தன்னம்பிக்கை : இனிமேல் முடியாது

 போலாம் ரைட்என்றவுடனே ரன்வேயில் ஓடி, காற்றைப் பிடித்து விண்ணில் தாவி பறந்து விடுகிறது ஆகாய விமானம்.  ஆனால் அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்தரைட்ஸ் சகோதரர்களுக்குஅது அவ்வளவு எளிதாய் இருக்கவில்லை. ஆர்வில், வில்பர் எனும் மில்டன் ரைட்டின் இரண்டு பிள்ளைகளுமே படிப்பில் அப்படியொன்றும் சுட்டிகளில்லை. சின்ன வயதில் அவருடைய தந்தையார் வாங்கிக் கொடுத்த குட்டி பறக்கும் ஹெலிகாப்டர் அவர்களை ரொம்பவே வசீகரித்தது. பேப்பர், மூங்கில், ரப்பர் போன்றவைகளால் உருவாக்கப்பட்டிருந்த அந்த ஹெலிகாப்டர் பறந்தபோது அவர்கள் பிரமித்தும் போனார்கள். அது உடைந்தபோது அதே போல ஒன்றை அவர்களாகவே உருவாக்கி வியப்பூட்டினார்கள். 

பறக்கும் ஆசை அப்போதே அவர்களுடைய மனதுக்குள் குடியேறிவிட்டது. படித்தார்கள், ஆனாலும் படிப்பில் பெரிதாய் எதையும் சாதிக்கவில்லை. ஒரு டிப்ளமோ கூட முடிக்கவில்லை. படிப்பை முடிக்காமல் வெளியேறியவர்களை கடுமையான மன அழுத்தம் சந்தித்தது. நோயாளியான அம்மா, உதவி தேவைப்படும் அப்பா எனும் சூழல் தான் அவர்களுக்கு வாய்த்தது. 

இருவருமாகச் சேர்ந்து ஒரு பிரிண்டிங் பிரஸ் ஆரம்பித்தார்கள். பத்திரிகை ஆரம்பித்தார்கள். எதுவும் அவர்களுக்குக் கை கொடுக்கவில்லை. சரி ஒரு சைக்கிள் கடை ஆரம்பிக்கலாம் என நினைத்தார்கள். சின்னக் கடை துவங்கி நான்கு ஆண்டுகளில் ரைட் சைக்கிள் நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்தார்கள். ஆனாலும் அவர்களுடைய தேடல் அதில் இருக்கவில்லை.

கடைசியில் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு விமானம் செய்ய ஆரம்பித்தார்கள். வேதாளத்தைப் பிடிக்கப் போன விக்கிரமாதித்யனாய் முயன்று கொண்டே இருந்தார்கள். பெரிய சைஸ் பட்டம், கிளைடர், இறக்கைகளுடன் கூடிய விமானம், சக்தியில் இயங்கும் விமானம் என படிப்படியாய் முயன்று கொண்டே இருந்தார்கள். ஆயிரக்கணக்கான தோல்விகளின் முடிவில் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. அதுதான் இன்றைய அதி நவீன விமானங்களின் தாய்வீடு.

இவ்வளவு தான். இதற்கு மேல் முயற்சி செய்ய முடியாதுஎனும் வாசகத்தை யாரோ ஒருவரிடமிருந்து தினமும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். தொழிலில், படிப்பில், நட்பில், காதலில் என எல்லா இடங்களிலும் இந்த சலிப்பு பலருக்கும் வந்து விடுகிறது. ரைட் சகோதரர்களுக்கு அப்படி ஒரு எண்ணம் வரவில்லை. அப்படி ஒரு எண்ணம் வந்திருந்தால்விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள்எனும் பெயர் அவர்களுக்குக் கிடைத்திருக்காது.

முயற்சி இல்லாமல் வளர்ச்சி இல்லை என்பது தான் உண்மை. எந்தக் கணத்தில் முயற்சியைக் கை விடுகிறோமோ, அப்போது வெற்றிக்கான கதவுகளும் அடைக்கப்பட்டு விடும். “இலட்சியத்தை நோக்கி எவ்வளவு மெதுவாய் போகிறாய் என்பது பிரச்சினையல்ல, நின்று விடாமல் இருப்பதே முக்கியம்என்கிறார் கன்ஃபூசியஸ்.

கூட்டுப்புழுவின் கூடுடைக்கும் பொழுதுகளைப் பார்த்திருக்கிறீர்களா ? பிரம்மப் பிரயர்த்தனம் செய்து அவை கூட்டை உடைத்து வெளியேறுகின்றன. எந்த வினாடியிலும் முயற்சியை நிறுத்தி வைப்பதில்லை. அப்படி நிறுத்தி வைத்தால் அவை வண்ணத்துப் பூச்சியாக வடிவெடுப்பதில்லை.

தொடர்ந்த முயற்சியே வெற்றியைத் தரும். எப்போது முயற்சி செய்வதை நிறுத்தி விடுகிறோமோ அப்போது தோல்வி நம்மை அமுக்கிப் பிடிக்கிறது. நான் அதைப் புரிந்து கொண்டேன். தொடர்ந்து முயற்சி செய்பவர்கள் வெற்றியை அடையாமல் போனதேயில்லைஎன்கிறார் ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஹாரிசன் ஃபோர்ட். துவக்க காலத்தில் யாரும் இவரை சிவப்புக் கம்பளம் வைத்து வரவேற்கவில்லை. உதாசீனம், நிராகரிப்பு, அவமானம் இவையெல்லாம் இவருடைய வாசலில் குவிந்து கிடந்தன. இவரிடம் இருந்ததோ முயற்சியும், அதை முன்னெடுத்துச் சென்லும் தன்னம்பிக்கையும் தான். முயன்று கொண்டே இருந்தார். காற்றுக்கு முன்னேறிச் செல்லும் பட்டம் போல ஹாலிவுட் வானில் உயரப் பறக்கிறார்.

இனிமேல் முடியாதுஎனும் மனநிலை அலுவலக வாழ்க்கையில் மட்டுமல்ல குடும்ப வாழ்க்கையிலும் சிக்கல்களைக் கொண்டு வருகிறது. குடும்பச் சண்டைகள், விவாதங்கள், விட்டுக் கொடுத்தல் போன்றவற்றில் இந்த மனநிலை வரும்போது உறவில் விரிசல்கள் எழுகின்றன. வீட்டை விட்டு ஓடிப் போகும் மகன்களும், பெற்றோரைப் புறக்கணிக்கும் மகள்களும், விவாகரத்து கேட்கும் தம்பதியரும்இனிமேல் முடியாதுஎனும் நிலையில் வருபவர்கள் தான்.

அமெரிக்காவின் இந்தியானாபோலீஸ் எனுமிடத்திலுள்ள ஆரோன் ரால்ஸ்டனுக்கு மலையேறுவதென்றால் உயிர். 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவிலுள்ள புளூ ஜான் கேன்யன் மலையில் ஏறியபோது விபத்தில் சிக்கிக் கொண்டார். அவருடைய வலது கை மலையிடுக்கில் மாட்டிக் கொண்டது. முதலில் கையை எப்படியாவது எடுத்து விடலாம் என்று தான் நினைத்தார். கை வெளியே வரவில்லை. வசமாய் சிக்கிக் கொண்டது. நேரம் செல்லச் செல்ல திகில் அவருடைய மனமெல்லாம் நிரம்பியது. ஆளரவம் அற்ற மலை அது. மலையேற வருவதைப் பற்றி அவர் யாரிடமும் சொல்லவும் இல்லை. கையில் போனும் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீரும் தீர்ந்து வருகிறது.

மணித்துளிகள் கடந்து நாட்களாகின்றன. ஒன்று இரண்டு மூன்று என நாட்களும் நகர்ந்து விட்டன. முழுதாய் ஐந்து நாட்கள் இடைவிடாமல் போராடினார். யாராவது வருவார்களா என கத்திப் பார்த்தார். ஒரு பயனும் இல்லை. கை சிக்கிக் கொண்டது சிக்கிக் கொண்டது தான். தனது வீடியோவை எடுத்து தன்னையே படம் பிடித்தார். இதோ சாகப் போகிறேன் என குடும்பத்துக்கு செய்தி கொடுத்தார். மலையில் தனது தோற்றம், மறைவு நாட்களைக் கூட வெட்டி வைத்தார். 

இதற்கு மேலும் முடியாதுஎனும் நிலமைக்கு அவர் அப்போது வந்திருந்தால்விபத்தில் சிக்கி இளைஞர் பலிஎனும் ஒரு வரிச் செய்தியாகியிருப்பார். ஆனால் அவர் துவளவில்லை. தன்னிடமிருந்த ஒரே அறுபடாத கத்தியைக் கொண்டு தனது வலது கையை வெட்டினார். அப்போது அவர் தரையிலிருந்து அறுபத்து ஐந்தடி உயரத்தில் இருந்தார் ! ஒற்றைக் கையுடன் தட்டுத் தடுமாறி கீழே வரும் வழியில் ஒரு தம்பதியரைச் சந்தித்தார். ஆறு மணிநேரத்துக்குப் பின் ஹெலிகாப்டர் அவரை மீட்டது. அந்த போராட்டம் தான் .ஆர். ரஹ்மானின் இசையில் 127 ஹவர்ஸ் எனும் ஹாலிவுட் திரைப்படமானது.

உயிரின் கடைச் துளி இருக்கும் வரை தளராமல் போராடுவோர் வாழ்வில் வெற்றியடைவார்கள் எனும் உயரிய பாடத்தை அவருடைய வலி மிகுந்த வாழ்க்கை சொல்லித் தருகிறது.

வெற்றிக்கான மந்திரத்தைச் சொல்லும்போது அதன் வழிகளாக இவற்றைச் சொல்வார்கள். ஒரு இலட்சியத்தை உருவாக்குங்கள். அதை அடைவதற்கான பயணத்திற்கு என்னென்ன தேவையோ அவற்றைத் தயாரியுங்கள். வெல்ல முடியும் எனும் அசைக்க முடியாத நேர் சிந்தனையை மனதில் கொண்டிருங்கள். வாய்ப்புகளின் வால் கிடைத்தால் கூட இறுகப்பிடித்துக் கொள்ளுங்கள். தோல்விகளிலோ, தவறுகளிலோ துவண்டு விடாமல் மீண்டும் உற்சாகமாய் முன்னேறுங்கள். எப்போதும் உங்களைச் சுற்றி தன்னம்பிக்கையான மனிதர்களைக் கொண்டிருங்கள். வெற்றி கிடைக்கும் வரை முயற்சியை முறித்துப் போடாதீர்கள். !

முதல் சுவடு எடுத்து வைக்காமல் வெற்றிக்கான பயணம் ஆரம்பமாவதில்லை. அதே நேரம் எல்லைக் கோட்டில் கடைசிச் சுவடை வைக்காவிடில் பயணம் வெற்றியாய் அமைவதுவும் இல்லை. துவக்கம் மட்டுமே வெற்றியைத் தந்து விடாது. கொஞ்சமாய் முயன்று விட்டு முடங்கிவிட்டாலும் நமக்குக் கிடைக்க வேண்டிய புதையல் கிடைக்காமலேயே போய்விடும்.

இசைக்கலைஞர்களுக்குப் பரிச்சயமான பெயர் பாப்லோ கேசல்ஸ். வயலினைப்  போல இருக்கும்செல்லோஎனும் இசைக்கருவியை இசைப்பதில் உலகப் புகழ் பெற்றவர். அவருடைய மரண காலம்  வரை சுமார் ஆறுமணி நேரம் இசைப் பயிற்சி எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 95வது வயதில் ஒருமுறை அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். “இந்த வயதிலும் ஏன் கடினமாக ஆறு மணி நேரம் பயிற்சி செய்கிறீர்கள் ?”. சின்னப் புன்னகையுடன் அவர் சொன்னார். “ஏனெனில் நான் இசையில் தொடர்ந்து வளர்வதாய் நினைக்கிறேன். அதனால் தான் நிறுத்தாமல் பயிற்சி எடுக்கிறேன்”.

முயற்சியின் கிளைகள் வளரும் வரைதான் வாழ்க்கை மரத்தைக் கரையான் அரிக்காது. முயற்சிப் பாதங்கள் நடப்பதை நிறுத்தும்போது நம் தலைக்கு மேல் வல்லூறுகள் வட்டமிடத் துவங்கும். “இதற்குமேல் முடியாதுஎன்பவனுக்கு வரலாற்றின் பக்கங்களில் இடமில்லை. வாழ்வின் பக்கங்களின் அவன் நடந்த தடமும் நிலைப்பதில்லை.

பிலிப் பெட்டிட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? கயிறு மேல் நடப்பதில் அலாதி பிரியம் அவருக்கு. அந்த நுட்பத்தை அவருக்கு யாரும் கற்றுத் தரவில்லை. தனது வீட்டின் பின்னால் கயிறு கட்டி நடந்து பழகினார். கயிறு மேல் நடப்பது, குதிப்பது, பல்டியடிப்பது என சாகசங்கள் கொஞ்ச நாளிலேயே போரடித்து விட்டது. உயரமான கட்டிடங்களுக்கிடையே கயிறுகட்டி நடந்தால் என்ன ? எனும் சிந்தனை உந்தித் தள்ள, அதற்கான முயற்சியில் இறங்கினார். பாரீஸிலுள்ள பழமை வாய்ந்த உயரமான நாட்ரி டாம் ஆலயத்தின் கோபுரங்களுக்கிடையே கம்பி கட்டி நடந்தார். பின் ஆஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள ஹார்பர் பாலத்திடையே கம்பி கட்டி நடந்து வியக்க வைத்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் இரட்டைக் கோபுரங்களுக்கிடையே கம்பி கட்டி நடக்க வேண்டும் என்பது அவருடைய தீராத ஆவல். 1960களில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தபோது பாரீஸிலிருந்து பல முறை நியூயார்க் சென்று அந்தக் கட்டிடத்தைப் பார்த்தார். 1368 அடி உயரத்தில் இருந்தது கட்டிடத்தின் உச்சி. இரண்டு கட்டிடங்களுக்கிடையே சுமார் 200அடி தூரம். ஹெலிகாப்டரில் பல முறை பறந்து கட்டிடங்களைப் படம் பிடித்தார். பல முறை கட்டிடத்துக்குள் காவலாளி கண்ணில் மண்ணைத் தூவி நுழைந்து வேவு பார்த்தார்.

ஒரு தடவை போலீஸின் கையிலும் வசமாக மாட்டினார். இனிமேல் கனவு அவ்வளவு தான் என உடைந்து போய்விடவில்லை. மீண்டும் மீண்டும் முயன்று கொண்டே இருந்தார். கடைசியில் வெகு ரகசியமாக கம்பிகள், கட்ட வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் மாடியில் கொண்டு சேர்த்தார்கள். நள்ளிரவில் ஒரு கட்டிடத்தின் உச்சியிலிருந்து மறு கட்டிடத்துக்கு அம்பு மூலம் நூல் எறிந்து, கம்பி இழுத்து என பிரம்ம பிரயர்தனம் செய்து கம்பியை இழுத்துக் கட்டினார்கள்.

1974 ஆகஸ்ட் 7ம் தியதி காலையில் கம்பியில் நடந்தார் பெட்டிட். சில்லிடும் குளிர், வழக்கத்தை விட அதிகமான காற்று, எப்போது வேண்டுமானாலும் பெய்யத் தயாராய் இருக்கும் வானம், பனிமூட்டம் என அவரைச் சவால்கள் சந்தித்தன. பெட்டிட் தயங்கவில்லை. கம்பியின் மீது அசைந்தாடி நடந்து எல்லோரையும் அதிர்ச்சிகுள்ளாக்கினார். காவலர்கள் வந்து அவரைக் கைது செய்யும் வரை சுமார் 45 நிமிடங்கள் கம்பியில் நடந்தும், அமர்ந்தும், குதித்தும் சாகசம் செய்து கொண்டிருந்தார்1

இந்த முயற்சியின் துவக்கம் முதல் கைது வரை பெட்டிட் சந்தித்த சவால்களும், சிக்கல்களும் கொஞ்ச நஞ்சமல்ல. ‘இனிமேல் முடியாதுஎன ஒரு முறை  நினைத்திருந்தால் கூட அவருடைய இலட்சியம் நிறைவேறியிருக்காது என்பதே உண்மை. 

நில்லாமல் தொடரட்டும் முயற்சிகள்அவை

உயிருக்கு உரமூட்டும் பயிற்சிகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.