1
“என் குழந்தை எங்கே ?”
ஆஸ்திரேலியாவிலுள்ள பிரிஸ்போனில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையின் பிரசவ வார்டில் பிரசவித்த களைப்பில் இருந்த தஷ்கா வாயிச்சஸ் (Dushka Vujicic) அருகில் இருந்த நர்ஸிடம் கேட்டாள். பிரசவம் இப்போது தான் முடிந்திருந்தது !
….
“என்னோட குழந்தை எங்கே ? அழுதானா ?”
….
நர்ஸின் மவுனம் அந்தத் தாய்க்கு உள்ளுக்குள் கிலியை ஏற்படுத்தியது. பிறந்த குழந்தையைப் பற்றிக் கேட்டால் அமைதியாய் இருந்தால் எந்தத் தாய்க்குத் தான் கிலி ஏற்படாது?
இருபத்து ஐந்தே வயதான தாய் அவள். மருத்துவமனையில் ஒன்றில் இதே போன்ற ஒரு பிரசவ அறையில் பணி செய்து கொண்டிருந்த நர்ஸ் பெண் தான் அவர். அதனால் பிரசவத்தைப் பற்றியும் அதன் சிக்கல்கள் பற்றியும் ரொம்ப நன்றாகத் தெரியும்.
தாய்மை அடைந்த கணத்திலிருந்து என்னென்ன சாப்பிடவேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அதில் கொஞ்சமும் பிசகாமல் தான் அவர் சாப்பிட்டு வந்தார்.
மருத்துவ பரிசோதனைகளைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாகத் தெரிந்து வைத்திருந்ததால் எல்லா பரிசோதனைகளையும் சரியாகச் செய்தார். கடைசியாக எடுத்த இரண்டு அல்ட்ராசோனிக் ஸ்கேன் ரிப்போர்ட் கூட “பையன் பொறக்கப் போறான்” என்று மகிழ்ச்சியோடு சொன்னது. இப்போது நர்ஸின் மவுனம் அடி வயிற்றைக் கலக்குகிறது !
“பிளீஸ் சொல்லுங்க.. என்னோட குழந்தைக்கு ஏதாச்சும் பிரச்சினையா ?” பதட்டம் விழுங்க கேட்டாள் தாய்.
நர்ஸோ பதில் சொல்லாமல் அந்த அறையின் இன்னொரு மூலைக்குச் சென்றார். அங்கே பல மருத்துவர்கள் ஒன்று கூடி குழந்தையை தீவிரமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தாய்க்கு பதட்டம் அதிகமானது !
திடீரென ஒரு அழுகுரல் !
குழந்தையின் அழுகுரல் !
தாய்க்குப் போன உயிர் திரும்ப வந்தது. முகத்தில் சட்டென ஒரு மிகப்பெரிய நிம்மதி வந்து அமர்ந்தது. அப்பாடா பையன் உயிரோட தான் இருக்கான்.
குழந்தையின் அழுகுரல் கேட்ட தந்தை போரிஸ் வாயிசஸ் ( Borris Vujicic ) ஆவலோடு குழந்தையை ஓடிச் சென்று பார்த்தார்.
சட்டென தலை சுற்ற அவருக்கு வாந்தி வருவதுபோல இருந்தது.
மருத்துவமனை ஊழியர்கள் அவரை அவசர அவசரமாய் அறைக்கு வெளியே கூட்டிக் கொண்டு போனார்கள்.
தாய்க்கு வந்த உயிர் மீண்டும் போனது போல இருந்தது. என்ன தான் நடக்கிறது. எல்லோரும் மவுனமாய் இருக்கிறார்கள். குழந்தை அழுதாகி விட்டது. ஆனால் கணவனோ குழந்தையைப் பார்த்து குமட்டுகிறாரே !
“குழந்தையைக் காட்டுங்க. பிளீஸ்ஸ்ஸ்……என் குழந்தைக்கு என்னாச்சு…” அவளுடைய குரலில் இப்போது அழுகை தொற்றிக் கொண்டது.
டாக்டர் திரும்பினார்.
“பிளீஸ் சொல்லுங்க, நான் ஒரு நர்ஸ். எனக்கு புரியும். சொல்லுங்க.. பிளீஸ் ” அவளது அழுகை கெஞ்சலோடு கலந்து வந்தது.
டாக்டர் திரும்பினார். சற்று நேர மவுனத்துக்குப் பிறகு சொன்னார்.
“ஃபோகாமீலியா( Phocamelia)”
தாய் அதிர்ந்தாள். ஃபோகாமீலியா என்றால் குறைபாடுள்ள குழந்தை என்று அர்த்தம். கையோ காலோ இல்லாமல் பிறக்கும் குழந்தையை மருத்துவம் இந்தப் பெயரில் தான் அழைக்கிறது.
அவளால் நம்ப முடியவில்லை. இது எப்படி சாத்தியம் ? எங்கே பிசகிற்று ? எந்த மருத்துவத் தவறும் செய்யவில்லையே ? அவளுடைய இதயம் உடைந்தது.
வெளியில் தந்தை நம்ப முடியாதவராக புலம்பிக் கொண்டிருந்தார். அருகில் வந்த நர்ஸிடம் கண்ணீருடன் சொன்னார்.
“என்..பையன்… என் பையனுக்கு ரெண்டு கையுமே இல்லை”
நர்ஸ் மிடறு விழுங்கினார். திக்கித் திணறிப் பேசினாள்.
“சார். ஆக்சுவலி.. உங்க பையனுக்கு இரண்டு கால்களும் கூட இல்லை சார்” சொல்லி விட்டு அவளாலேயே கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை.
தீப்பிடித்த கூரையில் இடியும் விழுந்தது போல, அப்படியே உறைந்து போய், நிலைகுலைந்து தரையில் உட்கார்ந்தார் தந்தை.
தாய் உள்ளே டாக்டரிடம் கேட்டார்.
“பையனுக்கு.. பையனுக்கு என்ன குறை ? விரல்களா.. கையா ? காலா ?”
மருத்துவர் உதடு கடித்தார்.
“ஐ ஆம் சார்.. உங்க பையனுக்கு, கைகளும் இல்லை, கால்களும் இல்லை…”
அவளுக்குத் தலை சுற்றியது.
கைகளும் இல்லாமல், கால்களும் இல்லாமல் ஒரு குழந்தையா ? எனக்கா ? மருத்துவம் தெரிந்த எனக்கா ? எல்லாவற்றையும் சரியாய் செய்த எனக்கா ? கடந்த பத்து மாதங்களாக நாம் சேமித்து வைத்திருந்த எதிர்பார்ப்பெல்லாம், கையும் காலும் இல்லாத ஒரு குழந்தையைப் பார்க்கவா ? அவளுடைய உயிரே போய்விடும் போல் இருந்தது.
குழந்தையை ஒரு துணியில் சுற்றி அவளுக்கு அருகே கொண்டு வந்து கிடத்தினார்கள்.
“நோ… நோ……கொண்டு போங்க.. என் பக்கத்துல கொண்டு வராதீங்க” அவளுடைய அழுகைக் குரல் ஆவேசமானது.
அவளால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர முடியவில்லை. அவள் மயக்கத்துக்குப் போனாள்.
நேரம் போய்க் கொண்டே இருந்தது.
தந்தை கொஞ்சம் கொஞ்சமாக வாழ்வின் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவராக இயல்பு நிலைக்கு வர ஆரம்பித்தார். குழந்தையைப் போய் பார்த்தார். கைகளில் ஏந்தினார். புன்னகைத்தார்.
படுக்கையில் இன்னும் அதிர்ச்சியிலிருந்து விலகாமல், கலங்கிய கண்களோடு படுத்திருந்த தாயிடம் வந்தார்.
அவளுடைய கரங்களைப் பற்றினார்.
“நான் உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்”
“.ம்…”
“நம்ம பையன் ரொம்ப அழகா இருக்கான்”