நிற்காத நிமிடங்கள்

விரல் உரசினாலே
மின்னலடித்த காலம் உண்டு
என்
உதடுகள் உரசினால் கூட
சலனமற்றிருக்கிறாய்
இப்போது.

உன்னுடைய
மனசுக்கு வயதாகி விட்டது.
உன்னுடைய
காமத்தின் கலத்தில்
ஊற்றப்பட்டிருந்த காதல்
காலாவதியாகி விட்டிருக்கிறது.

உன்னுடைய
பேச்சிலிருந்த
கவிதை காணாமல் போய்
அவசர தொனியே
அலாரமடிக்கிறது எப்போதும்.

உன்னுடைய
கோபத்தின் எருதுகள்
மிருதுவான புன்னகையை
மிதித்துச் செல்கின்றன.

என்னோடு அமர்ந்து
பேசிக்கொண்டிருப்பது
உனக்கு
நேரத்தை வீணடிப்பதாகி விட்டது.

நீர்வீழ்ச்சியிலேயே
தங்கி விட முடியாத
தண்ணீர் துளியின் தவிப்புடன்
ஓடிக் கொண்டே இருக்கிறேன்.

அடுத்த
அருவியின்
வரைபடமில்லாமல்,
வெறும்
எதிர்பார்ப்புகளை ஏந்திக்கொண்டு.

முன்னுரை மகான்கள்

சந்திக்கும் புத்தகங்களின்
தரம் பார்க்க
அதன்
முகவுரை பார்ப்பதுண்டு.

பலரைப் போலல்ல
இவனென்றும்,

இவன் தான்
சமுதாயச் சருகுகளுக்காய்
எரிமலைப் பாசனத்தை
உருவாக்கியவன்
என்றும்,

மானுடக் கவிஞன்
இவன் மட்டுமே
மற்றோரெல்லாம்
மண்பாண்டக் கவிஞர்கள்
என்றும்,

பல
முகவுரைகள்
முக உறைகளாய்
சிரித்துக் கிடக்கின்றன.

முன்னுரைகள்
எழுத்தாளனின்
முகத்துக்கான சாயம் அல்ல
அவை
எழுத்தின்
அகத்துக்கான அணிகலன்.

நட்பையும்
நேசத்தின் ஆழத்தையும்
நிரப்பிக் கொண்டு
பேனா திறக்காதீர்கள்.

ஒரு
கவிதை நூல்
தோல்வியடையும் போது
முன்னுரையாளனின்
முகமும்
கொடும்பாவி யாகிறது !

முன்னுரை
மகாத்மாக்களே.
கவிதைக்குப் பொய்யழகு
என்பதே
பொய்யாகும் காலமிது !

அதை
முன்னுரைக்கும்
முன்மொழியாதீர்கள்.