3
பள்ளிக்கூடம் செல்லும் வயது வந்தபோது அவனை பள்ளிக்கூடம் அனுப்ப முடிவு செய்தனர். கொஞ்சம் கொஞ்சம் அத்தியாவசியமான வேலைகளை சொந்தமாய்ச் செய்யப் பழகியிருந்தான் நிக்.
பள்ளிக்கூடக் காலம் துவங்கியது !
நிக் முதல் நாள் வகுப்புக்குச் சென்றான். அது அவனுக்கு வசீகரமாய் இருக்கவில்லை. வீல்செயரில் கையும் காலும் இல்லாமல் நுழைந்த ஒரு உருவத்துடன் நட்பு பாராட்ட யாரும் தயாராய் இல்லை. நம்மை விட வித்தியாசமாய் இருப்பவர்களிடம் நட்பு பாராட்டுவதில் ஏனோ ஒரு தயக்கம் வந்து விடுகிறது. அப்படியே நட்பு பாராட்டினாலும் அது பரிதாபமாகவோ, தியாகமாகவோ உள்ளுக்குள் நிறம் கொள்கிறது.
நிக்கின் முதல் நாள் பள்ளிக்கூட அனுபவமும் அப்படித் தான் இருந்தது.
“அம்மா.. இனிமே நான் ஸ்கூலுக்கே போகல. கையும் காலும் இல்லாம போகவே புடிக்கல” என்பது தான் நிக் முதல் நாள் பள்ளிக்கூட அனுபவம் முடிந்து வீட்டில் வந்து கண்ணைக் கசக்கிக் கொண்டே சொன்ன வாசகங்கள்.
அவனுடைய கண்ணீருடன் சேர்ந்து அன்னையின் கண்ணீரும் கலந்தது. அதைத் தவிர அவர்களால் வேறு என்ன செய்து விட முடியும் ?
“ஏம்மா நான் இப்படி ? கையும் இல்லாம காலும் இல்லாம ?” அடிக்கடி நிக்கின் வாயிலிருந்து இந்தக் கேள்வி தவறாமல் வெளி வரும்.
“இதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும் மகனே. கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்துக்காகப் படைக்கிறார். அந்த காரணம் என்னன்னு சரியான நேரம் வரும்போ தான் நமக்குப் புரியும்” என்பார்கள் பெற்றோர்.
ஆனால் சின்னப் பையன் நிக்கிற்கு அந்த தத்துவார்த்த விளக்கங்கள் எல்லாம் புரியவில்லை. அடுத்தவர்களின் ஏளனமும், வித்தியாசமான பார்வையும் அவனை அலைக்கழித்தன. அவர்களைப் போல் நான் இல்லையே, அவர்கள் செய்யும் வேலைகளையெல்லாம் தன்னால் செய்ய முடியவில்லையே எனும் துயரம் அவனை ஆட்டிப் படைத்தது !
தற்கொலை செய்து கொள்ளலாமா ?
இந்த சிந்தனை அந்த சின்ன வயதில் அவனுக்குள் எழுந்தது. எப்படி தற்கொலை செய்து கொள்வது ? தற்கொலை செய்ய வேண்டுமென்றாலும் கூட ஒருவருடைய உதவி தேவை எனும் நிலமை.
ஒரு ஐடியா !
பாத்டப்பில் தண்ணீரை நிறைத்து, மூழ்கினால் இறந்து போகலாமே !
அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நினைத்தான் நிக்.
பாத்டப்பில் தண்ணீர் நிரப்பப்பட்டது. தலையை குப்புற வைத்துவிட்டு தண்ணீரில் விழுந்தான். அந்த கண நேரத்தில் அவனுக்குள் ஏராளம் சிந்தனைகள்.
“நான் இறந்து போனால் என்னை அன்பு செய்யும் பெற்றோர் வருத்தப்படுவார்களே. குறையுடன் ஒரு குழந்தையைப் பெற்ற குற்ற உணர்வு அவர்களை வாட்டி எடுக்குமே. காலம் முழுதும் அவர்களைத் துயரம் பீடிக்குமே” என பல சிந்தனைகள். நிக்கிற்கு தண்ணீரில் மிதக்கத் தெரியும் . எனவே பாத்டப் அவனுக்கு ஆபத்தில்லை என்பதே பெற்றோரின் எண்ணம். அந்த அவர்களுடைய நம்பிக்கையையும் பொய்யாக்க வேண்டுமா என அவர் யோசித்தார்.
சரி வேண்டாம் ! தற்கொலை செய்வது நல்ல ஐடியா அல்ல என முடிவுக்கு வந்து அதை விட்டு விட்டார்.
நிக்கின் பெற்றோருக்கு இதெல்லாம் தெரியாது. அவர்கள் அவனிடத்தில் ரொம்ப அன்பு வைத்திருந்தார்கள். அதீத கவனம் எடுத்து அவனுடைய பணிகளையெல்லாம் கவனித்தார்கள். அவர்களுடைய அன்பு நிக்கிற்கு ரொம்பவே உறுதுணையாய் இருந்தது.
“நான் பொறந்தப்போ எப்படிம்மா இருந்தேன். என்னைப் பார்த்து நீங்க என்ன நினைச்சீங்க ?” என அடிக்கடி நிக் பெற்றோரிடம் கேட்பான்.
“நான் உன்னைத் தூக்கவே முடியாதுன்னு சொல்லிட்டேன்” என ஒருநாள் உண்மையைச் சொன்னார் தாய். அது நிக்கின் மனதில் மிகப்பெரிய வலியாக வந்து விழுந்தது.
அம்மாவே என்னை நிராகரிக்கிறாங்கன்னா, உலக்கத்துல வேற யார் தான் என்னை அரவணைக்க முடியும் ? யார் தான் எனக்கு சப்போர்ட் பண்ண முடியும் என மனதுக்குள் கலங்கினார். இருந்தாலும் அந்த துவக்க நாட்களுக்குப் பிறகு பெற்றோர் காட்டும் அபரிமிதமான அன்பு அவரை நெகிழ வைத்தது.
நிக்கின் பெற்றோர் இறைபக்தியில் தளைத்து வளர்ந்தவர்கள். எனவே நிக்கின் தன்னம்பிக்கையை அவர்கள் இறை சித்தம் எனும் நம்பிக்கையில் வளர்த்தார்கள். அதனால் தனது இந்தப் பிறவிக்கு ஏதோ ஒரு அர்த்தம் உண்டு என்பதில் மட்டும் அவருக்கும் உறுதியான நம்பிக்கை இருந்தது.
ஆனால் அந்த நம்பிக்கையும் பற்றுறுதியும் வரும் வரை நிக்கின் வாழ்க்கை ரொம்பவே மன அழுத்தம் நிறைந்ததாகவே இருந்தது. தலைமுடி வளர்வது போல கைகால்கள் வளருமா என சின்ன வயதில் சிந்தனைகள் எழும். கண்ணாடியின் முன்னால் நின்று தினமும் காலையில் பார்க்கும் போது உடல் அப்படியே தான் இருக்கும்.
நாட்கள் செல்லச் செல்ல பள்ளிக்கூடத்தில் அவனுக்கு நண்பர்கள் கிடைத்தார்கள். நண்பர்களுடன் பேசும்போதும் பள்ளிக்கூடத்தில் இருக்கும் போதும் உற்சாகமாகவே இருப்பார் நிக். ஆசிரியர்களுக்கு இவரைப் பார்க்கும் போது உற்சாகம் பிறக்கும். துவக்கத்தில் பரிதாபப் பார்வை பார்த்தவர்கள் பிறகு சாதாரணமாய்ப் பார்க்க ஆரம்பித்தார்கள். பிறகு உற்சாகம் ஊட்டும் சிறுவனாகப் பார்க்க ஆரம்பித்தார்கள்.