தன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.

இளம் வயது என்று சொல்லும் போதே உள்ளுக்குள் ஒரு உற்சாகம் கரை புரள்கிறது. இளமை எதையும் சாதிக்கும் வயது. தொழில் நுட்பங்களின் பின்னணியில் பரபரப்பதும், வீரத்தின் முன்னணியில் பயணிப்பதும், சமூகத்தின் மையத்தில் இயங்குவதும் இளமையே ! திகைப்பூட்டும் வேகமும், வியப்பூட்டும் விவேகமும் கலந்த கலவை தான் இளமை. 

பத்து இளைஞர்களை என்னிடம் தாருங்கள், உலகை மாற்றிக் காட்டுகிறேன்எனும் விவேகானந்தரின் கூற்று நூறு முறையேனும் நமது காதுகளை எட்டியிருக்கும். முதுமைக்கும் இளைமைக்கும் ஒரே ஒரு வேறு பாடு தான். இளமை ஒரு செயலைச் செய்து முடிக்கும் போது களைப்படையும், முதுமை ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போதே களைப்படையும் என்பார் பிரபல எழுத்தாளர் எலியட். 

இன்றைய சமூகம் இளைஞர்களுக்கு பல்வேறு விதமான வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. தொழில்நுட்பம் எனும் டைனோசர் இன்றைய இளம் வயதினரைத் தூக்கிச் சுமக்கிறது. அதன் முதுகிலிருந்து தவறி விழுபவர்கள் அதன் காலில் மிதிபட்டு அழிந்து போகும் ஆபத்தும் நேர்ந்து விடுகிறது.

உதாரணமாக இணையம் எனும் டிராகன் உங்களை எங்கே வேண்டுமானாலும் சுமந்து திரியும். ஏழு கடல் ஏழு மலை தாண்டியும் அதில் நீங்கள் பயணிக்கலாம். ஆனால் தவறான முறையில் நீங்கள் இந்த டிராகனை எதிர்கொண்டால் அதன் மூக்கிலிருந்து எழும் தீச் சுவாலை உங்களைக் காயப்படுத்தலாம். அல்லது எரித்து அழிக்கலாம் !  

இளைஞர்களின் வலிமையையும், திறமையையும் செயலிழக்கச் செய்யும் வலிமை சில விஷயங்களுக்கு மட்டுமே உண்டு. போதைப்பழக்கம், கூடா நட்பு, பாலியல் போன்றவை அந்தப் பட்டியலில் பிரதானமானவை.

சில தலைமுறைகளுக்கு முன்னால் ஆண்களும் பெண்களும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகளே அபூர்வம். தரையில் கோலம் போட்டுக் கொண்டே முந்தானை முனை கடிக்கும் அரை தாவணிகளின் காலம் இப்போது முடிந்து போய் விட்டது. இப்போது ஆண்களும் பெண்களும் சகஜமாகப் பழகும் நிலை உருவாகியிருக்கிறது.

ஆண்களும் பெண்களும் ஒன்றாகப் பழகும் நிலையும், அவர்களுக்கிடையேயான கருத்துப் பரிமாற்றங்களும், நட்பு உரையாடல்களும், உதவும் மனநிலைகளும் மிகவும் ஆரோக்கியமானவை. இணைந்தே படித்து, இணைந்தே பணிசெய்யும் சமூகத்தில் அது மிகவும் அவசியமானதும் கூட.  

எனினும் ஒரு எல்லைக் கோடு எல்லாவற்றுக்குமே அவசியமாகிறது. எல்லைக் கோட்டைத் தாண்டிப் போனால்அவுட்என்கிறது விளையாட்டு. எல்லைக் கோட்டைத் தாண்டிப் போனால்ஆபத்துஎன்கிறது ராமாயணம். ஆனால் எல்லைக் கோட்டைத் தாண்டுவது தான்திரில்என்கிறது இளைய சமூகம். 

மாற்றம் என்பது மாற்ற முடியாதது. ஆனால் எல்லா மாற்றங்களுமே வளர்ச்சிக்கானவை அல்ல. ரிவர்ஸ் கியரில் ஓடும் வண்டி முன்னோக்கிப் போவதில்லை. 

இளைஞர்கள் மிகவும் கவனமாக அணுக வேண்டிய ஒரு விஷயம் ஊடகங்கள். அன்றைய நாடகங்கள் இளைஞர்களுக்கு வீரத்தைப் போதித்தன, இன்றைய ஊடகங்கள் இளைஞர்களுக்கு காமத்தைப் போதிக்கின்றன. அவை சொல்லும் பல விஷயங்கள் இளைஞர்களின் மனதில் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கிளர்ச்சியில் மயங்கும் போது வளர்ச்சி தயங்கி விடுகிறது.  

திருமணத்துக்கு முன் ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்வதே தவறுஎனும் காலகட்டத்திலிருந்து, ‘திருமணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வது சரியேஎனும் இடத்துக்கு இன்றைய சமூகம் இடம் பெயர்ந்திருப்பதாய் கட்டுரைகள் கவலை தெரிவிக்கின்றன. 

அதனால் தான் விவாகரத்து என்றால் அலறிய சமூகம், இன்று வானிலைச் செய்தியைப் போல அதை வாசித்துக் கடந்து போகிறது. எவ்வளவு தூரம் ஆண் பெண் இடைவெளி குறைகிறதோ அந்த அளவுக்கு மணமுறிவு எண்ணிக்கை அதிகரித்திருப்பதை புள்ளி விவரங்கள் புட்டுப் புட்டு வைக்கின்றன.

பாலியல் தவறுஎன்று யாரும் சொன்னதில்லை. ஆனால் சரியான நேரத்தில் செய்யப்படாத எதுவுமே தவறாகிப் போய்விடும். 

திருமணத்துக்கு முன்பே பாலியல் உறவு வைத்துக் கொள்வது இளம் வயதினரிடையே அதிகரித்திருக்கிறது என்பது கவலையளிக்கும் செய்தி. ‘புதிதாய் எதையேனும் கற்றுக் கொள்ள வேண்டுமென்றோ, வரம்பு மீறித் தான் பார்ப்போமேஎனும் ஆர்வம் காரணமாகவோ தவறிழைத்து விடுகிறார்கள். 

யாருக்குமே தெரியாது என ரகசியமாய் பரிமாறப்படும் அன்னியோன்ய விஷயங்களினால் நிறைந்திருக்கிறது இணைய உலகம். .டி.எம் அறைகளில், இணைய நிலையங்களில், ஹோட்டல்களில் என தவறிழைக்கும் தருணங்களையெல்லாம் ரகசிய கேமராக்கள் கண்காணிக்கின்றன என்பதையே இணையத்தில் வெளியாகும் படங்களும், வீடியோக்களும்  சொல்லிச் செல்கின்றன. சைபர் கிரைம் படியேறி கண்ணைக் கசக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கையே இதன் சாட்சி. 

உங்களைக் குற்ற உணர்வுக்கு உள்ளாக்கும் செயல்களைச் செய்யாமல் இருப்பது உங்களுடைய தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரிக்கும். ரகசியச் செயல் வெளியே தெரிய வந்தால் அதனால் நேரும் அவமானமும், பின் விளைவுகளும், தலைகுனிவுகளும் உங்களுடைய எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடும்.

மன அழுத்தம் இளம் வயதினரைத் தாக்க பாலியல் ஈடுபாடும் ஒரு காரணம் என்கிறது மருத்துவம். தவறு செய்த உணர்வோ, தவறிழைக்கத் தூண்டிய உணர்வோ மனதில் அழுத்தத்தை உருவாக்கி விடுகிறது. மன அழுத்தம் எப்போதுமே தனியே வருவதில்லை, நோய்களின் பட்டியலோடு தான் வருகிறது. தவறுகள்தாய்மையைத் தந்து சென்றால் அதன் பின் நடக்கும் சிக்கல்களைப் பற்றித் தனியே சொல்லத் தேவையில்லை.  

எல்லாவற்றுக்கும் மேலாக இவை கொண்டு வரும் உடல் ரீதியிலான நோய்கள். எயிட்ஸ் போன்ற உயிர்கொல்லி நோய்கள் தவிர இவை கொண்டு வரும் தொற்று நோய்கள் கணக்கில் அடங்காதவை. கருப்பை வாய்ப் புற்று நோய் போன்ற நோய்களுக்கும் திருமணத்துக்கு முந்தைய தவறுகள் மிக முக்கியக் காரணம் என்கிறார் கயா நாட்டு மருத்துவர் பிலோமினா மிராகு. 

இந்தியாவில் 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டதிருமணத்துக்கு முந்தைய உறவுவைத்துக் கொள்பவர்களில் 52 சதவீதம் பேருக்கு தொற்று நோய் வருகிறது என்கிறது அவிஷ்கார் புள்ளி விவரம். ‘முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவதும், டென்ஷனும், நண்பர்களின் உசுப்பேற்றலும்தவறுகளின் முக்கிய காரணங்களாம் !

ஆரோக்கியமான நட்பாய் தோன்றும் பல நட்புகள் பின்னர் தனிமையில் சிக்கல்களுக்குரியதாய் விஸ்வரூபம் எடுப்பதுண்டு. இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்கிறார் ஜேம்ஸ் டாப்சன் எனும் திருமண ஆலோசகர். ஆண்கள் காதலைப் பெரும்பாலும் படுக்கையில் பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள் என்கிறார் அவர்.

இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க ஆண் பெண் நண்பர்களுக்கு இடையேயான தொட்டுப் பேசும் வழக்கத்தை விட்டு விடலாம். தொட்டுப் பேசுவது தவறில்லை, ஆனால் அது ஹார்மோன்களை விழிப்படையச் செய்யும் என்கிறது அறிவியல். ஹார்மோன்கள் விழித்துக் கொண்டால் உங்கள் சிந்தனைகளில் அதுவே வந்து ஆக்கிரமித்துக் கொள்ளும் அபாயம் உண்டு. எனவே தொடுதல், முத்தமிடுதல், அன்பாய் கண்டியணைத்தல் போன்றவற்றைத் தவிர்ப்பது பாதுகாப்பானது . 

சிற்றின்பச் சோதனைகளைக் கடந்து வருவது இளம் வயதினரின் முன்னால் நிற்கும் மிகப் பெரிய சவால். இந்த சோதனையைக் கடந்து வர வேண்டுமெனில் அத்தகைய சோதனைகளுக்குள் உங்களைத் தள்ளி விடும் விஷயங்களை ஒதுக்குவது அவசியம். குறிப்பாக விரும்பத் தகாத புத்தகங்கள், இணையப் பக்கங்கள், திரைப்படங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது மனதில் களங்கம் புகாமல் இருக்க உதவும்.

முன்கூட்டியே சில விஷயங்களை நண்பர்களுக்குள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக இந்த இந்த இடங்களை நான் தவிர்ப்பேன், இந்த இந்த நேரங்களைத் தவிர்ப்பேன், இப்படிப்பட்ட சூழல்களைத் தவிர்ப்பேன் என முன்கூட்டியே நண்பர்கள் பேசிக்கொள்வது தவறான சூழலில் சென்று தவறிழைப்பதைத் தடுக்கும்.,

சின்னச் சின்னத் தீண்டல்கள் கூட உங்களைப் பெரும் ஆபத்தில் தள்ளிவிடக் கூடும். ‘இதற்கு மேல் நடக்காதுஎனத் துவங்கும் எல்லா விஷயங்களும் அதைத் தாண்டிப் போகும் என்பதே அசைக்க முடியாத உண்மை ! தோளில் சாய்ந்து தூங்குவதோ, தனிமையில் கரம் கோத்துத் திரிவதோ கூட ஹார்மோன்களை உசுப்பேற்றலாம் !

டேட் ரேப்எனப்படும் போதை மாத்திரைகள் கொடுத்து தவறிழைக்க வைக்கும் நிகழ்வுகளைப் பற்றி அடிக்கடி செய்தித் தாள்கள் பேசுகின்றன. எனவே அத்தகைய தனிமை, மதுச் சூழல்களை அறவே ஒதுக்குங்கள். ஒருவேளை நண்பருடனோ, தோழியுடனோ சகஜமான நட்புறவு வைக்க முடியாது என்று தோன்றினால் நட்புக்குக் கொஞ்சம் இடைவெளி விடுங்கள். தப்பில்லை !

நண்பர் சொல்லும்வார்த்தைகளைமட்டும் வைத்து அவரை எடை போடாதீர்கள். அவருடைய செயல்பாடுகளும், சிந்தனைகளும், என்ன என்பதை அவருடைய உடலசைவுகள், பார்வை இவற்றின் மூலம் படித்தறியுங்கள். அது உங்களை விழிப்புடன் வைக்கும். உங்கள் நண்பரோ தோழியோ உங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க வையுங்கள். நட்பைத் தாண்டிய பொறுப்புணர்வும், மரியாதையும் உங்கள் மீது உருவாகும். 

கடைசியாக ஒன்று. பாலியல் வலையில் விழுந்து விடாமல் தப்புவது உங்களுடைய மன உறுதியைச் சார்ந்தே இருக்கிறது. குடும்ப உறவுகள் மீது அதிக மதிப்பு வைப்பது, நல்ல ஆன்மீகச் சிந்தனைகள் வளர்த்துவது, நல்ல ஒரு வழிகாட்டியை வாழ்வில் கொண்டிருப்பது, பெற்றோரை மதித்து நடப்பது போன்றவையெல்லாம் உங்களை சரியான வழியில் பயணிக்க வைக்கும். 

நல்ல பாதையில் பயணியுங்கள், தேசத்தின் நம்பிக்கைகள் உங்கள் மீதே இருக்கின்றன.

உறுதி மனதில் கொள்ளுங்கள்

இறுதி வரை வெல்லுங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.