புராஜக்டை எப்போ முடிப்பீங்க ?
எந்த ஒரு புராஜக்டையும் துவங்கும் போது நமக்கு முன்னால் நீட்டப்படுகின்ற மிக முக்கியமான கேள்வி, “எப்போ இந்த புராஜக்டை முடிப்பே” என்பது தான். ஒரு புராஜக்ட் எப்போது முடியும் என்பதை கண்டுபிடிப்பது மிக முக்கியமான அம்சம். அது சரியாக அமையாத போது ஏகப்பட்ட பொருளாதார இழப்பும், நேர இழப்பும் வந்து விடுகிறது. பல வேளைகளில் அந்த புராஜக்டே கூட கைவிடப்படுவதுண்டு.
புராஜக்டைத் தருபவர்கள் எவ்வளவு சீக்கிரம் இதை முடிக்க முடியுமோ அத்தனை வேகமாக முடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அதற்காக அவர்கள் பல வேளைகளில் சாத்தியமில்லாத கால அளவைக் கூட நிர்ணயிப்பார்கள். யானையை விழுங்க வேண்டும் அதையும் உடனே விழுங்க வேண்டும் என்பார்கள். நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க புராஜக்டுக்கான செலவுகள் அதிகமாகும் என்பது ஒரு பக்கம். இந்த புராஜக்டை முதன் முதலில் சந்தைப்படுத்த வேண்டும் எனும் தேவை இன்னொரு பக்கம். என இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
ஆனால், புராஜக்ட் செய்பவர்களுக்குத் தான் அதன் கஷ்டம் தெரியும். ஒரு புராஜக்டை முடிக்க எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பதெல்லாம் பல காரணிகளைப் பொறுத்தது. அதற்குரிய தொழில்நுட்பம் வேண்டும், அதற்குரிய ஆட்கள் வேண்டும், அதற்குத் தேவையான பொருட்கள் வேண்டும், அதற்குத் தேவையான பட்ஜெட் வேண்டும் என இந்த விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பொதுவாக ஒரு புராஜக்டை முடிக்க எவ்வளவு நாட்கள் தேவைப்படும் என்பதைக் கண்டுபிடிக்க பல வழிமுறைகளை வைத்திருப்பார்கள். அதில் ஒன்று நெட்வர்க் டயகிராம். அதாவது வலைப்பின்னல் படம். இது உலக அளவில் ஏறக்குறைய எல்லா வகையான தளங்களிலும் செயல்படுத்தப்படுகின்ற ஒரு முறை.
நெட்வர்க் படத்தை வரையும் முன், என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட வேண்டும். அதன் பின் அந்த பணிகளை எந்தெந்த வரிசையில் செய்யவேண்டும் என பார்க்க வேண்டும். அதன்பிறகு ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு கால அளவு தேவைப்படும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயங்களைக் கொண்டு தான் தான் ஒரு புராஜக்டை முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதைக் கண்டு பிடிக்க முடியும். சுருக்கமாக கீழ்க்கண்ட இரண்டு விஷயங்களும் அடிப்படை.
1. பணிகளை எந்த வரிசையில் செய்ய வேண்டும்
2. ஒவ்வொரு பணியை செய்யவும் ஆகும் கால அளவு என்ன
இந்த தகவல் இருந்தால் மட்டுமே ஒரு புராஜக்டை எவ்வளவு காலத்தில் முடிக்க முடியும் என அறிய முடியும். உதாரணமாக, பத்து பணிகள் இருக்கின்றன என வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு வாரம் ஆகும் என்றால் அதைக் கொண்டு புராஜக்டின் கால அளவைக் கணிக்கலாம்.
ஒன்றன் பின் ஒன்றாகத் தான் பணிகளைச் செய்ய முடியும் எனில் பத்து வாரங்கள் ஆகும். இரண்டு இரண்டு பணிகளை ஒரே நேரத்தில் இரண்டு குழுக்களை வைத்துச் செய்யலாம் எனில் ஐந்து வாரங்கள் ஆகும். அல்லது எல்லா வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்யலாம் எனில் ஒருவாரம் ஆகும். இப்படி ஒரு தோராயமான கணக்கை எட்ட எளிதாக இருக்கும். அதை அறிவியல் பூர்வமாக துல்லியமாய் கண்டுபிடிக்க இந்த நெட்வர்க் டயகிராம் பயன்படும்.
நெட்வர்க் படத்தில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை
1. மைல்கற்கள்
2. பணிகள்
3. கால அளவு
மைல்கற்கள் என்பது நமது பணியின் பாதையில் வருகின்ற குறிப்பிடத்தக்க இடங்கள் எனலாம். அதை அடைவதற்கு ஒரு கால அளவு இருக்கும். ஆனால் மைல்கல்லுக்கு ஒரு கால அளவு இருக்காது. சாலைப் பயணங்களில் ஒரு குறிப்பிட்ட மைல் கல்லை அடைய கொஞ்ச தூரம் பயணம் செய்வோம், ஆனால் அந்த மைல்கல்லுக்கென பயண நேரம் இருக்காது இல்லையா ? அது போல தான்.
வீடு கட்டவேண்டுமெனில் பிளான் போட்டு அதை அப்ரூவல் வாங்குவது ஒரு மைல் கல், அஸ்திவாரம் கட்டுவது இன்னொரு மைல் கல், காங்கிரீட் போடுவது இன்னொரு மைல்கல், எலக்ட்ரிக் வேலை ஒரு மைல் கல், பிளம்பிங் ஒரு மைல் கல் என புரிந்து கொள்ளலாம்.
இந்த நெட்வர்க் டயகிராம் சின்னச் சின்ன கட்டங்களும், அதை இணைக்கின்ற அம்புகளுமாக இருக்கும். கட்டங்களில் “பணிகள் அல்லது மைல்கற்கள்” குறிப்பிடப்பட்டிருக்கும். கட்டங்களில் ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு கால அளவு என்பதை ( உதாரணம் t – 10 மணி நேரம் ) என்பதைக் குறிப்பிட வேண்டும். கட்டத்தில் இருப்பது மைல் கல் எனில் கால அளவு பூச்சியம் என குறிப்பிட வேண்டும்.
ஒரு வேலை முடிந்தபின் தான் அடுத்த பணிக்கு நகர முடியும். முந்தைய பணி முடியாமல் அடுத்த பணிக்குச் செல்ல முடியாது. அடுத்த பணி எது என்பதை அம்புக்குறி மூலம் இன்னொரு கட்டத்தைக் காட்ட வேண்டும். ஒரு கட்டத்திலிருந்து ஒன்றிற்கு மேற்பட்ட அடுத்த கட்டத்துக்கும் செல்ல முடியும், அவையெல்லாம் ஒரே நேரத்தில் செய்யக் கூடிய பல பணிகள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
இப்படி ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு கட்டம் போட்டு, அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கும் போது ஒரு மிகப்பெரிய படம் கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த புராஜக்டின் பயண நேரத்தைக் கண்டுபிடிக்கலாம்.
இப்படி ஒரு படம் வரைந்து முடிந்தீர்களெனில் பாதி வேலை முடிந்து விட்டது என்று அர்த்தம். அதன் பிறகு முதல் கட்டத்திலிருந்து கடைசி கட்டத்திற்குச் செல்ல ஆகும் அதிக பட்ச தூரம் எது என பார்க்க வேண்டும். அதை கிரிட்டிகல் பாத், மிக முக்கியமான பாதை, என்பார்கள். ஒரு புராஜக்டை முடிக்க தோராயமாய் ஆகின்ற கால அளவு அது தான். எனவே தான் இந்த பாதையைக் கண்டுபிடிப்பது மிக முக்கியம். இந்தப் பாதையைக் கண்டுபிடிக்க ஒரே வழி இந்த நெட்வர்க் டயகிராம் தான்.
ஒரு புராஜக்டின் கடைசி நிலையை எட்ட வேறு பல வழிகளும் இருக்கலாம். அவற்றை நான் கிரிட்டிக்கல் பாத் என்பார்கள். அதாவது முக்கியமற்ற பாதை. அதில் புராஜக்ட் முடிந்தாலும் எல்லா பணிகளும் நிறைவடைந்திருக்காது. உதாரணமாக வீடு முழுமையடைந்திருக்கும், ஆனால் பெயிண்டிங் முடிந்திருக்காது என்பது போல.
இது மிகவும் எளிய ஒரு வழிகாட்டல். இதில் ஒவ்வொரு பணியையும் எப்போது துவங்கலாம், ஒரு பணிக்கும் அடுத்த பணிக்கும் இடையே எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் போன்ற அனைத்து விஷயங்களும் பதிவு செய்யப்படும். விரிவாக இந்த நெட்வர்க் டயகிராம் பற்றிப் பார்க்க விரும்புபவர்கள் இணையத்தில் அதற்குரிய தகவல்களைத் தேடிக் கற்றுக் கொள்ளலாம். ஏகப்பட்ட இலவச கட்டுரைகளும், வீடியோக்களும் இருக்கின்றன.
சில நேரங்களில் புராஜக்ட் குறிப்பிட்ட காலத்தில் துவங்காது. ஆனால் அதை முடிக்க வேண்டிய நேரத்தை மாற்ற முடியாத சூழல் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் கடைசியிலிருந்து முதல் கட்டத்தை நோக்கி நகர்ந்து எந்தெந்த விஷயங்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கலாம் என்பது போன்ற விஷயங்களை அலசுவார்கள். இதை பேக்வேர்ட் பாஸ் என்பார்கள். இது சிறப்பான முறை என சொல்ல முடியாது, ஆனால் தவிர்க்க முடியாத சூழல்களில் இவற்றைக் கட்டாயமாய் செய்ய வேண்டிய நிலை வரலாம் என்பதையும் மறுக்க முடியாது.
புராஜக்ட் மேனேஜ்மென்ட் பயணத்தில் இந்த நெட்வர் டயகிராம் ரொம்ப முக்கியமானது. இந்த நெட்வர்க் படத்தின் பணிகளும் கால அளவுகளும் மாறுதலுக்கு உட்படலாம். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக திடீரென அதிக நபர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டால் பணிகளின் கால அளவு குறையும். தொழில்நுட்பத்தில் ஏற்படும் புதுமையான ஒரு அம்சம் பணியின் காலத்தை குறைக்கும். அங்கீகாரம் கிடைக்க ஏற்படுகின்ற தாமதம் புராஜக்டின் துவக்கத்தை தாமதப்படுத்தும். சட்டென நிகழ்கின்ற காலநிலை மாற்றம் புராஜக்ட்டின் செயல்பாட்டைத் தடுக்கும். இப்படி பாசிடிவ் ஆகவோ, நெகடிவ் ஆகவோ மாற்றங்களை இவை சந்திக்கலாம். அவற்றைக் கொண்டு நெட்வர்க் டயகிராமை மாறுதல் செய்து கொள்ளவும் செய்யலாம்.
(தொடரும் )