10
அணி கட்டமைப்பு
ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு முதுகெலும்பாய் அமைவது சந்தேகத்துக்கிடமின்றி பணியாளர்கள் தான். என்னதான் கலர் கலரா விளம்பரம் செஞ்சாலும், வேலை செய்றது பணியாளர்கள் தான். அவர்கள் திறமையானவர்களாக, நேர்மையானவர்களாக, அர்ப்பணிப்புடையவர்களாக இருக்கும் போது ஒரு நிறுவனம் வெற்றியின் பாதையில் வீறு நடை போடும். இல்லையேல் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகும்.
நிறுவனத்திலுள்ள பணியாளர் மேலாண்மை பற்றி சுருக்கமாக ஏற்கனவே பார்த்தோம். அதில் பணியாளர்களின் பலம் பலவீனம் போன்றவற்றைத் தெரிந்து வைத்திருப்பது, புராஜக்டின் வெற்றிக்குத் தக்கபடி அவர்களை சரியாகப் பயன்படுத்துவது போன்றவை முக்கியமானவை. இந்த வாரம் அவர்களை எந்த முறையில் நிறுவனங்கள் குழு பிரிக்கின்றன, அதன் பயன்கள் பலவீனம் என்ன ? ஒரு புராஜக்ட் மேனேஜராக இவற்றை எப்படிக் கையாளவேண்டும் போன்றவற்றை இந்த வாரம் பார்ப்போம்.
முக்கியமாக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை மூன்று விதமான அணி அமைப்பில் நிறுத்துகின்றன.
1. ஃபங்ஷனல் ஸ்ட்ரக்சர் ( செயல் சார்ந்த அமைப்பு )
2. புராஜக்ட் ஸ்ட்ரக்சர் ( திட்டம் சார்ந்த அமைப்பு )
3. மேட்ரிக்ஸ் ஸ்ட்ரக்சர் ( இரண்டும் கலந்த அமைப்பு )
முதலாவதாய் வருகின்ற செயல் சார்ந்த அமைப்பில், ஒரே மாதிரியான பணி செய்கின்ற அனைவரும் ஒரு அணியின் கீழ் நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கென ஒரு செயல் தலைவர் இருப்பார். குழுவில் அந்த குறிப்பிட்ட செயலைச் செய்யக் கூடிய பணியாளர்கள் மட்டும் இருப்பார்கள்.
உதாரணமாக, ஒரு வீடு கட்டும் வேலை நடக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். கட்டுமானப் பணி செய்பவர்கள் எல்லாரும் ஒரு குழுவாக இருப்பார்கள். அவர்களுக்கென ஒரு தலைமை கொத்தனார் இருப்பார். எல்லோரும் அது சார்ந்த பணிகளை மட்டுமே செய்வார்கள். இது முதல் வகை.
இதிலுள்ள முக்கியமான நன்மை என்னவென்றால், எங்கே ஸ்பெஷலிஸ்ட் இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். ஒரு கொத்தனார் வேணுமா, அந்த தலைவரிடம் கேட்டால் போதும் என எல்லோருக்கும் தெரியும். அந்த கொத்தனாரும் அனுபவஸ்தராக இருப்பதால் அவருக்குக் கீழே இருக்கும் அத்தனை பேரையும் சரியாய் வழிநடத்தவும் அவரால் முடியும். அதே போல எல்லாரும் சேர்ந்து ஒருங்கிணைந்து கட்டுமான வேலையை அழகாகச் செய்வார்கள்.
இது நல்லா தானே இருக்கு ? இந்த அமைப்பே போதுமே என நீங்கள் நினைக்கக் கூடும். இதில் சில நெகட்டிவ் விஷயங்களும் உண்டு. இப்படி இருக்கின்ற குழுக்களுக்கும், பிற குழுக்களுக்கும் இடையே சரியான புரிதல் பெரும்பாலும் இருக்காது. ஒரு புராஜக்ட்டுக்கு இந்த புரிதல் மிக மிக அவசியமானது.
உதாரணமாக, கொத்தனாரும் எலக்டிரீஷியனும் பேசிக்கொள்ளவில்லையேல், பைப் வைக்க வேண்டிய இடத்தில் சரியான நேரத்தில் பைப் வைக்க முடியாமல் போய்விடும். கொத்தனாரும் பிளம்பரும் பேசிக்கொள்ளவில்லையேல் அதற்கான ஆப்ஷன்கள் சரியாக அமையாமல் போய்விடும். கொத்தனாரும், டிசைனரும் பேசிக்கொள்ளவில்லையேல் வீட்டின் அழகை அது பாதிக்கும்.
இந்த செயல் குழுவின் இன்னொரு நெகடிவ் விஷயம் என்னவென்றால், ஒவ்வொருவரும் அவரவர் வேலையை முடிக்க வேண்டும் என்று தான் பார்ப்பார்களே தவிர, ஒட்டு மொத்த வீடு சரியாக முடியவேண்டும் என பார்க்க மாட்டார்கள். சுவரு கட்றது என் வேலை முடிச்சுட்டேன், அதுல நீ பெயின்ட் அடிப்பியோ அடிக்காம போவியோ அது எனக்குத் தேவையில்லாத விஷயம் எனும் மனநிலை இவர்களிடம் இருக்கும்.
ஐடியில் இந்த சிக்கல் மிகப்பெரிய அளவில் உண்டு. டெவலப்மென்ட், டெஸ்டிங், நெட்வர்க், கிளவுட் என ஒவ்வொரு குழுவும் மாறி மாறி குறை சொல்லிக் கொண்டே இருப்பது இங்கே சர்வ சாதாரணம். காரணம் ஒவ்வொருவரும் தங்கள் பாகத்தை மட்டுமே பார்ப்பார்கள், ஒட்டு மொத்த புராஜக்டை அல்ல.
இந்த வகை அமைப்பில், இன்னொரு குழுவினரின் ஒப்புதலை வாங்குவது ரொம்ப கடினம். என் வேலை முடியாம நான் ஒண்ணும் செய்ய மாட்டேன் எனும் மனநிலை மேலோங்கும். என்னோட வேலைக்கு இடையிலே உனக்கு எலக்ட்ரிக்கல் செய்ய நான் நேரம் ஒதுக்க முடியாது என கட்டுமானப் பணியாளர் சொல்வது போன்றது இது.
ஓ, இதுல இவ்ளோ பிரச்சினை இருக்கா ? நமக்குத் தேவை புராஜக்ட் தான். அதனால ஒவ்வொரு புராஜக்டுக்கும் தக்கபடி ஒரு அணியை உருவாக்குவோம் எனும் சிந்தனை தான் “புராஜக்ட் ஸ்ட்ரக்சர்”. இதில் பல விதமான பணி செய்பவர்கள் ஒரே தலைமையின் கீழ் இயங்குவார்கள். அந்த தலைவர் புராஜக்டை நடத்திச் செல்வார்.
உதாரணமாக, வீடுகட்டுவது ஒரு புராஜக்ட் எனில், கொத்தனார், பெயின்டர், பிளம்பர், எலக்ட்ரீஷியன் என எல்லோருமே ஒரு தலைவரின் கீழ் இயங்குவார்கள். புராஜக்ட் மேனேஜர் தனது பணியான வீட்டை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்பதைப் பார்ப்பார். தனித்தனி குழுக்களாக மக்களைப் பார்க்க மாட்டார். அவரிடம் தான் எவ்வளவு பணம் செலவு செய்யலாம், எதை முதலில் செய்யலாம், எதை இரண்டாவது செய்யலாம் போன்ற முடிவெடுக்கும் உரிமை இருக்கும்.
இதில் கொத்தனார் தலைமைக் கொத்தனாரிடம் அல்ல, புராஜக்ட் மேனேஜரிடம் தான் வேலையைப் பெற்று அப்டேட்டையும் கொடுப்பார். அதே போல ஒவ்வொரு பணி செய்பவர்களும் தனித்தனியே புராஜக்ட் மேனேஜரிடம் தான் தங்கள் வேலைகளைப் பெற்று அதன் நிலையையும் சொல்வார்கள்.
எல்லோருக்கும் ஒரே தலைவர் என்பதால் குழுவிலுள்ள நபர்களிடையே நல்ல புரிதல் இருக்கும். தகவல் பரிமாற்றம் இயல்பாக இருக்கும். எல்லோருமே வீடு கட்டி முடியவேண்டும் எனும் கடைசி இலக்கை நோக்கிப் பயணிப்பார்கள்.
இது நல்லாயிருக்கே.. என நினைக்கும் முன் இதிலும் சில குறைகள் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக ஒரு புராஜக்ட்டில் நல்ல திறமையான நபர் இருந்தால் அவர் அந்த புராஜக்டை மட்டும் தான் பார்ப்பார். ஒவ்வொரு புராஜக்டுக்கும் நிறைய ஆட்கள் தேவைப்படுவார்கள்.அதனால் செலவு அதிகமாகும்.
உதாரணமாக, கொத்தனாருக்கு ஒரு நாள் வேலை இன்றால் அவரை சும்மா வைத்திருக்க வேண்டும். வேறு எதுவும் செய்ய முடியாது. அதே போல ஒரு புராஜக்ட் முடிந்து விட்டால் அந்த புராஜட்டில் உள்ள நபர்களை என்ன செய்வது என்பதும் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.
இந்த இரண்டு முறைகளிலும் உள்ள குறைகளைக் களைவதற்காகத் தான் மேட்ரிக்ஸ் அமைப்பு உருவானது. இது கடவுள் பாதி, மிருகம் பாதி போல கலந்து செய்யப்பட்ட முறை. செயல்வடிவ அமைப்பும் இருக்கும், புராஜக்ட் அமைப்பும் இருக்கும். பணியாளர்கள் செயல் அமைப்பின் கீழ் இருப்பார்கள். அதாவது கொத்தனார்கள் எல்லாம் ஒரு தலைவரின் கீழ், பெயிண்டர் எல்லாம் இன்னொரு தலைவரின் கீழ் அப்படி.
அங்கிருந்து ஒவ்வொரு புராஜக்டுக்கும் தேவையான நபர்கள் அணி திரட்டப்பட்டு ஒரு புராஜக்டில் இணைவார்கள்.அந்த வேலை முடிந்ததும் மீண்டும் செயல் அணிக்குத் திரும்புவார்கள். ஒரு நபரே வேறு வேறு புராஜக்ட்களில் தேவைக்கேற்ப பணிபுரிவார்கள். உதாரணமாக ஒரு அனுபவம் வாய்ந்த பணியாளர் இருக்கிறாரெனில் அவர் ஒரே புராஜக்டில் பணி புரிய வேண்டிய அவசியம் இல்லை.
அதே போல ஒரு புதிய புராஜக்ட் வந்தாலும் தேவையான ஆட்களை பல குழுக்களிலிருந்தும் மிக விரைவாக பெற்றுக் கொள்ளவும் முடியும். இதிலுள்ள மிகப்பெரிய சவால், ஒரு நபரே இரண்டு தலைவரின் கீழ் வேலை பார்க்க வேண்டிய சூழல் உருவாகும்.
இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் மெட்ரிக்ஸ் அணியமைப்பைத் தான் கொண்டிருக்கின்றன. இந்த முறையில் புராஜக்ட் மேனேஜரின் பணி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. திட்டம் தீட்டுவது, எப்படிப்பட்ட நபர் வேண்டுமென முடிவெடுப்பது, ஒரு நல்ல டீமை அமைப்பது, விரிவான செயல்திட்டம் உருவாக்குவது, திட்டத்துக்கு ஏற்ப வேலை நடக்கிறதா என்பதைக் கண்காணிப்பது, செலவுகளை கண்காணிப்பது, புராஜக்டில் வருகின்ற மாற்றங்களை எதிர்கொள்வது என சர்வமும் புராஜக்ட் மேனேஜரின் தலையில் தான்.
மிக மிக முக்கியமாக மற்ற தலைவர்களுடன் நல்ல ஒரு புரிதலும், தொழில் ரீதியான நட்புறவும் இருக்க வேண்டியது அவசியம்.
( தொடர்வோம் )