பெண்ணில்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்ப்பதே கடினமான ஒன்று ! அது ஒரு வறண்ட பாலையைப் போலவோ, நிழலில்லாத வெயில் சாலையைப் போலவோ மனதுக்குள் அனலாய் படரும்.
பெண்களின் உலகம் அழகானது ! அது உணர்வுகளால் பின்னப்பட்டது. ஆண்களின் உலகம் உழைப்பினாய் ஆனது ! பெண்களின் உலகம் உறவுகளால் ஆனது ! பெண்கள் வசிக்கும் வீடுகள் பூந்தோட்டங்களாகவும், ஆண்கள் மட்டுமே உலவும் வீடுகள் உழவு நிலங்களாகவும் காட்சியளிக்கும்.
எந்த ஒரு ஆணும் முழுமையடைய வேண்டுமெனில் அவன் மூன்று பெண்களின் அரவணைப்பில் வளரவேண்டும். அதில் முதலாவதாக வருபவர் அன்னை ! ஒவ்வோர் மனிதனுக்கும் முதல் காதல் அன்னையோடு தான். கடவுளின் அன்பை, இயற்கையின் அழகை, நேசத்தின் செயலை அவன் அறிமுகம் கொள்வது அன்னையிடம் தான் !
விழியும் விழியும் நேசம் பரிமாறும் அழகை நீங்கள் அன்னை மழலை உறவில் தான் பரவசத்துடன் காண முடியும். புன்னகைக்குள் புதையல் இருப்பதை அந்த அன்னைச் சிரிப்பில் தான் அறிய முடியும். மண்ணை மிதிக்கும் முன் மெல்லிய பாதங்கள் என்னை மிதிக்கட்டும் என கன்னம் நீட்டும் அன்பல்லவா அன்னை !
தொப்புழ் கொடியில் நேசம் ஊற்றி, மழலை வழியில் மடியில் ஏந்தி, சின்ன வயதில் தோளில் தூக்கி, பருவ வயதில் பெருமிதம் சிந்தி, கடைசி வரையில் கண்ணில் சுமப்பவளல்லவா அன்னை ! முதுமையின் முக்கால் படியில் நடக்கும் போதும் அன்னைக்கு பிள்ளை மழலையாய் தான் இருப்பான். அது தான் அன்னை அன்பின் தனித்துவம் ! மறக்க முடியா மகத்துவம்.
அன்னையின் அருகாமையில் இருப்பவன் சொர்க்கத்தின் வாசனையை நுகர்வான். தலைகோதும் அன்னையின் விரல்களில் இருப்பவன் துயரத்தின் தனிமையைத் தாண்டுவான். புன்னகைக்கும் அன்னையின் நிழலில் வாழ்பவன் முழுமையாய் வாழ்க்கையை நேசிப்பான். அன்னை, ஒரு உயிரை உலகிற்கு அறிமுகம் செய்தவள் மட்டுமல்ல !
ஒரு உயிரை உலகாக அறிமுகம் செய்து வைத்தவள்.
நம் மழலைப் பாதங்களை மண்ணில் பதிய வைத்தவள் அன்னையெனில், நமது கரங்களுக்கு சிறகுகளை முளைப்பிக்க வைத்தவள் சகோதரி தான். சகோதரிகளின் குடும்பத்தில் வளர்பவன் நீரோடையின் அருகே வளரும் மரம் போன்றவன். செழிப்பு அவனுக்கு குறைவு படாது. பெண்மையைப் போற்றும் மனிதனாக அவன் வளர்வான்.
தவறு செய்யும் ஆண்களை, ‘அக்கா தங்கச்சி கூட பொறக்கலையா ?’ என்று கேட்பார்கள். காரணம், அக்கா தங்கச்சி கூட பிறந்தவன் ஒழுக்கமானவனாக இருப்பான் எனும் நம்பிக்கை. அக்கா என்பவள் இரண்டாம் அன்னை ! தங்கை என்பவள் மூத்த மகள் ! சகோதரிகளோடு பிறந்தவர்கள் கடவுளின் கருணையை கண்களில் பெற்றவர்கள். பிறரை சகோதரிகளாய் பார்க்கத் தெரிந்தோர் கருணையாம் கடவுளை கண்களில் பெற்றவர்கள்.
வண்ணத்துப் பூச்சியின் அழகிய சிறகாய், பாறை வெளியின் நிழல் கூடாரமாய், தனிமை வெளியின் நம்பிக்கைத் துணையாய் எப்போதும் கூட வருபவர் தான் சகோதரி. பகிர்தலின் புனிதத்தை முதலில் கற்றுத் தருபவள் அவள் தான். விட்டுக் கொடுத்தலின் அழகை புரிய வைப்பவள் அவள் தான். தங்கைக்கு அண்ணனாய் இருப்பது என்பது தேவதைக்கு சிறகாய் இருப்பதைப் போல சுகமானது !
இந்தப் பணத்தில் கடைசியாய் நுழைந்து, கடைசி வரை நடப்பவர் தான் மனைவி ! இறைவன் இணையாய் கொடுக்கும் துணை ! நம் உதிரத்தின் பாகமல்ல, ஆனால் நமக்காய் உதிரம் சிந்த தயாராய் இருப்பவர். தியாகத்தின் முதல் அறிமுகம் ! தன் நிலத்தை விட்டு, தன் தோட்டத்து செடிகளை விட்டு, இடம் பெயர்ந்து போய் இன்னோர் நிலத்தில் வாசம் வீசும் மலர் !
இரண்டறக் கலத்தலின் இல்லற விளக்கம் மனைவி ! பூவாய் வாழ்ந்து இந்த பூமிக்கு புதிய பூக்களைக் கொடுப்பவள் தான் மனைவி. வெளிப்படையான அன்பின் வெளிச்சப் புள்ளி. ஒளிவு மறைவற்ற நேசத்தின் தோழி. உயிருக்குள் உயிரைப் பதியமிடும் உன்னதம் ! உயிரிலிருந்து உயிரை பிரித்தெடுக்கும் பிரமிப்பு. என மனைவியின் அன்பு மகத்தானது !
மனைவியின் மௌனம் யுத்தத்துக்கு சமமான வீரியமானது. மனைவியின் கண்ணீர் பெருங்கடலின் ஆர்ப்பரிப்புக்கு சமமானது. மனைவியின் சிரிப்பு நீள் வானத்தின் பெருமழைக்கு ஒப்பானது. மனைவி என்பவள் மனிதனோடு நடக்கும் இறைவனின் பிம்பம். இமைகளில் இடையிலும் சுமைகளைத் தாங்கும் வலிமை அவளுக்கு உண்டு. ஒரு சின்ன பிரியத்தின் விசாரிப்பில் பிரபஞ்சத்தை பரிசளிக்கும் நேசம் அவளிடம் உண்டு.
பெண்மையே ஆண்மையைக் கட்டியெழுப்புகிறது. மென்மையே வலிமையின் அடிப்படை. இந்தப் பெண்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தவர்கள் வாழ்வின் அழகையும், அர்த்தத்தையும் புரிந்து கொள்கின்றனர் !
என் அம்மாவின் முந்தானை பிடித்து நான் வளர்ந்திருக்கிறேன். புரியாமையின் பொழுதுகளில் அவரோடு வழக்காடியிருக்கிறேன். நான் செய்வதே சரி என பிடிவாதம் பிடித்திருக்கிறேன். சண்டை போட்டிருக்கிறேன். எல்லா சண்டைகளிலும் வெற்றி பெறும் வலிமை இருந்தும், அதை என் உதடுகளில் சூடி புன்னகைக்க வைத்தவர் அம்மா. அப்படித் தான் அம்மாவைப் புரிந்து கொண்டேன்.
எரிச்சலின் பொழுதுகளில், ஏமாற்றங்களின் வீதிகளில், அழுத்தங்களின் அரவணைப்பில் என் ஆயுதங்களையெல்லாம் நிராயுதபாணியான மனைவியை நோக்கி வீசியிருக்கிறேன். புறமுதுகு காட்ட மறுத்த ஈகோவின் சண்டைகளிலும் கலிங்க யுத்தமாய் காயங்களை நிரப்பியிருக்கிறேன். அவை தான் மனைவியை எனக்குப் புரிய வைத்தன.
சகோதரியோடு சண்டையிடாத பால்ய தினங்களை எண்ணிவிடலாம். அந்த சிறு வயதுச் சண்டைகள் தான் இன்றைக்கு சண்டையில்லாத பொழுதுகளை உருவாக்கித் தந்திருக்கின்றன. அத்தகைய சண்டைகளில், விவாதங்களில், முரண்டு பிடித்தல்களில் தான் என் சகோதரிகளை நான் புரிந்து கொண்டேன்.
பெண்களோடு இணைந்து வாழும் வாழ்க்கை நமக்கு புரிதலைக் கற்றுத் தருகிறது. பிரியத்தையும் பெற்றுத் தருகிறது.
அன்னை தெரசாவின் புன்னகை மென்மையானது ! அதுவே வலிமையான அன்பின் ஆயுதம் !பேனா மென்மையானது, வலிமையான சிந்தனைகளால் உலகைப் புரட்டும் வலிமை அதற்கு உண்டு. கண்ணீர் மென்மையானது ! மாபெரும் அரசுகளை நிலைகுலைய வைக்கும் வீரியம் அதற்கு உண்டு. பெண்மை மென்மையானது ! ஆண்மையின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வல்லமை அதற்கு உண்டு.
அன்னையின் மேகத்தில் துளியாய் உருவாகி, சகோதரி எனும் துளிகளோடு இணைந்தே பயணித்து, மனைவி எனும் மண்வெளியில் இரண்டறக் கலந்து அன்பின் நதியாய்க் கடலை அடைவதே இனிமையான வாழ்க்கை !
பெண்மையை நேசிப்போம் !
நமக்கு நேசத்தைக் கற்றுத் தந்தது அவர்கள் தான் !
பெண்மையை மதிப்போம் !
நம் மதிப்புக்கு அடிப்படை அவர்கள் தான் !!
பெண்மையை போற்றுவோம் !
எந்த ஆண்மையிலும் மெல்லிய பெண்மை உண்டு !
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்