மழையும், என் காதலியும்

rain.jpg

ஓர்
மழைத்துளியின்
புனிதத்தை ஒத்திருக்கிறது
உன்
புன்னகை.

உன்
உதடு தொடும் ஆசையில்
மேகம் குதிக்கும்
முத்தத் துளிகளை
குடைக் கேடயங்களால்
தடை செய்து நடக்கிறாய்.

உன்
கன்னம் தொடாத கவலையில்
பெருங்குரலெடுத்து
அழுகிறது வானம்.

பூமியில் விழுந்து புரண்டு
அழுது ஓடுகிறது
உன்
பாதங்களையேனும்
முத்தமிடும் மோகத்தில்.

பாதம் தொட்ட பரவசத்தில்
சில துளிகள்
வீடு பேறு அடைகின்றன.

முக்தி பெறாத
மிச்சத் துளிகள்
தோல்வியின் துயரம் தாக்க
கடலில் விழுந்து
தற்கொலை செய்து கொள்கின்றன.

ஓர்
மழைத்துளியின்
புனிதத்தை ஒத்திருக்கிறது
உன்
புன்னகை.

ஓர் பெருமழையின்
துயரத்தை ஒத்திருக்கிறது
நீ சிந்தும்
ஒற்றைக் கண்ணீர் துளி.

சின்னச் சின்ன கவிதைகள்

smile3.jpg

நகர வாழ்க்கையில்
எல்லாமே தலைகீழ் என்றார்கள்.
உண்மை தான்.
தலைமேல்
தலைகீழாய் வளர்ந்து கொண்டிருந்தது
தொட்டிச் செடி.

smile3.jpg

துப்பாக்கிக் குண்டுகள்
வானில் முழங்க இறுதிச் சடங்கு
எதிரியின்
துப்பாக்கி குண்டால்
மரணமடைந்த வீரனுக்கு

smile3.jpg

வானம் பொதுவானது
என்கிறார்கள்
மொட்டை மாடியை
பூட்டியே வைத்திருக்கும்
அடுக்குமாடிகளை அறியாதவர்கள்.

smile3.jpg 
“அறியாமை ஆகன்றது”
விளம்பரம் சிரித்தது
எழுத்துப் பிழையுடன்

smile3.jpg

பூட்டினேனா
எனும் சந்தேகம்
விலகுவதேயில்லை
வெளியே கிளம்பும் போதெல்லாம்.

பிடிக்குமா… பிடிக்காதா ?

a1.jpg

பிடிக்காதது போல்
நடித்து
பிடித்திருக்கிறதென்றால்
சம்மதமே.
 
பிடித்தது போல்
நடித்து
பிறிதொரு நாளில்
பிடிக்காது என்று
சொல்லி விட்டுப் போவதை விட
 
எனினும்
உன் மௌனத்துக்கும்
சத்தத்துக்கும்
இடையேயான
முனகல்களின் முகவரியில்
மிதப்பது
சம்மதமா சம்மட்டியா
என
தெரியாத அவஸ்தை நீள்கிறது.
 
பரவாயில்லை
பிடித்தது போல் நடி.
பிறிதொருநாளில்
பிடிக்காதென்று சொன்னாலும்
பரவாயில்லை.
 
ஒருவேளை
பிடிக்காதது போல் நடித்து
உண்மையில்
பிடிக்காமலேயே
போய்விடுவதை விட.

மிதக்கும் ஸ்பரிசங்கள்

guy1.jpg

உன்
நினைவுகள் துரத்த
அறைக்குள் மூடி
தாளிட்டுக் கொண்டேன்.
 
சுவர்களெங்கும்
அறையப்பட்டிருந்த
உன்
சிரிப்புகள் சிதறி விழுகின்றன.
 
இருக்கைகளில்
அமர்ந்திருக்கும்
உன்
சொற்கள் சரிகின்றன.
 
போர்வை மூடி
படுக்கையில் கவிழ்கையில்
கீழிருந்து
முளைக்கின்றன
உன் தந்த விரல்கள்.
 
இமைத் திரைகளை
இறக்கினால்
விழிகளுக்குள் உளிகளாய்
உன்
ஸ்பரிசங்கள் மிதக்கின்றன.
 
 
என்
அவஸ்தைகளின் அங்குலமும்
அறியாத நீ
அடக்குதலின் அங்குசத்தை
உதடுகளில்
தளும்பத் தளும்ப
நிரப்பி வைத்திருக்கிறாய்.
 
 
மீண்டும் மீண்டும்
தற்கொலைத் தாக்குதல் நடத்தும்
என்
காதல் விண்ணப்பங்கள்
மீளும் வழிக்காக,
மீண்டும் உன்னைச் சந்திப்பதென
முடிவெடுத்துக் கொண்டு
கனவுகளுக்குள்
கடந்து செல்கின்றன.

கசங்கிய தலையணைகள்.

guy.jpg

நேற்றைய தழுவல்களின்
விரல்கள்
தனிமையிலும்
காது வருடுகின்றன.

மாலை நேரம்
முளைக்கும் போதில்
தாபத்தின் கனவுகளும்
வேகத்தைக் கூட்டுகின்றன.

ஆடைகளின்
பாரம் தாங்காமல்
வியர்வை
அவிழ்கிறது.

மோக கற்பனைகளால்
நிர்வாணமாகின்றன
இரவுகள்.

போர்வைகளுக்கு
வாய் முளைத்தால்
புரியும்
படுக்கை அறைகளின்
ரகசிய மூச்சுகள்.

நரம்புகளுக்குள்
நகரும் நரகமாய்
மேனி தேய்த்து முன்னேறும்
நாகங்கள்.

புரளல்களுக்கும் உளறல்களுக்கும்
இடையே
நசுங்கி வெளியேறும்
இரவு.

விடியலில்
இரவு துடைத்து
கனவு கழுவி
எதுவும் நிகழா பாவனையில்
அலுவலகம் கிளம்புகையில்

கபடச் சிரிப்புடன்
கண் சிமிட்டும்
கசங்கிய தலையணைகள்.

புது நிறம்.

v.jpg

தடவித் தடவி
நல்ல லெதர் செருப்பாய்
பார்த்து வாங்கிக் கொண்டார்

வளைத்துப் பார்த்து
ஊர்ஜிதப் படுத்திய பின்பே
வார்க்கச்சையையும் வாங்கினார்.

மனைவியின்
கைப்பை பூனை முடியுடன்
மெத் மெத்தென்று
பார்த்து வாங்கினார்.

புலித் தோலில்
அமர்ந்திருந்த
கடவுளைக் கண நேரம் கும்பிட்டார்.

சாப்பிட அமர்ந்தபோது
சொன்னார்,

கொஞ்சம் தள்ளி உட்காருங்களேன்
நான்
சைவம்

முற்றமும், மாற்றமும்

village.jpg

முன்பெல்லாம்
திருவிழாக்காலங்களில்
முற்றங்களில்
வரிசையாய் இருக்கும்
குட்டிக் குட்டி
சட்டி பானைகள்.

மரச்சட்டத்தில் சொருகிய
பிளாஸ்டிக் பொம்மை
சுற்றிச் சுற்றி
நடனமாடும்
தள்ளு வண்டிகளில்.

பனை ஓலை
விரல் கலைகள்
வரம் தந்த
கிலுகிலுப்பைகள்

வண்ணக் காகித
சுழல் விளையாட்டுகள்
காலமாற்றத்தால்
கருப்பு வெள்ளையில்
மாறிவிட்டது.

திருவிழா செல்ல
நேரமின்றி,
வரவேற்பறையில்
டி.வி.டி பார்க்கும்
கிராமத்து வீட்டு முற்றங்களில்
சீறிப் பாய்கின்றன
மேட் இன் சைனாக்கள்.

மரித்து மீண்டவர்கள்


மரித்து மீண்டவர்களின்
வாக்குமூலங்கள்
வியப்பூட்டுகின்றன.

சிலர்
வெளிச்சச் சுரங்கத்துள்
வழுக்கிச் சென்றார்களாம்.

சிலர்
வானவில்லுக்கு மேலே பயணித்து
மேகத்தின் உள்ளே
சுவர்கத்தில் அமர்ந்தார்களாம்.

சிலர்
இயேசுவை நேரில் கண்டு
நலம் விசாரித்தும்,

சிலர்
கைலாயத்தில் சிவனோடு
கை குலுக்கியும்,

சிலர்
ஆனந்தப் பூந்தோட்டத்தில்
நர்த்தனம் ஆடியும்
திரும்பி வந்தார்களாம்.

ஆனந்தக் கதைகள்
அளப்பவர்கள்
மீண்டும் மரித்துப் போக
மறுத்து விடுவது தான்
வியப்பளிக்கிறது.

தவறான புரிதல்கள்

  

மொட்டை மாடியில்
தனியே அமர்ந்து
நட்சத்திரங்களின்
கவியரயரங்கத்தை
ரசித்துக் கொண்டிருக்கையில்,

இருளின் மெளனத்தை
காகிதத்துக்குப்
புரியும் வகையில்
எழுதிக் கொண்டிருக்கையில்,

தென்னை மரத்தடியில்
மாலை வேளையில்
தென்னம் பூக்களை
நலம் விசாரிக்கையில்,

புழுதியற்ற காற்றுக்கு
புன்னகை
கொடுத்துக் கொண்டிருக்கையில்

அம்மா
அப்பாவிடம் பேசிக் கொண்டிருப்பாள்
எனக்கு
கல்யாண வயதாகி விட்டதாய்.

0