தன்னம்பிக்கை : தாழ்வு மனப்பான்மை, வாழ்வு தராது

நான் எதுக்குமே லாயக்கில்லாதவன்..” என உள்ளுக்குள்ளே ஒரு குரல் உங்களிடம் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கிறதா ? உஷார் ! நீங்கள் தாழ்வு மனப்பான்மை எனும் பசித்த சிங்கத்தின் பற்களுக்கு இரையாகக் கூடும். 

தாழ்வு மனப்பான்மை என்பது படிகளற்ற படுகுழி. அதற்குள் குடியிருப்பவர்கள் கால்களற்ற மனிதர்கள். அவர்களால் வாழ்வின் சமவெளியையோ, வெற்றியின் சிகரங்களையோ பார்க்கவே முடியாது !.

தாழ்வு மனப்பான்மைக்கும், தன்னம்பிக்கைக் குறைவுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. தாழ்வு மனப்பான்மை உடையவர்களால் தன்னம்பிக்கை வாதிகளாக பரிமளிக்க முடியாது. தன்னம்பிக்கை இல்லாவிட்டால் வெற்றியாளராகும் சாத்தியம் இல்லை.

தாழ்வு மனப்பான்மை உருவாக பல காரணங்கள் இருக்கலாம். சின்ன வயதில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய அவமானங்கள். யாரும் ஏற்றுக் கொள்ளவில்லையே எனும் ஏக்கம். யாரும் அங்கீகரிக்கவில்லையே எனும் ஆதங்கம். அம்மா அப்பாவால் கைவிடப்பட்ட நிலை. அல்லது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத நிலை இப்படி ஏதோ ஒரு சில காரணங்கள் உங்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை விதையை நட்டிருக்கக் கூடும். அவை உங்களுக்குள்ளேயே வேர்விட்டுக் கிளை விட்டு தாழ்வு மனக் கானகமாக  பிற்காலத்தில் வளரும். எதையும் முளையிலேயே கிள்ளி எறிவது மிகவும் சுலபம். தாழ்வு மனப்பான்மையும் அப்படியே !

சிலருக்கு இப்படி எந்த சிக்கலும் இல்லாத மழலைக்காலம் வாய்த்து விடும். வளர்ந்தபின்நான் கருப்பா பயங்கரமா இருக்கேன்”, “நான் குண்டா அசிங்கமா இருக்கேன்”, “நான் குள்ளமா கொடூரமா இருக்கேன்”, “நால் ஒல்லியா பல்லி மாதிரி இருக்கேன்இப்படியெல்லாம் தன் தோற்றம் குறித்த எதிர் சிந்தனைகள் கூடு கட்டிக் குடியேறிவிடும். இந்த சிந்தனைகளெல்லாம் தாழ்வு மனப்பான்மையை கம்பளம் விரித்து வரவேற்கும் சக்தி படைத்தவை. நாளடைவில் மற்ற எல்லோருமே தன்னை விடப் பெரியவர்கள், தான் மட்டும் உதவாக்கரை எனும் நினைப்புடன் ஓட்டுக்குள் மறைந்து கொள்ளும் ஆமை போல ஆகி விடுவார்கள்.

இன்னும் சிலருக்கு தாழ்வு மனப்பான்மை என்பது அடுத்தவர்களுடைய வசதி வாய்ப்பைப் பார்த்து வந்து விடும். பக்கத்து வீட்டுக்காரர் ஒரு கார் வாங்கினால் இவருடைய மனசில் இவர் தன்னையே சின்னவராய்ப் பார்க்க ஆரம்பித்து விடுவார். எதிர் வீட்டுக்காரர் ஒரு எல்..டி டிவி வாங்கினால் தாழ்வு மனம் கொஞ்சம் கூடும். அலுவலகத்தில் அடுத்து இருப்பவர் லூயி பிலிப் சட்டை போட்டால், தோழி புதிதாய் சங்கிலி வாங்கினால், சக பணியாளன் ஒரு நிலம் வாங்கினால் இப்படி அடுத்தவர்களுடைய பொருளாதார பலங்களெல்லாம் இவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடும். அவர்களைப் போல நம்மால் இருக்க முடியவில்லையே எனும் துயரத்தில் ஆழ்ந்து விடுவார்கள்.

வேறு சிலருக்கு எல்லா வசதிகளும், வாய்ப்பும் இருக்கும். படித்திருப்பார்கள். வேலையில் இருப்பார்கள். காரில் பயணிப்பார்கள். அவர்களுக்கும் தாழ்வு மனப்பான்மை வரும். பல வேளைகளில் அறிவு ரீதியான தாழ்வு மனப்பான்மை. தன்னை விட அறிவாளியாய் மற்றவர்கள் இருக்கிறார்களே எனும் சிந்தனை. குழுக்களில் தனது கருத்தைப் பரிமாற ஆயுட்கால தயக்கம், மீட்டிங்களில் வாய் மூடி மௌனித்திருப்பது, தனது எழுத்துக்களை வெளியே காட்டுவதற்குக் கூட வெட்கம் என இவர்களுடைய தாழ்வு மனப்பான்மை இன்னொரு விதமானது !

இன்னும் சிலருக்கு அடுத்தவர்களுடைய வெற்றி தாழ்வு மனப்பான்மையைக் கொண்டு வரும். “அவனைப் பாரு ஆறே மாசத்துல கடனை எல்லாம் அடச்சுட்டான். நானும் இருக்கேனேஎனும் சுய பச்சாதாபம் தாழ்வு மனப்பான்மையாய் மாறி விடும். எல்லோரும் தங்களைப் பார்த்தே சிரிப்பது போலவும், தங்களை நக்கலடிப்பது போலவும் கனவுகள் வரும். 

தாழ்வு மனப்பான்மையின் வடிவங்களையும், முகங்களையும் சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், “நமது மனதில் நாமே நம்மைக் குறித்த தாழ்வான ஒரு சிந்தனையை உருவாக்குவதுதான் தாழ்வு மனப்பான்மை. அதை உருவாகும் காரணிகள் நமக்கு உள்ளேயோ வெளியேயோ இருக்கலாம்.  

தாழ்வு மனப்பான்மை மனதளவிலான பாதிப்புகளை உண்டாக்குவதுடன், உடலையும் வெகுவாகப் பாதித்து விடுகிறது. தாழ்வு மனப்பான்மையுடையவர்களுடைய மூளைத் திறன் குறைந்து அவர்கள் பெரும் மறதிக்காரர்களாகி விடுவார்கள் என்கிறது கனடாவிலுள்ள மாண்ட்ரீயலில் நடந்த ஆய்வு முடிவு ஒன்று. இது தவிர மன அழுத்தம், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, இதய நோய், தலை வலி, உடல் வலி, கான்சர் என தாழ்வு மனப்பான்மை தரும் நோய்களின் பட்டியல் அச்சுறுத்துகிறது ! எனவே தாழ்வு மனப்பான்மை எனும் புதை குழியில் விழாமல் கவனமாய் நடப்போம்.

சரி தாழ்வு மனப்பான்மை எனும் கூட்டிலிருந்து வெளியே வர முடியுமா ? 

நிச்சயமாக ! என்பது தான் அழுத்தமான பதில்.

முதலில் உலகத்தில் எல்லோருமே தனித்துவமானவர்கள் எனும் உண்மையை மனதில் தெளிவாக எழுதிக் கொள்ளவேண்டும். ஒவ்வொருவருக்குள்ளும் சில திறமைகள் நிச்சயம் உண்டு. சில குறைபாடுகளும் நிச்சயம் உண்டு. ஒரு காளானைத் தொட்டுப் பார்த்து நல்ல காளானா விஷக் காளானா என கண்டுபிடிக்கும் பாட்டியின் திறமை தனித்துவமானது. கணினியில் உலகைக் கண்டு பிடிக்கும் பேரனின் திறமை இன்னொரு விதமான தனித்தன்மை ! இந்த உண்மையை உணர்தல் முதல் தேவை.

இந்த நடிகனெல்லாம் வெற்றி பெற வாய்ப்பே இல்லைஎன ஒரு நடிகனைப் பார்த்து கிண்டலடித்தார் அமெரிக்காவிலுள்ள கொலம்பியாவின் துணை ஜனாதிபதி ஒரு முறை ! பிற்காலத்தில் அந்த நடிகர் ஹாலிவுட்டிலேயே அதிகம் சம்பளம் வாங்கக் கூடியவராய் மாறினார். அவர் ஹாரிசன் ஃபோர்ட் ! அவருடைய திறமை மேல் அவருக்கு நம்பிக்கை இருந்தது ! “இவரே சொல்லிட்டாரே.. இனிமே நான் அவ்ளோ தான்…” என தாழ்வு மனப்பான்மைக்குள் விழுந்து விடவில்லை.

தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்கள் தங்களுடைய வெற்றிகளைக் கொண்டாடமாட்டார்கள். மாறாக அதை விடப் பெரிய பெற்றி பெற்றவர்களை நினைத்து தங்களைத் தாங்களே சோர்வாக்கிக் கொள்வார்கள். அந்தப் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். நமது சின்னச் சின்ன வெற்றிகளைக் கூட மனதளவில் கொண்டாட வேண்டும். யாராவது பாராட்டினால் ஏற்றுக் கொள்ளுங்கள். பாராட்டுக்கு நன்றி சொல்லுங்கள். வெற்றிகளின் விளக்கு வெளிச்சத்தின் முன் தன்னம்பிக்க இருட்டால் தாக்குப் பிடிக்க முடியாது.

யாராவது ஏதாவது ஒரு எதிர் கருத்துச் சொன்னால் உடனே எல்லாம் மூழ்கி விட்டது போல இடிந்து போய் விடாதீர்கள். விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொள்ளுங்கள். விமர்சனங்களின் உண்மைத் தன்மையை அறியுங்கள். அவை நல்லவையெனில் எடுத்துக் கொள்ளுங்கள். ஏற்றுக் கொள்ள முடியவில்லையெனில் விட்டு விடுங்கள். எக்காரணம் கொண்டும் விமர்சனங்களின் அடிப்படையில் உங்களை நீங்களே சிறுமைப் படுத்திக் கொள்ளாதீர்கள்.

பள்ளிக்கூடத்தில் மோசமாகப் படிக்கிறான் என்று அடிக்கடி திட்டு வாங்கிக் கொண்டிருந்தார் ஒரு மாணவர். கணக்குப் பாடத்தில் அவர் படு வீக். சரி வீட்டிலிருக்கும் தோட்டத்தைப் பராமரிக்கலாமென்றால் அங்கும் தோல்வி. எங்கும் விமர்சிக்கப்பட்ட அவர் தான் பிற்காலத்தில் உலகை பிரமிக்க வைத்த ஐசக் நியூட்டன். 

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் செயல்களுக்கான பொறுப்பு உங்களுடையது என்பதை உணருங்கள். அப்போது தான் உங்களுடைய வாழ்க்கையை மாற்றுவதற்கான வலிமையும் உங்களிடம் இருப்பதை உணர்வீர்கள். அது உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும். உங்கள் செயல்களிலும் மாற்றத்தைக் கொண்டு வரும்.

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வர இன்னொரு முக்கியமான தேவை பழைய நினைப்புகளிலிருந்து வெளியே வருவது தான். குறிப்பாக உங்களை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் தோல்விகள், பிறருடைய கிண்டல்கள் போன்றவற்றையெல்லாம் மூட்டையாய்க் கட்டி இந்தியக் கடலில் எறிந்து விடுங்கள். 

இன்னொரு முக்கியமான விஷயம், தோல்வி என்பது சகஜம் எனும் வாழ்க்கையின் உண்மையைப் புரிந்து கொள்வது. பிறப்பைப் போல, இறப்பைப் போல தோல்விகளும் மாற்ற முடியாதவை. ஏதோ ஒருவகையில் எல்லோருமே தோல்விகளையும் வெற்றிகளையும் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறோம் எனும் உண்மையைப் புரிந்து கொள்வது அவசியம். தோல்விகளை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டால் அந்தத் தோல்விகள் உங்களுடைய தன்னம்பிக்கையை உடைப்பதில்லை !

ஜான் கிரிஸாம் எனும் எழுத்தாளரை அறிந்திருப்பீர்கள். நாவல் உலகில் பல கோடி பணம் சம்பாதித்தவர். அவருடைய நூல்கள் சுமார் 25 கோடி பிரதிகளுக்கு மேல் உலகெங்கும் விற்றுத் தீர்ந்தது. ஆனால் அவருடைய முதல் நாவலை வெளியிட அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 12 பதிப்பகங்கள் அவரை நிராகரித்தன. 16 பதிப்புலக ஏஜெண்ட்கள் அவரை ஏளனம் செய்தனர் ! அவர் அசரவில்லை. தோல்விகள் ஒரு நாள் வெற்றியாய் மாறும் எனும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

பிறரோடு இணைந்து வாழப் பழகுங்கள். பிறரைப் பார்த்துப் புன்னகைப்பது கூட தாழ்வு மனப்பான்மையை உடைக்கும் என்கின்றனர் உளவியலார்கள். புன்னகையுடன் வாழ்க்கையை அணுகுங்கள் இது உங்களை வலுவாக்கும்.

உங்களுடைய குறைகளைக் குத்திக் காட்டி உங்களைச் சிறுமைப்படுத்துவோரை விட்டு தூரமாய் போய் விடுங்கள். அதாவது உங்களை ஏதாவது ஒரு வகையில் தாழ்வு  மனப்பான்மையில் உழலச் செய்யும் மனிதர்களை அறவே தவிர்த்து விடுங்கள். அதே போல நீங்களும் பிறரைச் சிறுமைப்படுத்தும் குணாதிசயங்களை விட்டு விடுங்கள். பிறரைக் கிண்டலடிப்பது, ஏளனமாய்ப் பார்ப்பது போன்றவை உங்களிடம் இருந்தால் அதை நிறுத்தி விடுங்கள்.

பேசுங்கள், உங்களுடைய மனதில் பூட்டப்படும் சிந்தனைகள், விமர்சனங்கள், பதில்கள் கூட உங்களைக் கடுமையான மன அழுத்தத்தில் தள்ளிவிடும். எனவே பேசவேண்டியவற்றைப் பேச வேண்டிய இடத்தில் பேசிப் பழகுங்கள் ! ஒருவேளை உங்களுக்குப் பிடிக்காத, உங்கள் மனதால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு வேலையில் நீங்கள் இருந்தால் அதை விட்டு விடுங்கள். வாழ்க்கை ஆயிரம் கதவுகளோடு காத்திருக்கிறது எனும் உண்மை உணருங்கள்.

தாழ்வுமனம் தோல்வியின் வீடு

தோல்வியற்ற மனதையே நாடு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.