கலியுகப் பொங்கல்

pongal.jpg

கணினி நிறுவனங்களின்
வாசல்களில்
மின் விளக்கு அடுப்பில்
தெர்மாகோல் பொங்கல்
‘Happy Pongal” வாசகங்களுடன்.

பொங்கலின் பொருள் தெரியா
கழுத்துப் பட்டை
மென் பொறியாளர்களுக்கு
மின்னஞ்சல் உதடுகள்
காதலியரிடமிருந்து.

நாளை விடுமுறை
ஏதோ some பொங்கலாம்
ஈ.சி.ஆர் போலாமா
கொஞ்சலுடன் பேசிக்கொண்டன
சாட் அறைகள்.

நாளைக்கு பொங்கலா ?
அப்போ
சன் டிவியிலே என்ன படம் ?
சாய்வாய் அமர்ந்து
ரிமோட் திருகும்
குடியிருப்பு வாசிகள்.

பேட்டிகளின் திணிப்பால்
‘கோலங்கள்’ பார்க்க முடியாத
பதட்டத்தில்
வீட்டு அம்மாக்கள்.

பொங்கலுக்கு
இரண்டு நாள் லீவில்
ஊருக்கு போகும் ஆசையுடன்
தூரத்து பணியாளன்.

தமிழன்
‘எப்போது பொங்குவான்
தன் நிலைகண்டு’
பட்டிமன்றங்கள் பொதிகையில்.

ரங்கநாதன் தெருக்களிலும்
பிட்சா கார்னர்களிலும்
நகைக்கடைகளிலும்
கொடிகட்டிப் பறக்கும்
விடுமுறை வருமானம்

வலிகளின் வரவால்
எலிகளைத் தின்று
வளைகளில் வாடும்
விவசாயத் தோழன் மட்டும்
கடன் வாங்கிப் பொங்குகிறான்
பொங்கல்.

பொங்கலோ பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.

விழிகளால் சிரிக்கிறாய்…


ஒருமுறை நீ சிரித்தபோது
இதயம் கொஞ்சம்
இடம் மாறியதோ என யோசித்தேன்.
மறு முறை
யோசிக்காமல் இதயத்தை
இடம் மாற்றிக் கொண்டேன்.

உன் விலகலை
ஓர் புன்னகையோடு தான்
ஒத்துக் கொண்டேன்.
நல்லவேளை
அகத்தின் அழுகை முகத்தில் தெரியவில்லை.

  

எதுவும் நிலையில்லையடி
அதை
உன் விலகலில் தான்
எனக்கு உணர்த்த வேண்டுமா ?

  

உன் காதலுக்குப் பரிசாய்
எதையேனும் தர நினைக்கிறேன்
எதுவும் உயர்வாய் தெரியவில்லை
உயர்வாக இருப்பதெல்லாம்
உன்னிடமே இருக்கின்றன !

 

துவக்கமும் முடிவும் இல்லாதது
காதல் என்கிறார்கள்.
நான் துவங்கி வைத்தேன்
நீ முடித்து வைக்கிறாய்
பழமொழி பழசாகிப் போகிறதோ ?


யாரையும் நேசிக்க யாரும்
கற்றுத் தருவதில்லை.
உன்னை நேசிக்க வேண்டாமென்று
கற்றுத் தர மட்டும்
சுற்றித் திரிகிறது சுற்றம்.

உன் உதடுகள்
நிறுத்தாமல் சொல்லும் பொய்க்காய்
தலைகுனிகின்றன உன் இமைகள்.
நிமிரும் போது
நிஜம் சொல்லி நனைகின்றன கண்கள்.


உன் சிரிப்புக்குள்
என்னதான் இருக்கிறதோ ?
அது தான் என்
பிடிவாதங்களுக்கெல்லாம்
தற்கொலை முனையாகிறது.

இரண்டடி தூரத்தில் வெற்றி


வெற்றி என்பது
பதக்கங்களை பெறுவதிலில்லை
அதை நோக்கிய
பயணத்தில் இருக்கிறது.

அங்கீகாரங்களே
வெற்றிகளென்று நாம் தான்
அர்த்தமில்லாமல்
அரற்றிக் கொண்டிருக்கிறோம்.

சில
பல்கலைக் கழகப்
பட்டங்களிலில்லை
வெற்றியின் சுவடுகள்,
அவை
சென்ற வகுப்பறையில்
தின்ற பாடங்களில் இருக்கின்றன.

மைல் கல் என்பது
ஊரை அடைந்ததற்கான
உத்தரவாதம் தான்.
அதுவே ஊர் இல்லை.

கடைசி வினாடியில்
கை நீட்டியவன்
நீச்சலில் முதலிடம் வரலாம்,
ஆனால்
நீந்தினேன் என்பதே
நிஜமான வெற்றி.

வெற்றி என்பது
கோப்பைகளைப் பெறுவதில் இல்லை.
கோப்பைகளைப்
பெறுவது மட்டுமே வெற்றியல்ல
என்பதைக்
கண்டு கொள்வதில்.

நிஜங்களைப் பாதுகாத்துக் கொள்

 

.

வீண் புகழ்ச்சிகள்.
அவை
வீழ்ச்சிக்கான வலைகள் !

நீயல்லாத ஒருவன் தான்
நீ என்று
யாரேனும் உன்னைப் பார்த்து
சொல்லக் கூடும்.

“உன்னைத் தவிர யார் “?
என்று
உன்னை அறியாதவர்களே
உன்னை உன்னதத்துக்கு
உயர்த்தக் கூடும்.

அவர்கள்
உன் தலையில் விதைக்கும்
வண்ண விதைகளை
அங்கேயே தங்க வைக்காதே
நாளை அவை
ஆழமாய் வேர்விடக் கூடும்.

உன் எடை
உனக்கே தெரியும்,
அடுத்தவன் தராசுத் தட்டை
நம்பி,
உன் எடைக்கற்களை
எடுத்தெறிய எத்தனிக்காதே.

உன்
முகத்துக்கு முன்னால்
முல்லைக்குத்
தேர் கொடுப்பவர்கள்
முதுகுக்குப் பின்னால்
போர் தொடுக்கலாம்.

உன்னை ஓர்
பொய்யான பொய்கைக்குள்
பூக்க வைத்து விட்டு,
உன் நிஜமான நிலங்களை
தரிசாக்கி விடலாம்.

இல்லையேல்,
உன்னைப் பல்லக்கில்
ஏற வைத்து,
உன்
காலணிகளைக் களவாடிச் செல்லலாம்.

கனவுகளின்
கண்கொத்திப் பாம்புகள்
அணிவகுத்து நிற்கின்றன,
நிஜங்களைப் பாதுகாத்துக் கொள்.

தலைகீழ் பாடங்கள்

 

நீதான்
கற்றுக் கொடுத்தாய்.
உன் குழந்தைக்கு !

பேருந்துக் கட்டணத்தை
பாதியாக்க வேண்டி
உன்
மகனின் வயதைக் குறைத்தபோது
ஓர் விதிமீறலை
நியாயப் படுத்தினாய்.

அங்காடி வாசலில்
கண்டெடுத்த காசை
பத்திரமாய் பாக்கெட்டில்
சொருகிய போது
சொந்தமில்லாததையும்
சொந்தமாக்கலாம்
என்று
தகாத ஒன்றைச் சொல்லித் தந்தாய்.

அலுவலக பொருட்களை
அள்ளி வந்து
‘எழுதிப் பழகு’ என்றபோது
ஓர்
திருட்டை நீயே
அறிமுகப்படுத்தி வைத்தாய் ?

பொய் சொல்வது
பழுதில்லை என்று
விடுப்புப் படிவத்தில்
எழுதிச் சொன்னாய்.

அலுவல் நேரத்தைத்
திருடலாம் என்று
பொருள் வாங்கச் சென்றபோது
பழக்கப் படுத்தினாய்.

அத்தனை தவறுகளுக்குமான
ஆணிவேரை
நீ தான்
ஆரம்பித்து வைத்தாய்.

கடைசியில்,
பார்த்துப் பார்த்து வளர்த்தேன்,
பாழாகி விட்டான்
என
வீண் பழி சுமத்துகிறாய்.

பிள்ளை மீதும்,
சத்தமில்லாமல் கிடக்கும்
சமுதாயத்தின் மீதும்.

ஒவ்வொரு அலையிலும் கடல்

‘உனை விரும்பப் போவதில்லை’
என்று சொல்லி
நெருங்கும் போதெல்லாம்
திரும்பிக் கொள்கிறாய்.

நீ
திரும்புவதைக் கூட
விரும்பித் தொலைக்கிறது மனசு.

பல காத தூரம்
என் வீட்டுக்கும் உன் வீட்டுக்கும்.
ஆனால்
ஒரு காதல் தூரம்
என்று தான்
கணக்கிட்டுச் சொல்கிறார்கள்
நண்பர்கள்.

உன்னை விட என்னைத் தான்
நான்
அதிகம் நேசிக்கிறேன்.

அதனால் தானே
நீ வேண்டுமெனும்
மனசின் பிடிவாதங்களுக்குள்
மட்டுமே
மண்டியிட்டுக் கிடக்கிறேன்.

நீ
வருகை தந்ததால் தான்
வருகைப் பதிவேட்டில்
நானும்
ஆச்சரியமாய் உச்சரிக்கப் பட்டேன்.

பின்பு,
என் காதல் கணையைக்
கத்தரித்து எறிந்து விட்டாய்.
இன்று
தேர்ச்சிப் பட்டியலில்
அதிர்ச்சியாய் அலசப்படுகிறேன் நான்.

உணவகம்,
நீ எதிர்மேசையில் இருக்கிறாய்
விரும்பிக் கேட்டது வருவதற்காய்
காத்திருக்கிறாய்.

விரும்பியது
வந்தமர்ந்த மகிழ்ச்சியில்
பார்த்திருக்கிறேன் நான்.

பார்த்த இடத்திலெல்லாம்…

காதல்
காற்று என்றார்கள்
நீ சூறாவளியாய் வீசுகிறாய்
அதையும்
அதிகப்படியான அன்பென்றே
அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.
 

நான் எழுதும் கவிதைகளில்
நம்மைக் காண்கிறேன் நான்
என்னை மட்டுமே
காண்கிறாய் நீ.
நீ
வாசகியாகி நேசிக்கிறாய்
நான்
வாசகியை நேசிக்கிறேன்.

கடித்த பாம்பின்
விஷம் விலக்க
கடித்த பாம்பையே பிடித்து
மீண்டும்
கடிக்க வைப்பார்களாம்.
கதை சொன்னாள் பாட்டி.

காதல் !!

பனியைத் தொட்டால்
சிலிர்க்கிறது,
நெருப்பைத் தொட்டால்
சுடுகிறது,
நெருங்கினால் மட்டுமே
நேர்கின்றன எல்லாம்.

காதலில் மட்டும்
விலகினால்.

காதல் அருவி போல
குளித்தால்
மனதுக்குள் சரணம் துலங்கும்
குதித்தால்
உயிருக்குள் மரணம் துவங்கும்.

நீ சிரித்தாலும்
இமைத்தாலும்
காதலெனக் கற்பிக்கிறேன் நான்.
பேசும்போது மட்டும்
இல்லவே இல்லையென
ஒப்பிக்கிறாய் நீ.

காதல்
செதுக்கும் என்கிறார்கள் சிலர்,
சிதைக்கும் என்கிறார்கள் சிலர்.

எவ்விதமெனினும்
காலங்காலமாய்
காதலால் தான் மாற்றம் நேர்கிறது
மனிதர்களுக்கு,
மனிதர்களால் மாற்றம் நேர்வதில்லை
காதலுக்கு !

நீ
என் தேவதை என்றேன்
சிறகெங்கே என்கிறாய்,
காதலித்தால் முளைக்கும்
என்கிறேன் நான்.

இயலாமைகள்

 

.

இதை
நிறுத்தவே முடியாதா
என
கவலைப்படுகிறேன்,
ஒவ்வொரு முறையும்
விரலிடுக்கில் சிகரெட் புகையும் போதும்,
நினைவுகளின் வெப்பத்தில்
இதயம் எரியும் போதும்.

சந்திப்புகள்

 

.
அலுவலக காண்டீனில்
சந்தித்துக் கொள்கிறோம்,
தளும்பத் தளும்ப
தேனீர் நிறைத்து
ஒரே மேஜையில் வந்தமர்கிறோம்.

உன்
செல்போனும்,
என்
செல்போனும் கிணுகிணுக்கின்றன.

தொலைபேசியில் யாருடனோ
பேசிப் பேசி
தேனீரை முடித்துவிட்டு
விடைபெற்றுக் கொள்கிறோம்.

இன்னும்
நீடிக்கிறது நம் நட்பு.

.

சென்னை வாகனப் பயணம்

 

.

சென்னையில்
இரு சக்கர வாகனம் ஓட்ட
இரும்பு இதயம்
வேண்டும் போலிருக்கிறது.

என்
பழகமில்லாப் பயணத்தில்
வண்டிக் கண்ணாடியை
உரசி நகர்கின்றன
ந(த)கரப் பேருந்துகள்.

பச்சை விளக்கு
பல் காட்டியபின்,
மைக்ரோ வினாடியில்
வாகனம் பாய்ந்தாக வேண்டும்,

வழுக்குப் பாறைகளிடையே
விரால் மீன் பிடிப்பதாய்
கவனம் தேவை
கால்களிலும், கைகளிலும்.

இல்லையேல்
கட்சிமாறும் அரசியல் வாதியாய்
முன்னெச்சரிக்கையின்றி
முகம் திருப்பிக் கொள்ளும்
ஆட்டோ க்கள்
மூர்க்கத்தனமாய் முத்தமிடும்.

பேருந்தின்
நசுக்கும் பயணமும்,
ஆட்டோ  மீட்டரின்
பொசுக்கும் பணமும் தான்
என்னை இதில்
இறுக்கமாய் இருத்தியிருக்கின்றன.

இத்தனை நாள் பயணத்தில்
ஒன்று மட்டும்
கற்றுக் கொண்டேன்,

தவறு செய்வது யாரானாலும்.
முதலில் கத்துவோனே
வெற்றி பெறுவான்.