2
இப்படி ஒரு குழந்தை பிறந்தால் யார் தான் மகிழக் கூடும். இந்த வீட்டிலும் இப்படியே நடந்தது. குழந்தை பிறந்ததை ஒரு துக்க தினமாகவே கொண்டாடினார்கள். தஷ்காவும், போரிஸும் இந்த தினத்தைக் கொண்டாடுவதா இல்லை துக்கம் அனுசரிப்பதா என்றே குழம்பிப் போனார்கள்.
ஒரு குழந்தை பிறந்தால் நண்பர்கள் உறவினர்கள் எல்லோரும் வாழ்த்து அட்டைகள் கொடுப்பதும், பூக்கள் பரிசளிப்பதும் என மகிழ்ச்சியைப் பரிமாறுவார்கள். ஆனால் இங்கே எதுவும் நடக்கவில்லை. சுற்றிலும் மவுனம்.
தேவாலயத்திலும் மகிழ்ச்சி மிஸ்ஸிங். கடவுள் இப்படி ஒரு குழந்தையை ஏன் இவர்களுக்குக் கொடுத்தார் என்பது சிலருடைய கேள்வி. ஐயோ பாவம் என்பது மற்றவர்களுடைய பதில். யாருமே குழந்தையை ஒரு மகிழ்வின் சின்னமாகப் பார்க்கவேயில்லை.
மருத்துவமனையில் ஓரிரு நாட்கள் இருந்தபின் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தபோது தான் அந்த மாற்றம் தாய்க்கு உறைத்தது.
“ஏங்க, ஒரு பூங்கொத்து கூட யாருமே நமக்கு கொடுக்கல. ஏன் ? நாம அப்படி என்ன தப்பு பண்ணினோம் ? ஒரு பூங்கொத்து வாங்கக் கூட அருகதை இல்லாதவங்க ஆயிடோமா ?”
அந்தக் கேள்வி போரிஸின் மனதில் தைத்தது. உடனே ஓடிச் சென்று ஒரு அழகான பூங்கொத்தை வாங்கினார்.
“நீ எல்லா வாழ்த்துக்கும் உரியவள். ஐ லவ் யூ” என மகிழ்வுடன் அந்த பூங்கொத்தை அவளிடம் நீட்டினார்.
நாட்கள் கடந்தன. குழந்தைக்கு நிக்கோலஸ் வாயிச்சஸ் ( நிக் ) என பெயரிட்டார்கள். ஒவ்வொரு செயலையும், ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்தையும் உன்னிப்பாகச் செய்தார்கள். நிக் வளர்ந்தான். பெற்றோரின் கவலைகளும் கூடவே வளர்ந்தன.
முதலாவதாக, இந்தக் குழந்தை தனது அன்றாடப் பணிகளை எப்படிச் செய்வான் ? ஒரு சட்டையைப் போடக் கூட இன்னொருவரின் உதவி தேவைப்படுகிறது. இவன் எப்படிப் படிப்பான் ? பள்ளிக்கூடத்துல இவனை சேக்கலாமா ? சேர்க்கலாம்னு நாம நெனச்சாலும் பள்ளிக்கூடம் அனுமதிக்குமா ? இவன் கூட பசங்க நட்பா இருப்பாங்களா ? இவன் சாதாரண மனுஷனா வளருவானா ?
என கிலோ மீட்டர் கணக்கு நீளமான கேள்விகள் அவர்களுக்குள் எழுந்தன. என்ன செய்ய ? பதில்கள் தான் கைவசம் இல்லை.
ஒரு கட்டத்தில் அவர்களிடம் எழுந்த சிந்தனைகள் மிகவும் துயரத்தின் சிந்தனைகளாக இருந்தன. நிக்கைக் கொண்டு போய் விடுதியிலோ, காப்பகத்திலோ சேர்த்துப் பாதுகாக்கலாமா என்று கூட யோசித்தார்கள்.
அவனுடைய தாத்தா பாட்டி அவனை வீட்டில் வைத்துப் பராமரிக்கவும் முன்வந்தார்கள். ஆனால் நிக்கின் தந்தை இறுதியில் எல்லா சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்தார். அவர் ஒரு சர்ச்சில் போதகராகவும் இருந்தார். எனவே கடவுள் கொடுத்த குழந்தையை அப்படியே ஏற்றுக் கொண்டு பராமரிப்பதே தான் செய்ய வேண்டியது எனும் சிந்தனை அவருக்குள் வலுப்பெற்றது.
கடவுளின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். அது மனிதனுக்கு எளிதில் புரிவதில்லை. அதே போல நிக்கின் பிறப்பிலும் ஏதோ ஒரு காரணம் இருக்கக் கூடும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அன்பே கடவுள். அந்த அன்பின் கடவுள் தங்களைக் கைவிட மாட்டார் என அவர் நம்பினார். துவக்கத்துக்கு முன்பும், முடிவுக்குப் பின்பும் இருக்கப் போகும் கடவுள் ஒரு விஷயத்தைத் தருகிறார் எனில் அதை அப்படியே ஏற்றுக் கொள்வதே நல்லது எனும் சிந்தனை அவருக்குள் வலுப்பெற்றது.
அதனாலேயே நிக்கை ஒரு மாற்றுத் திறனாளி எனும் சிந்தனை இல்லாமலேயே அவனை வளர்க்க முனைந்தார்கள். அவனுக்காய் தனி அறை. மற்ற பிள்ளைகளைப் போலவே நடத்துவது என தன்னம்பிக்கையையும் அதிகரிக்க முயன்றார்கள்.
நிக் தரையில் புரண்டு விளையாடிக் கொண்டிருந்த பருவம் கடந்தது. அவன் எழும்பு உட்காருவானா ? என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாய் இருந்தது. கைகள் இல்லை. கால்கள் இல்லை. கால்கள் இருக்க வேண்டிய இடத்தின் இரு சின்ன வால் போன்ற சமாச்சாரம் இரண்டு விரல்களுடன் இருந்தது. அது மட்டுமே ஒரே சப்போர்ட் !
ஆனால் நிக் எழும்பி உட்கார புது ஐடியா கண்டுபிடித்தான். நெற்றியை தரையில் ஊன்றி புழுவைப் போல நெளிந்து உட்கார முயல்வது. நெற்றியை முதலில் தரையில் கொடுத்து கொஞ்சம் எழும்பி, பிறகு நெற்றியைச் சுவரில் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் எழும்பி உட்காருவது அவனுடைய விளையாட்டு போலவே ஆகிப் போனது !
விழுந்தால் எழலாம் ! எழ வேண்டும் எனும் உறுதி இருந்தால் வெற்றி தர நெற்றியே போதும் என்பது போல் இருந்தது அவருடைய செயல்கள் !
நிக் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்தான்.
அடுத்த கேள்வி வந்தது !
“இவனைப் பள்ளிக்கூடம் அனுப்பணுமே” !