காணாமல் போகுமா டெபிட்/கிரடிட் கார்ட்கள் ?
நமது வாழ்க்கையை கொஞ்சம் ரிவைன்ட் செய்து பார்த்தால் வங்கிப் பரிவர்த்தனைகளில் நாம் கடந்து வந்த வியப்பூட்டும் பாதையைப் புரிந்து கொள்ளலாம். முன்பெல்லாம் வங்கியில் வரிசையில் நின்று செல்லான் எழுதிக் கொடுத்து, அவர்கள் தருகின்ற அந்த வெண்கல நிற வட்ட வடிவ டோக்கனை வாங்கி, நமது முறை வரும் வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும்.
ஏடிஎம் வந்தபின் நிலமை மாறியது. நினைத்த நேரத்தில் சென்று நமக்குத் தேவையான அளவு பணத்தை ஏடிஎம்களில் எடுத்துக் கொள்ளலாம் எனும் வசதி வந்தது. வங்கிகளில் முண்டியடித்த கூட்டமெல்லாம் வண்டியேறிப் போய்விட்டது.
“அட, இது தான் தொழில்நுட்பம்” என நாம் வியக்கும் விஷயங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே மாயமாகி விடுவதை நாம் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாம் அடுத்து வழியனுப்பி வைக்கப் போகும் விஷயம் இந்த கிரடிட் கார்ட், டெபிட் கார்ட்களாகத் தான் இருக்கும் என்பதே வல்லுநர்களின் கணிப்பு.
ஆன்லைன் வர்த்தகங்கள் வந்தபின் ‘பணமில்லா’ பரிவர்த்தனை சூடுபிடித்தது. இப்போது அந்த நிலையைத் தாண்டி ‘கார்ட் இல்லா’ பரிவர்த்தனை விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்கு முதுகெலும்பாய் இருப்பவை ஸ்மார்ட் போன்கள் தான். ஸ்மார்ட்போன்களுள்ள டிஜிடல் வாலெட்களும், யூபிஐ போன்ற உடனடி பணப் பரிவர்த்தனை வசதிகளும் கார்ட்களின் தேவையை காலாவதியாக்கிக் கொண்டிருக்கின்றன.
கார்ட்களின் தேவை இல்லாமல் போனால் மிகப்பெரிய அளவிலான பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க முடியும். இந்த கார்ட்களின் பிளாஸ்டிக் கழிவு மட்டுமே ஆண்டுக்கு 1.27 கோடி டன் என கணக்கிடப்பட்டுள்ளது. சமீப காலமாக கார்ட்கள் இல்லாமல் நிகழ்கின்ற பரிவர்த்தனைகள் விஸ்வரூப வேகமெடுத்திருக்கிறது. இவை படிப்படியாய் கார்ட்களின் தேவையை இல்லாமல் செய்யும். அல்லது டிஜிடல் கார்ட்களின் பயன்பாட்டை அதிகரிக்கும்.
கார்ட்கள் கையில் இருப்பது ஒருவகையான பாதுகாப்பு உணர்வைத் தருவதாக ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் கருதுகின்றனர். ஆனால் பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் கார்ட்களைப் பயன்படுத்துவதை கணிகசமாகக் குறித்திருக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம்.
ஹைப்ரிட் பாதுகாப்பு எனும் அம்சம் இப்போது இத்தகைய மென்பொருட்களில் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி நீங்கள் செய்கின்ற ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் உங்கள் மொபைபில் ஒப்புதல் கொடுக்க வேண்டும். அது வேலட் ஆகவோ, ஓடிபி ஆகவோ, ஆப் பாஸ்வேடாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மென்பொருள் கட்டமைப்புக்கு ஏற்ப அது செயல்படும்.
கார்ட் தகவல்களை டோக்கன்களாக சேமித்து வைக்கும் ‘டோக்கனைசேஷன்’ எனும் தொழில்நுட்பம் இப்போது பெரும்பாலான வங்கி மென்பொருட்களில் இணைக்கப்படுகிறது. இதனால் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு அதிகரிக்கும். நமது வங்கி சார்ந்த தகவல்கள் எங்கும் சேமிக்கப்படாமல் ஏதோ ஒரு டோக்கன் எண்ணின் கீழ் பத்திரமாய் பாதுகாக்கப்படும் என்பது தான் இந்த தொழில்நுட்பம்.
ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு சரி, ஆனால் கையில் காசு வேண்டுமானால் ஏடிஎம் போக வேண்டுமே ? அதற்கு கார்ட் தேவைப்படுமே ? என நாம் யோசிப்போம். அதற்கான மாற்றுவழிகளை இப்போது வங்கிகள் முயன்று கொண்டிருக்கின்றன. பல புதிய முயற்சிகள் ஏற்கனவே வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளன. உதாரணமாக பயோமெட்ரிக் பரிசோதனையின் மூலம் பணம் கொடுக்கும் ஏடிஎம்கள் புழக்கத்தில் உள்ளன. உங்களுடைய வங்கியில் உங்களுடைய பயோமெட்ரிக் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் மட்டும் போதும். நீங்கள் இத்தகைய ஏடிஎம்களில் சென்று உங்கள் விரலையோ, கண்ணையோ காட்டி பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஸ்டேட் பேங்கின் யோனோ அமைப்பு ஏடிஎம்மில் கார்ட் இல்லாமல் பணம் எடுக்கும் கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்திலுள்ள முக்கியமான வங்கியான ஆர்பிஎஸ் மொபைல் ஆப்பில் ஒரு கடவுச் சொல்லை உருவாக்கி, அதைக் கொண்டு ஏடிஎம் களில் பணம் எடுக்கும் முறையை அறிமுகம் செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா காமன்வெல்த் வங்கி, ஸ்பெயினிலுள்ள பாங்கோ சபாடெல் வங்கி போன்றவைகளும் கார்ட் இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்க வகை செய்கின்றன.
பிரிட்டனிலுள்ள பிரபல வங்கியான பார்க்லேஸ் வங்கியானது பயனர்களுக்கு கையில் அணிந்து கொள்ளும் வாட்ச் போன்ற ஒரு கருவியை வழங்குகிறது. கேய்க்ஸா வங்கியும் அத்தகைய ஒரு வாட்சை உருவாக்கி ஸ்பெயின் முழுவதும் சுமார் மூன்று இலட்சம் இடங்களில் இதைப் பயன்படுத்தக் கூடிய கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறது. பிபேண்ட் எனப்படும் அந்த கருவியைக் கொண்டு பயனர்கள் பரிவர்த்தனைகளைச் செய்து கொள்ளலாம். ஹெரிடேஜ் வங்கியானது ஒரு ஆடையை வடிவமைத்திருக்கிறது. அந்த ஆடையைக் கொண்டு பயனர்கள் பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
நபர்கள் தங்களுக்கிடையே பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளும் பர்சன் டு பர்சன் வாய்ப்புகளை இப்போது வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றன. ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் போதே ஆன்லைனில் லோன் வாங்கிப் பயன்படுத்தும் ‘ஆன் தி ஸ்பாட் கார்ட்லெஸ் கிரடிட்’ வசதியை அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே மொபைலிலுள்ள க்யூ ஆர் கோட் ஸ்கேன் செய்து பரிவர்த்தனை செய்யும் முறை பிரபலமாகியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் லிங்க் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையும் இப்போது சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
பையோ (பல்ஸ்வாலெட்) ஒரு புதிய பணப் பரிவர்த்தனை முறையை களமிறக்கியிருக்கிறது. அதன் மூலம் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது பயனர்கள் தங்கள் உள்ளங்கையை அப்படியே பி.ஓ.எஸ் கருவியில் பதித்தால் போதும். பரிவர்த்தனை நடந்து விடும் ! பாம் செக்யூர் பயோமெட்ரிக் தொழில்நுட்பம் என இதை அழைக்கின்றனர்.
“ஐயோ பர்சை மறந்துட்டேனே” என பதட்டப்பட வேண்டிய சூழல் எழாத ஒருநாள் உருவாகும். அப்போது நமது கையில் எதுவுமே இருக்க வேண்டிய தேவை இல்லை. நாமே நடமாடும் கார்ட்களாவோம், நமது விரல்களே கடவுச் சொற்களாகும், நமது கண்களே அனுமதிச் சாவிகளாகும். அறிவியல் புனை கதை போல தோன்றும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் சர்வ நிச்சயம்.
*
சேவியர்
Thanthi