பதின்வயது பக்குவமாய்க் கையாள வேண்டிய வயது. சட்டென உடைந்து விடும் முட்டையைப் போல சில நேரம், உடைக்கவே முடியாத பாறை போல சிலநேரம் என மாறி மாறி வித்தை காட்டும் அவர்களுடைய மனம் புதிர்களின் புகலிடம். “தன்னம்பிக்கையெல்லாம் பெரியவர்களுக்கான விஷயம்” என பல வேளைகளில் நாம் ஒதுக்கி வைப்பதுண்டு. உண்மையில் தன்னம்பிக்கை பதின் வயதுப் பெண்களுக்குத் தான் ரொம்பவே தேவை.
இன்றைய வாழ்க்கைச் சூழல் பதின் வயதுப் பெண்களின் மீது ஏகப்பட்ட சுமைகளை இறக்கி வைக்கிறது. அவர்களுக்கு முன்னால் விளம்பர மாடல்களும், திரை நட்சத்திரங்களும் ரோல் மாடல்களாக விரிகிறார்கள். நட்சத்திரங்களின் உடலமைப்பு, நிறம், குணாதிசயம் இவையெல்லாம் இருந்தால் தான் அங்கீகரிக்கப்படுவோம் எனும் தப்பான எண்ணம் அவர்களுடைய மனதில் பசுமரத்தாணியாய் பதிந்து விடுகிறது. அவர்களுடைய தன்னம்பிக்கையின் மேல் விழும் மிகப்பெரிய அடி இது !
அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இன்றைய முகப்பூச்சு விளம்பரங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன். கறுப்பு நிறம் நல்லதென்று ஏதேனும் ஒரு முகப்பூச்சு சொல்கிறதா ? கறுப்பிலிருந்து எப்படி வெளியே வரலாம் என்பதை மட்டுமே அது பேசுகிறது. அதாவது சிவப்பு நிறம் மட்டுமே அழகானது, மற்ற எந்த நிறமானாலும் பூச்சுகளைக் கொண்டு சரி செய்யப்பட வேண்டும் என்பதே அவை போதிக்கும் பாடம். இந்தியாவில் எத்தனை கருப்பு நிறப் பெண்கள் இருப்பார்கள் ! அவர்களில் எத்தனை பேருடைய தன்னம்பிக்கையை இத்தகைய விளம்பரங்கள் தவிடு பொடியாக்கியிருக்கும் ?
இப்படி சமூகமும், ஊடகங்களும், சக மனிதர்களும் இடுகின்ற பட்டியலுக்குள் அடங்க முடியாமல் போகும் போது பதின் வயதினரின் தன்னம்பிக்கை தவிடு பொடியாகி விடுகிறது.
பதின்வயதினரின் தன்னம்பிக்கை உடைந்து போக சின்னச் சின்ன விஷயங்களே போதுமானது ! நண்பர்கள் மத்தியில் பாப்புலராய் இருப்பது பதின் வயதினருக்கு இனிமை தரும் சமாச்சாரம். அந்த பாப்புலாரிடி இல்லாமல் போகும் போது கூட அவர்களுடைய தன்னம்பிக்கை சிதைந்து போய் விடுகிறதாம். ஃபேஸ் புக்கில் நிறைய நண்பர்கள் சேரவில்லை என்றாலே கவலைப்பட்டு அப்செட் ஆகி விடும் இளம் பெண்கள் இருக்கிறார்கள்.
எட்டு, ஒன்பது வயதுகளில் பெண்களிடம் தன்னம்பிக்கை அபரிமிதமாக இருக்கும் என்கின்றன பல்வேறு ஆய்வு முடிவுகள். அதே பெண்கள் சில ஆண்டுகள் கழிந்து பதின் வயதுக்குள் நுழையும்போதோ தன்னம்பிக்கை ஆட்டம் காண ஆரம்பித்து விடுகிறது. இதற்கு அவர்களுடைய உடல் மாற்றங்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
பெரியவர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய தன்னம்பிக்கையை அவர்களே தான் கட்டி எழுப்ப வேண்டும். பதின் வயதுப் பெண்களுக்கோ, பெற்றோர், நண்பர்கள், உடன்பிறந்தோர் ஆகியோருடைய உதவியும் வெகுவாகத் தேவைப்படுகிறது. அதற்காக அட்வைஸ் மழையை அவிழ்த்து விடவும் முடியாது. காரணம் பதின் வயதுப் பெண்களுக்கு அட்வைஸ் என்பது உலக மகா அலர்ஜி. எனவே சொல்ல வேண்டியதை அவர்களுடைய பாணியில், அவர்களுடைய மொழியில் நாசூக்காகச் சொல்ல வேண்டும் !.
குறிப்பாகப் பெற்றோர் தங்கள் பதின் வயதுப் பிள்ளைகளிடம் நதியில் மிதக்கும் படகைப் போல மிதந்து வாழ்வைப் புரிய வைக்க வேண்டும்.
“எங்க காலத்துல பன்னிரண்டு முழம் புடவை கட்டினோம்…” என கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சக தோழிகளெல்லாம் ஜீன்ஸில் சுற்றும் போது, உங்கள் மகள் புடவையில் போனால் அவளுடைய தன்னம்பிக்கை தான் பாதிக்கப்படும். எனவே குணாதிசயம் சிதையாமல் சில அடையாளங்கள் மாறிப் போவதைக் கண்டு பெற்றோர் கவலைப்பட வேண்டியதில்லை.
குறிப்பாக தலை முடியை ஸ்டைலாக வெட்டுவது, நிறம் மாற்றுவது, தங்க நகையை கழற்றி வைத்து விட்டு தோசைக் கல் கம்மல் மாட்டுவது, இதெல்லாம் பதின் வயது பேஷன். தன்னைச் சுற்றியிருக்கும் நண்பர்களைப் போல உடையணியாவிடில் நிராகரிக்கப்பட்டு விடுவோம் எனும் பயம் அவர்களிடம் இருக்கும். எனவே அவர்களுடைய மாற்றத்தின் நிலையறிந்து அனுசரித்துப் போவது அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும்.
உங்கள் மகள் செய்யும் அனைத்தையும் நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமென்பதில்லை. ஆனால் புரிந்து கொள்ள முயலுங்கள். உங்கள் பதின் வயதில் நீங்கள் எப்படி இருந்தீர்கள் என நினைவு வருகிறதா ? ! பெரும்பாலும் தனிமையிலும், குழப்பத்திலும் கழிந்திருக்கத் தானே வாய்ப்பு அதிகம். அதே உணர்வுகள் உங்கள் மகளுக்கும் இருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் மகளை ஏதாவது ஒரு நல்ல பொழுதுபோக்கில் ஈடுபட வையுங்கள். அது அவளுக்கு ரொம்பப் பிடித்ததாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்குப் பிடித்ததை அவளிடம் திணிக்காதீர்கள். அது அவளுக்கு ஹாபியாய் இருக்காது ! வேலையாய் மாறிப் போய்விடும். அதே போல சமூகக் குழுக்கள், பள்ளிக் குழுக்கள், ஆலயக் குழுக்கள் போன்றவற்றில் ஈடுபட வையுங்கள். அவர்களுடைய தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்ப இவையெல்லாம் உதவும்.
எந்தக் காரணம் கொண்டும் பதின் வயதினரை இளக்காரமாய்ப் பேசாதீர்கள். அவளுடைய நடை உடை பாவனைகளைக் கிண்டலடிக்கவே அடிக்காதீர்கள். குறிப்பாக பிறருக்கு முன்னால் வைத்து அப்படி ஒரு சிந்தனையே உங்களுக்கு வர வேண்டாம். அவளுடைய தன்னம்பிக்கையின் வேர்களில் அது கோடரியாய் விழும்.
உங்கள் மகள் தவறான வழியில் செல்கிறாள் எனில் அவளுக்கு சரியான பாதையைக் காட்ட வேண்டியது உங்கள் கடமை. அதில் இரண்டு வகை உண்டு. “நீ செய்வது தவறு” என்று தவறைச் சுட்டுவது ஒரு வகை, எது சரியானது என வழிகாட்டுவது இன்னொரு வகை. நீங்கள் இரண்டாவது வகையைத் தேர்ந்தெடுப்பது நல்லது என்கின்றனர் உளவியலார்கள்.
உங்கள் மகளிடம் நிறைய நேரம் செலவிடுங்கள். பெரும்பாலான பெற்றோர் செய்கின்ற மிகப்பெரிய தவறு மகள் வளர்ந்து விட்டால் தனியே விட்டு விடுவது. இது பெற்றோர் குழந்தைகளிடையே பெரிய இடைவெளியை உருவாக்கி விடும். பதின் வயதினருக்கு அது மிகுந்த மன உளைச்சலைத் தரும். எனவே உங்கள் மகளுடன் போதுமான நேரம் செலவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருங்கள். அது அவளுடைய பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும். அந்தப் பாதுகாப்பு உணர்வே அவளுடைய தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்பும்.
உங்கள் மகளுடைய ஆரோக்கியத்தில் கவனமாய் இருங்கள். உடற்பயிற்சி செய்ய ஊக்கப்படுத்துங்கள். சரியான உடற்பயிற்சி உங்கள் மகளுடைய தன்னம்பிக்கையை வளர்க்கும். அவளுடைய மன அழுத்தம், தடுமாற்றம் போன்ற பல விஷயங்கள் மறையும். ஏழைகளுக்கு உதவுவது, நேர்மையாய் இருப்பது, நல்ல கல்வி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் போன்ற விஷயங்களிலெல்லாம் உங்கள் மகளை ஈடுபடுத்துங்கள். இவையெல்லாம் உங்கள் மகளை தன்னம்பிக்கையில் வளர்த்தெடுக்கும் விஷயங்கள்.
பாராட்டுங்கள். உங்கள் மகளின் சின்னச் சின்ன நல்ல விஷயங்களுக்கெல்லாம் அவளைப் பாராட்டுங்கள். அவளுக்குத் தன்னம்பிக்கை தரக் கூடிய எந்த விஷயத்தையும் பாராட்டத் தயங்காதீர்கள். ஒருவேளை உங்கள் மகள் குண்டாய் இருப்பதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அவளுடைய தோற்றம் அழகாக இருக்கிறது என பாராட்டுங்கள் !
விளையாட்டில் ஆர்வமுடைய பிள்ளைகளைத் தடுக்காதீர்கள். விளையாட்டு அவர்களுடைய உடல் ஆரோக்கியம், குழு மனப்பான்மை போன்ற பல விஷயங்களுக்கு நல்லது. கூடவே அவர்களுடைய மன அழுத்தங்களும் இதனால் அடிபட்டுப் போய் விடும்.
இந்தப் பதின் வயது தான் பாலியல் ஈர்ப்பு, போதை, அதீத பொழுது போக்கு என எல்லை தாண்டிச் சென்று சிக்கி விடும் அபாயம் உண்டு. குறிப்பாக தந்தையின் வழிகாட்டுதல் இல்லாத பெண்களும், தன்னம்பிக்கை இல்லாத பெண்களும் தான் இத்தகைய சிக்கல்களில் போய் சிக்கிக் கொள்வார்கள் என்கின்றன ஆய்வுகள். எனவே பதின் வயது மகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் வழிகளை விட்டு விடாமல் இருக்க வேண்டியது அவசியம்.
சினிமா பிரபலங்கள், விளம்பர மாடல்களெல்லாம் உண்மையைப் பிரதிபலிப்பதில்லை எனும் விஷயத்தைப் புரிய வையுங்கள். அதீத மேக்கப், லைட்டிங், கேமரா கோணம், கிராபிக்ஸ் என ஏகப்பட்ட விஷயங்கள் இதில் உண்டு. இவற்றை உங்கள் மகளிடம் இயல்பாக விளக்கலாம். இவர்களைப் போல ஆக வேண்டுமென பதின் வயதினர் பலரும் டயட், ஸ்லிம் மாத்திரை என தப்பாய் குதிக்கும் போது அவர்களுடைய உடலும் மனமும் பாதிப்படைகிறது. பலர் உயிரை இழக்கவும் இது காரணமாகி விடுகிறது.
முக்கியமாக பதின் வயதுப் பெண்கள் தன்னைப் பற்றி அறிந்து கொண்டிருப்பதும், தங்களால் எதையும் செய்ய முடியும் என ஆழமாய் நம்புவதும், சமூகத்தின் எதிர்பார்ப்புகளின் எல்லைகளில் உலவ முடியும் எனும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டியதும் அவசியம். பதின் வயதினரின் தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்புவது வலுவான ஒரு இளைய சமூகத்தைக் கட்டி எழுப்புவதற்குச் சமம்.
பதின் வயதை உரமூட்டுவோம்
எதிர் காலத்தை நிறமூட்டுவோம்