12
பணியைப் பகிர்ந்தளித்தல் ( டெலிகேஷன் )
பணியைப் பகிர்ந்தளித்தல் ஒரு கலை. அது ஒரு பந்தைத் தூக்கிக் கிணற்றுக்குள் போடுவது போல் அல்ல. ஒரு கால்ப்பந்து விளையாட்டில் பந்தை ஒரு நபருக்கு பாஸ் செய்வது போல. அதன் பின் அந்த பந்தின் அடுத்த சில நீக்கங்கள், என்ன செய்ய வேண்டும் எனும் திட்டமிடல், சூழலுக்கு ஏற்ப விளையாடுதல், எதிராளியை எதிர்கொள்தல் என பல விஷயங்கள் பந்து யாரிடம் செல்கிறதோ அவரிடம் இருக்கும். அதே நேரத்தில் அவருடைய இறுதி இலக்கு என்பது அணியின் இலக்கு தான். அணிக்காக கோல் அடிப்பது, அணியை வெற்றியடையச் செய்வது என்பதாகத் தான் அந்த இலக்கு இருக்க வேண்டும்.
தனியே ஒரு நபர் என்ன தான் சிறப்பாக விளையாடினாலும் அணி தோல்வியடைந்தால் அந்த தனிப்பட்ட சாதனைகள் காணாமலேயே போய்விடும். விழலுக்கு இறைக்கின்ற நீரானது களஞ்சியங்களை நிரப்புவதில்லை. எனவே பணியைப் பகிர்ந்தளிக்கும் போது சரியான நபருக்கு அதை அளிப்பதும். பணியைப் பெற்றுக் கொண்ட நபர் ஒட்டு மொத்த நிறுவனத்தின் வெற்றியை மனதில் கொண்டே அந்த பணியை ஏற்றுக் கொள்வதும் மிக முக்கியமான அம்சங்கள்.
சில மேனேஜர்கள் வீட்டு அப்பாக்கள் போல. வீட்டு அப்பாக்கள் வேலைகளை அவர்கள் மனைவியிடமோ பிள்ளைகளிடமோ ஒப்படைப்பார்கள். ஆனால் சுதந்திரமாகச் செயல்பட விடமாட்டார்கள். முடிவு எடுக்கும் விஷயத்தை எல்லாம் தானே வைத்துக் கொண்டு, செயலை மட்டும் பிறர் செய்ய வேண்டும் என ஒப்படைப்பது சரியான அணுகு முறையல்ல. கால்பந்துக் களத்தில், ‘நான் இந்த பந்தை அங்கே அடிக்கவா ? இங்கே அடிக்கவா ?’ என கேட்டுக்கொண்டிருக்க முடியாது. ஒரு பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைக்கும் போது அந்தப் பணியைச் செய்வதற்கான முழு சுதந்திரத்தையும் அவரிடமே கொடுத்து விட வேண்டும். இதை டெலிகேஷன் வித் அதாரிடி என அழைப்பார்கள்.
உதாரணமாக, நீங்கள் ஒருவரிடம் ஒரு பணியை ஒப்படைக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் நான்கு பேர் வேலை செய்கிறார்கள். அவரது குழுவில் இருக்கின்ற நபர்களுக்கு என்ன வேலை கொடுப்பது, எப்படி கொடுப்பது, எப்போது கொடுப்பது போன்றவற்றையெல்லாம் அவரே தீர்மானிக்க விட்டு விட வேண்டும். அதில் தலையிடக் கூடாது. அந்தக் குழுவிலுள்ள யாரேனும் உங்களிடம் வந்து, “அவரு இப்படி சொல்றாரு, அது சரியில்லையே” என சொன்னால் கூட ” உங்கள் தலைவர் சொல்வதை நீங்கள் செய்யுங்கள்” என தெளிவாகச் சொல்ல வேண்டும். அப்போது தான் நீங்கள் டெலிகேட் செய்த பணியை நிறைவேற்றும் சுதந்திரத்தை அவருக்குக் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.
அவர் தன்னுடைய பணியைச் சரியாகச் செய்யவில்லை என தோன்றினால் கூட அந்த நபரைத் தனியே அழைத்து நீங்கள் விவாதிக்கலாம், ஆலோசனைகள் சொல்லலாம். ஆனால் அவருக்குக் கொடுத்த பணியிலும் நீங்கள் தான் இறுதி முடிவை எடுக்கிறீர்கள் எனும் சூழல் உருவாகக் கூடாது. அது ஒரு பொம்மைத் தலைமையை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துவதைப் போன்றதாகிவிடும்.
ஒரு வேலையை இன்னொருவரிடம் ஒப்படைப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. பைலட்டை நம்பி விமானத்தில் ஏறுவது போன்ற விஷயம் அது. பைலட்டின் முழு கட்டுப்பாட்டில் விமானப் பயணம் இருக்கும். அவர் சரியான முடிவெடுப்பார் என நம்ப வேண்டும். ஆனால் அதில் ஒரு ரிஸ்க் இருக்கிறது இல்லையா ? அதனால் தான் வேலையை டெலிகேட் செய்வதற்கு முன் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
1. எந்த வேலையைக் கொடுக்கலாம். ?
உங்களுடைய பெரிய புராஜக்டின் “எந்த ஒரு பகுதியை” இன்னொருவருக்குக் கொடுக்கலாம் என்பதைப் பற்றிய முழுமையான புரிதல் அவசியம். அந்த வேலை கொண்டு வரவேண்டிய ரிசல்ட் என்ன ? எவ்வளவு காலத்தில் அதைச் செய்ய வேண்டியிருக்கும் ? எந்தெந்த குழுக்களுடன் அவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கும் போன்ற விஷயங்களெல்லாம் முதலில் நமக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.
என்ன வேண்டும் என்பது தெரியாமல் ஒரு வேலையை டெலிகேட் செய்ய முடியாது. ‘எனக்கு என்ன வேணும்ன்னு எனக்குத் தெரியல, ஆனா எனக்குத் தேவையானதை நீ கொண்டு வா” என ஹோட்டல் சர்வரிடம் ஆர்டர் செய்ய முடியாது. எனவே முதலில், எந்த வேலையைக் கொடுக்கலாம், அது தரவேண்டிய அவுட்புட்/விளைவு/ரிசல்ட் என்ன என்பதைப் பற்றிய புரிதல் வேண்டும்.
2. யாரிடம் கொடுக்கலாம் ?
இது தான் மிகப்பெரிய சவாலான கேள்வி. நமக்கு நன்றாகத் தெரிந்தவர் என்பதற்காகவோ, வேற யாருக்காவது கொடுத்தா பிரச்சினை வரும் என்பதற்காகவோ ஒரு வேலைக்கான நபரைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. அந்த குறிப்பிட்ட வேலைக்கு என்ன திறமை வேண்டும் ? அது இந்த நபரிடம் இருக்கிறதா ? இவரிடம் கொடுத்தால் அந்த வேலை நன்றாக முடியுமா ? இதற்கு முன் இத்தகைய வேலை எதையாவது இந்த நபர் செய்திருக்கிறாரா ? போன்ற அலசல்கள் தான் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுத்தால் தவறான நபருக்கு வேலையைக் கொடுத்து கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
3. எப்படிக் கொடுக்கலாம் ?
ஒரு வேலையை ஒரு நபரிடம் கொடுக்கும் போது, அந்த நபருக்கும், தான் என்ன வேலை செய்யப் போகிறோம் என்பதைக் குறித்த தெளிவு வேண்டும். உங்களுக்கு பிரியாணி வேண்டும் என்பது தேவையாய் இருந்தால், அதை சர்வரிடம் தெளிவாகச் சொல்ல வேண்டும். உதாரணமாக, எனக்கு மட்டன் பிரியாணி வேண்டும், அதிலும் மலபார் மட்டன் பிரியாணி தான் வேண்டும், கத்தரிக்கா கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேண்டும் இப்படி மிகத் தெளிவாக நமது தேவைகளைச் சொல்ல வேண்டும்.
சொல்வதை எழுத்து மூலமாக ஒப்பந்தத்துக்குள் கொண்டு வருவதும் தேவையானது. இதன் மூலம் சந்தேகம் வரும்போது நமது, ‘ரிக்கொயர்மென்ட்/தேவை’ என்னவாய் இருந்தது என்பதை மறுபரிசீலனை செய்ய வசதியாய் இருக்கும். கடைசியாய் வேலை முடிந்த பிறகும், இதைக் கேட்டீர்கள் செய்திருக்கிறேன் என நமது வேலையை நியாயப்படுத்தவும் பயன்படும்.
4. வேலையைக் கண்காணித்தல்.
ஒரு வேலையை ஒரு நபரிடம் கொடுக்கிறோம். அவருக்கு சுதந்திரம் கொடுக்கிறோம். அவரை வேலை செய்ய ஊக்குவிக்கிறோம். அவரிடம் நமது தேவைகளைத் தெளிவாகச் சொல்கிறோம், இவையெல்லாம் மட்டுமே போதுமானது அல்ல. ஒரு கண்காணிப்பும் அவசியம். மதுரையிலிருந்து சென்னைக்குக் காரில் செல்கிறோம். டிரைவரிடம் பணியைக் கொடுத்தாகிவிட்டது. இனிமேல் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கி விடுவோம் என நினைக்க கூடாது. அவ்வப்போது நாம் செல்கின்ற ரூட் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அதைச் சாலையிலுள்ள மைல்கற்கள், வழிகாட்டும் பலகைகள் போன்றவற்றைக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.
ஓட்டுகிற டிரைவர் விழிப்பாக இருக்கிறாரா என பார்க்க வேண்டும். அவருக்கு சோர்வாக இருந்தால் தேவையான ஓய்வு கொடுத்து ஒரு டீ வாங்கி கொடுக்க வேண்டும். உற்சாகமூட்டிவிட்டு அவரை மீண்டும் பணியைத் தொடரச் செய்ய வேண்டும். அவரோடு கொஞ்ச நேரம் விழித்திருந்து பேச வேண்டுமெனில் அதற்கும் தயாராக இருக்க வேண்டும். வேலையைக் கண்காணித்தல் என்பது ஒரு கலை. அது வழிகாட்டுதலும், ஊக்கமூட்டுதலும், பாராட்டுதலும் கலந்ததாய் இருப்பதே சிறப்பானது. இப்படித்தான் புராஜக்ட் செல்லும் பாதை, வேகம், பணியாளர்களின் உடல்நிலை, மனநிலை அனைத்தையும் கவனிக்க வேண்டும்.
5. பிரச்சினைகளுக்கு துணை நிற்பது.
ஒரு வேலையை ஒருவரிடம் ஒப்படைத்தபின் அவருக்கு வருகின்ற பிரச்சினைகளையெல்லாம் அவரே தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என கைகழுவும் வேலையை ஒரு புராஜக்ட் மேனேஜர் செய்யவே கூடாது. பிரச்சினைகள் வரும்போது கவனிக்க வேண்டும். அந்த நபருக்கு உங்கள் உதவி தேவைப்படும் சூழலில் நீங்கள் முழுமையாக களமிறங்க வேண்டும். அது ஒரு வேலையை முடிப்பதற்குத் தேவையான ஆட்களைக் கொடுப்பதாக இருந்தாலும் சரி, பணம் கொடுப்பதாக இருந்தாலும் சரி, ஆலோசனை கொடுப்பதாக இருந்தாலும் சரி. நமது பங்களிப்பை முழுமையாய்க் கொடுக்க வேண்டும்.
சென்னைக்குப் போய்க்கொண்டிருக்கும் வண்டி வழிமாறி வேறெங்கோ சென்றுவிட்டதென டிரைவர் சொன்னால், “அறிவில்லையா ? ஒழுங்கா பாத்து ஓட்ட மாட்டே ? நான் எப்போ ஊர் போய் சேருவது ?” என கத்துவதல்ல சரியான வழி. முதலில் டிரைவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து. என்ன பிரச்சினை, இப்போது எங்கே நிற்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டு. இனிமேல் சரியான வழிக்கு வர என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து டிரைவருக்கு உதவுவது தான் சரியான வழி.
“கவலைப்படாதே, நாம அந்த ரோடைப் புடிச்சா திருச்சி போயிடலாம். கொஞ்சம் சுத்து தான் பரவாயில்லை. பெட்ரோல் இருக்கா பாத்துக்கோ.மறுபடி கன்ஃப்யூஷன் ஆயிடுச்சுன்னா என்கிட்டே சொல்லு” என சொல்வது சரியான வழிமுறை. புராஜக்ட் முடிந்தபின் என்னென்ன தவறுகள் செய்தோம், அதை எப்படி தவிர்த்திருக்கலாம் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்கலாம், ஓடிக்கொண்டிருக்கும் வண்டியில் டயர் மாற்றுவதும், புராஜக்டின் பாதியில் தவறுகளைக் குறித்து தர்க்கமிடுவதும் ஆபத்தானவை.
( தொடரும் )