மாணவர்களின் கவனத்துக்கு…

ஏட்டுக்கல்வியை
மாற்றும் காலம்

*

கோவை மாணவி ஒருத்தி மன உளைச்சலின் உச்சத்தில் போய் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு இன்னும் இதயத்தை பாரமாகவும், விழிகளை ஈரமாகவும் வைத்திருக்கிறது. வாழ்க்கையை அதன் வசீகர வீதிகளில் சந்திக்க வேண்டிய ஒரு பதின் வயதுப் பெண், ஒரு துயரத்தின் இருட்டறைக்குள் மறைந்து போனதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது.

தற்கொலை தீர்வு அல்ல ! என்பதை நாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தாலும், தீர்வுகளே இல்லை என மக்கள் நினைக்கும் போது தற்கொலையைச் சார்ந்து விடுகிறார்கள் எனும் துயரம் மனதை உடைக்கிறது. பெண்களற்ற உலகத்திலிருந்து யாரும் பிறக்கவில்லை. பெண்களற்ற உலகில் யாரும் வாழவில்லை. எனில், பெண்கள் மட்டும் ஏன் இத்தகைய கடும் சிக்கல்களைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள் ?

“ஒரு பெண் நள்ளிரவில் சாலையில் தனியாய் அச்சமின்றி நடந்து போகவேண்டும்” என ஆசைப்பட்ட தேசத் தந்தையின் கனவு, இன்றைக்கு, ஒரு மாணவி அச்சமின்றி வகுப்பறையைக் கடந்து வரவேண்டும் என மாறியிருப்பது பலவீனத்தின் உச்சமன்றி எதுவுமில்லை. மாதா, பிதா, குரு, தெய்வம் என கருத்தூட்டி வளர்க்கப்பட்ட சமூகத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பதை என்னென்பது ?

ஒரு வலிமையான சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில் பாலின சமத்துவம் மிக முக்கியமானது. அதே போல மாணவர் சமூகத்திற்கு நல்ல வலிமையான மனநிலை இருக்க வேண்டியதும் அவசியமானது.

பெண்களை வீடுகளில் எப்படி மதிக்கிறோம், எப்படி நடத்துகிறோம் என்பதை வைத்தே நமது சமூக அணுகுமுறைகளும் இருக்கும். சிறு வயதிலிருந்தே பெண்களை கீழாக நினைப்பதும், அவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பதும், அவர்களது சிந்தனைகளை கேலி செய்வதும், அவர்களது பங்களிப்புகளைப் புறக்கணிப்பதும் என பெண்களுக்கு எதிராகவே இருந்தால், அந்த குடும்ப சூழலில் இருந்து வருகின்ற ஆண்கள் சமூகத்தில் பெண்களையும் அப்படியே பாவிப்பார்கள். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது கிழமொழி அல்ல, வாழ்வின் மொழி.

ஒரு சமூகம் நல்ல முறையில் கட்டியெழுப்பப்பட வேண்டுமெனில் ஒவ்வொரு குடும்பமும் பெண்களை கண்ணியமாகவும், அன்பாகவும், மரியாதையுடனும், தன்னம்பிக்கையுடனும் வளர்த்த வேண்டும். எந்த விதமான வேறுபாடுகளும் காட்டக் கூடாது. நமது மத, ஆன்மிக, தத்துவ சித்தாந்தங்கள் அவற்றுக்கு தடையாய் இருக்குமெனில் அதை உதறவும் தயங்கக் கூடாது. எப்படி ஒரு தாயை நேசிக்கிறோமோ, அப்படியே எந்த ஒரு பெண்ணையும் நேசிக்கப் பழக வேண்டும். அதற்கு முதல் தேவை சிறு வயதிலிருந்தே பெண்களை மதிக்கக் குடும்பங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான எந்த ஒரு சிறு தவறும் மாபெரும் பிழை எனும் உணர்வை சிறு வயதிலிருந்தே ஒவ்வொருவரும் உணர வேண்டும். அத்தகைய பயிற்சியையும், கல்வியையும் நாம் உருவாக்க வேண்டும். பெண்கள் இளக்காரமானவர்கள், வலிமையற்றவர்கள் எனும் சிந்தனை எங்கே வருகிறதோ அங்கே தான் சிக்கல்கள் பெருமளவில் உருவாகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஆதரிப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என சட்டம் சொல்ல வேண்டும். அவர்கள் தான் குற்றம் செய்யத் தூண்டுபவர்கள். குற்றவாளிகளுக்குக் கவசமாய் இருப்பவர்கள். அத்தகைய புல்லுருவிகளை முழுமையாய் அகற்ற வேண்டும்.

இன்றைக்கு கணினி நிறுவனங்கள் POSH போன்ற Sexual harassment Training விழிப்புணர்வு பயிற்சிகளை கட்டாயமாக்கியிருக்கின்றன. பெண்களுக்கு எதிரான சிறு குற்றமும் மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கும் எனும் அச்சத்தை ஊழியர்களிடம் எழுப்பியிருக்கின்றன. அலுவல் நேரமானாலும் சரி, மற்ற நேரங்களானாலும் சரி பெண்களை தவறாய் நடத்துவதோ, பேசுவதோ, தொடுவதோ, கிண்டல் செய்வதோ எல்லாமே விசாரணை வளையத்துக்குள் வருகிறது. இது அலுவலகங்களில் புரையோடிப் போயிருந்த அழுக்கை பெருமளவு அகற்றியிருக்கிறது.

இத்தகைய கட்டமைப்புகள் பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளை வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச தைரியத்தைக் கொடுக்கின்றன. அவர்களுக்கான முழுமையான பாதுகாப்பை நிறுவனங்கள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. தவறு செய்யும் ஊழியர்கள் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் நீக்கப்படுகின்றனர். இத்தகைய கடுமையான அமைப்புகள் நிச்சயம் கல்வி நிலையங்களில் இருக்க வேண்டும்.

மாணவிகளோ, மாணவர்களோ தங்களுடைய பிரச்சினைகளின் ஒரு வரியைச் சொன்னாலே அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, தேவையான உதவிகளைச் செய்கின்ற அமைப்புகள் நிச்சயம் வேண்டும். மாணவர்களுக்கு ஒரு நல்ல மனமகிழ்ச்சியான கல்விச் சூழலை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மாணவர்களை மிரட்டுவதோ, அவர்களைப் பற்றி பிறரிடம் சொல்வதோ, அதைப் பேசு பொருளாக்குவதோ தவிர்க்கப்பட்டே ஆக வேண்டும்.

முக்கியமாக, இன்றைய மாணவ சமூகம் சிலவற்றை மனதில் கொள்ள வேண்டும்.

  1. உங்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற எந்த ஒரு வன்முறைக்கும் வெட்கப்பட வேண்டியது நீங்களல்ல. அவமானப்பட வேண்டியது நீங்களல்ல. தோற்று செத்துப் போக வேண்டியது நீங்களல்ல. நீங்கள் துணிச்சலின் வாரிசுகள். நிமிர்ந்து நிற்க வேண்டியவர்கள். நீங்கள் நிமிர்ந்தால் தவறிழைக்கும் கோழைகள் தலைகுறுகிப் போவார்கள். எனவே தற்கொலை எனும் முடிவை எடுக்கவே எடுக்காதீர்கள், அது உங்களை குற்றவாளி என நீங்களே முடிவுகட்டுவதைப் போன்றது.
  2. ஒருவேளை நீங்களே தவறிழைத்திருந்தால் கூட அச்சமில்லை. உங்களுக்கான பாதுகாப்பை சட்டம் வழங்குகிறது. பிறருடைய மிரட்டலுக்கோ, எச்சரிக்கைக்கோ நீங்கள் செவிசாய்க்க வேண்டிய தேவை இல்லை. வீழ்தல் மனித இயல்பு, எழுதலே மனித மாண்பு. சமூக வலைத்தளங்களோ, ஊடகங்களோ உங்களை அவமானப்படுத்தி விட முடியாது. அத்தகைய மிரட்டல் விடுப்பவர்களை முழுமையாய் உதாசீனம் செய்யுங்கள்.
  3. ஆசிரியர் என்பவர் கடவுள் அல்ல ! என்ன செய்தாலும் ஆசிரியருக்கு அடிபணிந்திருக்க வேண்டும் எனும் முட்டாள் தனமான சிந்தனையை துடைத்தெறியுங்கள். தவறு செய்பவர் ஆசிரியரோ, தலைமை ஆசிரியரோ யாராய் இருந்தாலும் நேருக்கு நேர் குரல் கொடுக்கும் துணிச்சலை வளர்த்துக் கொள்ளுங்கள்.
  4. நல்ல நண்பர் படையைக் கொண்டிருங்கள். நல்ல பாசிடிவான சிந்தனைகளை விதைக்கின்ற நண்பர்கள் மிக மிக முக்கியம். உங்களை அவமானப்படுத்த ஒருவர் இருந்தால் உங்களை பெருமைப்படுத்த பலர் இருக்கிறார்கள் எனும் நம்பிக்கை உங்களுக்குள் முழுமையாய் இருக்கட்டும்.
  5. பெற்றோரை முழுமையாய் நம்புங்கள். அவர்களே உங்களுக்கான வாழ்க்கையை உருவாக்குபவர்கள். அவர்களே உங்களின் வாழ்க்கை மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள். எந்த பிரச்சினை என்றாலும் முதலில் அவர்களிடம் சொல்லுங்கள். எதையுமே மறைக்காதீர்கள், உங்கள் தவறுகள் உட்பட. பெற்றோரின் கோபம் சிற்பியைப் போன்றது, உங்களை வனைய வேண்டும் எனும் ஆதங்கத்தின் வெளிப்பாடு. அந்த கோபத்தைத் தாண்டி உங்களுக்காய் உயிரைக் கொடுப்பது அவர்கள் மட்டும் தான் என்பதைக் கல்வெட்டாய் மனதில் எழுதுங்கள்.
  6. பிறருடைய விமர்சனங்களைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள். அடுத்தவன் சொல்வதல்ல நாம் ! அடுத்தவனின் விருப்பத்துக்கு வாழ்வதற்கல்ல நமது வாழ்க்கை. இது எனது வாழ்க்கை. இதை நான் வாழ்வேன். இதை அழித்துக் கொள்ள மாட்டேன். எவன் என்ன சொன்னாலும் நான் நானாய் வாழ்வேன் எனும் உறுதியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
  7. எனது உடலுக்கான உரிமை எனக்கு மட்டுமே உண்டு ! அதை தொடவோ, கிண்டல் செய்யவோ, தவறாய் சித்தரிக்கவோ எவனுக்கும் உரிமையில்லை எனும் உத்வேகத்தை மனதில் எழுதுங்கள். உங்களை விட வலிமையானவர் உலகில் இல்லை என்னும் உண்மையை உணருங்கள்.
  8. பிடிக்காத சூழலையோ, பிடிக்காத உறவுகளையோ, பிடிக்காத நட்புகளையோ வெட்டி எறிய தயவு தாட்சண்யம் பார்க்காதீர்கள். உங்கள் வாழ்க்கைக்குள் வந்து அரசாட்சி செய்ய யாருக்கும் உரிமையில்லை. உங்களுடைய வாழ்க்கையில் களைகளைக் களைவதில் பயப்படவே வேண்டாம்
  9. இந்த உலகில் எல்லாமே கடந்து போகும். எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். எல்லாம் சில நாட்கள் பேசுபொருட்களே. அனைத்தையும் மன உறுதியுடன் கடந்து செல்ல துணிச்சலை வளர்த்துக் கொள்ளுங்கள். இதே நிலை அடுத்த ஆண்டு இருக்கவே இருக்காது, உங்கள் வாழ்க்கையை தொலைநோக்குப் பார்வையில் பாசிடிவ் ஆக பாருங்கள்.
  10. மனதை மடை மாற்ற ஒரு சிறந்த, உங்களுக்குப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். தேவையான வேளைகளில் டிஜிடல் உலகை விட்டு தள்ளியே இருங்கள். சமூக ஊடகங்களும், வலைத்தளங்களும் மாயையை உருவாக்குகின்றன. உண்மையான உலகம் டிஜிடல் வெளிக்கு வெளியே விரிந்து கிடக்கிறது.

மாணவ மாணவியரே,
நீங்களே இந்த பூமியின் நம்பிக்கை விளக்குகள்.
இருட்டைப் போர்த்தாதீர்கள். வெளிச்சத்தை வினியோகியுங்கள்.
நீங்கள் ஒளிர்ந்தால், கோழைகள் ஓடி ஒளிவார்கள்.

*

சேவியர்

வெற்றிமணி – ஜெர்மனி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.