இளைஞனை இறுக்கும் இணைய வலை !
பிரான்டி வுல்ஃப் மூன்று வயதான அழகான பெண் குழந்தை. அவளுடைய தாய் இருபத்தெட்டு வயதான ரெபேக்கா காலீன் கிறிஸ்டி, விவாகரத்து ஆனவள். தாயுடைய பொழுது போக்கு இணையத்தில் கேம்ஸ் விளையாடுவது. சாதாரணமாக விளையாடத் துவங்கிய அவளை கொஞ்சம் கொஞ்சமாய் விளையாட்டு உள்ளிழுத்துக் கொண்டது. சாப்பாடு, தூக்கம் எல்லாவற்றையும் மறந்து விளையாடத் தொடங்கினாள். அவள் மறப்பதோடு நின்று விடாமல் குழந்தைக்கும் சாப்பாடு போட மறந்து விடுவாள் என்பது தான் துயரம்.
தாய் விளையாடிக் கொண்டிருப்பாள், குழந்தை எதுவுமே இல்லாமல் பட்டினியில் வாடி வதங்கும். தண்ணீரோ, சாப்பாடோ எதுவும் இல்லாமல் கையில் என்ன கிடைக்கிறதோ அதை குழந்தை சாப்பிடும், நாய் உணவு உட்பட ! குழந்தை மெலிந்து மெலிந்து எடை குறைந்து எலும்பும் தோலுமாகி விட்டது.
ஒருநாள் விளையாட்டின் மும்முரத்தில் இருந்தாள் தாய். மதியம் ஆரம்பித்த விளையாட்டு மாலை, இரவு என தொடர்ந்தது. இடைவெளியில்லாமல் அதிகாலை மூன்று மணி வரைக்கும் விளையாடினாள். விளையாடிவிட்டு விருப்பமேயில்லாமல் எழுந்து வந்தவள் குழந்தை மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போனாள் ! பசியினால் வாடி வதங்கிய அந்த மூன்று வயது தேவதை இறந்து போயிருந்தது !
அவளுக்கு 25 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். “ஐயோ .. என்னுடைய குழந்தையை இழந்து விட்டேனே, பார்க்கணும் போல இருக்கே..” என கோர்ட்டில் அழுது புலம்பினாள் ரெபேக்கா. இப்போது அழுது என்ன செய்ய ? போன உயிர் போனது தானே !
“இன்டர்நெட்ல கொஞ்ச நேரம் விளையாடினா என்ன ஆவப் போகுது” ? என்று தான் இந்த இணைய மோகம் ஆரம்பிக்கும். அச்சு அசலாய் புகைப் பழக்கம் எப்படி ஆரம்பிக்குமோ அதே போல ! ஒரு தடவை இழுத்துப் பார்ப்போமே என ஆரம்பிக்கும் பழக்கம் இழுப்பவரை இழுத்துக் கொள்ளும். அதே போல தான் இதுவும்.
முதலில் கொஞ்ச நேரம், அப்புறம் நினைப்பதை விட அதிக நேரம். அப்புறம் நாள் முழுக்க. தூக்கம் இல்லாமல், வேலை செய்யாமல், சாப்பாடு இல்லாமல் என அது விரிவடையும். இந்த மோகம் எந்த நிலைக்கும் போகலாம் என்பதற்கு ரெபேக்கா ஒரு சின்ன உதாரணம்.
இணையம் ஒரு அற்புதமான சாதனம் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். குறிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வமுடையவர்கள், பிறரோடு தொடர்பில் இருக்க வேண்டுமென விரும்புபவர்கள், கலைஞர்கள், செய்தியாளர்கள் இவர்களுக்கெல்லாம் இணையம் வரப்பிரசாதம். இணைய நன்மைகளைப் பட்டியலிட்டால் தனியே நான்கு புத்தகம் எழுதவேண்டி வரும்.
பாலையும், நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் குடிக்கும் இலக்கிய அன்னப் பறவையாய் நாம் இருந்தால் அற்புதம் ! தவறுகளை நோக்கிப் போனாலோ, அல்லது அளவுக்கு மீறிப் பயன்படுத்தினாலோ ஆபத்து சர்வ நிச்சயம்.
“இணையத்தைப் பயன்படுத்துவோரில் ஐந்து முதல் பத்து சதவீதம் வரையிலானவர்கள் தாங்கள் இணையத்துக்கு அடிமையானதை உணர்கிறார்கள்” என்கிறார் ஜெர்மி லாரன்ஸ் எனும் உடல்நல எழுத்தாளர். !
இணயத்தில் மெதுவாக சேட் செய்ய ஆரம்பிப்போம். பிறகு எப்போதும் கணினியின் ஓரத்தில் ஒரு சேட் வின்டோ இருந்தால் தான் வேலை ஓடும் எனும் நிலை வரும். பெரும்பாலானவர்களுக்கு எதிர் பாலினருடன் செக்ஸ் உரையாடல் நடத்துவதில் நேரம் போவதே தெரியாது.
கடந்த சில ஆண்டுகளாக முன்னணியில் இருப்பவை ஃபேஸ் புக், டுவிட்டர், ஆர்குட், மைஸ்பேஸ் போன்ற சமூக வலையமைப்புகள். இதில் நண்பர்களை கண்டுபிடிப்பது, அவர்களோடு பேசுவது. புது நபர்களைத் தேடுவது, அவர்களுடன் கதைப்பது என நேரம் போவதே தெரியாமல் விளையாட்டு களைகட்டும். வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் எல்லாமே பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்.
பாலியல் கதைகள், படங்கள், வீடியோக்கள் என மாட்டிக் கொள்பவர்கள் கதி ரொம்பப் பரிதாபம். அது ஒரு பெர்முடா முக்கோணம் போல. எட்டிப் பார்த்தாலே இழுத்துக் கொள்ளும் சிக்கலான விஷயம். இணைய உலகின் இன்றைய கணக்குப் படி சுமார் இரண்டரை கோடி பாலியல் வலைத்தளங்கள் உள்ளன. ஒவ்வொரு வினாடியும் சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய்கள் இதற்காய் செலவிடப்படுகின்றன. தேடுதல் தளங்களில் 25 சதவீதம் பாலியல் தேடல்களே ! தரவிறக்குகளில் 35 சதவீதம் பாலியல் சார்ந்தவையே !
இந்தப் புள்ளிவிவரங்களே போதும் இணைய உலகை பாலியல் எவ்வளவு ஆழமாய்ப் பாதித்திருக்கிறது என்பதை உணர. இதில் மாட்டிக் கொள்பவர்கள் தங்கள் நேரம், வாழ்க்கை, குடும்ப உறவுகள் என எல்லாவற்றையுமே இழந்து விடும் அபாயம் உண்டு.
இன்டர்நெட்டுக்கு அடிமையாவதை யாரும் சீரியசாய் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இனிமேல் அப்படி இருக்க முடியாது என எச்சரிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. “இணையத்துக்கும், இணைய விளையாட்டுகளுக்கும் அடிமையாகும் மக்களுடைய மூளையில் கணிசமான மாற்றங்கள் ஏற்படுகின்றன” என்று அதிர்ச்சி முடிவை வெளியிட்டிருக்கிறது.
இந்த மாற்றம் கஞ்சா, கோகைன் போன்ற போதை அடிமைகளின் மூளையிலுள்ள மாற்றங்களை ஒத்திருக்கிறது. இணைய அடிமைகளின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்ததில் இது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மூளையின் உணர்வுப் பகுதி, கவனப் பகுதி, முடிவெடுக்கும் பகுதி, போன்ற பகுதிகளின் இணைப்பு வலுவிழந்து விடுகிறதாம். எனவே இந்த இணைய அடிமைத்தனத்தை மிக சீரியசாய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
“இணையத்தை விட முடியாதவர்கள் பலர் திருமணத்தில் தோல்வி, கல்வியில் தோல்வி, வேலையில் தோல்வி என படிப்படியாய் தோல்வியடைகிறார்கள்” என்கிறார் லண்டன் இம்பீரியல் கல்லூரியிலுள்ள பேராசிரியர் ஹென்ரீடா பவுடன் ஜோன்ஸ். இவர் அங்கு இணைய மற்றும் ஆன்லைன் விளையாட்டு அடிமைத்தனங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்கிறார்.
நாற்பத்து ஒன்று வயதான லூசியானா மெய்னி எனும் இங்கிலாந்துப் பெண்மணி, ஆன்லைன் விளையாட்டுக்குப் பணம் வேண்டும் என்பதற்காக அலுவலகத்தில் தில்லுமுல்லு விளையாட்டுகளை விளையாடியிருக்கிறார். அப்படி சுட்டுச் சுட்டுச் சேகரித்த பணம் சுமார் நாற்பது இலட்சம் ரூபாய்கள். இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் !
“ஆன்லைனில் விளையாடும் அடிமைத்தனமும், மதுவுக்கு அடிமையாவதும் ஒரே போன்ற சங்கதிகளே” என்கிறார் நாட்டிங்காம் பல்கலைக்கழக பேராசிரியர் மார்க் கிரிஃபிட்ஸ்.
மருத்துவம் இப்போது இதை சிக்கலான ஒரு பிரச்சினை என்று ஒத்துக் கொண்டிருக்கிறது. இணையத்தை கட்டிக் கொண்டு தூக்கத்தைத் தொலைப்பவர்கள் மன அழுத்தம், எரிச்சல், கோபம், தலைவலி, பதட்டம், கவனமின்மை, சோர்வு, தனிமை, குற்ற உணர்வு போன்ற பலவீனங்களுக்கு ஆளாவார்கள் என எச்சரிக்கிறது !
குடும்ப உறவுகளோடு செலவிடும் நேரம் குறைந்து போய் உறவு வாழ்க்கை பலவீனமடைகிறது. சுமார் 6 சதவீதம் பயன்பாட்டாளர்கள் இதை வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார்கள். யூகேவில் சுமார் 33 சதவீதம் விவாகரத்துகளுக்கு ஃபேஸ்புக் காரணமாய் இருக்கிறது !
சீனாவில் நிலமை இன்னும் மோசம். 42 சதவீதம் இளைஞர்கள் இதன் அடிமைகள். இரவு முழுவதும் இன்டர்நெட் கஃபேக்களில் இளைஞர்கள் விழித்துக் கிடப்பது சர்வ சாதாரண நிகழ்வு ! 7 விழுக்காடு நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர் இணைய வலையில் சிக்கிக் கிடப்பவர்கள் என்பது அதிர்ச்சித் தகவல் !
அதீத இன்டர்நெட் பயன்பாடு சமூக ஈடுபாட்டை குறைக்கிறது, அல்லது தடுக்கிறது. இதனால் இளைஞர்களுடைய தன்னம்பிக்கை முனை பழுதுபடுகிறது ! அவர்கள் தங்களுடைய பிரச்சினைகளிலிருந்து தப்ப மீண்டும் மீண்டும் இணையத்தில் சரணடைந்து விடுகிறார்கள். பலர் தங்களுடைய தோல்விகள், ஏமாற்றங்கள் இவற்றை வெற்றியாக மாற்ற முயலாமல் தீக்கோழி போல இணையத்தில் தலை புதைக்கிறார்கள். தண்ணியடித்து சோகம் மறக்க நினைக்கும் முட்டாள் தனத்தைப் போல !
இணையத்தினால் 40 சதவீதம் பணி தொய்வு ஏற்படுவதாய் ஒரு அமெரிக்க புள்ளி விவரம் தெரிவிக்கிறது. காரணம் 60 சதவீதம் ஆன்லைன் வர்த்தகமும், 70 சதவீத பாலியல் தகவல் மேய்தலும் அலுவல் நேரத்தில் தான் நடக்கிறதாம் ! 12 சதவீதம் அமெரிக்கர்களும், 30 சதவீதம் கொரிய மக்களும் இன்டர்நெட் தங்களுக்கு மாபெரும் போதையாய் இருப்பதை ஒத்துக் கொள்கின்றனர். ஆசிய நாடுகளில் இது இன்னும் அதிகமாம்.
இணைய பலவீனத்திலிருந்து விடுபடவேண்டியதும், இணையத்தை ஆரோக்கியமான வழிகளில் செலவிட வேண்டியதும் இளைஞர்கள் செய்ய வேண்டிய முக்கியமான இரண்டு விஷயங்கள்.
முதலில் ஓவராக இன்டர்நெட் பார்க்கிறீர்களெனில் அதை உணர வேண்டும். ஒரு நாள் எத்தனை தடவை இணையத்தில் நுழைகிறீர்கள், எவ்வளவு நேரம் சேட்டிங் செய்கிறீர்கள், அடிக்கடி ஒரு பக்கத்தை எட்டி எட்டிப் பார்க்கிறீர்களா, ஃபேஸ்புக், டுவிட்டர், மைஸ்பேஸ், ஆர்குட் போன்ற தளங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என கணக்குப் போட்டுப் பாருங்கள் !
தேவையல்லாத இணைய வாசிப்பை நிறுத்துங்கள். அதற்கு மிகச் சிறந்த வழி, அதைத் தவிர வேறு ஒரு நல்ல பொழுது போக்கில் உங்கள் கவனத்தைச் செலுத்துவது தான் !
பொதுவாக ஆன்லைன் விளையாட்டு, சேட்டிங் போன்றவற்றை குறையுங்கள். போர்னோகிராபி எனப்படும் பாலியல் தேடுதலை அடியோடு நிறுத்துங்கள். கணினியை விட்டு விட்டு எழுந்து நடப்பது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, வெளியே எங்கேயாவது போய் வருவது என சிந்தனையை வேறு பக்கம் திருப்புங்கள்.
இணைய அடிமைத்தனத்தை இன்டர்நெட் அடிக்ஷன் டிஸார்டர் (IAD) என மருத்துவம் அழைக்கிறது. இதை சிகிச்சை செய்ய உலகின் பல இடங்களிலும் இணைய அடிக்ஷன் சிகிச்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இணைய அடிமைத்தனம் சீரியசான ஒன்று என்பதற்கு இவையே சாட்சி !
இணைய அடிமைத்தனத்தை எளிதாய் வெற்றி கொள்ள முடியும். வெற்றி கொள்ளுங்கள். தொழில் நுட்பத்தை ஆக்கபூர்வமாய் பயன்படுத்துங்கள் !
சரியாய் கையாளும் இணையம்
இமயம் ஏற்றும் உனையும்!
ஃ