துகிலுரிதல்

seye.jpg

பக்கத்து இருக்கை
கைபேசி உரையாடல்களில்
காதை எறிந்துவிட்டு
கவனித்திருக்கிறது
மனம்.

எதிர் இருக்கை
எஸ்.எம்.எஸ் களை
விழிகள்
உளிகளாய் மாறி
செதுக்கி எடுக்கின்றன.

காதலர்களின்
ரகசிய உரையாடல்களை
மோக
முனகல்களாகவே
மொழிபெயர்ப்பு செய்கிறது
மூளை.

சற்றே சாத்தப்பட்ட
கதவுகளின்
இடுக்குகளிடையே
வெளிச்சமென
நுழைந்து திரும்புகிறது
பார்வை.

ரகசியங்களின்
துகிலுரியவே ஆர்வம்
எப்போதும்,
ரகசியம்
நமதில்லை எனும்போது.

மூன்றாண்டுக் காதல்

 

.
காதலை
எழுதும்போதெல்லாம்
என் பேனா முனையும்
உன்னைத் தான்
நினைத்துக் கொள்கிறது.

உன்னைப் பற்றிய
என்
பிரமிப்புகளும்,
பிரதிபலிப்புகளுமே
என் கவிதைகளில்.

உனக்கான கடிதங்களை
கவிதையாகவும்,
கவிதைகளை
உனக்கான கடிதங்களாகவும்
பாவிக்கிறது மனது.

அதை
வாசிக்கும் போது
உன்
பருவப் புருவம் விரியும் அழகும்,
அதிசய உதடுகள்
அசையும் அழகும்,
என்
கற்பனைகளில் கடலாய் விரியும்.

எழுத்துக்களைக் கூட
உன்
விரல்கள் தீண்டும் என்பதால்
மெல்லமாகவே
இறக்கி வைக்கிறேன்.

என்
கவிதைகளை
நீ
கண்களில் ஒற்றி
மார்போடு அணைத்துக் கொள்ளும்
கனவுகள் தான் தினமும்.

அது
நிறைவேறாதோ எனும்
கவலையில் தான்
அனுப்பியதேயில்லை
உனக்கு.
இதுவரை எதையும்.

சந்தர்ப்பங்கள்

.

யாரும்
கவனிக்கவில்லை என்பதற்காய்
வலை
பின்னாமல் இருப்பதில்லை
சிலந்தி,

யாரும்
பார்க்கவில்லை என்பதற்காய்
புல் தின்பதில்லை
புலி.

தரையில் தவழும்
சிறு எறும்பும்,
தலையில் சுழலும்
சிறு கொசுவும்,
துளைகள் தழுவும்
சிறு தேனீயும்

தவறிழைக்கும் சந்தர்ப்பத்துக்காய்
தவமிருப்பதில்லை.

பட்டாசுக் கடையில்
கூட
சட்டென நீளும்
ஓணான் நாக்காய்
காத்திருக்கும் கரங்கள்
மனிதனுடையது மட்டுமே.

பாவம்,

கவனிக்கப் படுகிறாய் என்பதை
நிரூபிக்க
கடவுள்
பெரும்பாடு படவேண்டியிருக்கிறது.

நிற்காத நிமிடங்கள் (இந்த வார புதிய பார்வையில்…)

நிற்காத நிமிடங்கள் 

.
விரல் உரசினாலே
மின்னலடித்த காலம் உண்டு
என்
உதடுகள் உரசினால் கூட
சலனமற்றிருக்கிறாய்
இப்போது.

உன்னுடைய
மனசுக்கு வயதாகி விட்டது.
உன்னுடைய
காமத்தின் கலத்தில்
ஊற்றப்பட்டிருந்த காதல்
காலாவதியாகி விட்டிருக்கிறது.

உன்னுடைய
பேச்சிலிருந்த
கவிதை காணாமல் போய்
அவசர தொனியே
அலாரமடிக்கிறது எப்போதும்.

உன்னுடைய
கோபத்தின் எருதுகள்
மிருதுவான புன்னகையை
மிதித்துச் செல்கின்றன.

என்னோடு அமர்ந்து
பேசிக்கொண்டிருப்பது
உனக்கு
நேரத்தை வீணடிப்பதாகி விட்டது.

நீர்வீழ்ச்சியிலேயே
தங்கி விட முடியாத
தண்ணீர் துளியின் தவிப்புடன்
ஓடிக் கொண்டே இருக்கிறேன்.

அடுத்த
அருவியின்
வரைபடமில்லாமல்,
வெறும்
எதிர்பார்ப்புகளை ஏந்திக்கொண்டு.

( இந்த வார புதிய பார்வை இலக்கிய இதழில் வெளியாகி இருக்கும் எனது கவிதை  )

அகலாதவை…

.

தொடர்ந்து துடைத்தாலும்
புழுதி வலைகளை
சிலந்திகள்
எழுதிக் கொண்டே இருக்கின்றன.

சுத்தமாக வைத்திருக்கும்
இடங்களிலும்
கொசுக்களின் எச்சங்கள்
விழுந்து கொண்டே இருக்கின்றன.

பல்லிகள் வந்து போன
அடையாளங்கள்
மர பீரோ ஓரங்களில்
பதிவாகிக் கொண்டே இருக்கின்றன.

துடைத்துத் துடைத்துத்
தூய்மையாக்கினாலும்,
நினைவிடுக்குகளில்
இன்னும்
நின்று கொண்டே இருக்கின்றன
கடந்த கால கசப்புகளில் சில.

பனைக்காலக் கனவுகள்

.

உடைந்து வழியும்
நிலவை
கிழியாத இலையில்
ஏந்திப் பிடித்திருக்கும்
பனைமரம்.

அதன்
சொர சொர மேனியில்
சிக்கிக் கொண்டால்
மார்பு
யுத்தக் களமாகி விடாதா என
விரல்கள் தொட்டு
வியர்த்திருக்கிறேன்.

பனை மரத்தடியில்
பறங்காய் சுட்டுத் தின்று,
கலையம் சாய்த்துக்
கள் குடிக்கும்
பனையேறியைக் கண்டு
பயந்துமிருக்கிறேன்.

சுட்ட பனங்காயின்
சிவந்த நாரை
சூயிங்கமாய் தின்று மகிழ்ந்ததும்,
நொங்கு தின்ற
கூந்தை எடுத்து
வண்டி செய்து விளையாடியதும்
ஞாபக நிறுத்தங்களில்.

திளாப்பும் கையுமாய்
வாழ்ந்த
என் தாத்தாவையும்,

பதனீரும் விறகுமாய்
வாழ்ந்த
என் பாட்டியையும்,

இந்த
பனைபரம் தான் எனக்கு
நினைவூட்டிக் கொண்டிருந்தது
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை.

இப்போது,
தாத்தாவின்
மங்கிப் போன
புகைப்பட வெளிச்சத்தில்
அசைகின்றன
என் பனைமர நினைவுகள்.

நீ எழுதிய கவிதை

.

பல் கொண்டு
காதல்
சொல்கொண்டு
புருவ
வில்கொண்டு
விழியின்
உள் கொண்டு

பறித்துப் போ என்காதல் பூவை – நீ
விழியோரம் கள்ளூறும் பூவை.

0

காதல் தீ
சிறு
மோகத் தீ
எடு
ஆரத்தி
நீ
வாய்பொத்தி

வரவேற்க மறுக்கின்ற காதல்- அது
பாறையிலே தெறிக்கின்ற சாரல்.

0

நாதத்தால்
மன
கீதத்தால்
வாய்
வாதத்தால்
எனில்
நீபூத்தாய்

உருகியதால் கடலான நீரும் – நீ
பருகிட மறுத்திட்டால் தீரும்.

0

சொல்லிவிடு
பெண்ணே
கிள்ளி விடு
மெல்ல
அள்ளியெடு
நெஞ்சின்
முள்ளையெடு

கரையேறத் தேவை ஓர் தெப்பம் – நீ
சிரித்துப் போ வரும் காதல் வெப்பம்.

0

தொடர்கள்

.

தீர்க்க சுமங்கலிக்கும்
சொர்க்கத்துக்கும்
இடையே
மதிய உணவு பரிமாற வேண்டும்.

கணவருக்காக வருகையில்
காஃபி,

கோலங்கள் முடிவதற்குள்
இரவு உணவு.

வீட்டுக்கார அம்மாக்களை
கடிகாரம் இல்லாமல்
வாழப் பழக்கியிருக்கிறது
தொலைக்காட்சி.

( திசைகள் : மேய் 2006 )

செல்…லுமிடமெல்லாம்

.

செல்போனின் கைகளில்
தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்
மனிதர்கள்.

ஏதோ ஓர் செல்போன்
சிணுங்குகையில்
எல்லோரின் கைகளிலும்
முளைக்கின்றன செல்போன்கள்.

இளசுகளின் விரல்கள்
குறுஞ் செய்திகளில்
குடியிருக்கின்றன.

எப்போதேனும்
சந்தித்துக் கொள்ளும்
நண்பர்களும்
பேசிக்கொள்கிறார்கள்
வேறு வேறு மனிதர்களிடம்.
தத்தம் செல்போன்களில்.

அலுவலகங்கள் முதல்
சந்தைகள் வரை
இவை
சத்தமிட்டுக் கொண்டே இருக்கின்றன

செல் பேசி இல்லாமல்
செல்லும் பயணங்களெல்லாம்
தவிப்பையே
தருகின்றன.

முன்பெல்லாம்
மனிதர்களிடம் இருந்தது
செல்போன்.
இப்போதோ
செல்போனிடம் இருக்கிறார்கள்
மனிதர்கள்.

முதலிரவு…

 முதலிரவு என்னும் தலைப்பில் ஒரு திரைப்படப் பாடல் எழுதச் சொன்னால் இப்படித் தான் எழுதியிருப்பேன்…

.

.
அச்சப்பட்டு வெக்கமும்
வெக்கப்பட்டு அச்சமும்
வெளியேறிப் போனதொரு ராத்திரி – அது
சத்தமிட்ட முத்தமும்
முத்தமிட்ட சத்தமும்
முக்காடிட்டுப் போன முதல் ராத்திரி.

0

ஏட்டுச் சுரைக்கா
உதவும் கறிக்கா ?
இல்லையிண்ணு சொன்னதடி பாடமே – நான்
கண்டதில்லை அன்று வரை நாணமே.

விரலில் பழுதா
இதயம் விழுதா
சேலை ஓரம் தொட்ட போதும் கூசுதா – நீ
பொத்தி வெச்ச மூச்சுக் காத்து பேசுதா ?

துவங்கும் முன்னமே துவண்ட சின்னமே
அழைக்கும் கன்னமே எனது கிண்ணமே
விட்டு விடு வாழை மர நாணமே – நீ
வெட்ட வெட்ட மீண்டும் முளை காணுமே.

0

முதலில் முத்தமா
விரல்கள் யுத்தமா ?
சொல்லி விடு பார்வையாலே பாவையே – உன்
சம்மதமும் சக்தி தரத் தேவையே.

முடிவில் முக்தியா
கற்ற யுக்தியா
கூச்சரிக்கும் ஆசை நெஞ்சில் வீசுதே – நீ
உச்சரிக்கும் பாஷை பிஞ்சில் காயுதே.

துணிந்து முன்னணி வந்தேன் கண்மணி
பணிந்து கொள்ளடி செய்வோம் கூட்டணி
விட்டு விடு வெட்கக் கடல் போகட்டும் – அலை
விட்டு விட்டு நம்மைத் தொட்டு ஓடட்டும்.

0