13
மைக்ரோ மேனேஜ்மென்ட் நல்லதா ?
*
நல்லதா ? கெட்டதா ? என்று கேட்கும் முன் “மைக்ரோமேனேஜ்மென்ட்” என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. அதை ஒரு சின்ன உதாரணம் மூலம் சொன்னால் எளிதாகப் புரியும் என நினைக்கிறேன். சில மாமியார்கள் மருமகள்களிடம் சமையல் வேலையை ஒப்படைப்பார்கள். ஒப்படைத்து விட்டு வெளியே போகமாட்டார்கள். அப்படியே சமையலறையில் ஓரமாக நின்று விட்டு, “அந்த வாணலியை எடுக்காதே, இதை எடு” என்பார்கள். எடுத்ததும், “அதை கொஞ்சம் கழுவிடு” என்பார்கள். கழுவினால் கூட, “கொஞ்சம் ஓரத்தையெல்லாம் விம் போட்டு நல்லா தேச்சுடு” என்பார்கள். அப்புறம், “அடுப்பை சிம்ல போடு, இவ்ளோ ஃப்ளேம் வேண்டாம் என்பார்கள். இப்படி கூடவே நின்று ஒவ்வொரு சின்ன வேலையிலும் மூக்கை நுழைத்தால் எப்படி இருக்கும் ?
“என்கிட்டே சமையல் செய்ய சொல்லிட்டீங்கல்ல, நான் பாத்துக்கறேன்.. கொஞ்சம் வெளியே போறீங்களா ?” என கத்தத் தோன்றும் இல்லையா ? இப்படி சின்னச் சின்ன விஷயத்திலும் மூக்கை நுழைத்துக் கொண்டே இருப்பது தான் மைக்ரோ மேனேஜ்மென்ட் என்பது. ஒரு வேலையை திறமையான ஒருவரிடம் ஒப்படைத்தபிறகு அவருடைய ஸ்டைலில் அந்த வேலையைச் செய்ய விட்டு விட வேண்டும். “என்ன செய்ய வேண்டும்” என்பதைச் சொல்ல வேண்டுமே தவிர, “எப்படி செய்ய வேண்டும்” என்பதைச் சொல்லாமல் இருப்பதே நல்லது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு விஷயத்தையும் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கவனிப்பது கூடவே கூடாது.
ஒரு மேனேஜர் மைக்ரோ மேனேஜ் செய்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
1. எப்படியாவது அந்த புராஜக்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என நினைக்கின்ற நபராக இருக்கலாம். எனவே புராஜக்டில் நடக்கின்ற ஒவ்வொரு விஷயங்களையும் கூடவே இருந்து பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் அவருக்கு இருக்கும். அந்த மனநிலை இருப்பவர்கள் மைக்ரோமேனேஜ் செய்யும் இயல்பைக் கொண்டிருப்பார்கள்.
2. சில வேளைகளில் புராஜக்டின் கடைசி கட்ட அப்டேட் வரை தனக்குத் தெரிய வேண்டும் என நினைப்பவர்கள் இத்தகைய மைக்ரோமேனேஜ் மனநிலையைக் கொண்டிருப்பார்கள். எனக்குத் தெரியாம ஒரு துரும்பு கூட அசையக் கூடாது என்பவர்கள் பெரும்பாலும் மைக்ரோமேனேஜ்மென்ட் பார்ட்டிகளாகத் தான் இருப்பார்கள். அவர்களுடைய தலைவர் மைக்ரோமேனேஜ் மனநிலை கொண்டிருந்தால் சொல்லவே வேண்டாம், அது அப்படியே அடுத்தடுத்த நிலைகளுக்கும் தாவும்.
3. சிலர் வேலை செய்வதை ஒரு ஹாபியாகவே வைத்திருப்பார்கள்.அவர்களால் வேலை செய்யாமல் இருக்கவே முடியாது. அப்படிப்பட்டவர்கள் எப்போதுமே களத்தில் இறங்கி என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். எல்லா முடிவுகளிலும் தங்களுடைய தலையீடு இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களால் சரியான டெலிகேட் செய்ய முடியாது.
4. சிலர் ‘நான் இதுல எக்ஸ்பர்ட், என்னைத் தவிர யாரும் இதை சிறப்பாகச் செய்ய முடியாது’ எனும் மனநிலை கொண்டிருப்பார்கள். அவர்கள் எப்போதுமே தங்களுடைய முடிவு தான் சரியான இருக்கும் என உறுதியாக நம்புவார்கள். தங்களுக்குத் தெரிந்த வழியைத் தவிர வேறு வழிகளில் சிறப்பாகச் செயல்பட முடியாது என நினைப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் மைக்ரோமேனேஜ்மென்ட் செய்யாமல் இருக்கவே மாட்டார்கள்.
5 சிலருக்கு எதுக்கெடுத்தாலும் சந்தேகம் இருக்கும். நான் சொன்னது அவர்களுக்குப் புரிந்திருக்குமா ? சரியாகச் செய்வார்களா ? புரியாமல் குழம்புவார்களா ? எனும் ஒரு பதட்டம் இருக்கும். அதனாலேயே அடிக்கடி எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்துக் கொண்டே இருப்பார்கள்.
6. சிலருக்கு உள்ளூர ஒரு ‘பயம் இருக்கும்’.தன்னை விட அடுத்த நபர் நல்ல பெயரை வாங்கிவிடுவாரோ. தன்னுடைய பெயர் போய்விடுமோ. தன்னுடைய வேலைக்கு அந்த நபர் ஒரு வில்லனாய் வந்து விடுவாரோ போன்ற அச்ச உணர்வுகள் மைக்ரோமேனேஜ்க்குள் தள்ளி விடும்.
7. சிலருக்கு தங்களுடைய நேரத்தை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பது தெரியாது. அதனால் தேவையற்ற விஷயங்களில் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டே இருப்பார்கள். மைக்ரோமேனேஜ் தான் நல்லதுப்பா” என அவர்கள் வெளிப்படையாகவே சொல்வார்கள்.
மைக்ரோமேனேஜ்மென்ட் நல்லதல்ல என்பது ஒரு புறம் இருக்க, சில மேனேஜர்கள் மைக்ரோமேனேஜ்மென்ட் எனும் பூதக்கண்ணாடியோடு அலைவதை நாம் தவிர்க்கவே முடியாது என்பது தான் கள யதார்த்தம். அத்தகைய சூழல்களில் அந்த மேனேஜர்களோடு இணைந்து பணியாற்ற சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
முதலாவது, மைக்ரோமேனேஜ் பொதுவாகவே நம்பிக்கையின்மையிலிருந்து தான் பிறப்பெடுக்கும். ‘கொடுத்த வேலையை இவன் ஒழுங்கா செய்வானா ? ” எனும் சந்தேகம் அதற்கான மூல காரணமாய் இருக்க வாய்ப்புகள் அதிகம். அத்தகைய சூழல்களில் எப்படி நாம் நம்பகத் தன்மையை உருவாக்குவது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.
முதலில் புராஜக்ட் சார்ந்த அத்தனை விஷயங்களும் மேனேஜரைத் தெரியப்படுத்துவது உசிதம். “எதையோ மறைக்கிறான்” எனும் சந்தேகம் எழும்போது மைக்ரோமேனேஜ்மென்ட் பழக்கம் வலுவடையும். அத்தகைய சிந்தனை எழாமல் கவனித்துக் கொள்ள, வெளிப்படையான கம்யூனிகேஷன் அவசியம். அதற்காக சில மைல்கற்களை உருவாக்கி, அதை நிறைவேற்றும் விஷயத்தை தெளிவாக விளக்கலாம்.
மைக்ரோமேனேஜ் செய்யும் மேனேஜரை எதிர்ப்பதை விட்டு விட்டு, அவர் அதிக நேரம் செலவிடுவதற்காய் நன்றி சொல்லுங்கள். அவருடைய தலையீடு எந்த எதிர்ப்பையும் சம்பாதிக்கவில்லை என்பது தெரிந்தாலே, மெல்ல மெல்ல அந்த மனநிலை மாறிவிடும் என்பது தான் நிஜம். கேட்கும் முன்னரே தேவையான தகவல்களையெல்லாம் அவருக்குக் கொடுத்து விடுவது ரொம்ப பயனளிக்கும்.
உதாரணமாக மைக்ரோமேனேஜ் செய்பவர்களுடன் கொஞ்ச நாள் வேலை செய்தாலே அவர்கள் எப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பார்கள் என்பது தெரிந்து விடும். டெய்லி சாயங்காலம் வந்து “அந்த பேய்மென்ட் எல்லாம் அனுப்பியாச்சா” கேப்பாரு, காலைல “யாரெல்லாம் என்ன பண்றாங்கன்னு” கேப்பாரு, “நேற்றைக்கு ஏதாச்சும் பென்டிங்கான்னு” கேப்பாரு இப்படி பல விஷயங்களை நாம் கண்டுபிடிக்க முடியும். இந்த பேட்டர்ன் புரிஞ்சு போச்சுன்னா, அதுக்குத் தக்கபடியான பதிலை நாம உருவாக்கிக் கொடுக்க முடியும். அவர் கேட்கும் முன்பாகவே, அவர் வழக்கமாகக் கேட்கும் கேள்விகளுக்கான பதிலை அவரிடம் கொடுத்து விட்டால் அவரது நம்பிக்கை அதிகரிக்கும்.
எதற்காக இந்த கேள்விகளையெல்லாம் கேட்கிறார் ? ஏன் ரொம்ப நோண்டறாரு ? என மனதில் கேள்விகள் அலை மோதலாம். அதற்கான பதிலை கண்டறிய முயலுங்கள். அது அவரது இயல்பாய் இருந்தால், அதை எதிர்கொள்ள அவரது வழியில் போக வேண்டும். ஒருவேளை உங்களிடம் மட்டும் தான் இப்படி நடந்து கொள்கிறார் எனில், உங்களிடம் அவருக்கு முழுமையான நம்பிக்கை இல்லை என்பது பொருள். அந்த நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.
நாமாகவே ஒரு கற்பனைக் கதையை உருவாக்கி அதில் வில்லனாக மேனேஜரை நிறுத்துவது தேவையில்லாத விஷயம். பெரும்பாலானவர்கள் செய்கின்ற இமாலயத் தவறு இது தான். ‘என் மேல மேனேஜருக்குத் தனிப்பட்ட விரோதம் அதான் நோண்டிட்டே இருக்காரு’ போன்ற சிந்தனைகளை முதலில் ஓரம் கட்ட வேண்டும். அதே போல, ‘இவரு கேக்கறதுக்கெல்லாம் நான் எதுக்கு பதில் சொல்லணும்’ எனும் ஈகோ சிந்தனைகளையும் முழுமையாய் ஒதுக்கி வைக்கவேண்டும். வேலை இடத்தில், கொடுக்கப்பட்ட வேலையை எப்படிச் செய்வது, எப்படி சுமூகமாகச் செய்வது, எப்படி சிறப்பாகச் செய்வது, எப்படி வேகமாய்ச் செய்வது போன்ற விஷயங்களைப் பற்றித் தான் சிந்திக்க வேண்டும்.
புராஜக்ட் மேனேஜ்மென்ட் பற்றிப் பேசும்போது இதைப் பற்றிப் பேசக் காரணம், பலரும் இதை எதிர்கொள்ளச் சிரமப்படுவார்கள் என்பது தான். எது எப்படியோ, ஒரு மேனேஜராக மைக்ரோமேனேஜ் செய்வது சரியான வழிமுறையல்ல. ஆனால் அத்தகைய சூழல்களை முழுமையாய்த் தவிர்க்கவும் முடியாது என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
*
சேவியர்