Vetrimani : எங்க காலத்துல….

எங்க காலத்துல….
( பழமை பேசுதல் பயன் தருமா ? )

Image result for old man advice

ஒருவனுக்குக் காதல் தோல்வி ! சில ஆண்டுகள் திகட்டத் திகட்டக் காதலித்து விட்டு, வழக்கம் போல தாடியைத் தடவியபடி ஓரமாய் உட்கார வேண்டிய காலம். உட்கார்ந்து உட்கார்ந்து தாடியும் நரைத்துப் போய், கால்களும் மரத்துப் போயிருக்கும் காலத்தில் அவனுடைய கண்ணுக்கு முன்னால் கலியுகக் காதலர்கள் பறந்து திரிகின்றனர். இந்தக் காலத்துக் காதல் புனிதமானது. அது தீண்டாமைக் கொடுமைகளைக் கடந்தது. அது பழைய காதலனுக்குப் புரிவதில்லை.

எங்க காலத்துல காதல்ன்னா எப்படி தெரியுமா ? என பேச ஆரம்பிப்பார். அப்போதெல்லாம் சன்னல் வழியே தான் கண்கள் பேசிக்கொள்ளும் என்பார். உடனே இளசு ஒன்று, இப்பவும் அப்டித்தான்.. ‘வின்டோஸ்’ வழியே விழிகள் பேசிக்கொள்கிறது என்பார். அப்போதெல்லாம் நாங்க தொட்டுப் பேசறது கூட கிடையாது, என்பார் அவர். அப்பல்லாம் நீங்க பேசறதே இல்லை அப்புறம் என்ன தொட்டுப் பேசறது என்பார் இவர்.

அந்தக் காலத்துல காதல் புனிதமானது என்பார் பழையவர். புனிதமானது எல்லாம் கோயில்ல இருக்கணும், காதல்ல எதுக்கு இருக்கு என்பார் இளையவர். காதலி எழுதற எழுத்துப் பிழையே அழகானதுப்பா என்பார் பழையவர். வீடியோ கால் காலத்துல எதுக்கு எழுத்தும், பிழையும் என்பார் இளையவர். ஒருத்தி கிட்டே மனசைக் கொடுக்கிறது தான் எங்க காலக் காதல் என்பார் அவர். மனசென்ன கடலை மிட்டாயா குடுத்ததும் தீர்ந்து போக என நக்கலடிப்பார் இவர்.

காலங்களின் இடைவெளி எப்போதுமே உரசிக் கொண்டே தான் இருக்கும். இது இன்று நேற்று நடந்ததல்ல. தலை முறை தலைமுறையாக, முந்தைய தலைமுறையைப் பற்றிய புகழ் பாக்கள் ஒலித்துக் கொண்டே தான் இருக்கின்றன. ‘நான் காதலில் கசிந்துருகினேன்’ என ஒருவர் சொல்வதில் அப்படியே உண்மை இருக்க வேண்டுமென்பதில்லை. அவர் காதலில் அடிபட்டு, மிதிபட்டு, விரட்டப்பட்டு, தோற்றுப் போனவராகவும் இருப்பார். தோற்றுப் போன நினைவுகளை மாற்றி, தேற்றிக் கொள்ளும் நினைவுகளுக்காக தனது கனவுக் கதவைத் திறந்து அவர் சுகமான நினைவுகளை உருவாக்குகிறார்.

நாம் பனங்காயில் வண்டி செய்து ஓட்டிய நினைவுகளை பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்கிறோம். பிள்ளைகள் நாளை ஃபோர்ட்நைட் வீடியோ கேம் விளையாடுவதைப் பற்றி அடுத்த தலைமுறையிடம் சொல்வார்கள். அவர்கள் விர்ச்சுவல் விளையாட்டுகளின் உயர்நிலை பற்றி தொடரும் தலைமுறைக்குப் பகிர்ந்து கொள்வார்கள். இது ஒரு வாழையடிப் பாதைப் பயணம். தவிர்க்க முடியாத யதார்த்தம்.

காலங்களின் நெடுவீதியைக் கடந்து வந்தவர்கள் தங்களுடைய பயணத்தின் வழியில் தொலைத்தவை ஏராளம் ஏராளம். பால்யத்தின் பரவச நினைவுகள். இளங்காதலின் நிராகரிப்பு நிமிடங்கள். பெற்றோரின் அரவணைப்புக் கணங்கள். நண்பர்களின் குதூகலத் தருணங்கள். கனவுகளின் மகரந்தச் சேர்க்கைகள். என அவர்கள் தொலைத்தவை ஏராளம் ஏராளம். மறைந்து போன மனிதர்களை நேரில் சந்திக்க முடியாதபோது அவர்கள் நினைவுகளின் வழியே கைகுலுக்கிக் கொள்கின்றனர். தொலைந்து போன வருடங்களை மீண்டும் சந்திக்க முடியாதபோது அவர்கள் அந்த ஞாபகங்களின் ஒலியை மறு ஒலிபரப்பு செய்கின்றனர்.

இது ஒரு வகையில் உளவியல் ஆறுதல். என் காலத்தில் எல்லாம் நன்றாக இருந்தது எனும் நம்பிக்கையின் வருடல் அவர்களுக்கு வெப்பத்தின் கணங்களை விட்டு வெளியேற துணை செய்கின்றன. அதனால் தான் பெரியவர்கள் ஆக ஆக அவர்களுடைய பழங்கதைகளின் பகிர்தல் அதிகமாகிக் கொண்டே போகிறது. முதுமை நம்மை உணர்வுகளோடு நெருக்கமாக்கி, உணவுகளிலிருந்து பிரித்தெடுக்கிறது. முதுமை நம்மை உறவுகளோடு இறுக்கமாக்கி, செல்வங்களிலிருந்து விலக்கி வைக்கிறது. அதனால் தான் மனதின் காயங்களுக்கு பழங்கதைகள் மயில்பீலிச் சாமரம் வீசுகின்றன.

அவர்களுடைய காலத்துக்கு ஒரு டைம் மெஷின் மூலம் போய்ப் பார்த்தால் அவர்கள் பட்ட கஷ்டங்களும், அவமானங்களும் வண்டி வண்டியாக கொட்டிக் கிடப்பதைப் பார்க்கலாம். அந்த எதிர்மறை வலிகளையெல்லாம் விலக்கிவிட்டு அவர்கள் பழைய காலத்தின் பாசிடிவ் சிந்தனைகளில் சிக்கிக் கொள்வதன் காரணம் அவர்கள் விரும்பிய வகையில் தங்கள் பால்யத்தை சிந்தனைகளில் நட்டு வைப்பதே. காலப்போக்கில் அவர்களுடைய எதிர் மறை சிந்தனைகள் விலகிப் போவதை ,”ஃபேடிங் அஃபக்ட் பயஸ்” என உளவியலார்கள் கூறுவார்கள்.

பழைய காலத்தில் நம்மை வார்தெடுத்த வலிகளும், நம்மை துவைத்தெடுத்த தோல்விகளும் மறைந்து போக, பழைய காலத்தின் இனிய நினைவுகள் மட்டுமே இதயத்தின் வடிகட்டியில் ஒரு வாசனை திரவியமாய் தங்கி விடுகிறது. அது தான் பெரியவர்களின் பேச்சுகளிலிருந்து சிரிப்பும், சிலிர்ப்புமாய் புறப்படுகிறது. பழைய நினைவுகளைப் பகிரப் பகிர அவை மீண்டும் மீண்டும் மனதில் வலுவடைகின்றன. “அவ சந்திரமுகியா நின்னா, சந்திரமுகியா நடந்தா, சந்திரமுகியைப் பேசினா, சந்திரமுகியாவே மாறிப் போயிட்டா” மாதிரி, பழைய காலத்தை பாசிடிவ் ஆகப் பேசிப் பேசி அதையே உண்மையென மனம் நம்பி அதில் லயிக்க ஆரம்பித்து விடுகிறது.

யாராவது உங்களிடம் அப்படிக் கதைகள் பேசினால் அவர்களருகில் அமர்ந்து அவர்களுடைய பால்யத்தின் கதைகளைக் கேளுங்கள். குறிப்பாக முதியவர்கள் அத்தகைய கதைகளைப் பேசினால், விழிகளில் வியப்பும், இதயத்தில் ரசிப்புமாக அவர்களுடைய கதைகளைக் கேளுங்கள். அதை சிலாகியுங்கள். அதை வியந்து பேசுங்கள். இவையெல்லாம் அந்த முதியவர்களின் மனதில் சொல்லொண்ணா ஆறுதலை மழைபோல இறக்கும். அவர்களுடைய வெறுமையான பொழுதுகள் மகிழ்வினால் நிரப்பப்படும்.

“பழைய கதையைப் பேசாதீங்க” என உதாசீனப்படுத்தும் ஒவ்வொரு கணமும் நாம் அவர்களை காயப்படுத்துகிறோம். அவர்களுடைய அழகிய ஓவியத்தில் கரியைப் பூசுகின்றோம். அது அவர்களுடைய மெல்லிய மனதில் கீறல்களை உருவாக்கி விடுகிறது. அவர்களுடைய உணர்வுகளின் வாய்க்கால்களில் பாறைகளைப் புரட்டி வைக்கிறது. அதற்குப் பதிலாக, “உங்க பால்யத்துல வாழாம போயிட்டேனே” எனும் ஏக்கத்தைப் பதிவு செய்யுங்கள். அவர்களுடைய சிந்தனை வயல்களெங்கும் சிரிப்புகள் விளையும்.

பழங்கதைகள் பேசுவோர் நிகழ்கால யதார்த்தத்தை உதறிவிட்டு தன்னைச் சுற்றிய மனிதர்கள் அனைவரும் கடந்த காலத்தில் தான் வேர்களைப் பதிக்க வேண்டும் என நினைக்கும் போது தான் பிரச்சினை உருவாகிறது. நான் இப்படி இருந்தேன், எனவே நீயும் அப்படித் தான் இருக்க வேண்டும். எனது பால்யம் இப்படி இருந்தது எனவே உனது பால்யமும் இப்படித் தான் இருக்க வேண்டும். எனது வாழ்க்கையில் நான் இத்தகைய முடிவுகளைத் தான் எடுத்தேன், நீங்களும் இத்தகைய முடிவுகளைத் தான் எடுக்க வேண்டும் என கடந்த காலத்தின் சாவிகளால் நிகழ்காலத்தைப் பூட்ட நினைக்கும் போது தான் சிக்கல்கள் உருவாகின்றன.

உலகம் மோசமான நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதாக உலகின் 70% மக்கள் நம்புகிறார்கள். அதிலும் குறிப்பாக தங்களுடைய வாழ்க்கையே மோசமாகப் போவதாக 55 சதவீதம் மக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கை தான் அவர்களை பழைய காலத்தின் இடுக்குகளில் இளைப்பாற வைக்கின்றன. அதனால் தான் பழசைத் தாண்டிய விஷயங்களெல்லாம் தவறு எனும் சிந்தனை அவர்களிடம் முளைக்கிறது. அந்த சிந்தனையை ஊக்குவிப்பது போல பெண்களுக்கும், இளையவர்க்கும் எதிரான வன்முறைகளும், சமூக அவலங்களும் அவர்களை அலட்டுகின்றன.

குறிப்பாக தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எல்லோர் கைகளிலும் ஆறாவது விரலாக ஒரு ஸ்மார்ட்போனை புதைத்து வைத்திருக்கிறது. அதை அனிச்சைச் செயலாகத் தடவிப் பார்ப்பதை தவறாமல் செய்கிறது இன்றைய தலைமுறை. தொழில்நுட்பம் கொண்டு வந்திருக்கும் வாழ்வியல் மாற்றங்கள் எக்கச்சக்கம். அவற்றையெல்லாம் ஒற்றை உதறலில் அகற்ற நினைப்பது நடக்காத காரியம்.

கடந்த தலைமுறைக்குத் தவறிழைக்கக் கிடைத்த வாய்ப்புகளை விட, இன்றைய சிறுவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கிறது. தலையில் துண்டு போட்டு காலைக்காட்சியில் ரகசியப் படம் பார்த்த கதைகளெல்லாம் வரலாறாகிவிட்டன. இப்போது விரல்நுனியில் விரசம் அவர்களுக்கு டிஜிடல் வடிவில் கிடைக்கிறது. இந்த சூழலில் அவர்கள் இதயத்தில் மனிதத்தையும், உடலில் புனிதத்தையும் காக்க நாம் என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும். நான் அப்படி இருந்தேன் என்பதெல்லாம் இங்கே பயனளிக்காது.

எனது தோட்டத்தில் இப்படிப் பூக்கள் விளைந்தன, அதை இப்படிப் பராமரித்தேன். உனது தோட்டத்தில் பூக்கள் விளைவிப்பதும், களைகள் விளைவிப்பதும் உனது விருப்பத்தைப் பொறுத்தது. நான் என் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன் எனுமளவில் இந்தப் பகிர்தல் இருக்கும் போது எல்லம் இனிமையாகிறது.

பழங்கதைகள் பேசுவோரின் உணர்வுகளை மதிப்போம். ஏனெனில் அவர்களது களங்கமற்ற வாழ்க்கையின் அடையாளம் அங்கே தான் நிரம்பியிருக்கிறது. அவர்களின் முதுமை நாட்களில் அவர்களின் இதயம் மகிழ்வில் திளைக்க உதவுவோம். ஏனெனில், முதுமை என்பது நமது வாழ்க்கைப் பாதையிலும் காத்திருக்கும்.

*

சேவியர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.