சில்மிஷக் காதல்

love9.jpg

‘உனக்கு என்ன வேண்டும்’
என
கொஞ்சலாய்
நீ கேட்பதே
போதுமானதாய் இருக்கிறது
என் பிறந்த நாளுக்கு.

love7.jpg
உன்
புன்னகைப் பட்டாம்பூச்சிகளில்
இரண்டை
என் விரல்களில் வளர்க்க
ஆசிக்கிறேன்,
என்
சலிப்பான நாட்களை
வானவில் கோடிட்டு முடித்துக் கொள்ள.

love2.jpg
நடமாட்டம்
இடமாற்றம் பெற்று
தனிமை வந்து சூழ்ந்த பின்னும்,
வெளிச்சம்
வெளியேறிப் போய்
இருட்டு வந்து அமர்ந்த பின்னும்
நம் விரல்கள்
தடுமாறாமல் இருந்திருந்தால்
அதை நட்பென உரைத்திருப்பேன்.

love1.jpg
நீ
என்னுடன் பேசிமுடித்து
புறப்பட்ட பின்
அருகில் வந்து
அமர்ந்து கொள்கின்றன
நீ
பேசிய வார்த்தைகளும்
நான்
பேச நினைத்த வார்த்தைகளும்

love3.jpg
புலன்களின் உரையாடல்
புலப்படுத்துகிறது
நட்புக்குள் ஒளிந்திருக்கும்
காதலை

love6.jpg
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்
பேசுகிறது நட்பு
வாய்ப்புக் கிடைக்காத போதும்
பேசுகிறது காதல்.

love4.jpg
நட்பு
உலகைப் பற்றி
உதடுகளால் பேசுகிறது
காதல்
உதடுகளைப் “பற்றி”
உணர்வுகளால் பேசுகிறது

love8.jpg
நமக்குள் இருப்பது
நட்போ என நான்
சந்தேகிக்கும் வேளைகளிலெல்லாம்
மறுத்திட வருகின்றன
உன்
சிறு சிறு ஸ்பரிசங்கள்

love5.jpg

கரம் கோர்த்து
நடக்கும் பொழுதுகள்
கவித்துவமானவை,
அவை
ஆயுள் ரேகையின்
ஒப்பந்தத்தை நீட்டிக்கும்
பத்து விரல் முத்திரைகள்.

lov10.jpg
உன்
அழகைப் புறக்கணித்து
என்னிடமிருந்து
கவிதைகள் எதுவும்
புறப்படுவதில்லை.
உனக்கான
பொங்கல் வாழ்த்து உட்பட
 

உலகப் புதுக் கவிதைகளில் முதல் முறையாக…

நான் தூய தமிழில் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். எத்தனை பேருக்கு புரிகிறது பார்க்கலாம் !
தூய தமிழ் பிரியர்களுக்காவது புரிகிறதா பார்ப்போம் 🙂

காதலி

உயிரோடு தர்க்கம் செய்யும்
உன்
புற்கம் மீதில் பித்தம் கொண்டேன்.

மோகத்தின்
எரிதழலை
எறிந்து செல்லும்
கழலைச் சொல்வதா ?
கழலதிலே சுழலவைக்கும்
சங்கம் தனைச் சொல்வதா ?

கிறங்கடிக்கும் குறங்கதன்
வடிவைச் சொல்வதா ?
அகமிருக்கும் பகம் தனை
கற்பனை வடிவில்
சொல்வதா ?

நெஞ்சை நசுக்கிடும்
உன் நுசும்பு,
பித்தத்துக்குள் என்னை
பிடித்துத் தள்ளிடும்
நுத்தம்.

விழுந்த என்னை
விழுங்கியே தீர்த்திடும்
இதயம் தின்னும்
இதலை.

இதில் நான் எதைச் சொல்வேன் ?

அகிலமே கொஞ்சம்
எட்டிப் பார்க்கும்
அற்புத நகிலம்
அதின் கிரீடச் சிலீமுகம்.

அழகிய அத்தம்
அதன்
தங்கையெனும் அங்கை
உயிர் தீண்டும் அங்கிலி
அதன்
உயிரான உகிர்.

எது இல்லை அழகு
கூர்ப்பரம்
கிலுத்தம்
மொய்ம்ப்பு
இதில் நான் எதைச்
சொல்லாமல் விடுவேன் ?

கவிதையான களன்
அகநானூறு சொன்ன
புறன்.
அபாரமான அபரம்.

ஆனனத்தை
அழகுபடுத்தும் பாலிகை.
பாலிகைக்குள் பாதுகாப்பாய்
இருந்து
உள்ளத்தில் போரை மூட்டிடும்
தசனம்.

வினாடிக்குள் அழித்துவிடும்
நயனம்.
நயனத்தின் வியப்பான
தாரை விளிம்பு.

அசத்தும் அளிகம்
கருமையாய் ஓடும்
நெடுமை.

உன் கோதை முதல்
பாதம் வரை
தேடித் தேடி எழுதிய தமிழை
குடங்கையாலே
கசக்கி எறிவாயோ எனும்
கவலையில்
அண்ணமும் அனரியும்
ஒன்றாய் சங்கமிக்கக்
கவலையுடன் காத்திருக்கிறேன்
காண்.

கவிப்பேரரசு மன்னிப்பாராக…

வைரமுத்துவின் காதலித்துப் பார் கவிதை போல, காதலித்துப் பார் என்று ஆரம்பித்து ஏதேனும் எழுதிப் பார்ப்போம் என்னும் சிந்தனையில் விளைந்தது இந்தக் கவிதை. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியை….கவிப்பேரரசு மன்னிப்பாராக.


காதலித்துப் பார் !

பாதங்களுக்குக் கீழ்
ஓர்
பூந்தோட்டம் தொடர்ந்து வரும்.

ஆழ்மனதில்
தினமும்
அகழ்வாராய்ச்சி நடக்கும்

நீர்த்துளியிலிருந்தும்
மேகத்தைப் பிரித்தெடுக்கும்
மந்திரம் புலப்படும்

வார்த்தைகள்
வலுக்கட்டாயமாய்
வெள்ளையடிக்கப்படும்

விரல்களின்
நுனிகளிலும்
சிறகுகள் முளைக்கும்

சுவாசிக்க மறந்து
நாசிகள்
நங்கூரமிடும்

இமைகளை
மறந்து
விழிகள் விரிந்திருக்கும்

நயாகராவின்
நீர்ச்சரிவும்
நிசப்த மண்டபமாகும்

உயிருக்குள்
ஓர்
உருக்காலை உற்பத்தியாகும்

மனசுக்குள் நிதமும்
மரங்கொத்தி
அலகுபதிக்கும்

பாதங்களின்
சுவடுகளில்
பாதைகள் அறிமுகமாகும்

பகல்கள் முழுதும்
கனவுகளில்
கரையும்

இரவுகள் முழுதும்
காலுடைந்த
நத்தையாய் நகரும்

செல்பேசி
சத்தங்களில்
சிம்பொனி தெறிக்கும்

இமெயில்
வரிகளில்
இலக்கியம் பிறக்கும்

காதலித்துப் பார் !

நீயும், நானும், உன் புன்னகையும்

 

ஒரு
பரவச தேசத்தின்
பளிங்கு மாளிகை போல்
பரிசுத்தமானது
உன் புன்னகை.

அது
இரவை உடைக்கும்
ஓர்
மின்னல் கோடு போல
தூய்மையானது

தேவதைக் கனவுகளுடன்
தூக்கத்தில் சிரிக்கும்
ஓர்
மழலைப் புன்னகையுடனும்
ஒப்பிடலாம்
உன் புன்னகையை.

எனக்குள் கவிழ்ந்து வீழும்
ஓர்
பூக்கூடை போல
சிதறுகிறது உன் சிரிப்பு.

ஒரு மின்மினியை
ரசிக்கும்
இரவு நேர யாத்திரீகனாய்
உன்
புன்னகையை நேசிக்கிறேன்.

ஆதாமுக்கு
ஆண்டவன் கொடுத்த
சுவாசம் போல
எனக்குள் சில்லிடுகிறது
உன் புன்னகை.

எனினும்
உன் புன்னகை அழகென்று
உன்னிடம் சொல்ல
மட்டும்
ஆயுள் கால தயக்கம் எனக்கு.

நீ
புன்னகைப்பதை
நிறுத்தி விடுவாயோ என்று.

புன்னகை தேவதை

எத்தனையோ விதமாய்
என்னைச் சுற்றிலும்
மனிதர்கள்.

பலரின்
புன்னகைக் கிடங்குகள்
பூப்பதை நிறுத்தினாலும்,
உதட்டுச் சந்தை
அதை
வினியோகிக்க மறக்காது.

சிலரோ
மூடிவைத்த சீசாவுக்குள்
மூச்சு முட்ட
பூத்துக் குலுங்குவார்கள்.

மிதமாய் பூத்து
அதை
இதமாய் தருபவரும் உண்டு.

பூக்காதவர்கள்
இருக்க இயலாது,
ஆனால் என்ன ?
சிலர்
வசந்த காலத்தில் மட்டுமே
வருவேன் என்கிறார்கள்.

சிலர்
பனியில் மட்டுமே
பூப்பேன் என்கிறார்கள்.

இன்னும் சிலர்
வெயில் வரட்டும்
பூக்களை விளைவிக்கிறேன்
என்கிறார்கள்.

வாடாமல்லியாய்
நிலைப்பதும்,
பத்துமப் பூவாய்
பட்டென்று ஓய்வதும்,

ரோஜாவாய் ராஜ்ஜியம் ஆள்வதும்,
கள்ளியாய்
தூரமாய் பூப்பதும்
செடிகளின்
சம்மதத்தைப் பொறுத்தது.

ஏதேனும்
ஓர் பூ கிடைக்கும் வரை
செடிச் கடைகளை
தேடித் திரியும்
தேனீயாய் நான்.

தேனீக்கும் எனக்கும்
ஒரே ஒரு
சின்ன வித்தியாசம்.

தேனீக்கள்
ஆதாயத்துகாய்
ஆழமாய் குழி தோண்டும்
அசலூர்க்காரன்.

நான்
பூக்களை பூக்களால்
பறிக்க நினைக்கும்
பண்டமாற்றுக் காரன்.

தலைமுறை எறும்புகள்

 

வரிசை பிறழாமல்
நகரும் எறும்புகளின்
வாசனைப் பாதையை
ஆள்காட்டி விரல்கள்
நறுக்கிச் சிரிக்கும்.

வரிசை தெரியாமல்
முட்டி மோதி தெறிக்கும்
எறும்புகளின்
பதட்டக் கணங்களை
வேடிக்கை விழிகள் ரசிக்கும்.

என்
சிறுவயது விளையாட்டு
இன்று என் மகளுக்கு.
எனக்கு முன்
என் தந்தைக்கும் இருந்திருக்கலாம்.

தலைமுறை
தாண்டியும் மாறவேயில்லை
எறும்புகளுக்கு
வரிசைப் பிரியமும்
மனிதர்களுக்கு
வரிசை எரிச்சலும்.

கைகள்

( இந்தவார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கவிதை )

.

நெரிசல் சாலையில்
தடுமாறுபவர்களை
சாலை கடத்தும் கைகளை விட,

நெருப்புச் சாலையில்
வியர்வை ஆறு
வழிய வழிய
பாரம் இழுப்பவருக்கு
உதவும் கைகளை விட,

தபால் அலுவலகத்தில்
நலமா எனும்
நாலுவரிச் செய்தியை
முதியவர் எவருக்கோ
பிழையுடனேனும்
எழுதித் தரும் கைகளை விட,

நீளும் வறுமைக் கைகளை
வெறும்
விரல்களோடேனும்
தொட்டுப் பேசும் கைகளை விட,

எந்த விதத்திலும்
உயர்ந்ததில்லை
கவிதை எழுதும் கைகள்.

புதுப்பிக்கட்டும் புத்தாண்டு

ஒவ்வோர் வருடமும்
ஒவ்வோர் மைல் கல்
திசைகளைச்
சரிபார்த்துக் கொள்வோம்.

இலட்சியத்தை
இலக்கங்களில் நிர்ணயிக்காமல்
இயக்கங்களில் நிர்ணயிக்கவும்,

பதவிகளை நோக்கிய
பயணத்தை விடுத்து
உதவிகளை நோக்கிய
பயணம் தொடுக்கவும்,

வீழ்த்துதல் வெறி
தணித்து
வாழ்த்துதல் நெறி
வளர்க்கவும்,

ஆனந்தத்தின் எல்லைகளை
ஆசைகளின்
ஆடைகளால் போர்த்தாமல்,
நேசத்தின் தொடுதல்களால்
வார்த்தெடுக்கவும்,

மனிதம் நோக்கிய
பயணமே
புனிதம் தேக்கிய பயணம்
என்பதை உணரவும்,

இந்த புத்தாண்டு
புரிதல் விரிக்கட்டும்.

மாலை நேரக் கடற்கரையில்
கிளிஞ்சல் பொறுக்கும்
கவலைகளற்ற சிறகுகளுடன்
சிரிக்கும் சிறுவன் போல,

புத்தாண்டு நம்மைப் புதுப்பிக்கட்டும்
இனிய
நல்வாழ்த்துக்கள்.

அர்த்தம் பெறட்டும் விழாக்கள்

 

உன்னை நேசிப்பவனையே
நீயும் நேசிப்பது
பயனிலியின் செயல்
நீ எதிரியை நேசி.

கேட்பவனுக்கு
முகம் கோணாதே.

திருப்பித் தர
வலுவில்லாதவனுக்குக்
கடன் கொடு.

இறைவனை தரிசிக்க
ஏழையை தரிசி.

நோயில் வாடுவோரை
ஆறுதல் தேடுவோரை
சிறையில் தவிப்போரை
கடவுளின் சாயலெனக் கொள்.

வெளிவேடம்
அழி,
தாழிட்ட அறையிலே
செபி.

ஆண்டவனே ஆண்டவனே
என்பதில் பயனில்லை
செயல்களிலே
வெளிப்படட்டும் ஆன்மீகம்.

முழுமையாய்
இறைவனை நேசி
உன்னைப் போல்
அடுத்தவனை நேசி.

பகிர்ந்தளி
அதுவே
பரமன் வழி..

இயேசுவின் போதனைகள்
செயலாக்கம் பெறட்டும்

அடையாளங்களை அர்த்தப்படுத்தாமல்
அர்த்தங்களை அடையாளம் காண
விழாக்கள்
பயன்படட்டும்.

அனைவருக்கும்
கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்

அம்மாவின் கடிதம்

 

அம்மாவின்
தடுமாறும் எழுத்துக்களில்
நெளியும்
பாசத்தின் வாசனை
சுமந்து வரும்
இன்லெண்ட் லெட்டர்கள்
இல்லாமல் போய்விட்டன.

மடிக்கும் இடங்களிலும்
ஒடித்து ஒடித்து எழுதி அனுப்பும்
அப்பாவின்
நலம் விசாரித்தல் சுகம்
தொலைந்துவிட்டது.

தபால் அட்டைகளில்
விலாசத்துக்கான இடஒதுக்கீடையும்
அரைமனதுடன்
அனுமதிக்கும்
கடுகுமணி எழுத்துக்களும்
காணாமல் போய்விட்டன.

தனிமை வறுக்கும்
பின்னிரவுப் பொழுதுகளில்
நெஞ்சோடு அணைத்துத் தூங்க
கசங்கிப் போன
கடுதாசிகளே இல்லையென்றாகிவிட்டது.

தொலை பேசிகளும்
கைபேசிகளும்
மின்னஞ்சல்களும்
கடுதாசிக் கலாச்சாரத்தை
விழுங்கிச் செரிக்க,

நவீனங்களின் வளர்ச்சி
தத்தெடுத்துக் கொண்ட
என்
மின்னஞ்சல் பெட்டிகளிலும்
கிராமத்துப் புழுதிநெடியின்றியே
வந்து அமர்கின்றன
தகவல்கள்.

கல்வெட்டிகளின் காலடியில்
கசிந்துருகும்
இயலாமை மனம்போல
மறந்து போன
தபால்காரரின் முகத்தை
மீண்டெடுக்கும் முயற்சியில் மனசு.

நிறைவேறுமா எனும் ஆசையில்
முளைக்கிறது கடைசி ஆசை.
கண்ணீரிலும்
வியர்வையிலும்
அழிந்துபோன அம்மாவின் கடிதம்.