சாத்தப்பட்ட சன்னல்கள்

window.jpg

ரயில் பயணங்களில்
கவனத்தை
அறைந்து திறக்கின்றன
சாத்தப்பட்ட சன்னல்கள்.

சாத்தப்பட்ட
சன்னலுக்குப் பின்னே
ஓர்
மழலை
தந்தையின் முதுகில்
குதிரைச் சவாரி செய்யலாம்,

விடிந்து விட்டதை
மறந்து
ஓர்
காதல் சோடி
போர்வைக்குள்
பிணைந்திருக்கலாம்

இரவில் மறந்து போன
வீட்டுப் பாடத்தை
சீருடைச் சிறுமி ஒருத்தி
பதட்டத்துடன்
கிறுக்கிக் கொண்டிருக்கலாம்.

அலுவலக அவசர அம்மா
பரபரப்பை
சமையலறைக்கும்
வரவேற்பறைக்கும்
விதைத்துக் கொண்டிருக்கலாம்.

சாத்தப்பட்டே கிடக்கட்டும்
சன்னல்கள்.

திறந்து கிடக்கும் சன்னல்கள்
வரைந்து சொல்லும்
வெறுமையை விட
மூடப்பட்ட சன்னல்கள்
திறக்கும் கற்பனைகளே சுகமானவை.

பால்

rubber.jpg

அதிகமாய் வெட்டாதே
மரத்துக்கு வலிக்கும்
என்பான் தம்பி
லாவகமாய் ரப்பர் மரத்தில்
பால் வாய்க்கால் வெட்டிக் கொண்டே.

வெற்றிலை அளவே
வெட்டவேண்டுமென்பது
அவன்
சொல்லித் தான் தெரிந்தது.

கோடரிக்கும்
மருத்துவக் கத்திக்குமிடையேயான
வேறுபாடு
மரத்தை வெட்டுவதற்கும்
மரத்தில் பால் வெட்டுவதற்கும்.

பசு பால்தரும்
என்று மட்டும் சொல்லாமல்
ரப்பர் பால் தரும்
என்றும் சொல்லலாமே
என்றேன் தம்பியிடம்
அறிவு ஜீவியாய் என்னை பாவித்து.

பால் வெட்டிக் கொண்டிருந்த தம்பி
பதட்டப்படாமல்
சொன்னான்
எதுவும் பால் தராது.

ஒன்றைக் கட்டி வைத்துக்
கறக்கவேண்டும்
இன்னொன்றை வெட்டி வைத்து
இறக்க வேண்டும்


 

நகரப் பாசமும், நகரா பாசமும்

great-shot-225-small.jpg
நகரம்
உன் சட்டையின்
பிராண்ட் என்ன என
எட்டிப் பார்க்கும்.

உன்
வாசனையில் வருகின்ற
நறுமணத்தின்
பெயரைச் சொல்லும்

உன்
செல்போனின்
மாடல் பார்க்கும்.

உன்
வேலையின் விலாசமும்
கேட்கும்.

கிராமம்
நல்லாயிருக்கியா ?
என்று மட்டும் கேட்கும்.

நம்பாதீர்கள் மஹாஜனங்களே

fox.jpg 

இரவில்
நாய் ஊளையிட்டால்
எமன் வருகிறான்
என்கிறீர்கள்.

கல்யாணத்தைக்
கனவில் கண்டால்
துர்பலம்
நிச்சயம் என்கிறீர்கள்.

நிறைவேறா ஆசைகளோடு
செத்துப் போனவர்கள்
ஆவியாய் அலைவது
தவிர்க்க இயலாது
என்றும்

வீட்டில்
தேன் கூடு இருந்தால்
உயிர்சேதம்
உருவாகும் என்றும்
அடித்துச் சொல்கிறீர்கள்.

திருந்தவே மாட்டீர்களா
என்று
திட்டித் தீர்க்கிறேன்

வாஸ்து படி கட்டிய
புது வீட்டு
வாசலில் அமர்ந்து கொண்டு.

என் காதலி…

 

என்
சட்டைப்பையில் இருந்தது
அந்த அழகிய பேனா.

அது என்கையில்
இருக்கும் போதெல்லாம்
கண்ணுக்குள்
பூக்களும், மயில்களும்
அழகிப் போட்டி நடத்தும்,

மனசுக்குள்
மான்களும், மீன்களும்
நதிக்கரை நாணலருகே
பட்டும் படாமலும்
தண்ணீர் முத்தம் இட்டுக்கொள்ளும்.

அந்தப் பேனா
இல்லாத நாட்களில்
உள்ளுக்குள்
கவிதைகள் துள்ள மறுக்கும்.

அதைத் தீண்டாத நாட்கள்
விரல்கள்,
கைகளை விட்டு வெளியேறுவேனென
பிசைந்து பிளிறும்.

அந்தப் பேனாவுக்கும்
என்
சட்டை செளகரியமாய் இருந்தது.

என் கனவுத் தோட்டம்
கொஞ்சம்
கண்ணயர்ந்த வேளையில்
செடிகளுக்கு யாரோ
தீயிட்டு விட்டதாய்,
என் பேனாவை
யாரோ திருடிச் சென்றார்கள்.

உயிருக்குள்
இத்தனை கத்திகள்
சொருகப்பட்டிருந்த விஷயமே
உருவும் போது தான் உறைத்தது.

அந்தப்
பேனா இல்லாமல்
என் பொழுதுகள் அழுதன.

பிறிதொரு நாள்,
அறையில் தொலைத்த பேனாவை
கடற்கரையோரம்
கண்டேன்.
என் நண்பனின் சட்டைப் பையில் !

மகிழ்ச்சிக்குப் பதில்
அதிர்ச்சியே எழுந்தது.
பேனாவை திரும்பப் பெற
நான்
முயற்சியும் செய்யவில்லை

நண்பனின் கண்களில்
குற்றவுணர்ச்சி கொஞ்சம்
தூக்கலாய்த் தெரிந்தது.

பேனாவுக்கோ
புதுச் சட்டை தான் பொருத்தமாய்
இருந்ததாம்.

அன்றுதான் பேனாவை
தொலைத்தேன்,
நினைவுகளிலிருந்து.

நீண்ட நாட்களுக்குப் பின்,
நேற்று
தனிமையில் என் நண்பன்
புலம்பிக் கொண்டிருந்தான்.

அழுத்தங்கள் அதிகரிக்கின்றன,
தயவு செய்து
யாரேனும் வந்து
என் பேனாவைத்
திருடிச் செல்லுங்களேன்.

தாசனாகும் தகுதி தா, தாசனே.


பாரதி தாசனே…
உன்னை
எழுதும் தகுதியேனும்
எனக்கிருக்கிறதா ?

இரவல் ஒளிவாங்கி
இரவில் விரிக்கும்
சந்திரப் பாடல்களோடு
சிந்திப்பவர்கள் நாங்கள்,
நீ யோ
சூரியனிடம் சங்கமித்து
இன்னோர்
சூரிய குடும்பத்தையே சந்தித்தவன்.

மூட நம்பிக்கையின்
மூலைகளெங்கும்
நீ அடித்துச் சென்ற வெளிச்சம்
இன்னும்
ஈரம் காயாமல் இருக்கிறது.

பாட்டுக்குள் உயிர் வைத்த
பாரதியை
உயிருக்குள் வைத்து
உடனிருந்தாயே,
அந்த பிரபஞ்சப் பாக்கியம்
சத்தியமாய் எமக்குச் சாத்தியமில்லையே.

கிறுக்கன் என்றெல்லாம்
எழுதி எழுதி,
நீ
தெளிய வைத்தவைகள் தான்
எத்தனை எத்தனை ?

உன் அனல் கவிதைகளின்
உஷ்ண மூச்சில்
எங்கள்
பட்டாம்பூச்சிக் கவிதைகள்
சிறகுகள் இழக்கின்றன.

நாங்கள்
சுதந்திரமாய் எழுதுகிறோம்
நீ
சுதந்திரத்துக்காய் எழுதினாய்.

கவிதை எழுதி,
கர்வக் கிரீடம் சூட்டி
நீ கனவுகளுக்குள் பயணிக்கவில்லை,
போராட்டக் கால
புகலிடப் புலிக்குகையானாய்.
இருந்த பொருளை
இந்தியாவுக்காய் இறைத்தாய்.

சாதிச் சங்கிலிகளின் கனத்தில்
மானிடக் கழுத்துகள்
தலைகுனிந்துக் கிடந்ததை,
நிமிர்ந்து நின்று எழுதினாய்.

நதியைக் காண
கடல் கரை தாண்டுமா ?
உன் பாடலின் பிரமிப்பில்
பெரியார் பலநாள்
பரவசப் பட்டாராமே?

எழுந்த போது கதிரவனாகவும்
விழுந்த போது
விழுதாகவும் தான்
உன் பயணம்.
விறகுக் கூட்டில் பயிரான
சிறகுச் காடு நீ,
பறப்பதற்கு என்றுமே பயப்பட்டதில்லை.

நீ,
உருக்காலைகளை
உற்பத்தி செய்தவன்.
வெயிலுக்கெல்லாம் பயந்து
முதுகெலும்பை என்றும்
முறித்துக் கொண்டதில்லை.

தன்மான இயக்கத்தின்
தரமான தயாரிப்பல்லவா நீ.
அன்னிய மொழி நம்
அடுக்களை வந்தபோது,
தமிழ் தாகத்தால்
அருவிகளை எரிக்கவே
ஆயுதமெடுத்தவன் அல்லவா நீ.

தமிழ் சுவாசிக்க
சங்கடப் பட்டவர் காலத்தில்,
சுவாசச் செடி
பயிரிட்டவனல்லவா நீ.

உன்,
எழுத்துக்களின்
கால்வாசியைக் கூட
என்
பாய்மரக் கப்பல்
படித்துக் கடந்ததில்லை.

இப்போது,
கவிதைச் சுக்கானோடு
கரையிலமர்கிறேன்.
கோபித்துக் கொள்ளாதே.

ஆனந்தத்தின் இருப்பிடம் அறியாமை

.

உன்னிடமிருக்கும்
ஆடைகளின்
நிறங்களும் வடிவங்களும்
எனக்கு
அத்துப்படி.

எந்த தினங்களில்
நீ
எந்த ஆடை அணிவாய் என்பதையும்

எந்த ஆடைக்கு
எந்த
காதணி அணிவாய் என்பதையும்,

எந்தக் காதணிக்கு
எந்தக்
காலணி அணிவாய் என்பதையும்,

துல்லியமாய்ச் சொல்லிய
காலங்கள்
உண்டு.

நீண்ட வருடங்களுக்குப்
பின்
ஆக்ரோஷிக்கும் ஆனந்தத்துடன்
உனக்குத்
தொலை பேசுகையில்.

குழந்தை அழுகிறது
பிறகு பேசலாமா
என்ற
உன் குரலின் ஆடையையும்
புரிந்து கொள்ளாமல்
போய்விட முடியவில்லை
என்னால்.

அப்பாவே தான்

அப்பா தான்
எல்லாம் கற்றுத் தந்தார்.
எல்லாம்.

மரண வீடுகளில்
ஒலிக்கும்
ஒப்பாரியை விட
மிக மிக நீளமானது
அதைத் தொடர்ந்து நிலவும்
மெளனம்,
என்பது உட்பட.

படிகள்

வாழ்க்கை
ஒவ்வோர் படிக்கட்டிலும்
ஒவ்வோர் புதையலை
ஒளித்து வைத்திருக்கிறது.

வாழ்பவர்களோ
படிக்கட்டுகளைத்
தாண்டித் தாண்டி
தலை தெறிக்க ஓடுகிறார்கள்.

படிக்கட்டுகளின் உச்சியில்
தான்
புதையல் இருப்பதாய்
தலைமுறை தவறாமல்
தவறாய்ச் சொல்லிக் கொள்கிறார்கள்.

நிதானமாய் நடப்பவர்களை
ஓடுபவர்கள்
கோழைகள் என்கிறார்கள்.
காற்றுள்ள போதே
தூற்றத் தெரியாதவர்கள் என்று
தூற்றுகிறார்கள்.

தலைதெறிக்க ஓடி
மூச்சிரைத்து மூச்சிரைத்து
உச்சியில் போய்
முர்ச்சையாகி விடுகிறார்கள்.

ஓடுபவர்கள்
பதக்கங்களைச் சொந்தமாக்கி
படுக்கையில் சரிகிறார்கள்.

நடப்பவர்கள்
வாழ்க்கையைச் சொந்தமாக்கி
இடுக்கண்ணிலும் சிரிக்கிறார்கள்.

மரணத்துக்கு முந்திய
மணித்துளியில்,

வாழ மறந்து விட்டோ மே என்று
ஓடியவர்கள்
ஒப்பாரி வைக்கிறார்கள்.

அடுத்தத் தலைமுறையை
நடக்கப் பழக்கிய
நிம்மதியில்
நடந்தவர்கள் நித்திரையடைகிறார்கள்.

படிகள்
அடுத்த தலைமுறைக்காய்
புதையலைப் பத்திரப்படுத்தி
பேசாமல் கிடக்கிறது.

உனது குரல்

( இந்த வார புதிய பார்வை இதழில் வெளியான எனது கவிதை)

.
எப்போதோ
நீ விட்டுச் சென்ற
குரலின் விரல்களை
இன்னமும்
இறுகப் பற்றிக் கொண்டு நடக்கிறேன்.

பார்வையற்ற ஒருவனின்
பாதங்களுக்குக்
கீழே
பரவும் வெளிச்சம் போல
பயனற்று வழிகிறது
என் எதிர்பார்ப்பின் கதறல்.

உன் குரலில்
இப்போது
இனிமை கூடியிருக்கலாம்.
அல்லது
கரகரப்பு கலந்திருக்கலாம்.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவற்றில்
மிகப் பழமையான
சிற்பம் போல,
அதிகபட்சக் கவனத்துடனே
அன்றைய உன் குரலை
பாதுகாக்கிறேன்.

அந்தக் ஒலிக்குள் இருக்கும்
மொழி
என்னைக் காயப்படுத்திய
விலகலின் வார்த்தை தான்,
ஆனாலும்
விலக்காமல் வைத்திருக்கிறேன்.

ஒருவேளை
அந்தக் குரல் தொலைந்து
போனால்,
மீண்டும் ஒரு குரலுக்காய்
உன் வாசலுக்கு
யாசகனாய் வருவேனோ என்னும்
பயத்துடன்.