வேலை

Image result for Job searching

 

உழைப்பைக் கழித்தால்
வாழ்க்கை
வடிகட்டியில்
எதுவும் மிஞ்சுவதில்லை.

வாழ்வா சாவா
போராட்டத்தில் மட்டுமே
உயிரைக் கொடுத்து
உழைத்தல் நியாயமில்லை.
வாசலைப் பெருக்குவதிலும்
உன்
திறமையைத் தெரிவி.

விளையாட்டைக் கூட
அலுவலாய் பாவித்தல்
விலக்கி விடு,
அலுவலைக் கூட
விளையாட்டுபோலப் பாவித்தலே
அவசியமானது.

பணி பல்லக்கல்ல
படுத்துத் துயில,
அது தேர்
அதை நீ தான் இழுக்க வேண்டும்.
இழு.

வியர்வை
உடலின் புன்னகை.
தவறாமல் புன்னகை செய்.

பல்கலைக் கழகங்கள்
வேலைக்கான ஒத்திகை மேடைகளல்ல
அவை
தானியங்கி மனிதர்களைத்
தயாரிக்கும்
தயாரிப்பு நிலையம்.

வாசக சாலைக்கும்
வாகன சாலைக்கும் இடையே
பதறாமல் நடக்க
பாதங்களைப் பழக்குமிடம்.

எனவே,
கல்லூரியின் வழியனுப்பல் கதவு
அலுவலக
வரவேற்பறையில்
முடிதல் சாத்தியமில்லை.
கவலை துற.

ஆயுள்கால
அடிமை எண்ணங்களை
உழைப்பு
நிரந்தர வெளியேற்றம் செய்கிறது.
உழை.

செரிக்க மறுக்கும்
உணவைப்போல,
சில பணிகள்
தொண்டைக் குழிக்குள் திணறும்.

வேப்பங்காய் வைத்தியமாய்
சில
உள்நாக்கில் கசக்கும்.

ஆனாலும்,
மனது மட்டும் மனது வைத்தால்
அறுசுவையில் ஒன்றே
கசப்பென்பது புரியும்.

பணி,
பணிவையும் கூடவே
வளர்க்க வேண்டும்.
யாரோ சொல்லக் கேட்டதுண்டு.
“கீழ்ப்படி”,
பிறகே மேல்படி.

வேலை தேடும்
நண்பர்களே,
கவலை வேண்டாம்.
வேலையிலேயே கடினமான வேலை,
வேலை தேடும் வேலை தான்.

எரியும் எண்ணங்கள்

Image result for army at snow mountain
தேசங்கள் ஆழமாய்க் கட்டிவைத்திருக்கும்
எல்லைக் கோட்டின்
தாழ்வாரக் கோடு அந்த
குளிர் வளர்க் காடு.

சாயம் போன தேசக் கொடிக்கு
நிறம் வார்த்துக் கொடுக்கும்
ராணுவ வீரர்களின் ரகசியத் தாவளம்.

சூரியக்கதிர்கள் கூட
எச்சரிக்கையோடு எட்டிப்பார்க்கும்
ஆழம் காணா பள்ளத்தாக்கு.
பல எலும்புக் கூடுகளின்
பனிச்சமாதி.

வீசும் காற்று கூட
ஒப்பாரி ராகம் மட்டுமே கற்று வரும்
ஓர்
கண்ணிவெடிக் கானகம் அது.

எப்போது எந்த இலை தீ ஊற்றுமோ
எந்த மரம் கரம் கத்தரிக்குமோ
எந்த பதுங்கு குழி
தோட்டாத் தூவல் நடத்துமோ ?
எனும்
எச்சரிக்கைக் கண்களுடன் விழித்திருக்கும்
எல்லைக் காவல் வீரர்கள்.

அவர்களின் துப்பாக்கிக் குழல்களுக்கு
உள்ளேயும் ஊடுருவி
ஊழல் செய்யும் சுயநல அரசியலுக்கு அப்பால்
அன்னிய பிசாசுகளிடமிருந்து
தன்
தேசத்தின் தேகத்தைக் காக்கும் வீரர்கள்.

கண்முன்னால் உயிர்கள் துடிக்கும் போதும்
விரல்களில் வெடிக்கும் துப்பாக்கியும்,
கண்களில் கரிமருந்தும்,
கலந்தே வைத்திருக்கும்
கடமையின் விரல் சுட்டல்கள்.

அவ்வப்போது திறந்த விழிகளுக்குள்
கனவாய் வரும்…
என்றோ பார்த்த புது மனைவியின் புன்னகையும்,
மாலை நிழலில் மயக்கும் தூக்கம் தந்த
வாய்க்காலோர மாமரமும்,
அம்மாவின் வழியனுப்பல் கண்­ரும்..

பரபரப்புக் குரல்களும்
கட்டளைக் கணைகளும் வந்து
கடமை எறிய,
சடுதியில் உதிந்து வீழும் கனவுகள்.

உயிர் கிழிக்கும் போராட்டத்தில்
எல்லைக் கணவன் விழிபிதுங்கும் நேரத்தில்,
ஒற்றைத் திண்ணையின் ஓரத்தில் அமர்ந்து
அடுத்த விடுமுறைக்காய்
நாள்காட்டி கிழித்துக் காத்திருப்பாள்
பூபாளக் கனவுகளுடன் புது மனைவி.

அடுப்புகளின் உலகம்

Image result for aduppu
காலம் மாறி விட்டது !

புகை வீட்ல படக்கூடாது !
கொல்லையில்
அடுப்பு மூட்டி
சமையல் செய்யும் பாட்டி
அடிக்கடி சொல்வார்.

அம்மா காலத்தில்
சாம்பல் கூடும்
செம்மண் அடுப்பும்
வீட்டின் கடைசி அறையாய்
இடம் மாறியது.

அக்காக்களின் வீட்டில்
வரவேற்பறையின் அருகிலேயே
சத்தமில்லாமல் சிரிக்கிறது
சிவப்பு கலர்
கேஸ் சிலிண்டர்.

காலம்
மறுபடியும் மாறி விட்டது !

சிரித்துக் கொண்டே
டாட்டா காட்டும்
தம்பியின்
தோள்பையில் சிரிக்கிறது
இன்டக்சன் ஸ்டவ். !

*

கவிதைப் பயணம்

ஏதோ ஓர்
தூரத்து இலக்கை
இலட்சியமாய்க் கொண்டு
என்னுடைய
கவிதைகள்
ஓடத்துவங்குகின்றன.

பல வேளைகளில்
மரத்துப் போய்க்கிடக்கும்
கால்களை
நான் தான்
வலுக்கட்டாயமாய்
வெளியே அனுப்புகிறேன்.

எல்லையின் வரைபடத்தை
உள்ளுக்குள்
எழுதிக் கொண்டாலும்
அது
தலை தெறிக்க ஓடுகிறது
தாறுமாறாய்ப் பாய்கிறது.
நான் தடுப்பதில்லை.

அதற்குரிய சுதந்திரத்தை
நான் கொடுப்பதில்லை,
அதுவாய்
எடுத்துக் கொள்கையில்
எதிரே நிற்பதும் இல்லை.

திசைகளையும்
பருவங்களையும்
மறந்து விட்டு
பல வேளைகளில் அது
எங்கோ சென்று
அமர்ந்து விடுகிறது.

பின்
வரைபடத்தைத்
தூர எறிந்து விட்டுத்
துயில் கொள்கிறது.

நான்
என் குறிப்பேட்டில்
இலட்சியத்தை இடம் மாற்றிவைக்கிறேன்.

கடைசியில்
போட்டுக் கொள்கிறேன்
என் பெயரை.

தேடிக் கொண்டிருக்கிறேன்

ஆட்டைத் தொலைத்த
இடையனைப் போல
தேடிக் கொண்டிருக்கிறேன்
கவிதை வரிகளை,

அது
யாராலோ
களவாடப்பட்டிருக்கலாம்.

வேண்டுமென்றே
வெளியேறிச் சென்றிருக்கலாம்.

முள் செடிகளிடையே
முடங்கியிருக்கலாம்.

பள்ளத்தில் விழுந்து
காயமாகியிருக்கலாம்.

அல்லது
வெள்ளத்தில் விழுந்து
மாயமாகியிருக்கலாம்.

எனினும்
தேடல் தொடர்கிறது.

கட்டப்படாத
வார்த்தைக்குக்
கட்டுப்பட மறுக்காத ஆடுகள் எனது.

தொலைந்த ஆட்டின்
வரவுக்காய்
மலையடிவாரத்திலேயே
காத்திருக்கின்றன
மிச்சம் தொன்னூற்று ஒன்பது ஆடுகளும்.

கலியுக காதலன்

உன்னைப் பிரிந்தபின்
என்
வாழ்க்கை வயலில்
விளைச்சலே இல்லை,

என்
ஆனந்தத் தோட்டத்தின்
திராட்சைச் செடிகள்
வைக்கோல்களாய்
உருமாறிவிட்டன.

என்
கனவுகளின் கதவிடுக்கில்
இன்னும்
உன் குரலே கசிகிறது

நாம்
செலவிட்ட பொழுதுகளின்
விழுதுகளில் தான்
ஊசலாடுகிறது
எனது இயக்கமும்
உயிரின் மயக்கமும்.

என்றெல்லாம் சொல்வாய்
என
நம்பிக் கொண்டிருந்தேன்.
உன்
பிரிவின் கண்ணீர் துளியைக்
கையில் ஏந்தியபடி.

உற்சாக அரட்டையும்,
பரவச விளையாட்டுமாய்
ஆனந்தமாய்
விளையாடிக் கொண்டிருக்கிறாய்
மழலைகளுடன்.

உறுத்தலாய் இருக்கிறது.
உன் மழலைகள் யாருக்கும்
என்
பெயர் இல்லை.

ரப்பர்

 

கொல்லையில்
தவறாமல்
வாழை மரங்கள், பப்பாளி மரங்கள்.

தோப்பில் கம்பீரமாய்
தென்னைமரங்கள்,

கிணற்றின் ஓரமாய்
கரும்புகள் சில
மேற்குப் பக்கம்
கொய்யா மரம் சில

மாமரங்களோ
எல்லா பக்கங்களிலும் !

தெற்குப் பக்கத்தில்
நல்ல மிளகாய் சுற்றி விட்ட
அயனி மரங்கள்.

தோட்டத்தில் முழுக்க
மரவள்ளிக் கிழங்கு,
தோட்டத்து ஓரத்தில்
வேலி போல பலா மரங்கள்.

புளிய மரம்
வேப்பமரம்,
நாரந்தி,
என வாலாய் நீளும் பட்டியல்
பருவங்கள் தோறும்
வாசனை விரிக்கும் வீட்டைச் சுற்றி.

இன்றோ,
முக் கனிகள்
முக்கியமற்றுப் போக

கொல்லைகளில்
குமட்டும் வீச்சத்துடன்,
வீடுகளைச் சுற்றி
அனைத்தையும்
அழித்திருக்கிறது ரப்பர்.

இப்படியும் சில கவிதைகள்

காய்க்காவிட்டாலும்
மாமரம்
மாமரம் என்பது
மாமரத்துக்குத் தெரிந்தே இருக்கிறது !
மனிதர்களுக்குத் தான் தெரிவதில்லை.

*

தம் வாங்கி இழுத்தான்
சியர்ஸ் சொல்லிக் குடித்தான்
அப்போது
அவனும் நானும்
சமத்துவ பியர் ஜாதி.
வெளியே வருகையில் சொன்னான்
அவன் மட்டும் உயர் ஜாதி !

*

செண்ட் அடித்து திரும்பிய போது
மனம் சொன்னது
இதுக்கு
வியர்வை நாற்றமே பரவாயில்லை !

*

கிராம வைத்தியம்

கால்விரலில் அடிபட்டால்
அதில்
மூத்திரம் பெய்தால் போதும்
சரியாகிவிடுமென்பார்
தாத்தா.

அதெல்லாம் என்ன எழவு ?
சாம்பல் போடு
புண்ணு பொறுக்கும்
என்பார் பாட்டி.

வேப்பெண்ணையை
லேசா சூடாக்கி
காயத்தில் தடவுப்பா, சரியாயிடும்
என்பார் அப்பா.

எல்லாம் நினைவில்
இருந்தாலும்,

அவசரமாய் காரோட்டி
இன்சூரன்ஸ் கார்ட் காட்டி
கிரடிட் கார்ட் தேய்த்து
பெருசாய் பேண்டேஜ் போட்டு
கூட்டி வருகிறேன்
மகனை.

நீயே சொல்வாயா ?

எப்படித் தான்
தெரியப்படுத்துவேன் ?
உன்மேல் நான் கொண்ட
காதலை.

ஒரு
பூவை நீட்டும்
பழைய முறையிலா ?

வாசம் வீசும் புத்தகத்தில்
ஒளித்து வைக்கும்
மயில் பீலி வழியாகவா ?

ஒரு
நான்குவரிக் கவிதையிலா ?

இல்லை
கையெழுத்தைச் செதுக்கி
நான் செய்த
காகிதக் கடிதத்திலா ?

தெரியவில்லை எனக்கு.
எப்படி சொல்வேன் ?

படபடக்கும் என்
பட்டாம்பூச்சிச் சிறகுகளுக்கு
எந்த
பதில் பாறையையும்
சுமக்கும் தெம்பில்லை

நீயே
சொல்லி விடேன்
என்னைக் காதலிக்கிறேன் என்று.