கவிதை : கண்டும் காணாமலும்…

 

பிரியமே,

நீ யாரோ
எவரோ நானறியேன்.

ஒரு வசந்தகால வளைவில்
சரேலென
என்
விழிச்சக்கரங்களைத் திருப்புகையில்
உன்னைச் சந்தித்தேன்.

பின்
திருப்பப்பட முடியா நிலையில்
சுருண்டுகிடக்கின்றன
என் நினைவுகள்.

பின்பொரு நாள்
ஓர்
குளிர்காலக் கூரையருகில்
கசிந்த மெல்லிசையிலும்,

மாலை நேர
மழைத்துளி ஒன்றின்
உணர்வுப் பாய்ச்சலிலும்,

கடத்தி வரப்பட்ட
காட்டாறு போல
புரண்டு படுத்தன
உன் நினைவுகள்

காலங்கள் தரும்
உன்னதமானவற்றில்
உன்னைக் கண்டேன்,

நீ
ஒரு முறை கூட
என்னைக் காணவில்லையே
எனும் உண்மையை மட்டும்
இலையுதிர் காலத்துக்காய்
ஒத்தி வைத்திருக்கிறேன்

 

அந்த நாள் ஞாபகம்…

gym.jpg

தாள லயத்துடன்
கிணற்றில்
தண்ணீர் இறைத்த காலத்திலும்,
 
காற்றின் முதுகெலும்பாய்
கழுத்தை நீட்டும்
சாய்ந்த தென்னையில்
ஏறி
குளத்தில் குதித்து
நீச்சலடித்த காலத்திலும்,
 
உச்சிக் கொம்பு மாங்காயை
எச்சில் ஒழுக குறிபார்த்து
கல்வீசிக்
கைப்பற்றிய காலங்களிலும்
 
வரப்புக்கும்
நிலப் பரப்புக்கும்
ஓடி ஓடி
பொழுது போக்கிய பொழுதுகளிலும்
தெரிந்திருக்கவில்லை,
 
இப்போது
தொப்பையைக் குறைக்க
மூடிய அறையில்
மூன்று மணி நேரம்
மூச்சு முட்ட
இயந்திரத்தில் ஓடும்போது தான்
தெரிகிறது
 
அன்று
வாழ்க்கையே உடற்பயிற்சி
இன்று
வாழ்க்கையில் உடற்பயிற்சி.

நிற்க அதற்குத் தக.

fish.jpg

வீட்டைப் பார்க்கலாமென
கூட்டிச் சென்றார்
நண்பர் ஒருவர்.

அடைந்து கிடந்த
மதிலைத் திறந்ததும்
குரலெழுப்பி வரவேற்றன
கூண்டுக்குள் கிடந்த
பலவண்ணப் பறவைகள்.

இடது புறக் கூட்டில்
குறுகிக் கிடந்தது
சங்கிலிகளால் சங்கமமான
நீளமான நாய் ஒன்று

வசீகரிக்கும்
வரவேற்பறையில்
தொட்டியின் திசைகளெங்கும்
கண்சிமிட்டின
கண்ணாடி மீன்கள்.

சுவரில் அறையப்பட்டிருந்த
மாலை சூடிய
புகைப்படத்தில்
கம்பீரமாய் நின்றிருந்தார்
கடந்தகால தாத்தா ஒருவர்.

யாரென்று கேட்டேன்.

சுதந்திரத்தையே மூச்சாய் கொண்டு
போராட்டக் களம் புகுந்த
என்
தாத்தா என்றார் பெருமையாய்.

தொட்டி மீன்கள்
சத்தமில்லாமல் சிரித்தன.
 

கவிதை : மூங்கில் நினைவுகள்

bamboo.jpg

அடுப்படியில்
அம்மா
மூங்கில் குழலால்
அடுப்பு ஊதிக்கொண்டிருக்கிறார்.

தோட்டத்தில்
மூங்கில் ஏணியில்
அப்பா
தென்னை மரம் ஏறுகிறார்.

தோட்டத்தில்
மூங்கில் மேடையில்
பாம்பென ஆடுகின்றன
புடலங்காய்கள்

உழைக்கும் வர்க்கத்தின்
தேவைகளின்
நெருக்குதலில்
மூங்கில் ஐக்கியமாகிக் கிடக்கையில்

 சாப்பிட்ட திருப்தியுடன்
நான் கவிதை எழுதினேன்
புல்லாங்குழலில்
வழியும்
காதலில் இசை குறித்து

நிதர்சனம்


தேனிலவுக்குச் செல்லும்
தம்பதிகளைப் போல
உற்சாகமாய்
வீசிக்கொண்டிருப்பதில்லை
காற்று எப்போதும்.

முத்தமிட்டுத் தூங்கி
முத்தமிட்டு விழித்து
புனிதத்துவம் அடையும்
பொழுதுகள்
இல்லாமல் போகின்றன
பல வேளைகளில்.

இழுத்து முடித்த சிகரெட்டை
செருப்புக் காலால்
நசுக்கும்
பல பொழுதுகள்.

அவிழ்ந்து வீழ்ந்த
கொலுசு மணியை
கவனமாய் எடுத்து வைக்கும்
சில பொழுதுகள்.

தவிர்த்தலுக்கும்
தவித்தலுக்குமிடையே
நகர்ந்து கொண்டிருக்கிறது
தாம்பத்ய ரயில்
எல்லா வீடுகளிலும்.

சொல்லிக் கொண்டோ
சொல்லிக் கொள்ளாமலோ.

ஊரடைதல் என்பது மீட்படைதல்


மீண்டும்
ஊருக்குத் திரும்புதல்
உன்னதமானது.

ஏதேதோ
எதிர்பார்ப்புகள்
இமை தொற்றிக் கொள்ள,

அர்த்தமற்றதென்றும்
அவசியமற்றதென்றும்
கருதப்பட்டவை எல்லாம்
வரவேற்கக் காத்திருப்பதாய்
உள்மனப் பட்சி
இடைவிடாமல் கத்தும்.

கதறக் கதறப்
பலாத்காரம் செய்யும்
பகல் வெயில் கூட
பரவாயில்லை.

வரவுக்காய் காத்திருக்க
ஓர்
மழலைப் புன்னகை உண்டெனில்
ஊரடைதல் என்பது
மீட்படைதல்.

உயிர்ப்பின் மீது
நம்பிக்கை இருப்பவர்களுக்கு
மரணம் என்பது
தற்காலிகப் பிரிவு.

சேர்வோம்
என்னும் நம்பிக்கை
இருப்பவர்களுக்கு
பிரிவு என்பது
தற்காலிக மரணம்.

சமத்துவம்


மாதவியை சந்தித்துத்
திரும்பு.
வீட்டுக் கண்ணகி
வாசல் தாண்டினால்
வெட்டு.

பாஞ்சாலியைப்
பாராட்டு
மனைவியை சந்தேகப்படு.

திருக் கல்யாணம்
போய் வா.
மகளின்
காதல் விருப்பத்தை நிராகரி.

சிவனில் பாதி
பெண் என்று பூஜி.
சாதம் தாமதமானால்
தலை கீழாய் குதி.

எதிர்த்துப் பேசாத
எல்லாவற்றுக்கும்
பெண்ணின் பெயரை வை.
பதில் பேசினால்
பெண்ணா நீ என
உரக்கச் சொல்.

கலியுகக்
கோவலர்களைச் சந்தித்து
இன்னும் சில
அறிவுரைகளை வாங்கு.

சமத்துவம் பேசும் பெண்களை
பின்
எப்படித் தான் சமாளிப்பதாம்

காதல் வாக்குவாதம்

( கதை போல் ஒரு கவிதை. அல்லது கவிதை போல் ஒரு கதை )
 

அலைகள்
சிப்பிகளை
கரையில் இறக்கிவைக்க
அயராது அலைந்துகொண்டிருந்த
மாலை வேளை.

சூரியன்
கடலில் குளிப்பதற்காய்
கால்பதித்திருந்த
கண்கவர் மாலை.

0

தரையில் விழுந்த
அயிரை மீனின் முதுகு துடைத்து,
மீண்டும்
அருவிக்குள் விடும்
மெல்லிய மனதுக்காரியிடம்
காதலன் கேட்டான்.

அவன் :

என்ன முடிவு செய்திருக்கிறாய் ?
என் பெற்றோருக்காய்
நான்
பெற்றுக் கொண்டவளை
விட்டுவிட சம்மதமில்லை எனக்கு.

நீ சொல்,
ஊரை விட்டு வருவாயா ?

0

துடைத்துத் துடைத்து
தேய்ந்து போன
விழியோரங்களோடு
காதலி விசும்பினாள்.
 
அவள் :

ஊரை விடுவதை விட
உயிரை விடுவதே
எளிதெனக்கு.

எனக்கு
சிறகு முளைத்ததென்று
சொல்லித் தந்தவர்களின்
கூட்டை எரிக்க
என்
கட்டைவிரலுக்கும்
திட்டமில்லை.

0
அவன் :

உனக்கு முன்னால்
இரண்டு முடிவுகள் மட்டுமே.

ஏதோ ஒன்றை
நீ
இழந்தாக வேண்டும்.
எதை ?

சிந்தை துலக்கிச் சிந்தி
தந்தையா ?
என் கையா ?
எதைப் பற்றிக் கொள்கிறாய் ?

0

அவள் :
 
ஏற்கனவே
பற்றிக் கொண்டு தான் இருக்கிறேன்
என்
இறக்கை கருகும் வாசம்
உனக்கு வரவில்லையா ?

சிப்பியாய் முத்தை
தர வேண்டும்
என
தியானமிருக்கிறேன் நான்
தவம் கலைக்கிறாய் நீ.

அவன் :

சம்மதிக்காத சிப்பிக் கூட்டை
திறந்து கொண்டு
பறந்து வர
இன்னுமா வரவில்லை
உனக்கு
இரண்டங்குலச் சிறகு ?

அவள் :
 
பருந்தைக் கண்டு
பதறித் துடிக்கும் தாய்க்கோழியின்
இறகுச் சூட்டில்
வெப்பம் கண்டவள் நான்.

என் தாய்க்கோழிக்கு
நான்
குஞ்சாய் இருப்பதல்லவா
பருந்தாய் மாறுவதை விட
பரவசமானது ?

அவன் :
 
அப்படியென்றால்
என்
காதல் கரைகளை விட
உனக்கு
உன் அன்புச் சிறைகள் தான்
அவசியமா ?

அவள் :
தராசுத் தட்டுகளோடு
நான் வரவில்லை.
எனக்கு
வேர் வேண்டுமா நீர் வேண்டுமா
என்றால்
வேரில் விழும் நீர் வேண்டும்
என்பேன்.

நீயோ
வேரை அறுத்து
நீரில் இட நினைக்கிறாய்.

அவன் :
 
நீ
தண்ணீர் தேடுவது
பாலை நிலத்தின்
நீர் நிராகரித்த பகுதிகளில்.

இங்கே
உன் கண்ணீர் ஈரம் கூட
கரையிறங்கும் முன்
இறந்து விடும்.

எப்படிச் சேகரிப்பாய்
தோணி செலுத்துமளவுக்குத்
தண்ணீரை ?

அவள் :
 
ஏன்
கேள்விகளால் என்னை
சிலுவையில் அறைகிறாய் ?

என் தந்தையின்
இதயத்தில்
உறைந்து கிடக்கும்
பனிப்பாறைகளை
உன்
உண்மைக் காதலால்
உருக வை.

பாருக்குள் புகுமுன்
ஒரு முறை
என்
கூரைக்குள் புகு.

அவன் :
 
என் இல்லத்து
சிக்கல்களைச் சரிசெய்வேன்
நான்.
உன்
வீட்டு வலைகளை
நீதான் விலக்க வேண்டும்.

அவள் :
 
தீமிதிக்கும் தவளையாய்
திரிகிறேன் நான்
நீயும் ஏன்
என் பாதங்களுக்குக் கீழே
தீ வளர்க்கிறாய்.

சிறு
ஈரத் துணியாய்
இருந்து விடேன்.

அவன் :
 
எனக்காய்
எதையும் நிராகரிக்க விரும்பாத
உனக்காய்
ஈரத் துணியாய் விரிவதில்
உடன்பாடில்லை எனக்கு.

என் மேல்
நம்பிக்கை வைத்தால்
என் கைமேல்
உன் கை வை
இல்லையேல்
வறண்டு போன வைகை மடியாய்
என்
காதலையும்
சூரியச் சூட்டில் உலர வை.

அவள் :
 
நீயும் வேண்டும்
என்கிறேன் நான்,
நீ மட்டும் வேண்டுமென
வலியுறுத்துகிறாய் நீ.

காதலனின் பணி
காதலிப்பதும்
காதலிக்கப் படுவதும் தானா ?

எந்த
சிக்கல் சாலையை
சீரமைப்பதிலும்
இல்லையா ?

அவள் :
 
என்னோடு வா
இல்லையேல்
உன்னோடு வாழ்.

இதுவே இறுதி.
இனிமேல்
என் காதல் உணர்வுகளை
உன் வீட்டாரின்
காலில் விழ வைக்காதே.

அவள் :
 
விழுவதற்குத் தயங்கும்
தண்ணீர்
அருவியாகும் அழகை
இழக்கும்.

வளைவதற்கு தயாராகாத
மூங்கில்
இசை விளைவிக்கும்
நிலை இழக்கும்.

நீ
விழுவதை அழிவென்கிறாய்
விழுவதால்
விழுதாகலாம் என்கிறேன்
நான்.

விழவேண்டாம் நீ
ஒருமுறை
வளைந்தேனும் கொடுப்பாயா ?

அவன் :
 
வீரனுக்கு அழகு
வீழாமல் இருப்பதில் தான்.

அவள் :
 
புறமுதுகிடுதலும்
பின் வாங்குதலும் மட்டும்
போர் வீரனுக்குப்
பொருத்தமோ ?

கவசம் மாட்டிக் கொண்டு
குகைக்குள்
குடியிருப்பவனோடு
எனக்கென்ன பேச்சு.

உனக்கு
காதல் முக்கியமென்றால்
சமரசத்துக்குச் சம்மதி.
இல்லையேல்
என்
காதலுக்கு மேல்
சமாதி வைக்கச் சம்மதி.

அவன் :
 
என்னோடு
நடைபோடு,
இல்லையேல்
எனக்கு விடைகொடு.

அவள் :
 
வீரம் என்பது
வீழ்த்துவதில் மட்டுமல்ல
வாழ்த்துவதிலும் தான்.
போய் வாழ்.
வீரனாகவே வாழ்.

நீ
உன் வீரத்தை இழக்கவேண்டாம்
ஏனென்றால்
அதற்குப் பதிலாய்
இந்த வினாடியில்
உன்
காதலியை இழந்து விட்டாய்.

0

காதலரின் சண்டை
வெப்பத்தில்,
சூரியன் மூழ்கிப் போனபின்னும்
கரையில்
வெப்பம் கலையாதிருந்தது.

செருப்புகளில் குடியிருந்த
மணலை உதறிக்கொண்டே
காதலி
கடலுக்கு முதுகு காட்டி
நடக்கத் துவங்கினாள்.

0

கூடவே நடந்த காதலன்
அவளை
ஆட்டோ வில்
அனுப்பி வைத்துக் கொண்டே
சொன்னான்.
 


அவன் :

நாளை
கொஞ்சம்
சீக்கிரமாகவே வந்துவிடு.

கடலலை
பழக்கமான காட்சியைப் பார்த்து
வழக்கம் போல
சிரித்துக் கொண்டிருந்தது.
 
0

பெரிய பூதம்.

 

.
திருப்தியின்
படிக்கட்டு மட்டும்
தீர்ந்தபாடில்லை.

முதல் வேலைக்காய்
நான்
சூரிய உலையில் பழுத்த,
என் முகத்தைத்
அழுந்தத் துடைத்து
நடந்தபோது,

நிரந்தரமாய் ஒரு வேலை
தான்
நினைவுக்குள் சுழன்றது.

பட்டங்களைப் பார்த்து
பெருமூச்சு விடும்
மளிகைக் கடைக்
காகிதமாய்
கசங்கிக் கிடந்தது மனசு.

சில அங்குசங்கள்,
கனத்த சங்கிலிகள்,
மறைத்து வைத்த
சருகுப் பள்ளங்கள் என
போராடித் தான்
பிடிக்க வேண்டியிருந்தது
அந்த யானையை.

பிடித்த யானை
சில வருடங்களில்
சுண்டெலியாய்
சிறுத்துப் போனதற்கு
சத்தியமாய்
யானை காரணியில்லை.

முதல் அலையில் கால் நனைத்து
அடுத்த அலையில்
முட்டி துடைத்து,
மூன்றாம் அலை நோக்கி
நீச்சலடிக்கும்
மீனவச் சிறுவனாய்
என் கடல் பயணங்கள் நடந்தன.

ஒவ்வோர்
அலையைப் பிடித்தபின்னும்
கண்டேன்
பின்னாலே துரத்தி வரும்
பெரிய அலையை !

அலைகளின் முதுகு தாவி
முதுகு தாவி
முன்னேறியதில்,
அலைகளற்ற
ஆழ்பகுதியில் நிற்கிறேன்
இப்போது.

தாமதமாய் வருகிறது
ஞானம்.

அலைகளைப் பிடிக்க
மட்டுமே
ஆர்வம் காட்டாமல்,
நீச்சலும் கொஞ்சம்
பழகியிருந்திருக்க வேண்டும்.

சோதனைச் சாலையில் கடவுள்.

 

.

ஆண்டவன் இருக்கிறார்
என
நான் நடும் நம்பிக்கையின்
கடுகு விதைகளை
என் ஆறறிவு
தயவு தாட்சண்யமின்றி
நறுக்கிப் போடும்.

இருக்கின்றார் என்று நான்
ஒரு காய் நகர்த்தும் போது,
எப்படி?
என நான்கு காய்கள்
எனக்கெதிராய் நகர்த்தப் படும்.

வெற்றிகளை நான்
பட்டியலிட்டால்,
என்னை விட வெற்றி பெற்ற
நாத்திக நண்பர்களை
அது
துணைக்கு அழைத்து வரும்.

தோல்விகளை நான்
எடுத்து வைத்தால்,
என்னை விட அதிகமாய் தோற்ற
ஆத்திக அன்பர்களை
அது ஆதரவுக்கு அழைத்து வரும்.

நோய்களுக்காய்
நான்
கடவுளைத் தொழுதால்
அதிசயம் நடக்காவிடில்
அவநம்பிக்கை வந்து சம்மணமிடும்.

வரலாறுகளுக்காய் நான்
இறையை நம்பினால்,
கல்வெட்டுகள் நிஜமா எனும்
சந்தேகம் என்
மனதில் வெட்டும்.

வரலாறுகள் உண்மை என
அறிவியல் சொன்னால்,
வரலாற்று நாயகன் உண்மையா ?
என
எதிர் கேள்வி உருவாகும்.

புரியாமல் நம்பும்
அறிவியல் கருவிகள் ஏராளம்,
ஆதாரமில்லாமல் ஆண்டவனை
நம்பும்போதோ,
அரை குறை சிந்தனைகள்
அலைக்கழிக்கின்றன.

ஆனாலும்
எங்கேனும்  ஏதேனும்
நடந்து விட்டால்,
மனசு
ஆண்டவா என்று தான்
ஆரம்பிக்கிறது.