துக்க அனுசரிப்பு !

jesus.jpg

கொல்கொதா மலை
துயரங்களின் துருவமான
வலிகளின்
சிலுவையுடன்
இயேசுவை வரவேற்றது.

சிலுவையை இறக்கி வைத்து
அதில்
இயேசுவை இறக்க வைத்து
இப்படம் இன்றே கடைசி
போல

கலைந்தது கூட்டம்.

இயேசுவின் மரணத்துக்காய்
மது விருந்து
மாளிகைகளில் நடக்கையில்
எல்லோரும்
ஒரு நிமிடம் துக்கம் அனுசரித்தார்கள்.

தற்கொலை செய்து கொண்ட
யூதாஸின்
துயர மரணத்துக்காய்.

காதலிப்போர் கவனத்துக்கு


காதல் தோற்றுப் போனால்
தாடி வளர்ப்பதை
வழக்கமாக்காதீர்,
தாடி முளைக்காத சில
நண்பர்களும் காதலித்துக் கொண்டிருக்கக்
கூடும்.

காதலி என்று
நீங்கள் சொல்லிக் கொள்பவர்
வேறு யாருடனோ
காஃபி குடிப்பதைக் காண்கையில்
சுடச் சுடக் கவிதை
எழுதி அழுது விடாதீர்கள்
அல்லது
குறைந்த பட்சம்
எழுதியதை யாருக்கும் காட்டாதீர்கள்.

காதல்
ஒரு முறைதான் வருமென்று
ஒவ்வொரு முறையும்
சொல்லித் திரியாதீர்கள்,
உங்கள் காதலி
ஏற்கனவே காதலித்திருக்கக் கூடும்.

உன் பெயரைத்தான்
என் மழலைக்குப் போடுவேன்
என
அடம்பிடித்து புலம்பாதீர்கள்,
மனைவி ஏதேனும்
பெயர் சொல்லி அடம்பிடித்தால்
சந்தேகத் தீ வளர்க்காதீர்கள்.

நினைவாக என்று
கிழிந்த கைக்குட்டை
அழுக்கு துப்பட்டா
சேமித்து வைக்காதீர்கள்,
ராத்திரி உளறல்
உண்மை உரைக்கக் கூடும்

இரவும் பகலும்
மொட்டை மாடி வெறித்து
வருடங்கள் ஓடியபின்
எந்த ரமேஷ் ?
என்று காதலி கேட்டால்
ராங் நம்பரோ என்று சந்தேகிக்காதீர்கள்.

காதல் பூவென்று
கவிதை எழுதியதை நினையுங்கள்.
கிள்ளிப் போட்டபின்
வாடிப்போவதே
வாடிக்கை எனும் நிஜமுணருங்கள்.

(தீவிரக் காதலில் சிக்கிக் கொண்டிருப்பவர்களின் சாபம் என்னைச் சந்திக்காதிருக்கக் கடவது ! 🙂 )

வெற்றிடங்கள்

 

.

தன்மானம்
அவமானம் தாண்டி
கார் சன்னலருகே நீண்டது
அவன் கை.

கை கால் நல்லா தானேய்யா இருக்கு
உழைத்துப்
பிழைக்கலாமே,

பிச்சையிடுதலும்
பிச்சையெடுத்தலும்
பாவச் செயல்கள்
ஊக்குவித்தல் ஊனச் செயல்.

இவர்களெல்லாருமே
நல்ல நடிகர்கள்,
நம்மை விட சம்பாதிப்பவர்கள்.

பிச்சையிட மறுத்த
மனசுக்கு வெளியே
அணிவகுத்தன
கவச வார்த்தைகள்.

ஒருமுறை
புகைத்து நசுக்கும்
பணம் போதுமானது
அவன்
வெற்றிடத்தை நிரப்ப.

இத்தனை வார்த்தைகள்
தேவைப்படுகின்றன
நம் மனசின்
வெற்றிடத்தை மறைக்க.

வரவேற்பு

 
முற்றத்து செடியில்
சில முளைகள்

புத்தம் புதிய இலைகளை
யாரும்
வரவேற்றதாய்த் தெரியவில்லை.

குழாயில் தண்ணி வருகிறதா
என்றும்,
காய்கறிக் காரன் குரல்
தெருவில் வருகிறதா என்றும்
முகங்களில் கவலைகள்.

முளைகளின்
பிரசவ அழுகையை
யாரும்
பொருட்டாக எண்ணவில்லை.

நானும்
எதேர்ச்சையாய்த் தான்
பார்த்தேன்.

சற்றும் தாமதியாமல்
மனதில் பூவுடன்
இலைகளின் அருகே அமர்ந்து
விரல் குலுக்கி வரவேற்றேன்.

இலை சொன்னது.

நல்வரவு.
உன்னை
தாவர உலகுக்கு வரவேற்கிறேன்.

வெற்றிட விசாரிப்புகள்

 

.
எப்போதாவது எட்டிப்பார்க்கும்
பாலைவனத்
தூறல் போலாயிற்று
காய்ந்த நாரிடையே கசியும்
வெளிச்சம் போன்ற
பழைய நினைவுகள்.

திருமண அழைப்பிதழோடு
வரும்
தூரத்துச் சொந்தங்களும்
தீர்ந்து போய்விட்டன.

அதனால் தானோ என்னவோ
காகங்கள்
வீட்டுப் பக்கம்
கால் கூட வைப்பதில்லை.

தேவைப்படும் போது
உடுத்திக் கொள்ள
பாதுகாக்கப் படுகின்றன
புன்னகைகள்.

சட்டென்று முளைவிட்டு
சடுதியில் காய்ந்து விடும்
பாறை மேல்
விதைகளென
வேர் பிடிக்காத விசாரிப்புகள்.

இருபுறமும் தீட்டப்பட்ட
கத்தியைக் கையாளும்
கவனம்
அடுத்த வீட்டுக்காரர்களிடம்
அளவளாவுகையில்.

எல்லா வெற்றிடங்களையும்
ஒற்றைப் புன்னகையில்
ஊற்றி நிரப்புகிறாள்
என்
மழலை மகள்.

புதிய பரிணாமம்

 

.

மாடு மாதிரி
உழைத்தவர்களும்,

எருமை மாதிரி
பொறுமை காட்டியவர்களும்,

நாய் மாதிரி
விசுவாசம் சுவாசித்தவர்களும்

நரி மாதிரி
தந்திரம் கொண்டவர்களும்.

கற்றுத் தந்தார்கள்.
ஆறறிவின்
உச்சம்
ஐந்தறிவை எட்டுதல்

விடைபெறுதல்

விடைபெறுதல் கணங்கள்
கடினமானவை.

விமான நிலையங்களில்
கைக்குட்டைகள்
ஈரமாகும்,
இரயில் நிலையங்களில்
முந்தானைகள் மூக்கு துடைக்கும்.

என்
வரப்புகளற்ற வானங்களில்
உன்
வானவில் முத்தங்கள்
விழப்போவதில்லையா ?
என
பூங்காக்கள் புலம்பும்.

என்
உயிரின் குறுக்குவெட்டுத் தோற்றம்
உன் நட்பைத் தான்
மையத்தில் வைத்திருக்கும்
என
ஆட்டோ கிராப் கள் அழும்.

புகுந்தகப் பயணத்தில்
பெற்றோரின் விழித்திரையில்
மகளின்
சிறுவயது வாழ்க்கை ஈரமாய் ஓடும்.

விடைபெறும் கணங்கள்
கடினமானவை தான்.

முகிலின்
சுருக்குப் பை திறந்து
வெளிக்குதிக்கும் மழை நீரில்
மேகத்தின்
வழியனுப்பல் கண்ணீரும்
கலந்திருக்கக் கூடும்.

விடைபெறுதல் எளிதென்றே
நினைத்திருந்தேன்,
காதலி
அழாமல் பிரிந்த போது.

கடினமென்பது
புரிகிறது இப்போது.

மழலையின் விரல் விலக்கி
அலுவலகம்
விரையும் போது.

ஒரு நாள் என்பது 48 மணி நேரம்

 

இருபத்து நான்கு மணி நேரம்
போதவில்லை.
நாற்பத்தெட்டு இருந்திருக்கலாம்
ஒரு நாளைக்கு.

இந்த அவசர
ஓட்டங்கள்
சிறு
நிதான நடைகளாய்
நிறம் மாறி இருக்கும்.

என்
சிந்தனைகள்
இன்னும் கொஞ்சம்
இளைப்பாறிச் சென்றிருக்கும்.

என்
வாரப்பத்திரிகை வாசிப்புகள்,
தினசரித் தூக்கங்கள்,
எல்லாம்
மூச்சிரைக்காமல் முடிந்திருக்கும்.

இன்றைய மிச்சங்களை
நாளைக்காய்
பொறுக்கி வைப்பதும்,
நாளைய கனவுகளை
இன்னோரிடத்தில்
நறுக்கி வைப்பதும்
இல்லாமல் இருந்திருக்கும்.

அந்த
மெல்லியக் காலைப்
போர்வைத் தூக்கம்,
கட்டில் மீது தொடர்ந்திருக்கும்.

பிந்தைய மாலைப்
பொழுதின் ஏக்கம்
இரவைத் தொட்டு முடிந்திருக்கும்.

என்
தோட்டத்து ரோஜா
இதழ்கள் இளமை
இன்னும்
கொஞ்சம் நீண்டிருக்கும்.

என்னை விடவும்
ஏராளமாய்,
அந்த
ஈசல் பூச்சி மகிழ்ந்திருக்கும்.

கயிறு

 

வானத்திலிருந்து தொங்குகிறது
ஒரு மெல்லிய கயிறு,

பாதத்தைத் தீண்டும் முன்
பார்வையைத் தடுத்துவிடும்
அடர் பனி மூட்டம்
கால்களைக் கட்டிக் கொண்டு.

அந்தக் கயிறைப் பற்றிக் கொண்டு
மேலே ஏற
முண்டியடித்தும்,
பலநூறு வரிசைகளிலும்
கூட்டம்.

அது
சுவர்க்கத்தின் வாசலுக்கு
மனிதனைச் சேர்க்குமாம்.
கடவுளை அடையும் கயிறு
அது
ஒன்று தானாம்.

வரிசைகள் இடம்மாறிக்
கொண்டதால்
சில அலறல் குரல்களும்,
முகம் காட்டா
மரண முனகல்களும் கேட்டன.

கயிறை எட்டிப் பிடித்த
சிலரும்
பாதி வழியில் வழுக்கி
தலை சிதறிப் போனார்கள்.

நெரிசலால்
வரிசையிலிருந்து
பிதுக்கப் பட்டு
ஓரமாய் தெறிந்து விழுந்தேன்
நான்.

பதறி நிமிர்ந்து
உதறி எழுந்தபோது
என் வரிசை
மேக மூட்டத்தில் மூழ்கிப் போயிருந்தது.

புறமுதுகு காட்டி
நடந்து கொண்டிருந்தவரைப்
பிடித்துக் கேட்டேன்,
சரியான வரிசையைச்
சொல்ல முடியுமா ?

வினாடி நேரம் மெளனித்தவர் சொன்னார்,
‘தெரியவில்லை’
நான்
அதிலிருந்து இறங்கி வந்த
கடவுள்

மீறுதல் ஆறுதல்

 

எனக்குத் தந்திருந்த
வாக்குறுதிகளை நீ
ஒருமுறை கூட
மீறவில்லையே எனும் வருத்தம் தான்
எனக்கு.

நடுநிலைப்பள்ளியின்
மதில் சுவருக்கு அப்பால்
ஓர்
புளியமரத்தடியில்
பீடித் துண்டைப் புகைத்தபோது
“யாருக்கும் சொல்லமாட்டேன்”
என்றாய்..
சொல்லியிருக்கலாம் நீ.

வருடங்கள் வளர்ந்தபின்
என்
சட்டைப் பையில்
நான் சொருகி வந்த சிகரெட்
என்னைத் தன் பின்னால்
சொருகிக் கொள்ளத் துவங்கியது.

சர்ப்பக் குளத்தருகில்
சாயங்கால
சாராயக் கடைக்குப் பின்னால்
நான்
ஊறுகாய் கடித்த போதும்
எனக்கு ஓர்
உறுதிமொழி தந்தாய்,
அதில்  நீ
உறுதியோடும் இருந்தாய்.
கொஞ்சம் விலகியிருக்கலாம்.

ஓடைக்கரையோரம்
நடை
தடுமாறத் துவங்கிபின்,
வீட்டுக்குள் தான்
குப்பிகளைக் குடிவைத்திருக்கிறேன்.

எப்போதுமே
உன்
வாக்குறுதி நிறைவேற்றும்
உறுதியை
நான் பாராட்டியே வந்திருக்கிறேன்.

இப்போது தான்
முதல் முதலாய் வெறுக்கிறேன்.

இப்போது
எதிலும் எனக்குப்
போதை போதவில்லை.

உள்ளுக்குள்
ஒரே ஒரு விண்ணப்பம்
உன்னைக் காத்து நிற்கிறது.
உன் பிள்ளைகளிடமாவது சொல்
சில வாக்குறுதிகள்
மீறப்படவேண்டும் என்று.