தன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே !

விட்டுக் கொடுத்தல் வெற்றியே !

வாழ்க்கையை இனிமையாக்குவதும், துயரமாக்குவதும் பெரும்பாலும் சின்னச் சின்ன விஷயங்களே. சின்னச் சின்ன மலர்களின் கைகோத்தல் எப்படி ஒரு மாலையாய் உருவாகிறதோ, அப்படித்தான் வாழ்வின் இனிமைகளும் உருவாகின்றன. மனிதனுக்கே உரிய அடிப்படைப் பண்புகளைக் கொஞ்சம் தூசு தட்டித் துடைத்து வைத்தாலே போதும், வாழ்க்கை பளபளப்பாய் அழகாய் உருமாறிவிடும்.

அத்தகைய குணங்களில் ஒன்று தான் உறவுகளுக்கிடையே நிகழ வேண்டிய விட்டுக் கொடுத்தல். விட்டுக் கொடுத்தல் என்பது ஒரு வகையில் சகிப்புத் தன்மையின் குழந்தையே !

பல முதியவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கடந்த காலத்தை அசை போடுகையில் வெப்பப் பெருமூச்சையே வெளி விடுவார்கள். “கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம்எனும் உச்சுக் கொட்டல் பலருடைய சிந்தனைகளிலும் வந்து ஒட்டிக் கொள்ளும்.

விட்டுக் கொடுத்தல் முன்னேற்றத்தின் முகவரி. மண் விட்டுக் கொடுக்காமல் இருந்தால் முளை உதயத்தைக் காண்பதில்லை. முட்டை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் ஒரு உயிர் உதயமாவதில்லை. மேகம் விட்டுக் கொடுக்காமல் இருந்தால் பூமியின் முகத்தில் மழையின் முத்தங்கள் இல்லை. எதையும் இறுகப் பற்றிக் கொள்வதிலல்ல, விட்டுக் கொடுப்பதிலேயே இருக்கிறது வாழ்க்கையின் ரகசியம்.

குடும்பத்தில் நிகழும் ஒரு சின்ன நிகழ்வை எடுத்துக் கொள்ளுங்கள். வார இறுதியில் என்ன செய்யலாம் என எல்லோரும் அமர்ந்து பேசுவீர்கள். “ புதுப் படம் பாக்க போலாம்என்பான் தம்பி. “அதெல்லாம் வேண்டாம் கோயில் போகலாம்என்பார் அம்மா. “பீச் போகலாம்என்பது உங்களுடைய கருத்தாய் இருக்கும். “எங்கே போலாம்ன்னு முடிவு பண்ணிச் சொல்லுங்கஎன ஹாயாக அமர்ந்து விடுவார் அப்பா !

இந்தச் சூழலின் முடிவு என்ன? இங்கே ஒவ்வொருவரும் எப்படிச் செயல்பட்டார்கள் என்பதை வைத்தே விட்டுக் கொடுத்தலைப் புரிந்து கொள்ளலாம். 

பெரும்பாலும் விட்டுக் கொடுத்தல் என்பது அன்பின் வெளிப்பாடே ! யார் விட்டுக் கொடுக்கிறார்களோ அவர்கள் அடுத்த நபர் மீது அபரிமிதமான அன்பு வைத்திருக்கிறார் என்று அர்த்தம். முதலில் விட்டுக் கொடுப்பது பெரும்பாலும் பெற்றோர் தான் ! அவர்களுடைய அன்பு நிபந்தனைகளற்ற அன்பு என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?

நமது உரையாடல்கள் பெரும்பாலும் ஒரு குத்துச் சண்டை போலவே நடக்கும். சண்டையில் எதிராளி தாக்கப்படுவதில் நமது வெற்றி நிர்ணயிக்கப் படுகிறது. ஆனால் குடும்ப விவாதங்களில் அடுத்த நபர் காக்கப் படுவதில் தான் வெற்றி இருக்கிறது. 

விட்டுக் கொடுப்பது என்பது நமது ஈகோவை விட்டுக் கொடுப்பதிலிருந்து துவங்குகிறது. விட்டுக் கொடுக்காத மனநிலைக்குள்நான் பெரியவன்எனும் கர்வம் ஒளிந்திருக்கிறது. “என் மகிழ்ச்சியே முக்கியம்எனும் சுயநலம் அதற்குள் விழித்திருக்கிறது. ‘நான் தோற்று விடக் கூடாதுஎனும் பிடிவாதம் அதற்குள் படுத்திருக்கிறது. 

அமெரிக்காவின் பல பள்ளிக்கூடங்களில் ஒரு பழக்கத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதாவது, இரண்டு குழந்தைகள் விளையாடுகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குழந்தை வெற்றி பெறும். ஒரு குழந்தை தோல்வியடையும். வெற்றியடைந்த குழந்தைநான் தான் ஜெயிச்சேன்என்றோ, தோல்வியடைந்த குழந்தைநான் தோற்று விட்டேன்என்றோ சொல்லக் கூடாது. இருவரும் கைகளைக் குலுக்கிக் கொண்டுவிளையாட்டு நல்லா இருந்ததுஎன்று தான் சொல்ல வேண்டும் ! சின்ன வயதிலேயே வெற்றியின் மமதையோ, தோல்வியின் அவமானமோ மனதில் ஆக்கிரமிக்காமல் இருக்க அவர்கள் சொல்லும் வழி இது !

இத்தகைய பாடங்கள், அடுத்தவருடைய உணர்வுகளை மதிக்க குழந்தைகளைப் பக்குவப்படுத்தும். விட்டுக் கொடுத்தலின் அடிப்படை அடுத்தவர்களுடைய உணர்வுகளை மதிப்பதே !

விட்டுக் கொடுத்தல் என்பது தோல்வி என்பதே பொதுவான கருத்து. உண்மையில் விட்டுக் கொடுத்தல் என்பது தோல்வியல்ல ! விட்டுக் கொடுத்தல் என்பதே  வெற்றி. “வாழ்வின் உயர்ந்த மகிழ்ச்சி அடுத்தவர்களை மகிழ்ச்சிப் படுத்துவதில் தான் இருக்கிறதுஎன்பார்கள். விட்டுக் கொடுத்தல் அந்த மகிழ்ச்சியை உங்களுக்கு வழங்குகிறது. 

நான் விட்டுக் கொடுத்ததால தான் அவன் இன்னிக்கு இந்த நிலைமைல இருக்கான். இல்லேன்னா இன்னிக்கு அவன் அடையாளம் தெரியாம போயிருப்பான். ” என்றெல்லாம் பலர் புலம்புவதுண்டு. தயவு செய்து அதை நிறுத்துங்கள் !  

விட்டுக் கொடுத்தலின் மிக முக்கியப் பண்பே அதை ஆனந்தமாய்ச் செய்ய வேண்டும் என்பது தான். சிலர் பிறருடைய பாராட்டைப் பெற வேண்டும் என்பதற்காகவே விட்டுக் கொடுப்பதுண்டு. உண்மையான விட்டுக் கொடுத்தல் அடுத்தவர்களுடைய பாராட்டையோ, அங்கீகாரத்தையோ எதிர்பார்க்காது.  

ஒரு சின்ன விட்டுக் கொடுத்தல், ஒரு நாளையோ, ஒரு வருடத்தையோ, ஒரு வாழ்க்கையையோ அழகாய் எழுதி விட முடியும். பெரும்பாலான மண முறிவுகளையோ, நட்பு முறிவுகளையோ எடுத்துப் பாருங்கள். கோபமாய் வீசும் வார்த்தைகள். பிடிவாதமாய் பிடித்துத் தொங்கும் ஈகோ. விட்டுக் கொடுக்க மறுக்கும் மனநிலை. இவையே காரணமாய் இருக்கும்.  

விட்டுக் கொடுத்தல் இரண்டு தரப்பிலிருந்தும் வரும். “நாம ஒரு படி கீழே இறங்கிப் போனால், எதிராளி இரண்டு படி கீழே இறங்கி வருவான்என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 

நாம் ஒரு படி கீழே இறங்க மறுத்து ஒரு படி மேலே ஏறினால், எதிராளி இரண்டு படி மேலே ஏறுகிறார். கடைசியில் ஒரு சின்ன விஷயம், இறங்கி வர முடியாத ஈகோவின் உச்சத்தில் நம்மைக் கொன்டு போய் நிறுத்தி விடுகிறது. எனவே விட்டுக் கொடுத்தலுக்கான முதல் சுவடை எடுத்து வைக்க தயங்கவே தயங்காதீர்கள்.

பெரும்பாலான சண்டைகளின் முதல் புள்ளி மிகவும் சின்னதாகவே இருக்கும். ஒரு சின்ன நெருப்பு ஒரு வைக்கோல் காட்டையே பொசுக்குவது போல, சண்டை பற்றிப் படர்ந்து விடுகிறது. துளியாக இருக்கையில் நெருப்பை அணைப்பது எளிது. விட்டுக் கொடுத்தல் அந்த வித்தையைக் கற்றுக் கொடுக்கிறது.

நான் செய்வதெல்லாம் சரிஎனும் மனநிலையை விட்டு வெளியே வருவது  விட்டுக் கொடுத்தலுக்கு முக்கியமான அம்சம். நாம் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல எனும் சிந்தனை நமக்கு இருக்க வேன்டும். அடுத்தவர் சரியானவற்றைச் செய்வார் எனும் சிந்தனையை அது தான் கற்றுத் தரும். தனக்கு பலவீனம் உண்டு என்பதை உணரும் போது தான், பிறருடைய பலவீனங்களை ஒத்துக் கொள்வதும் எளிதாகும்.

பல சண்டைகள் தேவையற்ற காரணங்களுக்காக நடப்பவையே. கருத்து வேறுபாடு நிகழும் போது, இந்த விஷயம் சண்டையிடுவதற்குத் தகுதியுடையதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். சண்டைக்கான விஷயத்தைத் தான் நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர, சண்டையிடும் நபரை வைத்து அந்த விவாதத்தை எடை போடக் கூடாது அடடாஇந்த விஷயத்துக்கா இவ்ளோ எனர்ஜி வேஸ்ட் பண்ணினேன்என்று தான் பல வேளைகளில் உள்மனசு சொல்லும்.

அது உண்மையிலேயே மிக மிக முக்கியமான விஷயமெனில் இருவருக்கும் பயனளிக்கும் வகையில் அந்த விவாதத்தை நடத்தலாம். இதை வின்வின் அதாவது வெற்றிவெற்றி விவாதம் என்பார்கள். இருவருக்கும் வெற்றி எனும் விவாதங்களில் விட்டுக் கொடுத்தல் சர்வ நிச்சயம். !

நமது பேச்சில் கவனம் செலுத்தினாலே பாதிப் பிரச்சினைகள் ஓடிப் போய் விடும். பலரும், அடுத்தவர்களைக் காயப்படுத்தவேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் சுருக் சுருக் என பேசுவார்கள். அப்படிப்பட்டவர்கள் விட்டுக் கொடுத்தலைக் கற்றுக் கொள்வது பிரபஞ்சத் தேவையாகும். பரபரவென பேசிக் கொண்டே இருக்காமல் ஒரு முப்பது வினாடிகளேனும் அமைதி காப்பது விட்டுக் கொடுத்தலுக்கான முதல் படியாய் அமையும்.

சாலையில் வாகனம் ஓட்டும் போது யாராவது உங்களை முந்திச் சென்றால் மனதில் சுருக்கென கோபம் வருகிறதா ? அடுத்த சிக்னலுக்குள் அவனை முந்திச் செல்லும் ஆவேசம் எழுகிறதா ? கொஞ்சம் ஆர அமர, இதனால் என்ன பயன் விளையப்போகிறது என்பதை யோசித்துப் பாருங்கள். ஒன்றுமே இல்லை. முந்திச் செல்பவர் முந்திச் செல்லட்டும் என விட்டுக் கொடுத்தால், பல்வேறு விபத்துகளை நாம் தவிர்க்கவும் முடியும்.

விட்டுக் கொடுத்தலை பலவீனத்தின் அடையாளமாகவே பலரும் பார்க்கிறார்கள். உண்மையில் அது ஆன்ம பலத்தின் அடையாளம். மன உறுதியற்றவர்களால் விட்டுக் கொடுக்க முடியாது. பலவீனருடைய மனம் அடுத்தவர்களின் விமர்சனங்களுக்காகக் கவலைப்படும், அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ ? தன்னை இளக்காரமாய் நினைத்து விடுவார்களோ என்றெல்லாம் சஞ்சலப்படும். மன உறுதி படைத்தவர்களுக்கு இத்தகைய கவலைகள் இருப்பதில்லை. எனவே அவர்களுக்கு விட்டுக் கொடுத்தல் சாத்தியமாகிறது.

விட்டுக் கொடுத்தல் நமது மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கிறது. மன பாரத்தை அகற்றி நம்மை இலகுவாக்குகிறது. மன்னிப்பும், விட்டுக் கொடுத்தலும் இருக்கும் நபர்களிடம் மன அழுத்தம் வந்து குடியேறுவதில்லை. மன அழுத்தமில்லாத உடல் ஆரோக்கியமானது என்பது மருத்துவம் அடித்துச் சொல்லும் உண்மையாகும்,

உறவுகள் வளர்ந்திட விட்டுக் கொடு

பிறர்க்கும் அதையேக் கற்றுக் கொடு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.