குடும்ப வெற்றியின் ரகசியங்கள் : நேரம் ஒதுக்குங்கள்

நேரம் ஒதுக்குங்கள்

couple talking
நம்பினால் நம்புங்கள், கணவன் மனைவியரிடையே உள்ள பிரச்சினைகளின் மையம் இந்த விஷயம் தான். “எனக்காக அவரு டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்கறாரு” !

ஆண்களுடைய விருப்பங்களும் பெண்களுடைய விருப்பங்களும் தனித்தனியானவை. ஆண்களுக்கு கிரிக்கெட் மோகம் இருக்கும் போது, பெண்களுக்கு சீரியல் மோகம் இருக்கும். ஆண்கள் தூங்கி ஓய்வெடுக்க விரும்பும் போது பெண்கள் பேசிக்கொண்டிருக்க விரும்புவார்கள். ஆண்களுக்கு ஷாப்பிங் அலர்ஜியாய் இருக்கும். பெண்களுக்கோ அது தான் எனர்ஜியாய் இருக்கும். இப்படி மாறி மாறி இருக்கின்ற ரசனைகள் ஒரு கூரையின் கீழ் வந்து சேர்வது தானே குடும்பம் ! இந்த இடத்தில் ரசனைகள் முட்டிக் கொள்ளாமல் எப்படி இணைந்து பயணிக்கின்றன என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

“அவருக்கென்ன, ஆபீஸே கதின்னு கட்டிகிட்டு அழுவாரு” என மனைவி புலம்பினால் உடனே எகிறிக் குதிக்காதீங்க. ஒரு நிமிடம் அப்படியே நின்று நிதானித்துப் பாருங்கள். உண்மையில் எனது நேரத்தில் எத்தனை சதவீதம் வேலைக்காய் அல்லது வேலை சார்ந்த விஷயங்களுக்காய் செலவிடுகிறேன். அந்தப் பட்டியல் உண்மையானதாய் இருக்கணும். நீங்க வீட்டில் உட்கார்ந்து செல்போனில் ரெண்டு மணி நேரம் ஆபீஸ் விஷயங்களை அரட்டையடிக்கிறது கூட இந்த பட்டியல்ல தான் வரணும். !

இப்போ அப்படியே மனைவியர் ஒரு நிமிஷம் யோசிங்க. உங்களுடைய நேரத்தில் கணவனுக்காக ஸ்பெஷலாய் நீங்கள் ஒதுக்கும் நேரம் எவ்வளவு ? சீரியல் பார்ப்பது, வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, குழந்தைகளைக் கவனிப்பது எனும் விஷயங்களைத் தாண்டியும் நீங்கள் கணவனோடு நேரம் செலவிடுகிறீர்களா என்பது ஒரு குட்டிக் கேள்வி.

எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் ஒன்றுண்டு ! செலவிடும் நேரம் “குவாலிடி டைம்” ஆக இருக்க வேண்டும். அரை மணி நேரம் ரெண்டு பேரும் பேச உக்கார்ந்து குற்றம் சொல்ல ஆரம்பித்தால் எல்லாம் போச்சு. கிடைக்கிற அந்த அரை மணி நேரத்தை எப்படி ஒரு அற்புத நேரமாய் செலவிடுகிறீர்கள் என்பதில் ரொம்பவே கவனமாய் இருங்கள். ஒரு ஐந்து நிமிட உரையாடல் கூட உங்களுடைய ஒரு நாளை ஆனந்தமாக வைத்திருக்க முடியும். ஒரு நிமிட சண்டை கூட உங்களுடைய ஒரு வார கால நிம்மதியை புதைகுழிக்குள் போட்டு மிதிக்கவும் முடியும்.

கணவனும் மனைவியும் மாறி மாறிக் குற்றம் சொல்லத் தொடங்கினால், தோற்றுப் போவது கணவனுமல்ல, மனைவியுமல்ல, தாம்பத்யம் தான். ஒரு ஸ்பெஷல் நேரத்துக்காக ஒரு சீரியலை கட் செய்வதோ, ஐ.பி.எல் மேட்சை ஆஃப் பண்ணி வைப்பதோ தாம்பத்யத்தைத் தழைக்க வைக்கும் !

ரெண்டு பேருக்குமே ஒரு குறிப்பிட்ட நேரம் ஃபிரீயா இருக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில் ஒருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்வது நல்ல பழக்கம். அது ஏதோ ஒரு தியாகம் மாதிரி, “உனக்காக என் வேலையை விட்டுட்டு வந்திருக்கேன். இப்போ பேசு” என சொன்னால் எல்லாம் போச்சு. விட்டுக் கொடுத்தலின் முக்கிய அம்சமே, தான் விட்டுக் கொடுத்தது அடுத்த நபருக்குத் தெரியாமல் இருப்பது தான். அதில் தான் உண்மையான அன்பு ஒளிந்து இருக்கிறது !

அதை விட்டு விட்டு, “நான் பிரியா இருக்கும்போ நீ பிஸியாயிடறே, நான் பிஸியா இருக்கும்போ நீ ஃபிரீ ஆயிடறே” அப்புறம் எப்போ பேசறதாம் ? என புலம்புவதிலும் அர்த்தம் இல்லை. கணவன் மனைவி இணைந்து அதிக நேரத்தைச் செலவிட்டால் அந்த குடும்பங்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குடும்ப இயலின் பால பாடம் ! அத்தகைய தம்பதியருக்கு வருகின்ற சிக்கல்களெல்லாம் விரைவிலேயே மறைந்து விடுகின்றன. சந்தேகம் இருந்தால் உங்கள் தாத்தா, பாட்டிகளிடம் கேட்டுப் பாருங்கள். எப்போதும் சுற்றிச் சுற்றி வரும் அன்யோன்யமும், சேர்ந்தே ஊட்டி, உண்டு, சிரித்துக் களிக்கும் மாலைப் பொழுதுகளும் தங்களையறியாமலேயே குடும்ப வாழ்க்கையை எத்தனை ஆரோக்கியப் படுத்தியிருக்கின்றன என்பதை !

கணவன் மனைவி சேர்ந்து செலவிட எப்படி டைம் கண்டு பிடிப்பது ? அல்லது நேரத்தை எப்படி உருவாக்குவது ? அதற்கு சில வழி முறைகள் உண்டு.

1. இருவருக்குமே பிடித்தமான ஒரு பொதுவான ஹாபி, அல்லது விருப்பத்தை வைத்துக் கொள்ளுங்கள். சேர்ந்து நேரம் செலவிட இது ஒரு அற்புதமான வழி. அது விடிகாலை ஜாகிங் ஆனாலும் சரி, தோட்டத்தைப் பராமரித்தல் ஆனாலும் சரி, அல்லது இசை, நடனம் எதுவானாலும் சரி, இணைந்தே பயணிக்கும் ஒரு ஹாபி இருவரையும் வெகுவாக இணைக்கும். சேர்ந்து செலவிடும் நேரத்தை உருவாக்கிக் கொடுக்கும் !

2. ஏதோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை இருவரும் பேசுவதற்காய் ஒதுக்குங்கள். அது காலையில் காஃபி போடும் நேரமானாலும் சரி, மாலையில் ஓய்வாய் இருக்கும் நேரமானாலும் சரி. உங்கள் வேலைக்குத் தக்கபடி ஒரு நேரத்தை ஒதுக்கிப் பாருங்கள். அந்த நேரத்தை உங்கள் மனம் திறந்த பகிர்தலுக்காய் ஒதுக்குங்கள். நிச்சயம் உறவு வலுப்படும்.

3. இணைந்தே பிரார்த்தனை செய்கிறீர்களா ? உங்கள் வாழ்க்கை வலுப்படும் என்பதில் ஐயமில்லை. இறைவனுக்கு முதலிடம் தரும் இல்லங்களில் ஈகோ விலகி விடுகிறது, விட்டுக் கொடுத்தலும், மன்னித்தலும் தவழ்கிறது அதனால் குடும்ப உறவு ஆழமும், அர்த்தமும் அடைகிறது. இணைந்தே பிரார்த்தனை செய்வதும், அடுத்தவருக்காய் பிரார்த்தனை செய்வதும் உறவை வலுப்படச் செய்யும் விஷயங்கள்.

4. மனைவியோ, கணவனோ ஒரு வேலை செய்யும் போது அந்த வேலையைப் பகிர்ந்து செய்யுங்கள். அப்போது ஒரே இடத்தில் ஒரே வேலையைச் செய்யும் போது இருவருமே இணைந்து கொஞ்சம் நேரத்தைச் செலவிடும் சூழல் தோன்றும். அது வேலையைத் தாண்டி சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் !

5. எல்லா வேலையையும் செய்து முடிச்சப்புறம் தான் குடும்பம், எனும் அக்மார்க் மடத்தனத்தைச் செய்யவே செய்யாதீர்கள். உங்கள் பட்டியலில் குடும்பத்துக்காக நேரம் செலவிடுதல் டாப் 2 க்குள் நிச்சயம் இருக்கட்டும்.

6. இது தொழில்நுட்ப யுகம், சோசியல் நெட்வர்க் காலம். உங்கள் போனிலும், கம்ப்யூட்டரிலும் உள்ள இணையத்தை எட்டிப் பார்க்காமல் இருந்தாலே போதும் கொஞ்சம் நேரத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணைக்காக உருவாக்கி விட முடியும் ! சந்தேகம் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

7. மாலையில் செய்ய வேண்டிய சில வேலைகளை விடியற்காலையில் முடித்து விட முடியுமா என பாருங்கள். அந்த நேரத்தில் நீங்கள் முக்கியமான சில அலுவல்களை முடித்தால் மாலை நேரம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவும், குடும்பத்தினருடன் பேசவும் ஒரு வாய்ப்பை உருவாக்கித் தரும்.

8. யார் என்ன கேட்டாலும், “ஓகே…” என தலையாட்டும் பழக்கத்தைக் கடாசுங்கள். குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை தேவையற்ற கமிட்மென்ட்களுக்காக கை கழுவி விடாதீர்கள். மிக முக்கியமான விஷயங்கள் தவிர மற்றவையெல்லாம் “சாரி.. நோ…” எனும் உங்கள் பதிலுடன் விடைபெறட்டும் !

9. தனியே செலவிடும் நேரங்களை சும்மா சினிமா பாக்கவோ, சீரியல் பாக்கவோ செலவிடாதீர்கள். அது ஒருவகையில் தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனிமரம் தான் – கதை தான். அதை விட, சேர்ந்து நடப்பது, பேசுவது, ஒரு புதிர் விளையாட்டு விளையாடுவது, கேரம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவது என செலவிட முயலுங்கள்.

10. மனைவிகள் அன்பானவர்கள். நீங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டே இருக்காவிட்டால் கூட வீட்டில் இருக்கிறீர்கள் எனும் உணர்வே அவர்களுக்கு நிம்மதியையும், பாதுகாப்பையும், நிறைவையும் தருவதுண்டு. எனவே தேவையற்ற நண்பர் சகவாசங்களைக் குறைத்து வார இறுதிகளிலெல்லாம் வீட்டிலேயே இருங்கள்.

டைம் இல்லை என்பதெல்லாம் அக்மார்க் பொய். எல்லோருக்கும் 24 மணி நேரம் தான் உண்டு. அதை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பது தான் முக்கியம். அதில் எவ்வளவு மணி நேரம் உங்கள் மனைவிக்காகவோ, கணவனுக்காகவோ ஆனந்தமாய்ச் செலவிடுகிறீர்கள் என்பது தான் கேள்வி !

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், அழுத்தமாக. உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நேரம் ஒதுக்குங்கள், அது ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை.

 

சொல்ல மறக்காத கதை

friends.jpg

நேர்கின்றன,
பழைய நண்பர்களை
எதேச்சையாய்
சந்தித்துக் கொள்ளும்
பரவசப் பொழுதுகள்.
.
கண்களில் மிதக்கும்
குறும்புகளைத் தொலைத்தும்,
உரக்கப் பேசும்
இயல்புகளைத் தொலைத்தும்
புது வடிவெடுத்திருக்கிறார்கள்
பலர்

.

பலருடைய
மனைவியர் பெயரில்
கல்லூரி கால
காதலியர் பெயர் இல்லை.

.

ஒருவேளை
குழந்தைகளின் பெயரில்
இருக்கக் கூடும்.

.

ஒல்லியானவர்களை
தொப்பையுடனும்,
குண்டானவர்களை
ஒல்லிக்குச்சானாகவும் சந்திக்க
நேர்ந்திருக்கிறது.

.

சாலையோர தேனீர் கடையில்
டீ குடித்து
நினைவு கிளறிய நிம்மதியில்
விடை பெறுகையில்
தவறாமல்
சொல்லிச் செல்கிறார்கள்.

.

வலி கூட்டும்
ஏதேனும் ஒரு மரணச் செய்தியை.

ஆடைகள்

dress.jpg

சில ஆடைகள்
விசேஷமானவை.

சிறுவயதில்,
விழாக்கால நாள் வரை
காத்திருந்து பெற்றுக் கொள்ளும்
புத்தாடை மணம்
இன்னும்
நாசிகளில் உயிர்ப்புடன்.

வருட இடைவெளி
வாங்கிக் குவித்த ஆடைகள்
ஆயிரமெனினும்
இன்னும் நினைவிருக்கும்
பால்ய கால ஆடைகளின்
டிசைன்கள்.

அம்மாக்களின்
அலமாரிகளில்
திருமண வாசம் மாறாமல்
மௌனித்திருக்கும்
பட்டுப் புடவைகள்
விலைமதிப்பற்றவை.

காதல் பரிசளித்த ஆடை
நேசம் பரிமளித்த ஆடை
என
எல்லோரிடமும் இருக்கக் கூடும்
ஏதேனும் ஓர் ஆடை.

காலக் கரையான்
தின்று தீர்த்தாலும்
இன்னும்
உயிர்ப்புடன்
நினைவுகளின் மேனிகளில்
மாட்டப்பட்டு
புத்தம் புதிதாய்
 

தந்தையின் நினைவாக…

appa.jpg 
எத்தனை தான்
அன்பு செலுத்தியிருந்தாலும்
குறைவானதாகவே
தோன்றும்
மறைவிற்குப் பின்

இன்னும் ஏதேதோ
செய்திருக்க வேண்டுமென்றும்
பாசத்தை
வேலிகளறுத்து வழங்கியிருக்க
வேண்டுமென்றும்
நெருங்கி வரும் நினைவு நாட்கள்
நெருஞ்சி தைக்கின்றன.

எதுவெனினும்
எவ்விதமெனினும்

எத்தனை ஆண்டுகள்
கூடவே வாழ்ந்தாலும்

இன்னும் கொஞ்சகாலம்
வாழ்ந்திருக்கக் கூடாதா
என் தந்தை ?
என்றே தோன்றும்
ஒவ்வோர் மகனுக்கும்.

இப்படியும் இருக்கலாம்…

திருநங்கையர்
நெருங்கி வருகையில்
விரைவிலேயே துரத்திவிட
விரல்களின்
முளைக்கின்றன காசுகள்.

நிறுத்தத்தின்
ஏற்றப்பட்ட கார் கண்ணாடிகள்
பரட்டைத் தலை
சிறுவர்களால்
அழுக்காகாமல் தடுக்க
அவசரச் சில்லறைகள்.

தொட்டு விடுவார்களோ
எனும்
திடுக்கிடலின் விளைவாக
தொழுநோயாளிகளுக்கு
ஓரிரு ரூபாய்கள்.

மனித நேயம்
இல்லாதிருப்பதன்
அறிகுறியாகவும் இருக்கலாம்
பிச்சையிடுதல்

சிறுமி

train.jpg

 ரயில் வண்டியில்
வளையத்துக்குள் உடலைச் சுருக்கி
வித்தை காட்டி
தட்டை ஏந்தும் சிறுமியின்
விழிகளில்
மொழி பெயர்க்க முடியாத
கவிதைகள் உறைந்து கிடக்கும்.

பையைத் துழாவி
எடுத்த காசு
உள்ளம் கையை இறுகப் பிடிக்கும்

சிறுமிகள் காணவில்லை
கண்ணீர் விளம்பரங்களின்
ஈரம்
கசியக் கசிய.

சிறு கவிதைகள்

kid2.jpg
உசிலம்பட்டியின்
குடிசைக்குள்
வீறிட்டழும் பெண்குழந்தையின்
அழுகுரல் அடக்க,

அவசரப்பட்டு
ஒடித்து வந்த கள்ளிச்செடியின்
தடித்த உடலில்
கசிந்து கொண்டிருந்தது
பால் மணம் வீசும்
ஓர்
காதல் ஜோடியின் பெயர்.

 beach.jpg

கடற்கரை மணலில்
மெய்யுரசி
உள்ளங்கையில்
உலகப்படம் வரையும்
காதலர்கள்
வறுத்தெடுக்கும் மதிய வேளையில்
கேட்கிறார்கள்
இன்று ஏன் வெயிலே இல்லை ?

 sad.jpg

ஒற்றைப் பறவையின்
சோகப் பாடல்,
நிசப்தம் துளைக்கும்
ஒற்றை நாயின்
ஏகாந்தக் குரைப்பு
கண் சிமிட்டிக் கதை பேசும்
நட்சத்திரங்கள்
என
நான் கவிதைகளில் சொன்ன
எதுவும் நிகழவில்லை

நீ
உண்மையிலேயே விலகிய
அந்த நாள் இரவில்

நிர்வாண நிஜங்கள்

ear.jpg

குளியலறையின்
நிர்வாண நிஜங்கள்
வரவேற்பறைகளில் வந்தமர்வதில்லை.

உடைகள் மாற்றி
தலைமுடி சீவி
வரவேற்பறை நுழையுமுன்
அவசரமாய் துழாவி
இதழ்களில் மாட்டும்
போலித்தனப் புன்னகை சிரிக்கிறது.

கண்ணியப் பார்வைகளும்
பெண்ணியப் பேச்சுகளுமாய்
நீளும்
உரையாடல்களினூடாக
மனதுக்குள் விரியும்
படுக்கையறைக் காட்சிகளை
வரவேற்பறைகள் மொழி பெயர்ப்பதில்லை.

கை குலுக்கல்களிலும்
நட்புச் சிலிர்ப்புகளிலும்
சுவாரஸ்யச் சங்கல்பங்களிலும்
உள்ளுக்குள்
உடைந்து தெறிக்கும்
கொட்டாவி சத்தமிடாமல் சிரிக்கும்.

மீண்டும் சந்திப்போம் என்று
கைகுலுக்கி விடைபெறுகையில்
காதை மட்டும்
மறந்து வைத்துவிட்டுப் போக முடிந்தால்
தரிசிக்கலாம்
தூய்மையான நேசத்தின்
துகிலுரியப்பட்ட உண்மைகளை

மின்னஞ்சல் காதலின் இழப்புகள்

aahv001961.jpg
மேகத்தின் தோளிலிருந்து
பூமிக்குப் பூணூலால்
விழுந்த மழை,
வெள்ளமாய் வடிவெடுத்து
அக்கிரகாரத்துப் பாத்திரங்களையும்
ஒதுக்கப்பட்டப் பாத்திரங்களையும்
ஒரே உயரத்தில்
மிதக்க வைத்துச் சிரித்தது

parr.jpg

பரம்பரைக் கூண்டுக் கிளி
வியந்தது
வெளியேயும் பறக்குமா
கிளிகள் ?

tree.jpg

சாலையோர
மரங்களை
வெட்டிச் செல்லுங்கள் கவலையில்லை
அதன்
நிழலையாவது
விட்டுச் செல்லுங்கள் !
பாரம் தூக்கும் பாமரனுக்காய்.

lips.jpg

மின்னஞ்சல்
காதல்
பலவற்றை இழந்திருக்கிறது
காதலி
எச்சில் தொட்டு ஒட்டிய
கடிதங்கள் உட்பட

aahv001961.jpg

இந்தியாவின்
எதிர்காலம் இளைஞர்களிடமாம்..
அது சரி
இளைஞர்களில் எதிர்காலம் ?


 

கனவுகளின் போர்வாள்

kiss.jpg
தொலை தூர
நட்சத்திரங்களின் புன்னகையாய்
எனக்குள்
உன் நினைவுகளின் மின்னல்.

காரிருள் போர்வைக்குள்
துயிலும்
கனவுகளின் போர்வாளாய்
காதல் சொட்டச் சொட்ட
விழித்துக் கிடக்கின்றன விழிகள்.

உன்
ஓசையின் கைப்பிடிச்சுவரை
எட்டிப் பிடிக்கும் ஆசையில்
எனக்குள்
ஏக்கங்களின்
குதிரைக் குளம்படிகள்.

பாய்ந்து பற்றும்
பதற்றம் சூழ் நிமிடங்களிலெல்லாம்
என்
கைகளுக்குள் நழுவுகின்றன
நீ
உடுத்தி நடக்கும் மெளனம்.

என்னைக் காதலிப்பதாய்
சொல்லாவிட்டாலும் பரவாயில்லை.
நான்
காதலிப்பதாய்
புரிந்து கொண்டாயெனில் போதும்.

உன்
சம்மதத்தை
கவிதையாய் வடிக்க வேண்டாம்
ஒரு
முத்தத்தால் ஒத்துக் கொண்டாலே
போதும்