தடயங்கள்

 

.
வாழ்க்கைச் சாலையில்
ஆயிரம் நிறுத்தங்கள்.
நிறுத்துங்கள் ஆங்காங்கே
சில
அடையாளங்களை.

கடற்கரைக்குப் போனால்
சில
சுவடுகளை விட்டு வர
சங்கடப்படாதீர்கள்.

மகிழ்வின் மலை முகடுகளில்
தங்க நேர்ந்தால்,
சோகத்தின் மலை பாரத்தை
தாங்க நேர்ந்தால்,

எப்போதும்
உடைபடாத தடயங்களை
உருவாக்குங்கள்.

தலைமுறை தாண்டிய
தொல் பொருள் ஆராட்சிக்கல்ல,

ஆக்ரோஷ இருளுக்குள்
அடைபடும் போது
நினைவிடுக்குகளில் மெழுகேற்றி
கடந்தவற்றைத்
தடவிப் பார்க்க,

தனிமையின்
புற்றுக்குள்படுத்திருக்கும் போது
நகர்ந்த நாட்களை
முகந்து பார்க்க.

ஓடிக் கொண்டே இருக்கும்
நெடுஞ்சாலைக் கரைகளில்
தளர்ந்து அமரும் போது
கொஞ்சம்
தன்னம்பிக்கைத் தைலம் தடவ,

இப்படி எதற்காகவேனும்
கொஞ்சம்
தடயங்களை விட்டுச் செல்லுங்கள்.

உங்களுக்கு
அடயாளங்களே வேண்டாமென
அடம்பிடிப்பீர்களானால்,

பாதத் தடங்களில்லா
காட்டுப் பாதை
நாளைய பாதசாரிகளை
பயமுறுத்தக் கூடும்.

அவர்களுக்காகவேனும்.