கவிதை : மருதாணிக் கனவுகள்

old

அத்தனை குதிரைகளும்
விடுப்பில் இருந்தாலும்
காலத் தேர்
ஓடிக்கொண்டே தான் இருக்கிறது.

என் வீட்டின்
மெழுகிய திண்ணை
சிமின்ட் பூசப்பட்டு,
இப்போது
கம்பி வேலைப்பாடுகளுக்குள்
கைதியாய்,

பின்பக்கம் இருந்த
சாம்பல் கூடும்,
சருகுக் குழியும்
ஸ்டவ் மேடைகளுக்கு கீழ் சமாதியாய்,

ஓட்டை வெறித்துப் பார்க்கும்
என்
படுக்கையறைக் கட்டில்
இப்போது
பாதி வழியில்
காங்கிரீட் தட்டினால்
தடுத்து நிறுத்தப்படுகிறது,

அந்த
நடு அறையின்
பலகை அலமாரி தந்த
வேப்பெண்ணை வாசம்
இப்போதெல்லாம் வீசவில்லை

விட்டில்கள்
தட்டி விளையாடும்
புட்டிகள்,

கைபொத்திக் காப்பாற்றும்
மண்ணெண்ணை விளக்கு,

படுக்கையாய்
அப்பா உபயோகித்த
மரப் பத்தாயம்,
எதுவும் இந்த
மெத்தை உலகில் மீதமில்லை.

எல்லாம்
மாறினாலும்,
இப்போதும் மாறாமல்
அப்படியே இருக்கிறது.

புகைப்படத்தில் சிரிக்கும்
தாத்தாவின்
வெற்றிலைப் புன்னகை.

தமிழிஷில் வாக்களிக்க…

கவிதை : இளமைக் காதல்

ஒவ்வொரு முறையும்
தொலைபேசி ஒலிக்கும் போது
மனதின் மதில்ச்சுவர்களில்
ஆக்ரோஷமாய் அடிக்கும்
ஆனந்த அலையை
நீயில்லை எனும்போது எழும்
ஏமாற்றத்தில்
உள்ளிளுத்துக் கொள்கிறது
இதயக் கடல்…

மெதுவாய்
சிவந்த இதழ்களை வருடி
உன் தோட்டத்து
ரோஜாவுக்கு
நீ
முத்தம் தரும் போதெல்லாம்
எது ரோஜா
என்று தெரியாமல்
தடுமாறி நிற்கிறது என் மனசு…

ஒரு சிறுகதை படித்தேன்
என்று
புத்தகத்தை அணைத்துக் கொண்டு
என்னிடம் நீ
கதை சொல்லும் போதெல்லாம்
உன்
இமைகளின் படபடப்பில்,
விரியும் புருவத்தின் பரபரப்பில்,
அசையும் உதடுகளின் அழகிய நாட்டியத்தில்
ஆயிரம் ஹைக்கூக்கள் படித்துவிட்டு,
நல்லாயிருக்கா
என்று நீ கேட்கும் போதெல்லாம்
மிகவும் அருமை என்றிருக்கிறேன்
சிறுகதையின் ஒரு வரிகூட கேட்காமல்….

பாதி நேரம்
உன்னை
மறக்கவேண்டுமென்று
நினைக்கிறேன்.
மீதி நேரத்தில்
உன்னை மறக்க முடியாமல்….

சிவந்த
உன் சிறிய உதடுகளில்
நீ
சாயம் பூசும் போது
உதட்டுச் சாயம் கொஞ்சம்
நிறம் திருடிக் கொள்கிறதே
கவனித்தாயா கண்மணி ?

உன்
முகம் பார்க்கும் கண்ணாடியை
நான் திருடிவிட்டேன்
மன்னித்துவிடு…
உன் பிம்பம் விழுந்த
பிரதேசங்கள் மீது எனக்குப்
பயங்கர பொறாமை ..

ஓரமாய் அமர்ந்து
நகம் வெட்டுகிறாய்.
விலகிக் கொஞ்சம்
விரல் வெட்டுவாயோ,
எனும்
என் பதட்டத்தின்
பல்லிடுக்கில்
உதட்டு இரத்தம் ஒட்டுகிறது.

நீ
பார்க்காவிட்டாலும் பரவாயில்லை
என்றுதான்
தொடர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
உன் புகைப்படத்தை.

விஷயம் தெரியுமா உனக்கு ?
நீ
என் தோட்டப் பூவைத்தான்
தினசரி சூடுகிறாய்,
உன்
பூக்காரிக்கும் எனக்குமான நட்புக்கு
என்
காதலின் வயது.

கவிதை : அருகிருக்கும் மௌனம்

எத்தனை
விலையுயர்ந்த
வாழ்த்து அட்டை அனுப்பினாலும்
உன்
விரலெழுதிய வரிகளைத் தான்
திரும்பத் திரும்ம
வாசித்துச் சிலிர்க்கும்
மனம்.

ஏதும் எழுதாமல்
நீ அனுப்பும்
பகட்டு அட்டையை விட
நீ
ஏதேனும் கிறுக்கி அனுப்பும்
தபால் அட்டை
மிக அழகு.

அழகழகாய்
அடுக்கி வைத்து
நீ
அனுப்பும் பூங்கொத்தை விட
உன்
சீண்டல் பூக்கவைக்கும்
பூக்கள் கொள்ளை அழகு.

தொலைபேசியில்
ஒலிக்கும்
உன் குரலை விட
உன்னோடு அமர்ந்திருக்கும்
மெளனம் தான்
அழகெனக்கு.

சீக்கிரம் வந்து விடு
தூர தேசத்தில்
கரன்சி சேமித்தது போதும்.
வந்தென் கரம் உரசி
சேமித்த காதலைச் செலவிடு.

வயதுக்கு வந்த காதல்

kiss.jpg 

உன்
முத்தத்தின் விண்ணகம்
வாய்க்காமல் போகையில்
உதடுகளில் உணர்கிறேன்
நரகத்தின் நகக் கீறல்களை

kiss1.jpg

நீ
முத்தமிட்ட கணத்தில்
முளைத்த மன நடுக்கத்தில்
சூரியன் ஒளிய
காற்று உறைய
இதயம் மட்டும்
புவியீர்ப்பு விசையைப்
புறக்கணித்துப் பறந்தது.

இன்னோர் முத்தமிடு
நான்
இறங்கி வர வேண்டும்.

love12.jpg
நிலவொளியின் நதிக்கரையில்
குளிர் காற்றின்
பொதுக்கூட்டத்தில்
உன்
விரல் தொட்ட வினாடியில்
உயிருக்குள் பறந்த பறவை சொன்னது
எனக்குள்
காதல் கூடாரமடித்திருப்பதை.

love4.jpg

உன்
காதல் நினைவுகளைச் சுமக்கையில்
எனக்குள்
காமத்தின் சாரலடிக்கும்
என்பதை
உன் வெட்கத்தின் வாசலுக்குள்
சொல்லிச் செல்கையில்
நீ
சட்டென்று வெளிப்படுத்திய
போலிக் கோபத்தில்
புதைந்துகிடந்தது
நம் காதல்.

bed.jpg

உன்
புகைப்படம் பார்த்துத்
துயில்வதை விட
உன்
புகைப்படம் பார்த்து
விழிப்பதை
விரும்பிய கணத்தில்
என் காதல் வயதுக்கு வந்திருந்தது.

சில்மிஷக் காதல்

love9.jpg

‘உனக்கு என்ன வேண்டும்’
என
கொஞ்சலாய்
நீ கேட்பதே
போதுமானதாய் இருக்கிறது
என் பிறந்த நாளுக்கு.

love7.jpg
உன்
புன்னகைப் பட்டாம்பூச்சிகளில்
இரண்டை
என் விரல்களில் வளர்க்க
ஆசிக்கிறேன்,
என்
சலிப்பான நாட்களை
வானவில் கோடிட்டு முடித்துக் கொள்ள.

love2.jpg
நடமாட்டம்
இடமாற்றம் பெற்று
தனிமை வந்து சூழ்ந்த பின்னும்,
வெளிச்சம்
வெளியேறிப் போய்
இருட்டு வந்து அமர்ந்த பின்னும்
நம் விரல்கள்
தடுமாறாமல் இருந்திருந்தால்
அதை நட்பென உரைத்திருப்பேன்.

love1.jpg
நீ
என்னுடன் பேசிமுடித்து
புறப்பட்ட பின்
அருகில் வந்து
அமர்ந்து கொள்கின்றன
நீ
பேசிய வார்த்தைகளும்
நான்
பேச நினைத்த வார்த்தைகளும்

love3.jpg
புலன்களின் உரையாடல்
புலப்படுத்துகிறது
நட்புக்குள் ஒளிந்திருக்கும்
காதலை

love6.jpg
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்
பேசுகிறது நட்பு
வாய்ப்புக் கிடைக்காத போதும்
பேசுகிறது காதல்.

love4.jpg
நட்பு
உலகைப் பற்றி
உதடுகளால் பேசுகிறது
காதல்
உதடுகளைப் “பற்றி”
உணர்வுகளால் பேசுகிறது

love8.jpg
நமக்குள் இருப்பது
நட்போ என நான்
சந்தேகிக்கும் வேளைகளிலெல்லாம்
மறுத்திட வருகின்றன
உன்
சிறு சிறு ஸ்பரிசங்கள்

love5.jpg

கரம் கோர்த்து
நடக்கும் பொழுதுகள்
கவித்துவமானவை,
அவை
ஆயுள் ரேகையின்
ஒப்பந்தத்தை நீட்டிக்கும்
பத்து விரல் முத்திரைகள்.

lov10.jpg
உன்
அழகைப் புறக்கணித்து
என்னிடமிருந்து
கவிதைகள் எதுவும்
புறப்படுவதில்லை.
உனக்கான
பொங்கல் வாழ்த்து உட்பட
 

காமத்துப் பால்

kaamam.jpg

உடையும் அணையின்
உத்வேகம்
தழுவல்களில் பீறிடும்.

மதகு மூடி
முனகிக் கிடக்கும் மோகம்
உதடுகளில்
போர்கால அவசரத்தில்
பாய்ந்து வரும்.

ஆடைகளின் மீதான
அவசரத் தாக்குதல்
உயிர் பூக்களை
கருக வைத்து,
மோக மொட்டுகளைக்
விரிய வைக்கும்.

போர் வாய் களாய்
போர்வை
பரபரக்கும்.

உதடுகள் பேச மறந்து
எழுதிக் கொண்டிருக்கும்,

விரல்கள்
எழுத மறந்து
பேசிக்கொண்டிருக்கும்.

பிறப்பும் இறப்பும் கலந்த
ஓர்
நிகழ்தலின் முடிவுக்காய்
இரவு
வெட்கக் கருப்புக்குள்
அரைகுறையாய் விழித்திருக்கும்.

ஓர்
முத்தத்தின் ஒப்பத்தில்
முடியும்
பரசவத்தின் நேர்முகத் தேர்வு.

காலம் காலமாய் கற்பிக்கப்பட்ட
முதல் பாவம்
அடித்தல் கோடிட்டு
முதல் புண்ணியமாய் மிளிரும்.

காதல் சாமரம்.

love.jpg 

வெயில் குறித்த
கவிதைகளை
குளிர் அறைகளில் அமர்ந்து
நிதானமாய்
எழுதுகிறேன்

என்
காதல் குறிப்பேடுகளில்
வெயில் சாமரம் வீசிய
கானல் காதலியின்
நினைவுகள் எழுகின்றன.

அவள்
ஸ்பரிசங்கள் அந்நியமாய் போன
கால இடைவெளிகளிலும்
மிதந்து வருகின்றன

கடந்த காலம் கவர்ந்து நடந்த
கைவிரல்கள்.
 
இன்னும்
காதலின் ஈரம் காயாமல்
அவள்
முத்தங்களின் முந்தானைகளை
முகர்ந்து சுகிக்கிறதென்
நாசி.

குளிர் குறித்த
கவிதைகளை
வெயில் அறைகளில் தான்
எழுத முடியும்
போலிருக்கிறது.

காதலின் தவிப்பு

கும்மிருட்டுப் பாதையில்
தைரியமாய்
எடுத்து வைக்கும்
பாதப் பதிவுகள் போன்றவை
என்
காதல் விண்ணப்பங்கள்.

பாம்புகள்
பதுங்கியிருக்கலாம்.
படுகுழிகள்
பசித்திருக்கலாம்
விலங்குகள்
விழித்திருக்கலாம்
அல்லது
பாதையே இல்லாமல் இருக்கலாம்.

எனினும்
கனவுகளின் வெளிச்சத்தை
மனம்
தூக்கிச் சுமக்கும்
காதல் லாந்தரில்.

நள்ளிரவில்
வைத்தியரைத் தேடி ஓடும்
பிள்ளைத் தாச்சியின் கணவன் போல
தைரியமாய்
ஓடிக்கொண்டிருக்கின்றன
காதலின் விண்ணப்பங்கள்.

பின்னணியில்
ஓர்
தாய்மைத் தாயின் தவிப்பொலியைச்
சுமந்து.

காதல் இது தானா ?

ladyi.jpg

 காதலைச் சொன்னார்கள்
பரபரப்புச் சாலையில்
பார்வையில் பட்டவர்கள்.

வளையல் காரன் சொன்னான்
காதல்
வளைக்க முடிவது.
வடிவத்துக்கேற்ற வகையில்
வாகாய் கிடைக்கிறது

மளிகைக்கடைக் காரர்
மறுத்தார்.
காதல்
கலப்படங்களின் கூட்டுத் தொகை
விற்பனைக்காய்
கற்பனை கலந்து பேசுவது.

சட்டென்று நிறுத்திய
ஆட்டோக்காரர் சொன்னார்
காதல்
அடுத்தவர்களை விழவைத்து
எதிர்பாரா திசைகளில்
சரேலென
முன்னோக்கிப் பாய்வது.

காதல்
பாக்கெட்டை விட்டு
பாக்கெட்டுக்கு இடம் பெயர்வது
சந்தேகம் வேண்டாம்
சொன்னவர் போலீஸ்காரர் தான்

காதலா ?
புரியாத முடிவுகளை நோக்கி
புரிந்ததாய்
நினைப்பவர்கள்
பிரிவுக்குப் பயிற்சி எடுக்குமிடம்.
குழப்பத்தின் குழந்தையாய்
தென்பட்டவர் சொன்னார்
ஒருவேளை
புண்பட்டவராய் இருக்கலாம்.

இடைவேளை விடாமல்
இடை வெளியில் விரல்கோலமிடும்
இளமையின் விளையாட்டு அது
பள்ளி மாணவன்
திடுக்கிட வைத்து கடந்து போனான்

பரபரப்பாய் ஓடிய
குடும்பத் தலைவியை
பிடித்து நிறுத்தி விளக்கம் கேட்டேன்.

ஆளை விடுப்பா
அடிபட்ட கணவனின்
அருகிருக்க வேண்டும்
அழுகின்ற குழந்தைக்கு
ஆகாரம் வேண்டும்
நின்று பேச நேரமில்லை எனக்கு

நிற்காமல் சென்றாள்
காதலை
வாழ்க்கையால் வாசித்துப் போனவள்