தன்னம்பிக்கை : உன்னை நீயே உருவாக்கு  

வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்பதை எப்போதுமே நமது மனம் தான் முடிவு செய்கிறது. சிலர் காலையில எழும்பும்போதேஎன்னத்த எழுந்து.. என்னத்த கிழிச்சு..” என்று உற்சாகத்தை முழுமையாய் போர்வைக்கு அடியில் புதைத்து விட்டுத் தான் எழும்புவார்கள். அவர்களிடம்எப்படி இருக்கீங்க ?” என்று கேட்டுப் பாருங்கள்என்னத்த சொல்ல, ஏதோ வண்டி ஓடுது..” என்பார்கள்.

சிலர் அப்படியல்ல, காலையில் எழும்பும் போதே ஒரு புதிய நாளைத் தரிசிக்கப் போகிறோம் எனும் பூரிப்பில் எழும்புவார்கள். சூரியக் கதிர்கள் அவர்களுக்கு வரவேற்புக் கம்பளம் விரிப்பதாய் தோன்றும். உற்சாகத்தை உடுத்திக் கொண்டு தான் படுக்கையிலிருந்தே குதித்தெழுவார்கள். அவர்களிடம் போய்எப்படி இருக்கிறீங்க ?” என்று கேட்டால்சூப்பரா இருக்கேங்க. எனக்கென்ன குறை ? வாழ்க்கை ரொம்ப அழகா இருக்குஎன்று புன்னகைப்பார்கள்.

இந்தகைய உற்சாக மனம் உடையவர்கள் தான் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் வெற்றியாளர்கள். அவர்கள் காலை முதல் மாலை வரை உற்சாகமாகவே இருப்பார்கள். எதையும் ஆனந்தமாய் அணுகுவார்கள். அன்றைய இரவு வரை அவர்களுக்கு வாழ்க்கை ஆனந்த நிகழ்வுகளையே கொடுத்துக் கொண்டிருக்கும். அவர்களுடைய இரவு செபம் கூடஆண்டவா, அழகான இந்த நாளுக்காக நன்றிஎன்பதாகத் தான் இருக்கும்.

தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு உற்சாகம் வருவதில்லை. எப்படியோ ஒரு நாளை ஓட்டிட்டேன் என படுக்கையில் சரியும் அவர்களுடைய இரவு செபம் பெரும்பாலும்ஆண்டவா, நாளைக்காவது நல்ல நாளா இருக்கட்டுமேஎன்பதாகத் தான் இருக்கும். 

தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான முதல் கட்டளை என்ன தெரியுமா ? நம்மை நாமே நேசிப்பது. அடுத்தவர்களை நேசிப்பதைப் பற்றி நமக்குத் தெரியும். பெரும்பாலான நேரத்தை அதற்காகத் தான் செலவிடுகிறோம். பெற்றோரை நேசிக்க, வாழ்க்கைத் துணையை நேசிக்க, பிள்ளைகளை நேசிக்க, நண்பர்களை நேசிக்க. இப்படியே ஓடிப் போகும் வாழ்க்கையில் நாம் நேசிக்க மறந்து போகும் ஒரு அப்பாவி நபர் நாம் தான் !

நம்மை நேசிப்பதற்கு முதல் தேவை நம்மை ஏற்றுக் கொள்வது. எப்படி இருக்கிறோமோ, அப்படியே ஏற்றுக் கொள்வது. கண்ணாடியில் காலையில் நம் முகத்தைப் பார்க்கும்போதே அந்த பிம்பம் நமக்கு உற்சாக மூட்டவேண்டும். நமது நிறம், தோற்றம், குரல், திறமைகள், இத்யாதிகள் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும். 

உங்கள் குழந்தை எந்த நிறமாக இருந்தாலும், எப்படி இருந்தாலும் கொஞ்சமும் தயக்கமில்லாமல் உற்சாகமாய் கட்டி அணைப்பீர்களல்லவா ? அந்த உற்சாகத்துடன், அதே ஆத்மார்த்தமாய் உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தன் இயல்புகளோடு தன்னை ஏற்றுக் கொள்வது தன்னம்பிக்கைக்கான முக்கியத் தேவை.  

பெரும்பாலும் தன்னம்பிக்கைக் குறையாடுகள் நான்கு காரணங்களால் வரலாம் என்கின்றனர் உளவியலார்கள். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ எனும் பயம், ஒரு சூழலை எப்படிச் சமாளிக்கப் போகிறேன் எனும் பயம், மன அழுத்தம் மற்றும் எதிர்மறைச் சிந்தனைகள்.

இவற்றை எதிர்கொள்வதும், தன்னம்பிக்கை மனிதனாக துளிர் விடுவதும் கடினமான விஷயமல்ல. எத்தனை வேகமாய் தண்ணீர் ஓடினாலும் எதிரேறிச் செல்லும் சின்ன மீன்களைப் போல, உங்களைச் சுற்றி என்ன சூழல் ஓடினாலும் நீங்கள் எல்லாவற்றையும் கடந்து தன்னம்பிக்கை மனிதனாய் நிலை பெற முடியும். அதற்கு நிரூபிக்கப்பட்ட ஒரு சின்ன பயிற்சி உண்டு.

முதலில் உங்களுடைய சிறந்த பண்புகள் என்னென்ன என்பதை நீங்கள் பட்டியலிடுங்கள். உங்களுக்குத் தெரிந்த, நீங்களே மறந்து போயிருந்த பல விஷயங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெறட்டும். பின்பு உங்கள் நெருங்கிய நண்பர்களிடம்என்னிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன ?” என்று கேளுங்கள். அவர்கள் சொல்வதையும் குறித்துக் கொள்ளுங்கள். 

எல்லோருக்கும் உங்களிடமிருக்கும் ஏதோ ஒரு விஷயம் பிடித்துப் போகலாம். இப்படிப் பட்டியலிடுகையில் உங்களுடைய வலுவான நல்ல விஷயங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். “அட ! நானா இப்படி ?” என உங்களுக்கே ஒரு வியப்பு மேலிடும். உங்கள் தன்னம்பிக்கை முனை கூர்மையாகும். 

நேர்மறைச் சிந்தனைகளை அதிகரிப்பது ஒரு வகை. எதிர்மறைச் சிந்தனைகளை அழிப்பது ஒரு வகை. மனதில் எதிர் மறைச் சிந்தனைகள் அழிய அழிய, நேர் சிந்தனை மனதில் நிரம்பும். எதிர் சிந்தனைகளைக் கொட்டி நிரப்பி வைத்திருக்கும் குடுவையில் நேர் சிந்தனைகளை ஊற்ற முடியாது. எனவே எதிர் சிந்தனைகளை வெளியே கொட்டுவது ரொம்ப முக்கியம்.

தாமஸ் ஆல்வா எடிசன் மின் விளக்கு கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தபோது பல்பின் உள்ளே பயன்படுத்த வேண்டிய இழையை உருவாக்க பிரம்ம பிரயர்த்தனம் செய்தார். முடியவில்லை. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை வைத்து அந்த இழையை முயன்றார். தோல்வியே மிஞ்சியது. அருகில் இருந்த உதவியாளர் நிக்கோலா டெஸ்லா சொன்னார், “சேஎல்லாமே வேஸ்டாப் போச்சு. ஒண்ணுமே உருப்படியா அமையவில்லை”.

எடிசன் அவனை உற்றுப் பார்த்து விட்டுச் சொன்னார், ”பத்தாயிரம் முயற்சிகள் தோல்வியடைந்தாலும் நான் சோர்ந்து போக மாட்டேன். ஏனென்றால் ஒவ்வொரு தோல்வியடைந்த முயற்சியும், சரியான பாதையில் ஒரு அடி முன்னே வைக்க உதவுகிறது 

இது தான் வெற்றியாளர்களுடைய பார்வை. இந்தப் பார்வை தன்னம்பிக்கையை அதிகரிக்கும் பார்வை. எந்தத் தோல்வியும் தன்னம்பிக்கையுடைய மனிதனுக்கு எதிரே அணை கட்ட முடியாது. ஆறாம் வகுப்பில் படுதோல்வி அடைந்தவர் தானே உலகப் புகழ்பெற்ற சர் வின்ஸ்டன் சர்ச்சில் ! தோல்வி அவரை தன்னம்பிக்கையின் தேசத்திலிருந்து கடத்திச் சென்று விடவில்லை. அவருடைய தன்னம்பிக்கை அவரை வெற்றிகளின் சாம்ராஜ்யத்தில் உச்சத்தில் வைத்தது !

உங்களால் மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். மாற்ற வேண்டிய விஷயத்தை மாற்றுங்கள். இரண்டுக்குமிடையேயான வேறுபாடைக் கண்டறியும் ஞானம் பெற்றிருங்கள்.” இதுவே மகிழ்வான வாழ்க்கையின் அடிப்படை. தன்னம்பிக்கைக்கான வலுவான சிந்தனையாக இன்றும் போற்றப்படும் இது  1800களில் ரெயின்ஹோல்ட் என்பவரால் எழுதப்பட்டது.

சில விஷயங்கள் நம்மால் மாற்ற முடியாது. உதாரணமாக நீங்கள் குள்ளமாய் இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதை மாற்ற முடியாது. அதை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் ஏகப்பட்ட தம் அடிப்பீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதை மாற்றியாக வேண்டும். ஏனெனில் அது மாற்ற முடிகிற விஷயம். இந்த இரண்டுக்குமான வித்தியாசம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ! 

இந்த வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளாமல் குள்ளமாக இருப்பவர்கள் உயரமாக வேண்டுமென லேகியம் சாப்பிடுவதுண்டு. புகை பிடிப்பவர்கள்தம்மெல்லாம் விட முடியாத பழக்கம்பா…” என சொல்லித் திரிவதுண்டு. இது இரண்டுமே தப்பான அணுகு முறை. ஏற்றுக் கொள்ள வேண்டியதை ஏற்றுக் கொள், மாற்றிக் கொள்ள வேண்டியதை மாற்றிக் கொள். ஆனந்த வாழ்க்கையின் அடிப்படை இது.

நீங்கள் உங்களுக்குள்ளே நல்ல சிந்தனைகளை வளர்ப்பது ஒரு நிலை. உங்களைச் சுற்றி இருப்பவர்கள் நல்ல நேர் சிந்தனை உடையவர்களாக இருக்க வேண்டியது இன்னொரு நிலை. ஒரு நல்ல காமெடி படத்தைப் பார்த்து முடிக்கும் போது உங்கள் மனநிலை உற்சாகமாய் இருக்கிறது. ஒரு சோகமான படத்தைப் பார்த்து முடிக்கும் போது உங்கள் மனம் பாரமாய் இருக்கிறது இல்லையா ? இதே போல தான் உங்களைச் சுற்றியிருக்கும் நண்பர்களும் உங்களை மகிழ்ச்சியாகவோ, துயரமாகவோ வைத்திருக்க முடியும்.

என்னய்யா வாழ்க்கை…?” , “என்னய்யா பொழப்பு இது…” என்றெல்லாம் வாழ்வில் பிடிப்பே இல்லாதவர்கள் உங்களைச் சுற்றியிருந்தால் உங்களுக்குள்ளும் அந்த சிந்தனை நிச்சயம் புகுந்து விடும். எனவே அப்படிப்பட்ட நண்பர்களை கொஞ்சம் விலக்கியே வைத்திருங்கள். 

சில நண்பர்கள் அதற்கு நேர் எதிராக இருப்பார்கள். அப்பப்போ மனசு கஷ்டமாயிருந்தா உங்களுக்கே ஒரு சில நண்பர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். சரிதானே ? அவர்களுக்குப் போன் பண்ணத் தோன்றும். அவர்களைப் போய்ப் பார்க்கத் தோன்றும். காரணம் அவர்களுடைய பாசிடிவ் அணுகு முறை. 

அந்த நண்பர்களுடைய வார்த்தைகளுக்கு உங்களை சோர்வுச் சரிவிலிருந்து தூக்கி விடும் கைகள் இருக்கும். வைக்கோல் போரில் விழுந்த ஒரு துளி நெருப்பாக அவர்களுடைய வார்த்தைகள் உற்சாக நெருப்பைப் பற்ற வைக்கும். அப்படிப்பட்ட நண்பர்களோடு நெருக்கமாய் இருங்கள். தொடர்ந்து அவர்களோடு தொடர்பில் இருங்கள். அவர்களுடைய சுறு சுறுப்பு உங்களையும் பற்றிக் கொள்ளும். 

ஜிம் கேரிஎன்ற பெயரைச் சொன்னாலே ஒரு சின்னப் புன்னகை உங்களுடைய உதடுகளில் வந்து அமர்ந்து கொள்ளலாம். ஹாலிவுட்டின் கவுண்டமணி அவர். சின்னப் பிள்ளைகள் முதல் முதியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும் அவருடைய நடிப்பு அத்தனை நகைச்சுவை நிறைந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், ஐம்பதுக்கும் மேற்பட்ட உயர் விருதுகளை வாங்கியும் ஹாலிவுட்டில் நிரந்தர இடம் பிடித்தவர் இவர். 

இவருடைய இளமைக்காலமோ சோகமானது. கனடாவில் மூன்று சகோதர சகோதரிகளுடன் வறுமையில் உழன்றவர். படிப்பதற்குப் பணமில்லாததால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டார். அந்த வறுமையிலும் தனது நகைச்சுவைத் திறன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். உள்ளூர் நகைச்சுவைக் குழு ஒன்றில் இணைந்து சிரிப்பூட்டினார். பொருளாதாரம் எவ்வளவு தான் இறுக்கினாலும் தன் மீதான நம்பிக்கையை அவர் சற்றும் தளர விடவில்லை. 

காலம் அவரை அமெரிக்காவுவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு குடி பெயர வைத்தது. அங்கும் அதே தொழிலைத் தொடர்ந்தார். படிப்படியாய் தனது எல்லையை விரிவாக்கி இன்று ஹாலிவுட்டின் பணக்கார நடிகர்களில் ஒருவராக பல்லாயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதியாக இருக்கிறார். உன்னை நீயே நம்பாவிடில் வேறு யார் நம்புவார் ? என நம்மைப் பார்த்துக் கேட்கிறது ஜிம்கேரியின் வியப்பூட்டும் வாழ்க்கை.

படிப்பில் அதிக ஆர்வமில்லாத  அந்தச் சிறுவனுக்கு ஆடை வடிவமைப்பதில் அலாதியான ஆர்வம். நியூயார்க்கில் வசித்து வந்த அவனுடைய வீட்டில் ஒன்பது சகோதர சகோதரிகள். பள்ளி இறுதியாண்டுகளில் படிக்கும்போது நகருக்குச் சென்று ஜீன்ஸ்கள் வாங்கி வந்து அதை மாடர்ன் ஸ்டைலில் மாற்றியமைத்து விற்பான். ஒரு சின்ன கடையையும் ஆரம்பித்தார். இருபத்தாறாவது வயதில் அந்தக் கடை ஏழு கிளைகளுடன் சர சரவென வளர ஆரம்பித்தது. 

ஆனால் அதிக நாள் அந்த பிஸினஸ் நிலைக்கவில்லை. தொழில் முற்றிலுமாய் வீழ்ச்சியடைந்தது. அவர் மனம் தளரவில்லை. அவரை வேலையில் அமர்ந்த கால்வின் கிளைன், பெரி எலிஸ் போன்ற பிரபல நிறுவனங்கள் முன்வந்தன. அவரோ தன்மீதான நம்பிக்கையை விட்டு விடவில்லை. தன்னால் மீண்டும் ஜொலிக்க முடியும் என நம்பினார். படிப்படியாய் அதற்கான வேலைகளில் இறங்கினார். புதிய நிறுவனம் ஒன்று உதயமானது. 

முதலில் ஆண்களுக்கான ஃபேஷன் ஆடைகளில் ஆரம்பித்து பின் பெண்களுக்கானது, குழந்தைகளுக்கானது என விரிவாக்கினார். படிப்படியாய் வளர்ந்தார். அந்தத் துறையின் உச்சியில் சென்று அமர்ந்து கொண்டார். இன்று உலகில் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகியிருக்கும் டாமி ஹில்பிகர் (Tommy Hilfiger) தான் அந்த நிறுவனம். தன்மீது நம்பிக்கை வைத்து வாழ்வில் ஜெயித்துக் காட்டியவருடைய பெயரிலேயே அது இயங்குகிறது ! உன்னை நீயே நம்பாவிடில் வேறு யார் நம்புவார் ? என நம்மைப் பார்த்துக் கேட்கிறது இவருடைய வியப்பூட்டும் வாழ்க்கை.

உன்னை உளமார நேசி

உயர்வு அதில்தானே யோசி !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.