“உக்காந்தது போதும், எழும்பு கொஞ்ச நேரம் நடந்துட்டு வா… “
“ஹார்ட் ரேட் கொஞ்சம் அதிகமா இருக்கு. ஒரு ரெண்டு நிமிடம் சுவாசப் பயிற்சி செய்”
“இன்னிக்கு இதுவரை இரண்டாயிரம் அடிகள் தான் நடந்திருக்கே..உன்னோட இலக்கு பத்தாயிரம் அடிகள்ன்னு ஞாபகம் வச்சுக்கோ”
“இன்னிக்கு ஓவரா சாப்பிட்டுட்டே.. கலோரியை கொஞ்சம் கம்மி பண்ணு”
“கடந்த ஒரு வாரமா உன்னோட தூக்கம் படு கேவலமா இருக்கு. ஒழுங்கா அதை சரி பண்ற வழியைப் பாரு”
இப்படியெல்லாம் ஒருவர் நம் கூடவே இருந்து நமக்கு அறிவுரையும் நலவாழ்வுக்கான வழிகாட்டுதலையும் தந்து கொண்டே இருந்தால் எப்படி இருக்கும் ? அந்த வேலையைத் தான் இன்றைய ஃபிட்னஸ் டிராக்கர்கள் (ஆரோக்கிய கண்காணிப்பாளர்கள்) செய்கின்றன.
பதின் வயதுப் பிள்ளைகள் முதல், முதுமை நிலையிலிருக்கும் மக்கள் வரை இப்படி ஒரு வாட்சை கைகளில் வெகு சகஜமாகக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். தொழில்நுட்ப மொழியில் இதை வியரபில் டெக்னாலஜி என்கிறார்கள். தமிழில் “அணியும் தொழில்நுட்பம்” என புரிந்து கொள்ளலாம்.
இவை நல்லதா கெட்டதா ? இதைப் பயன்படுத்தலாமா கூடாதா ? இதனால் உடலுக்கு கேடு வருமா ? என்றெல்லாம் கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. உலக அளவில் இதன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் இதன் சாதக பாதகங்களைப் புரிந்து கொள்வது நல்லது. அதற்கு முன் இவற்றிலுள்ள தொழில்நுட்ப விஷயங்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
முதலில் இந்த கைக்கடிகாரங்கள் நவீன தொழில்நுட்பங்களின் கலவையாய் உருவானவை. இதிலுள்ள சென்சார்கள் தான் உடலின் தகவல்களை பெற்றுத்தருவதில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. அந்தத் தகவல்கள் தான் இதன் வெற்றியின் அடிப்படை.
உதாரமாக, இதிலுள்ள ஆக்சிலோ மீட்டர் சென்சார்கள் உடலின் அசைவைக் கணக்கிட்டு நாம் எத்தனை அடி தூரம் நடக்கிறோம் என்பதைக் கணிக்கும். வாட்ச் கட்டியிருப்பதையே மறந்து நாம் நடந்து திரிந்தாலும், சென்சார்கள் கவனமாய் நாம் நடந்த தூரத்தை கவனித்து குறித்து வைத்துக் கொள்கின்றன.
ஆல்டிமீட்டர் என்றொரு சென்சார் உண்டு, அது நாம் எத்தனை உயரம் சென்றிருக்கிறோம் என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளும். “இன்னிக்கு நீ நாலு மாடி ஏறியிருக்கே” என சொல்லி நம்மை வியக்க வைப்பது இது தான். பெரும்பாலும் மலையேற்றப் பயிற்சி செய்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
இத்தகைய வாட்ச்களின் அடிப்பாகத்தில் சின்ன இரண்டு லைட்கள் விட்டு விட்டு எரிந்து கொண்டிருப்பதைக் காணலாம். ஆப்பிள் போன்ற ஸ்மார்ட் வாட்ச்களில் இவை வெளியே தெரியாது. இவை ஆப்டிகல் சென்சார்கள். இவை நமது உடலிலுள்ள இரத்த ஓட்டத்தைக் கணக்கிடுபவை. அதைக் கொண்டு நமது இதயத் துடிப்பின் அளவையும் இவை சொல்லி விடும்.
பயோஇம்பெடன்ஸ் சென்சார்கள் மிக முக்கியமானவை. இவை தான் நமது உடலிலுள்ள கொழுப்பு, நமது தூக்கத்தின் தன்மை, நமது மூச்சின் நிலமை, தோலின் பாதுகாப்பு போன்ற பல விஷயங்களை நமக்குச் சொல்லித் தரும். பல்ஸ் ஆக்ஸிமீட்டர் எனும் சென்சார் நமது உடலிலுள்ள ஆக்சிஜன் அளவைக் கண்டு சொல்லும்.
இப்படி இன்னும் பல சென்சார்கள் இந்த குட்டியூண்டு வாட்ச்களில் அமர்ந்து கொண்டு நம்மை இடைவிடாமல் கண்காணிக்கின்றன. அந்தத் தகவல்களை அப்படியே நம்முடைய ஸ்மார்ட்போனுக்கு டிஜிடல் வாய்க்காலில் அனுப்பிக் கொண்டே இருக்கின்றன. மொபைலிலுள்ள மென்பொருள் இந்தத் தகவல்களையெல்லாம் அலசி ஆராய்ந்து நமக்குத் தேவையான வடிவத்தில் மாற்றித் தருகிறது.
இத்தகைய டிராக்கர்களால் கிடைக்கும் மிக முக்கியமான நன்மை என்னவென்றால், நம்முடைய உடலின் நிலையையும், நிகழ இருக்கின்ற ஆபத்தையும் நமக்கு முன்கூட்டியே உணர்த்தும் என்பது தான். உதாரணமாக, நமது இதயத் துடிப்பு மிக அதிக அளவில் இருந்தாலோ, ஒழுங்கின்றி இருந்தாலோ நமக்கு இதயம் சார்ந்த நோய்கள் வர வாய்ப்பு அதிகம் என உஷாராகி விடலாம்.
நமது தூக்கம் சரியில்லாமல் இருந்தால், அதை சரி செய்யும் முறைகளைப் பின்பற்றலாம். நமது தினசரி உடற்பயிற்சி தேவையான அளவுக்கு வரவில்லையேல், கொஞ்சம் திட்டமிட்டு அதைச் செயல்படுத்தலாம்.
அதே நேரத்தில் இதிலுள்ள சில சிக்கல்களையும் நாம் புரிந்து வைத்திருப்பது நல்லது. அடிப்படையில் இத்தகைய டிராக்கர்கள் நம்முடைய உடல்நிலை, நமது பழக்கவழக்கம் போன்ற அனைத்து தகவல்களையும் சேகரித்து எடுத்துக் கொள்கிறது. “எடுத்தா எடுத்துட்டு போகட்டும்” என சொல்லி விடவும் முடியாது. நாளை இந்த தகவல்களை வைத்துக் கொண்டு, “உன்னோட ஆரோக்கிய நடவடிக்கைகளின் படி இனிமே உன்னுடைய இன்சூரன்ஸ் பிரீமியம் இவ்வளவு” என நிறுவனங்கள் நிர்ணயிக்கும் நிலை வரலாம். அல்லது அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களில் உடல்நிலை குறித்த தகவல்களை பெற்று அதை வைத்துக் கொண்டு சில முடிவுகளை எடுக்கும் சூழலும் உருவாகலாம்.
நம்முடைய அசைவுகள் கணநேரமும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால் இதை ஹேக் செய்பவர்களால் நமக்கு ஆபத்துகள் உருவாகும் சூழலும் உருவாகலாம். சரியான, தரமான பிட்னெஸ் வாட்ச்களைப் பயன்படுத்தாவிடில் அலர்ஜி போன்ற சிறு சிறு பிரச்சினைகளும் நிகழலாம்.
இந்த கருவியிலுள்ள சென்சார்கள் நமது உடலில் எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருப்பதால் பிரச்சினைகள் உருவாகுமா ? இதில் இருக்கின்ற இ.எம்.எஃப் கதிர்களால் உடலுக்கு பாதிப்பு வருமா ? என கேட்டால், அப்படியெல்லாம் நிகழவே நிகழாது என அடித்துச் சொல்கின்றன நிறுவனங்கள். ஆனால் அவர்கள் சொல்வதை எந்த அளவுக்கு நம்புவது என்பதில் மாற்றுக் கருத்துகள் உண்டு.
தங்களுடைய உடல்நிலையைக் குறித்து எதிர்மறை எண்ணம் கொண்டிருப்பவர்களுக்கு இத்தகைய ஹெல்த் டிராக்கர்கள் மன அழுத்தத்தைத் தரும் எனவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தங்களால் உடலை சரியான முறையில் பேண முடியவில்லையே எனும் சிந்தனை அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருமாம்.
இப்போது அணியும் தொழிநுட்பமானது, “வாட்ச்” எனும் நிலையைத் தாண்டி பல தளங்களில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. உதாரணமாக அதோஸ் நிறுவனம் ஒரு பிட்னெஸ் ஆடையை வடிவமைக்கிறது. இதை உடலில் அணியும் போது உடலின் தசைகள், அதன் வலிமை போன்றவற்றை கண்டறிந்து சொல்லும். லிவைஸ் நிறுவனமும் கூகிளும் இணைந்து ஹெல்த் ஆடைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இவை ஸ்மார்ட் போன்களோடு இணைந்து உடலின் எடை அதிகரித்திருக்கிறதா ? சரியாக நடக்கிறீர்களா என பல விஷயங்களை குறித்து வைக்கும். ஆச்சரியச் செய்தியாக டிஜிடல் டாட்டூ , அதாவது டிஜிடல் பச்சை குத்தல் மூலம் பிட்னஸ் டிராக் செய்யும் புதிய முறையும் தயாரிப்பில் உள்ளது.
ஒரு சில ஐயப்பாடுகள், ஆபத்துகளைத் தாண்டி இன்று ஃபிட்னெஸ் டிராக்கர்கள் பிரபலமாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை ஒரு வழிகாட்டும் கருவியாகக் கொண்டு சரியான வகையில் பயன்படுத்தினால் இவை நமது நலவாழ்வுக்கு பயனளிக்கும் என்பதிலும் ஐயமில்லை. எனினும் எந்தக் கருவிக்கும் அடிமையாகி விடாத மனநிலையை நாம் கொண்டிருக்க வேண்டியதும் அவசியமாகிறது.
*
சேவியர்