புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்

16. கம்யூனிகேஷன்

சைனீஸ் விஸ்பர் என்றொரு விளையாட்டு கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? பத்து பதினைந்து பேர் ஒரு வரிசையில் நிற்பார்கள். அல்லது ஒரு பெரிய வட்டமாக நிற்பார்கள். முதலில் நிற்பவரிடம் ஒரு துண்டுச் சீட்டு கொடுக்கப்படும். அதில் எழுதப்பட்டுள்ள வாக்கியத்தை அவர் வாசிக்க வேண்டும். பின்னர் துண்டைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இப்போது வாசித்த நபர், தான் வாசித்த விஷயத்தை தனக்கு அருகில் நிற்பவருடைய காதில் மிக ரகசியமாகச் சொல்ல வேண்டும். வேறு யாருக்கும் கேட்கக் கூடாது.

அந்த நபர் அந்த செய்தியை அவருக்கு அடுத்திருக்கும் நபருக்குச் சொல்ல வேண்டும். அதைக் கேட்ட அந்த நபர் அடுத்த நபருக்குச் சொல்ல வேண்டும். இப்படி அந்த செய்தி ஒவ்வொரு காதாகத் தாண்டி, கடைசியாய் நிற்கும் நபரிடம் சென்று சேரும். அப்படி சென்று சேர்ந்த செய்தி என்ன என்பதை அவர் கடைசியில் உரக்கச் சொல்ல வேண்டும். இப்போது எழுதப்பட்டிருக்கும் வாசகம் என்ன என்பதை வாசித்துக் காட்டுவார்கள். 

சின்ன விளையாட்டு தானே என தோன்றும். ஆனால், இந்த விளையாட்டின் முடிவு மிகவும் வியப்பானதாக இருக்கும். முதலில் பேப்பரில் எழுதப்பட்டிருந்த‌ செய்திக்கும், கடைசியில் சென்று சேரும் செய்திக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் உண்டாகியிருக்கும். கம்யூனிகேஷனின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் போது இந்தக் கதையை உதாரணமாகச் சொல்வார்கள். 

ஒரு புராஜக்ட் மேனேஜரிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணாதியம் கம்யூனிகேஷன். சரியான நேரத்தில், சரியான செய்தியை, சரியான குழுவுக்குப் பகிர்வது இந்த‌ கம்யூனிகேஷனின் அடிப்படை. “ஓவர் கம்யூனிகேஷன் ஈஸ் பெட்டர் தேன் நோ கம்யூனிகேஷன்” என ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. அதாவது, “தகவல்களைப் பகிராமல் இருப்பதை விட, அளவுக்கு அதிகமாகவே தகவல்களைப் பகிர்வது நல்லது” என்பது தான் அது.

புராஜக்ட் என்றல்ல‌. எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் சரியான கம்யூனிகேஷன் தான் வெற்றிகளைக் கொண்டு வரும். வாழ்க்கையானாலும் சரி, உறவுகளானாலும் சரி, புராஜக்ட் ஆனாலும் சரி வெளிப்படையான நேர்மையான சரியான தகவல் பரிமாற்றங்களே வெற்றிக்கு அடிப்படை. 

புராஜக்டில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், அவர்களை வழிநடத்துபவர்கள், ஏதோ ஒரு வகையில் புராஜக்டோடு  தொடர்புடையவர்கள் அனைவரும் புராஜக்ட் எந்த நிலமையில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவும். “எனக்கு இது தெரியாதே !” என கடைசி நிமிட கலாட்டாக்கள் உருவாகாமல் இருக்கவும் இந்த கம்யூனிகேஷன் ரொம்ப முக்கியம்.

ஏதாவது ஒரு பிரச்சினை எழுந்தால் அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள இந்த நிலையான தகவல் தொடர்பு பயன்படும். பல வேளைகளில் பிரச்சினைகள் உருவாகாமல் இந்த கம்யூனிகேஷன் நம்மைக் காப்பாற்றவும் செய்யும். “என்கிட்டே சொல்லியிருந்தா, இந்த பிரச்சினையை ஈசியா முடிச்சிருப்பேன்” என சொல்வதைக் கேட்டிருப்பீர்கள் இல்லையா ? அந்த சிக்கல்கள் வராமல் இது காப்பாற்றும்.

புராஜக்ட் எந்த எல்லையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது எனும் தெளிவான ரூட் அனைவருக்கும் தெரிய வரும். கொஞ்சம் பாதை மாறினால் கூட, ” இது சரியில்லை, இதை இப்படி பண்ணணும்” என ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள தொடர்ந்த‌ கம்யூனிகேஷன் வழி வகை செய்யும். 

புராஜக்ட் ஒவ்வொரு மைல் கல்லை அடையும் போதும், உற்சாகமடையவும், ஊக்கமடையவும் இத்தகைய தொடர்பு பயனளிக்கும். “பரவாயில்லை, இவ்ளோ வந்துட்டோம் எனும் ஒரு தன்னம்பிக்கையை இது உருவாக்கும் “

புராஜக்ட்சில் உள்ளவர்களும், அதோடு தொடர்புடையவர்களும் ஒரு நல்ல புரிதலோடு செயலாற்ற இந்த தொடர்பாடல் உதவும். 

கம்யூனிகேஷன் ஒரு சின்ன மேட்டர் என பலரும் நினைப்பதுண்டு. எப்படி ஒரு மாட்டு வண்டிக்கு ஒரு சிறிய அச்சாணி முக்கியமானதாக இருக்கிறதோ அதே போல தான் இந்த கம்யூனிகேஷனும். இதை உதாசீனப்படுத்தினால் நிச்சயம் பல எதிர்பாராத சவால்கள் புராஜக்ட்டில் வந்து விழும் என்பதில் சந்தேகமில்லை. 

கம்யூனிகேஷனை மிகச் சரியாகச் செயல்படுத்தும் நிறுவனங்களும், புராஜக்ட்களும் வெற்றிகளைக் குவிக்கும். நாம் சொல்ல வருகின்ற செய்தி சிதையாமல், பெற்றுக் கொள்ளும் நபரை அடைய வேண்டும் என்பதே கம்யூனிகேஷனின் அடிப்படைத் தத்துவம். 

இதில் ஐந்து முக்கியமான அம்சங்கள் உண்டு.

1. சொல்ல வேண்டிய செய்தி என்ன ?

2. அதைச் சொல்லப் போகிறவர் யார்

3. யாருக்காக அதைச் சொல்லப் போகிறார் ? 

4. எப்படி அதை சொல்லப் போகிறார் ? எழுத்து, குரல், ஓவியம், செய்கை இப்படி ஏதோ ஒன்று. 

5. எதன் வழியாக ( மீடியம் ) அதைச் சொல்லப் போகிறார் ? 

எந்த ஒரு தகவல் பரிமாற்றத்தின் போதும் இந்த அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும். இதன் மாறுதல்களுக்கு ஏற்ப கம்யூனிகேஷனில் மாற்றம் இருக்கும்.

இந்த தகவல் பரிமாற்றத்தில் இரண்டு வகை உண்டு. 

1. ஒரு வழிச் செய்திப் பரிமாற்றம். ஒன்வே கம்யூனிகேஷன். இதில் ஒரு நபர் ஒரு செய்தியைச் சொல்வார். அடுத்த நபர் அதைக் கேட்டு புரிந்து கொள்வார் அவ்வளவு தான். உதாரணமாக கம்பெனியின் தலைவர் ஊழியர்களுக்கு ஒரு சுற்று மடல் அனுப்புகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அது ஒரு வழிச் செய்தி. அதில் நாம் எதையும் திரும்ப சொல்ல தேவையில்லை. அல்லது ஒரு இணைய தளத்திலிருந்து ஒரு தகவலை தரவிறக்கம் செய்கிறீர்கள். அது ஒன்வே கம்யூனிகேஷன்.

2. இரு வழிப் பாதை. இது ஒருவர் பேசுவதை இன்னொருவர் கேட்பதும். அதற்கு அவர் பதில் சொல்வதுமாக இருக்கும். நேரடியாகப் பேசும் உரையாடல்கள், தொலைபேசி மூலம் பேசும் உரையாடல்கள் போன்றவையெல்லாம் இரு வழிப் பாதையின் உதாரணங்கள். குரல் மூலமாகவோ, உடல் மொழியின் மூலமாகவோ நாம் இங்கெல்லாம் தகவலைப் பரிமாற்றம் செய்ய முடியும். இருவழிக் கம்யூனிகேஷன் தான் மிக முக்கியமானதும், வலிமையானதும் என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை. 

கம்யூனிகேஷன் என்றதும் பேசுவது என்று தான் நாம் எல்லோரும் நினைக்கிறோம். பேசுவதைப் போலவே மிக முக்கியமான அம்சம் “கவனித்தல்/கேட்டல்” என்பதாகும். பேசுவதும், கேட்பதும், புரிந்து கொள்வதும் இணையும் போது தான் ஒரு தகவல் பரிமாற்றம் நேர்த்தியாகத் தன் பணியைச் செய்து முடித்தது என சொல்ல முடியும். 

சொல்வதை அப்படியே புரிந்து கொள்ளும் வகையில் கேட்பதை, “ஆக்டிவ் லிசனிங்” என்பார்கள். “நான் என்ன சொன்னேன், நீ என்ன செஞ்சிருக்கே” போன்றவையெல்லாம் தகவல் பரிமாற்றத் தோல்வியின் வாசகங்கள். 

மனித மூளை எல்லா செய்திகளையும் காட்சிகளாகச் சேமிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். நாம் வார்த்தைகளாய்ச் சொல்லும் விஷயங்கள் கூட படங்களாக இருந்தால் மிக எளிதாக மூளையில் பற்றிக் கொள்ளும். அதனால் தான் கம்யூனிகேஷனில் காட்சிப் படுத்துதலை முக்கியமான ஒரு அம்சமாகச் சொல்வார்கள். சொல்லப்படுகின்ற வார்த்தையை ஒரு காட்சி போலவோ, ஒரு ஓவியம் போலவோ மனதில் தீட்டிக் கொள்வது இதில் ஒரு வகை.

பெற்றுக் கொண்ட செய்தியை மீண்டும் ஒரு முறை சொல்லி ஊர்ஜிதப்படுத்திக் கொள்வது தகவல் பரிமாற்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வழிமுறை. வடிவேலு நகைச்சுவை ஒன்று உண்டு. பத்து நிமிடம் பக்குவமாய் எப்படிப்பட்ட தோசை வேண்டுமென வடிவேலு விளக்குவார். சர்வரோ கடைசியில், “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” என முடிப்பார். வடிவேலு அதிர்ச்சியுடன் பார்ப்பார். சொல்ல வேண்டிய செய்தியைத் தெளிவாகச் சொல்லியாச்சு, ஆனால் கேட்க வேண்டியவர் உள்வாங்கிக் கொள்ளவில்லை. இது கம்யூனிகேஷன் தோல்வியே.

ஒரு செய்தியைப் பெற்றுக் கொள்ளும் போது, சந்தேகங்களையும், அனுமானங்களையும் தெளிவுபடுத்திக் கொள்வது மிகவும் அவசியம். அது தான் செய்தியின் முழுமைக்கு உதவும். 

இந்த தகவல் தொடர்பிலும் “முறையான தகவல் தொடர்பு”, “முறைகளைப் பின்பற்றாத தகவல் தொடர்பு” என இரண்டு வகையைச் சொல்லலாம். ஃபார்மல் அன்ட் இன்ஃபார்மல் கம்யூனிகேஷன். “அஸ் ஐ ஏம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்” என நாம் சின்ன வயதில் எழுதுகின்ற லீவ் லெட்டர்களை முறையான தகவல் தொடர்பின் உதாரணமய்க் கொள்ளலாம். அது ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புக்குள் இருக்கும். அதன் வடிவம் மாறாது. 

மற்றது வெகு இயல்பாக நடக்கும் தகவல் பரிமாற்றம். கடிதம் எழுதிக் கொடுத்த அதே ஆசிரியரை கடை வீதியில் சந்தித்தால், “நல்லாயிருக்கீங்களா சார்” என அழைத்து நாம் நிகழ்த்தும் குட்டி உரையாடல் இந்த வகையில் வரும். அலுவலகத்திலும் முறையான மின்னஞ்சல், கடிதப் பரிமாற்றமாக இல்லாமல் சாதாரணமாக நிகழும் உரையாடல்கள் இந்த வகையில் வரும்.

கம்யூனிகேஷனைப் பற்றி இன்னும் சற்று விரிவாக அடுத்த வாரம் பார்ப்போம்

*

சேவியர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.