புராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….

15

ரீ பேஸ்லைன் என்றால் என்ன

புராஜக்ட் மேனேஜ்மென்டில் அதிகம் கேட்கின்ற வார்த்தை “பேஸ்லைன்” என்பது. அதாவது ஒரு புராஜக்டின் மைல் கற்களைக் குறிப்பிடும் மதிப்பு தான் அது. அது புராஜக்டின் டெலிவரி நாளாக இருக்கலாம், அல்லது ஒரு சோதனையில் கிடைக்க வேண்டுமென தீர்மானித்திருக்கின்ற மதிப்பாகவும் சரி. முதலில் திட்டமிட்டு வைக்கின்ற மதிப்பு தான் பேஸ்லைன் என்பது.

உதாரணமாக, இந்த மாதம் 1000 கார்களை உற்பத்தி செய்யவேண்டும் என திட்டமிட்டிருந்தால் அதை பேஸ்லைன் 1000 என்பார்கள். ஒருவேளை அடுத்த மாதம் 15ம் தியதிக்கு முன்பு ஒரு பொருளைத் தயாரித்து முடிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால் அதை பேஸ்லைன் அடுத்த மாதம் பதினைந்தாம் தியதி என்பார்கள். 

சரி, ரீ பேஸ்லைன் என்றால் என்ன ? மீண்டும் ஒரு முறை அந்த பேஸ்லைன் மதிப்புகளை ஆராய்ந்து, புதிதாக ஒரு மதிப்பை வைப்பது தான் ரீ பேஸ்லைன். அது ஏன் புதிதாக ஒரு எல்லையை வரையறுக்க வேண்டும் ? அது பெரும்பாலும் ஒரு புராஜக்ட் எதிர்பார்த்த திசையில், எதிர்பார்த்த வேகத்தில் போகாமல் இருக்கும்போது மாற்றுவது. 

உதாரணமாக ஆறு மாத காலத்தில் ஒரு வீடு கட்டி முடிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டது என வைத்துக் கொள்ளுங்கள். முதல் மாதத்தில் அஸ்திவாரம், அடுத்த மாதம் கட்டுமானம், அதற்கடுத்தமாதம் காங்கிரீட் என மைல் கற்கள் இருக்கும். ஒருவேளை நான்காம் மாதத்தில் தான் அஸ்திவாரம் முடிந்தது என வைத்துக் கொள்ளுங்கள். ஆறு மாதத்தில் வீடு கட்டி முடிப்பது இயலாத காரியமாகிவிடும். அப்போது சரி, ” வீடு கட்டி முடிக்கும் நாளை, இன்னும் ஒரு நாலு மாசம் தள்ளி வைப்போம்” என்பார்கள். அந்த புதிய நாள் தான் ‘ரீ பேஸ்லைன் டேட்’. ஏன் நாள் தள்ளி வைக்கப்பட்டது என்பதன் காரணத்தையும் கூடவே பதிவு செய்து வைக்க வேண்டும். ஒருவேளை அஸ்திவாரம் போட முடியாதபடி பெரு மழை பெய்து கொண்டிருக்கலாம், அல்லது பணியாளர்கள் கிடைக்காமல் இருந்திருக்கலாம், இப்படி ஏதோ ஒரு காரணம் இருக்கும். இவையெல்லாம் ரீபேஸ்லைனுக்கான காரணங்களாய் பதிவு செய்ய வேண்டும். 

ரீபேஸ்லைன் என்பதை ஒரு புராஜக்ட் மேனேஜர் தான் விரும்பும் நேரத்தில், தனது இஷ்டப்படி செய்ய முடியாது. அதற்கு சில வரைமுறைகள் உண்டு. முதலில் அந்த புராஜக்ட் சம்பந்தப்பட்ட முக்கியமான நபர்களை எல்லாம் அழைத்து, புதிய நாள் என்னவாக இருக்கும் ? ஏன் பழைய நாளை மாற்ற வேண்டிய தேவை வந்தது போன்றவற்றையெல்லாம் விளக்க வேண்டும். அவர்களுடைய ஒப்புதல் மிக முக்கியம். அதே போல, புதிய பேஸ் லைன் உருவாக்கியதும், புராஜக்டிலுள்ள அத்தனை நபர்களுக்கும் அதைத் தெரியப்படுத்தவும் வேண்டும். 

பழைய பேஸ்லைன், அதன் திட்டங்கள் அதில் செய்த மாற்றங்கள் போன்ற அனைத்தையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். புராஜக்ட் முடியும் போது அது கடந்து வந்த வரலாற்றைப் பதிவு செய்து வைக்க வேண்டியதும், அதிலிருந்து பாடம் கற்க வேண்டியதும் அவசியம். குறிப்பாக ‘ரெட்ரோஸ்பெக்டிவ்” எனப்படும் புராஜக்ட்டுக்குப் பிந்தைய அலசலுக்கு இந்த தகவல்களெல்லாம் மிக முக்கியம். 

ஒரு திட்டம் இடப்பட்டால் அது மாற்றத்துக்கு உட்படாது என சொல்ல முடியாது. ஒரு பொருளைச் சந்தைப்படுத்த தாமதம் ஏற்பட்டால் ரீ பேஸ்லைன் தேவைப்படும். கஸ்டமருடைய தேவை மாறலாம். ‘இனிமே இப்படி வேண்டாம், அப்படி பண்ணு’ என கஸ்டமர் புதிய தேவையை வெளிப்படுத்தலாம். சட்டென ஒரு புதிய தொழில்நுட்பம் வந்து பழைய திட்டத்தை அழிக்கலாம். அப்படிப்பட்ட சூழல்களிலெல்லாம் பேஸ்லைன் நாட்களை மாற்றி புதிய ரீ..பேஸ்லைன் செய்ய வேண்டிய தேவை வரும். 

ஒரு புராஜக்டில் ரீபேஸ்லைன் செய்ய வேண்டிய தேவை வருவது புராஜக்ட் சரியாகச் செல்லவில்லை என்பதன் அடையாளம். சில வேளைகளில் சூழலுக்கு ஏற்ப புராஜக்டில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் புராஜக்டை ரீபேஸ்லைன் செய்ய வைக்கும். எனவே எந்த புதிய வேலை வந்தாலும் உடனே சட்டென ஒத்துக் கொள்ளக் கூடாது, அதை அலசி ஆராய வேண்டும். 

1. புராஜக்டில் ஒரு மாற்றம் செய்ய வேண்டியிருந்தால், ‘அது என்ன மாற்றம்’ என்பதை முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த மாற்றம் குறித்த தெளிவான ஒப்புதல் எல்லோரிடமிருந்தும் பெறப்பட வேண்டும். அந்த மாற்றத்தைச் செய்ய வேண்டுமா, வேண்டாமா எனும் முடிவை எடுக்க வேண்டும். அப்படி முடிவை எடுக்கும் போது சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம். 

2. அந்த புதிய விஷயம் புராஜட்டில் கொண்டு வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதை இம்பேக்ட் அனாலிசிஸ் என்பார்கள். ஒருவேளை அந்த மாற்றத்தை செய்ய வேண்டாமென முடிவெடுத்தால், என்ன பாதிப்புகள் புராஜக்டுக்கு உருவாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு புராஜக்ட் மேனேஜரின் தேவை இந்த இடத்தில் மிக முக்கியம். 

3. அந்த மாற்றத்தை எப்படிச் செயல்படுத்தப் போகிறோம் என்பதை மிகத் தெளிவாக இம்ப்ளிமென்டேஷன் பிளான் என எழுதி வைக்க வேண்டும். அந்த மாற்றம் கொண்டு வரக் கூடிய ஷெட்யூல் மாற்றம்,  பட்ஜெட் மாற்றம் போன்ற அனைத்தையும் குறித்து வைக்க வேண்டும். அதை புராஜக்டோடு சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்கவும் வேண்டும்.  

மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால் “எப்படின்னாலும் மாற்றம் வரும்” எனும் சிந்தனையில் ஒரு திட்டத்தை உருவாக்கவே கூடாது. “இப்போதைக்கு இப்படியே போகட்டும், கடைசில எப்படியும் மாற்றம் வரும் அப்போ பாத்துக்கலாம்” எனும் அடிப்படையில் உருவாக்கப்படும் திட்டவரைவுகள் சிறப்பானவை அல்ல. ஒரு புராஜக்ட் மேனேஜரின் தோல்வி அது என சொல்லலாம். மாறாக, ஒரு திட்டத்தை உருவாக்கும் போது அதில் பிற்காலத்தில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை எனுமளவுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் மிக நுணுக்கமாகக் கவனித்துச் செய்ய வேண்டும். 

சிறந்த ஹாலிவுட் இயக்குனர்கள் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு முன் அந்தப் படத்தின் கதையை முழுமையாக எழுதுவார்கள். அதன்பின் அந்தப் படத்தின் காட்சிகளை கண்முண் கொண்டுவரும் விதத்தில் ஒவ்வொரு காட்சியையும் கார்ட்டூனாக வரைவார்கள். அதற்கே பல ஆண்டுகள் ஆவதுண்டு. அந்த கார்ட்டூன் படத்தில் எங்கிருந்து வெளிச்சம் வரவேண்டும், என்னென்ன பொருட்கள் காட்சியில் இருக்கவேண்டும், நடிகர்கள் எந்த இடத்தில் இருக்கவேண்டும் என அத்தனை விஷயங்களையும் வரைவார்கள். அதன்பின் அவர்கள் படப்பிடிப்புக்குச் செல்லும்போது அந்த கார்ட்டூன் படத்தில் உள்ளதை நிஜத்தில் எடுக்க வேண்டும் அவ்வளவு தான். 

இந்த முறையில் படப்பிடிப்பு காலத்தில் கதையையோ, காட்சிகளையோ யோசித்து குழம்ப வேண்டிய தேவையில்லை. கடைசி கட்ட மாறுதல்கள் பணத்தையும், நேரத்தையும் வீணாக்குவதையும் தடுக்கலாம். அதை விட்டு விட்டு, ஒரு காட்சியை மேலோட்டமாக மனதில் நினைத்துவிட்டு செட்ல போய் பாத்துக்கலாம், என நினைத்தால் அது பல மாற்றங்களைக் கொண்டு வந்து, கடைசியில் புராஜக்டே தோல்வியில் முடியவும் வாய்ப்பு உண்டு. எனவே திட்டமிடலும், அதை மிக நேர்த்தியாக முதலிலேயே அலசி ஆராய்வதும் மிக மிக முக்கிய அம்சங்கள்

ஒரு திட்டத்தை உருவாக்கியபின்பு புராஜக்ட் செய்து கொண்டிருக்கும் காலத்தில் புதிது புதிதாக மாற்றங்கள் வருவது, முதலில் போட்ட திட்டத்தை வலுவிழக்கச் செய்யும். ஒரு புராஜக்டில் என்னென்ன இருக்க வேண்டும் எனும் பட்டியலை “ஸ்கோப்” என்பார்கள். அந்த ஸ்கோப்பின் அடிப்படையில் தான் திட்டங்கள் அமையும். அதில் வருகின்ற மாற்றங்களை, “ஸ்கோப் கிரீப்” என்பார்கள். முதலில் சொன்ன விஷயங்கள் இல்லாமல் மீண்டும் சிலவற்றைச் சேர்ப்பது தான் அது. 

ஒரு கதையைச் சொல்லி படம் எடுக்க ஆரம்பித்த பிறகு, தயாரிப்பாளர் கடைசியில் வந்து, “இந்த இடத்துல ஒரு பாட்டு போட்டுருப்பா” என சொன்னால் அது ஸ்கோப் கிரீப். காரணம், அந்த படத்துக்கான ஷெட்யூல், செலவு, கால அளவு, எதிலும் அது சேர்க்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் இப்போது அது தேவையாகிறது. இப்போது ஸ்கோப் & ஸ்கோப் கிரீப் பற்றி உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். அதைப் பற்றி இங்கே சொல்லக் காரணம், “எந்த ஒரு ஸ்கோப் கிரீப்பும், பேஸ்லைனை ஆட்டம் காண வைத்து, ரீ பேஸ்லைன் செய்ய வைக்கும்” என்பது தான். ஒரு புதிய மாறுதல் வந்தும், பிளானில் எந்த மாற்றமும் வராத சூழல் மிகவும் அபூர்வம். 

*

சேவியர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.