14
கவனித்தல்
பிள்ளைகளை ஒரு நல்ல ஸ்கூல்ல சேர்க்க வேண்டும் என்பது எல்லா பெற்றோரிடமும் இருக்கக் கூடிய ஒரு பதட்டம் கலந்த எதிர்பார்ப்பு. அதற்காக பல ஸ்கூல் வாசல்களில் ஏறி இறங்கி விண்ணப்பப் படிவம் வாங்குவார்கள். அதன் பின் அதை நிரப்பி ஸ்கூல்களில் கொடுத்து, நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டு, பிரார்த்தனைகள் செய்து, மிகப்பெரிய பணத்தையும் வாரி இறைத்து நல்ல ஒரு இடத்தில் அட்மிஷன் வாங்குவார்கள். அதன் பின்பு பெரும்பாலான பெற்றோர்கள், இனியெல்லாம் பள்ளிக்கூடம் பார்த்துக் கொள்ளும் என ஹாயாக அமர்ந்து விடுவார்கள்.
பெற்றோர் தொடர்ந்து கவனிக்காமல் இருக்கும் போது பிள்ளைகளின் படிப்பு நாளுக்கு நாள் பலவீனமாகிக் கொண்டே இருக்க வாய்ப்பு அதிகம். அப்புறம் மார்க் வரும்போ தான் தெரியும் பிள்ளை நினைத்த அளவுக்கு படிப்பில் சுட்டியாக இல்லை என்பது. அப்படிப்பட்ட ஒரு சூழல் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும் ? ஒவ்வொரு நாளும் குழந்தை என்ன படிக்கிறது, எப்படி படிக்கிறது ? படிப்பதற்கு வேண்டிய சூழல் இருக்கிறதா ? ஏதேனும் தேவைகள் இருக்கிறதா ? குழந்தைக்கு ஏதேனும் மன வருத்தங்கள் இருக்கிறதா ? என ஒவ்வொரு விஷயத்தையும் தொடர்ந்து கவனிப்பதும், அதற்கேற்க செயல்படுவதும் தான்.
புராஜக்ட் விஷயத்திலும் அப்படித் தான். ஆட்களை நியமித்தாயிற்று வேலை தொடங்கியாயிற்று என ஹாயாக ஓய்வெடுத்தால் புராஜக்ட் நினைத்த வேகத்தில் நகராது. ஆமை போல நடக்கத் தொடங்கும். சில வேளைகளில் தவறான திசையில் பயணிக்கவும் செய்யும். எனவே தான் இந்த ‘மானிட்டரிங் & கன்ட்ரோல்’ எனப்படும் தொடர்ந்து கவனிப்பதும், கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் மிகவும் முக்கியமான அம்சமாகிறது.
முதலில் புராஜக்ட் துவங்கும் முன்பாகவே புராஜக்டில் பணி செய்யப் போகின்ற அத்தனை நபர்களையும் சந்தித்து அவர்களிடம் வேலையைப் பற்றிய சரியான புரிதல் இருக்கிறதா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும்.
என்ன செய்ய வேண்டும் ?
எத்தனை நாட்களில் முடிக்க வேண்டும் ?
எவ்வளவு உழைப்பு தேவைப்படும் ?
போன்ற விஷயங்களெல்லாம் பணியாளர்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருக வேண்டும். அதில் ஏதேனும் சந்தேகங்கள் இருக்கிறதா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, தெளிவை உருவாக்குவது கொள்வது முதல் நிலை.
அதன் பின் ஒரு குறிப்பிட்ட மைல் கல்லை எட்டியபிறகு பணியாளர்கள் எப்படிப் பணி செய்திருக்கிறார்கள் என்பதைக் குறித்த ஒரு அலசல் மிக முக்கியம். அதிலும் குறிப்பாக, நீண்ட கால புராஜக்ட்களுக்கு இத்தகைய பரிசோதனை மிகவும் தேவை.
கொடுக்கப்பட்டுள்ள பணிகளை முடித்திருக்கிறார்களா ?
எந்த நாளில் அந்த வேலை முடிக்கப்பட்டது ? யார் முடித்தது ? அந்த நாளுக்கும் திட்டமிட்ட நாளுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன ?
இடைப்பட்ட மைல் கற்களை எந்தெந்த தேதிகளில் எட்டினார்கள் ?
ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டார்கள் ?
எவ்வளவு செலவு செய்யப்பட்டது ?
எவ்வளவு உதவிகள் தேவைப்பட்டன ?
வேலை முடிக்கும் வரை அந்த பணியாளர் வேலையையும், அவருடைய அதிகாரிகளையும் எதிர்கொண்ட விதம் எப்படி இருந்தது ?
இப்படிப்பட்ட தகவல்களை கவனமாகச் சேமித்து, அந்த நபருக்குரிய அடுத்த கட்ட பணிகளைக் கொடுக்கலாம். அவருக்கு போனஸ், அங்கீகாரம் போன்றவற்றைக் கொடுப்பது பற்றிய முடிவையும் எடுக்கலாம். இத்தகைய தகவல்கள் ஹிஸ்டாரிக் டேட்டாவாக அடுத்து வருகின்ற புராஜக்ட்களுக்குக் கைகொடுக்கும்.
ஒருவேளை எதிர்பார்த்த அளவுக்கு ஒரு நபர் பணி செய்யவில்லையெனில் அதை சரிபடுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட நேரம் கிடைக்கும். குறிப்பாக ஒவ்வொரு மைல்கல்லுக்கும் இடையே அந்த நபருடைய செயல்பாட்டைக் கவனித்து வந்தால், சரியான ஆலோசனையும், பயிற்சியும் அந்தந்த நேரங்களில் கொடுக்க முடியும்.
பொதுவாக நம்முடைய புராஜக்ட் எவ்வளவு பெரியது என்பதை மனதில் வைத்து இந்த ரிவ்யூ காலத்தை நிர்ணயிக்கலாம். சில வேலைகள் அதிக ரிஸ்க் இல்லாததாய் இருக்கும், அங்கே அடிக்கடி கவனிக்கத் தேவையில்லை. சில இடங்கள் ரிஸ்க் அதிகமானதாக இருக்கும் அந்த இடங்களில் அதிக கவனிப்பை நாம் செலுத்த வேண்டும்.
நமக்கு தெரிஞ்ச டீம் தானே, நமக்குத் தெரிஞ்ச மக்கள் தானே, இதுக்கு முன்னாடியும் இப்படிப்பட்ட புராஜக்ட் செஞ்சிருக்காங்களே, இவங்க கிட்டே போய் மறுபடியும் மறுபடியும் பேசணுமா ? என ஒரு புராஜக்ட் மேனேஜர் நினைக்கவே கூடாது. எப்படி டிராபிக்கை நெறிப்படுத்தவும், கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ஒரு டிராபிக் காவலர் தேவையோ அப்படியே ஒரு புராஜக்டை கட்டுக்குள் வைத்துக் கவனிக்க ஒரு புராஜக்ட் மேனேஜர் ரொம்ப அவசியம். இது அவர்கள் மீதான நம்பிக்கையின்மையின் வெளிப்பாடல்ல, கொடுக்கப்பட்டிருக்கும் பணி சிறப்பாகச் செயல்பட அவசியமான ஒரு அணுகுமுறை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
பணிகளை மேனேஜர் கவனிப்பதும், ஆலோசனை கூறுவதும் குழுவிலுள்ளவர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதாக இருக்கவேண்டுமே தவிர எரிச்சல் மூட்டுவதாய் இருக்கக் கூடாது என்பது பாலபாடம். அதனால் தான் புராஜக்ட் மேனேஜர்களுக்கு “இன்டர் பர்சனல் ஸ்கில்ஸ்” மிக மிக முக்கியம் என்கின்றனர் வல்லுநர்கள்.
ஒரு புராஜக்ட் எப்படி போயிட்டிருக்கு என்பதை அறிந்து கொள்ள நிறைய வழிகள் உண்டு. நிறைய மென்பொருட்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக அவற்றை “மேஜேன்மென்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்” என்பார்கள். நாம் கொடுக்கின்ற தகவல்களைப் பெற்று, நமது இலக்குகளோடு ஒப்பிட்டு, ஒரு ரிப்போர்ட்டை தருவது தான் இத்தகைய மென்பொருட்களின் முதன்மை வேலை. பல நிறுவனங்கள் இத்தகைய மென்பொருட்களை உருவாக்கியிருக்கின்றன. புராஜக்டின் தேவைக்கு ஏற்ப இலவச மென்பொருட்களையோ (ஃப்ரீவேர் ), பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ள வேண்டிய மென்பொருட்களையோ (லைசன்ஸ்ட் வெர்ஷன்ஸ்) பயன்படுத்தலாம்.
புராஜக்ட்டின் முன்னேற்றத்தைக் கணக்கிடுவதற்குப் பல வகைகள் உண்டு. பத்து நாளில் செய்து முடிக்க வேண்டிய வேலை மூன்று நாள் முடிவில், 30% முடிவடைந்தது என சொல்ல முடியாது. தீக்குச்சி அடுக்குவது போன்ற ஒரே மாதிரியான வேலைக்கு மட்டுமே அப்படி கணக்கிட முடியும். மற்ற வேலைகளில் 10 நாள் வேலையில் மூன்று நாள் கடந்திருக்கிறதெனில் 30% முயற்சி ( எஃபர்ட் ) செலவிடப்பட்டிருக்கிறது எனலாம்.
எவ்வளவு முயற்சி செலவிடப்பட்டிருக்கிறது, எவ்வளவு நாட்கள் கடந்திருக்கின்றன என்பதை வைத்தும் புராஜக்ட் எவ்வளவு விழுக்காடு முடிந்திருக்கிறது என்பதை வரையறை செய்ய முடியாது. அதைக் கண்டுபிடிக்கத் தான் ஏற்கனவே நாம் “வர்க் பிரேக்டவுன் ஸ்ட்ரக்சர்” பற்றிப் படித்தோம். அந்த வேலைகளின் பட்டியலில் நாம் பதிவு செய்கின்ற, “என்னென்ன முடிந்திருக்கிறது, என்னென்ன எந்த அளவில் இருக்கிறது” போன்ற தகவலை வைத்தே புராஜக்ட் எத்தனை சதவீதம் முடிந்திருக்கிறது என்பதைச் சொல்ல முடியும்.
ஒவ்வொரு விஷயத்தையும் பதிவு செய்து வைப்பது புராஜக்டின் பயணத்துக்கும், அடுத்தடுத்த புராஜக்ட்களுக்கான திட்டமிடலுக்கும் பயனளிக்கும். ஒவ்வொருவரும் தங்களுடைய வேலைகளைக் குறித்துக் கவனமாய்ப் பதிவு செய்து கொண்டே வருவது, அவர்களுடைய இலக்கை தொடர்ந்து ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும். “அட சரியா தான் போயிட்டிருக்கேன்” என்று நமது பாதையை சரிபார்த்துக் கொள்ளவோ, “இன்னும் ஸ்பீடா போனா தான் வேலை முடியும்” என எச்சரிக்கை அடையவோ, “போற ரூடே தப்பாச்சே” என உஷாராகி ரூட்டை மாற்றவோ இந்த தொடர்ந்த கவனிப்புகள் உதவும்.
இதை எழுதும்போது ஒரு விமான விபத்து நினைவுக்கு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை பலிகொண்ட ஒரு விமான விபத்து அது. அதற்கான காரணத்தை அலசி ஆராய்ந்த போது அவர்கள் கண்டுபிடித்த விஷயம் அதிர்ச்சிகரமானது. ஒரு மெக்கானிக், விமான இறக்கை ஒன்றில் பொருத்த வேண்டிய ஸ்க்ரூவைப் பொருத்தியபோது அதன் “நட்” கழன்று விட்டது. ஆனாலும் ஸ்க்ரூ சரியாக ஸ்ட்ராங்காக இருக்கிறது என அவர் சென்று விட்டார். விமானப் பயணத்தின் போது அந்த ஸ்குரூ கழன்றது தான் அந்த மாபெரும் விபத்துக்குக் காரணம் என கடைசி அறிக்கை சொன்னது. ஒரு சின்ன விஷயம், ஒரு மாறா வரலாற்றுப் பிழையாய் மாறிப் போனது. அந்த சிறு பிழையை அப்போதே சரி செய்திருந்தால் நூற்றுக்கு மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
தொடர்ந்து கவனிக்கும் போது தான் இத்தகைய சிறு சிறு பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்ய முடியும். கப்பலில் விழுந்த ஓட்டையைப் போல சில சின்ன பிரச்சினைகள் கடைசியில் புராஜக்டையே மூழ்கடித்து விடக் கூடும். எனவே இந்த கவனித்தல், சரிபார்த்தல், பதிவு செய்தல் போன்றவை சாதாரணமானவை என விட்டு விடாமல் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
*