கல்லறை ரோஜா

flower.jpg
நானும் ரோஜாதான்.

கிழக்கு சிவக்கும் காலை முதல்
மேற்கு மஞ்சளாகும் மாலை வரை
கண்விழித்துக் காத்திருக்கிறேன்
கிள்ளிச் செல்ல
எந்தத் தளிர்விரலும் வருவதில்லை.

வீட்டுத் தோட்டத்தின் வரவேற்புப் பக்கத்தில்
பூ ஓவியம் வரைந்து
பழகிப் போன பரம்பரை எனது.
எந்தப் பாவியோ என்னை மட்டும்
இந்த
கல்லறைத் தோட்டத்தின் கரையில்
நட்டுவிட்டான்.

காத்துக் கருப்பு அண்டுமென்று
கன்னிப் பெண்கள் இப்பாதையில்
கால் கூட வைப்பதில்லை
பாவம்
இந்த பூமிக்கு பாதப் பொட்டு கூட இல்லை.

என்னைச் சுற்றி இருப்பதெல்லாம்
சுவாசம் விட்டுப் போன கல்லறை மனிதர்கள்
அவர்களை
வாசம் எப்படி வசப்படுத்தும் ?

அவ்வப் போது எட்டிப்பார்க்கும்
உறவினர் கூட
உருகும் மெழுகோ, ஊதுபத்தியோ தான்
விட்டுப் போகிறார்கள்
என்னைப் போல அனாதையாய்.

இந்தத் தோட்டத்தில் கூட
இடப்பிரசினை எழுவதுண்டு.

கடமை போல வந்து தான் பலரும்
இந்த
கருங்கல் சமாதிகளின் மேல் கொஞ்சம்
கண்ணீர் விடுகிறார்கள்.

வசதிகளின் அடிப்படையில் தான்
இங்கும்
தோற்றம், மறைவு ,பெயர் பலகைகள்
கருங்கல், கிரானைட் என்று தரம் மாறுகின்றன.

வீட்டுக்குத் தெரியாமல்
பீடி குடிக்கும் விடலைப் பையன்கள்.

இருக்கை இல்லாமல் வருந்தும்
கும்மிருட்டுக் குடுகுடுப்பைக் காரன்.

மனலை பாதிக்கப் பட்ட
ஒரு கிழவி .

பச்சிலை தேடிவரும்
பரசுராம வைத்தியர்.

இவர்கள் மட்டும் தான்
இந்த தோட்டத்தின் விருந்தினர்கள்.

இவர்களுக்கு
ரோஜாப் பூவின்
ரகசிய சுகமெங்கே புரியப்போகிறது.

ஒரு கல் தொலைவில் செல்லும்
அந்த ஒற்றையடிப்பாதையில்
புத்தகத்தை இறுகத் தழுவி
மூச்சுக்காற்றால் முத்தம் கொடுக்கும்
கல்லூரிப் பெண்கள் சிலர் கடந்து போவார்கள்.

வாருங்கள்
பறித்துக் செல்லுங்கள்.
உங்கள் தங்கக் கூந்தலுக்கு
ஓர்
அழகுப் பொட்டாக என்னைச்
சொருகிக் கொள்ளுங்கள்.
எனும்
என் கதறல் ஒலியைக் கேட்காமலேயே.