள் இவர்கள். ஒருவகையில் தங்களுடைய இயலாமையை மறைக்க அடுத்தவர்களைக் காயப்படுத்திப் பார்ப்பவர்கள் இந்த வகை மனிதர்கள் என்று சொல்லலாம். இவர்களுடைய விமர்சனங்களை அப்படியே அள்ளி குப்பைத் தொட்டியில் போட்டு விடுங்கள்.

விமர்சனங்களை எதிர்கொள்ள சிறந்த வழி நகைச்சுவைதான் ! நகைச்சுவை உணர்வு இந்த நேரத்தில் உங்களுக்கு ரொம்பவே கை கொடுக்கும். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். அவமானப் படுத்துபவர்களுடைய நோக்கம் நாம் காயப்பட வேண்டும் என்பது தான். நாம் காயமடைந்து விட்டால் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று அர்த்தம். அதை விட்டு விட்டு நாம் கொஞ்சம் நகைச்சுவையாய் பதிலளித்தால் பல அவமானங்கள் அப்படியே அமுங்கிப் போய்விடும்.

என்னடி, இவ்ளோ குண்டாயிட்டேஎன யாராவது நக்கலடித்தால், “அப்படியா ? நல்ல வேளை சொன்னேடி. நான் என்னவோ சைஸ் சீரோ ரேஞ்சுக்கு ஒல்லியா இருக்கிறதா நெனச்சேன்என்று சிரித்துக் கொண்டே கடந்து போனால், இன்னொரு முறை அந்த நபர் அவமான வார்த்தைகளோடு வரமாட்டார். அப்படியே வந்தாலும் உங்களிடம் அடுத்த ஜோக் தயாராய் இருக்கும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கும் !

விமர்சனங்களிலிருந்து எதையேனும் கற்றுக் கொள்ள முடிந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் அந்த வினாடியின் முடிவிலேயே அதை உடைத்து எறிந்து விட்டு புன்னகையுடன் நடையைக் கட்டுங்கள். 

நீங்களாகவே உங்களை செல்லாக்காசு, திறமை இல்லாதவன், உருப்படாதவன், அழகில்லாதவன் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால் மற்றவர்களும் அப்படியே சொல்லும்போது சோர்ந்து விடுவீர்கள். மாறாக நீங்கள் உங்களை திறமைசாலியாக, ஸ்பெஷல் மனிதனாக, அழகானவனாக நினைத்துக் கொள்ளும் போது மற்றவர்கள் அதற்கு எதிராக விமர்சனம் செய்யும் போது அது உங்களைப் பாதிக்காது. 

ஒரு சிறுவன் இசை கற்றுக் கொள்ள ஆர்வமாய் வந்தான். கொஞ்ச நாட்கள் பயிற்றுவித்த ஆசிரியர் சொன்னார், “இசையில இவன் படு வேஸ்ட். இவனெல்லாம் இசையில எதையுமே கற்றுக் கொள்ள முடியாது !” அந்த சிறுவன் யார் தெரியுமா ? உலகின் மூலை முடுக்கெல்லாம் இசையால் பிரமிப்பூட்டிய பீத்தோவான். இசையில் அவர் எப்படி என்பதை உலகமே அறியும். இவன் லாயக்கில்லாதவன் என்று சொன்ன ஆசிரியரை யாரும் அறியமாட்டார்கள் என்பது தான் நிஜம்.

விமர்சனங்களை எடுத்துக் கொள்வதற்கு ஒரு எளிய வழி உண்டு. ஒரே விமர்சனம் பலரிடமிருந்து வந்தால் அதில் உண்மை இருக்கலாம் ! ஒரு நபரே அடிக்கடி குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் அதில் பெரும்பாலும் உண்மை இருக்காது. அந்த நபரை நீங்கள் தவிர்ப்பதே நல்லது.

காயப்படுத்தும் கிண்டலும் கேலியும் பொறாமையின் வெளிப்பாடுகளே. பொறாமை தாழ்வு மனப்பான்மையின் பிள்ளை. தாழ்வு மனப்பான்மையோ தன்னம்பிக்கை இல்லாத மனிதனின் குணம். இப்படி சங்கிலித் தொடரைப் பிடித்துப் பார்க்கும் போது, கிண்டல், கேலி போன்றவற்றின் பின்னால் பதுங்கியிருப்பவன் தன்னம்பிக்கை இல்லாத மனிதனே என்பது எளிதில் புரியும். எனவே அவனுடைய வலையில் விழாமல் தண்ணீரைப் போல நழுவி விடுங்கள்.

விமர்சனங்களைப் புரிந்து கொள்ள ஒரு மூன்று நிலை சோதனையை நீங்கள் செய்யலாம். 

ஒன்று, யாரோ உங்களை எப்படியோ விமர்சித்திருந்தால், கண்களை மூடி அந்த விமர்சனத்தை மீண்டும் ஒருமுறை முழுமையாக மனசுக்குள் ஓடவிடுங்கள். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கண்டறியுங்கள். அந்த விமர்சனத்தின் வேர்கள் உங்களுக்குப் புரியவரும். ஒருவேளை அந்த விமர்சனம் உங்களுக்கு உங்களைப்பற்றிய சில புதையுண்ட உண்மைகளைக் கூட புரியவைக்கலாம்.

இரண்டு, விமர்சனம் சொன்ன நபரின் இடத்தில் நீங்கள் அமர்ந்து யோசியுங்கள். அந்த நபர் ஏன் இந்த விமர்சனத்தைச் சொன்னார் என்பதை நிதானமாய் யோசியுங்கள். உங்கள் மீதான அக்கறையா, கோபமா எது அவரை அந்த விமர்சனத்தைச் சொல்லத் தூண்டியது ? அந்த விமர்சனம் சொன்னதால் அவருக்கு என்ன லாபம் என யோசியுங்கள். பல புதிய விஷயங்கள் புரியக் கூடும். 

மூன்றாவது, ஒரு மூன்றாவது நபராய் நீங்கள் மாறி அந்த நிகழ்ச்சியைப் பாருங்கள். உங்கள் மீதான அந்த விமர்சனம் மூன்றாவது நபர்டைய பார்வையில் ஏற்புடையதா என்பதை அலசுங்கள்.  

கடைசியாக நீங்கள் மீண்டும் உங்கள் இடத்துக்கு வரும்போது அந்த விமர்சனத்தில் உண்மை உண்டா இல்லையா என்பது புரிந்திருக்கும். 

அதில் உங்களைத் திருத்திக் கொள்ள வேண்டிய அம்சங்கள் இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். விமர்சனங்களில் உண்மை இல்லையேல் முழுமையாய்க் கை கழுவி விட்டு வேறு வேலை பார்க்கப் போய் விடுங்கள். அவர்களுடைய குற்றம் குறை பேச்சுகளுக்கு நீங்கள் வளைந்து கொடுத்தால், உங்களுடைய தன்னம்பிக்கை எனும் குதிரையின் கடிவாளத்தை அவன் கையில் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். சொந்த வீட்டை யாராவது வழிப்போக்கனுக்குக் கொடுப்பார்களா ?

நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நிர்ணயிக்க வேண்டியது நீங்கள் தான். மற்றவர்கள் அல்ல என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். வெற்றி வசப்படும்.

நிறுத்த முடியுமா வருகிற விமர்சனம்அதில்

நிஜங்கள் குறைவு என்பதே நிதர்சனம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.