காதலர் தின வாரம் : கவிதை : மனவளையம்

love1.jpg

தூரவெளிப் பயணங்கள் தொடர்ந்திடுமென் காதல்
துளித் துளியாய் மனவளையம் வரைந்திடுமென் காதல்.
ஈர இமை இரவுகளில் விழித்திருக்கும் காதல்
விழி கொண்டு உயிர் செதுக்கி வலி செய்யும் காதல்.

love1.jpg

நிஜம் மறந்து நினைவுகளில் நட்டுவைக்கும் காதல்
நிழலோடு கொள்கின்ற நீள்யுத்தம் காதல்
கர்வங்கள் அத்தனையும் அள்ளித்தரும் காதல்
பார்வைகளின் எல்லைகளைக் கொள்ளையிடும் காதல்.

love1.jpg

புல்லிடுக்கில் பனித்துளியாய் முத்தமிடும் காதல்
மோகம் வந்தால் கதிரொளியாய் சத்தமிடும் காதல்
உதடுகளின் இடைவெளியில் வட்டமிடும் காதல்
உயிர்துளியில் உளிவிழுந்தால் செத்துவிடும் காதல்.

love1.jpg

ரோஜாவின் இதழ்களிலும் வேர்த்துவிடும் காதல்
எரிமலையின் குழம்புகளில் குளிர் பருகும் காதல்
விரிந்துநிற்கும் அழகுகளில் மசியாது காதல்
புன்னகையின் மின்னலுக்குள் அடங்கிவிடும் காதல்.

love1.jpg

சொன்னவற்றை நெஞ்சில் வைத்து தைத்துக் கொள்ளும் காதல்
கவிதை எழுதி கண்ணிரண்டில் வைத்துக் கொள்ளும் காதல்
தனியறையில் பிம்பம் பார்த்துச் சிரித்துக் கொள்ளும் காதல்
விடிந்தபின்னும் கனவுகளைப் போர்த்திக் கொள்ளும் காதல்.

love1.jpg

சொல்லச் சொல்ல உள்கிணற்றில் ஊறிவரும் காதல்
பிரமிக்கும் அத்தனையும் ஒப்பமிடும் காதல்
தனிமரத்தைத் தோப்பென்று தோன்றச் செய்யும் காதல்
உப்பில்லா இப்புவிக்கு ஒற்றை ஜீவன் காதல்.

காஸ்ட்லி இலவசங்கள்

வீடு வாங்கினால்
கிடைக்கலாம்
இலவசமாய் ஒரு கார்.

கார் வாங்கினால்
ஒரு தொலைக்காட்சிப்
பெட்டி,

தொலைக்காட்சிப் பெட்டி
வாங்கினால்
ஒரு டிவிடி பிளேயர்,

டிவிடி பிளேயருக்கு
இலவசமாய்
ஒரு குக்கர்,

குக்கர் வாங்கினால்
பாத்திரம்.

செலவழித்தலின்
அடர்த்தியை வைத்தே
இலவசங்களின்
பிரசவங்களும் !

ஓசோன் ஓட்டையை
அடைக்க முயல்வோரால்
நிராகரிக்கப்பட்ட
குடிசை ஓட்டைகளுடன்,

வறுமை வயிறுகள்
மழைநீர் தின்ன
ஈரப் போர்வைக்குள்
வெப்பம் தேடி
தெப்பமாய் கிடக்கும்
குப்பத்தின் ஓரத்தில்,

பருக்கைகள் எதிர்நோக்கி
இருக்கையில்,
நெருப்பாய் தெரியும்
அரசு அறிவிப்பு.

கருத்தடை சாதனம்
இலவசம்

இலவச மரணம்

 

இலவசமாகத் தான்
வினியோகிக்கப் படுகின்றன
அழிவுக்கான
ஆயுதங்கள்.

விரல்கள்
மாற்றிக் கொள்ளும்
புகைப் பழக்கமும்,

வாசலில்
வலுக்கட்டாயமாய்
வரவேற்றுச் செல்லும்
குடிப் பழக்கமும்,

பல்கலைக்கழக
சோதனைக் கூடத்தின்
பின் புறம்
பரிமாறப்படும் போதையும்,

இருமலிலும்
தலைச் சுற்றலிலும்
ஒதுக்கியும்
விடாமல் தொடரும்
சும்மா சங்கதிகள்.

பழக்கமாகி
பின்
விடமுடியாமல் அலறும்போது
இலவசங்கள்
கை வசம் இருப்பதில்லை.

பின்
இவனும் வினியோகிப்பான்
நான்கு பேருக்கு
இலவச மரணம்.

சின்னச் சின்ன…

 

நிலைகள்

0

பைக் ஓட்டிய போது
நான் செய்த
தவறுகள்
புரியத் துவங்கின
கார் ஓட்டத் துவங்கிய போது. 

தோல்வி.

0

தோல்வி
தோல்வியடைந்தது
நீ
தோல்வி குறித்து எழுதிய
கவிதையோடு.


.
வேர்

0

இத்தனை
வருடங்களுக்குப் பிறகும்
நான்
பேசினால்
கண்டு பிடித்து விடுகிறார்கள்
என் ஊரை.

.

பழக்கதோஷம்

0

நெருக்கியடிக்காமல்
ஏறுவதில்லை
எந்தப் பேருந்திலும்.
வெறும்
பத்து பேர் நின்றால் கூட.

வினோதம்

0

மூன்று மைல் தூர
அலுவலகத்துக்கு
காரில் வருபவர்,

உடற்பயிற்சி அறையில்
ஓடுகிறார்
ஆறு மைல் தூரம்

உனது பெயர், எனது கவிதை.

கண்மணி,

நீ இல்லாத தேசத்தில்,
என்னை நோக்கி
ஓராயிரம்
கண்கொத்திப் பாம்புகள்,
எனக்குத் தான் இதயத்தில்
உன் நினைவுகள்
காதல் கொத்தும் ஓசை.

விரிந்திருக்கும் விழிபரப்பில்
பூமியின்
பார்வைப் பச்சிலைகள்
பறிக்கப்பட மறுக்கின்றன,
இமைகளின் இடையிலும்
உன் நினைவுகளின்
தண்டவாளங்கள்
மட்டுமே தடதடக்கின்றன.

ஜன்னல் தாண்டி
என்னைப் பொத்தும் வெயில்,
மின்னல் போல நீ
உள்ளிருப்பதாய்
ஊடுருவிப் பார்த்துச் சொன்னது எனக்கு.

ஆனாலும்,
திரைச்சீலை திறக்காமல்
வெறித்துப் பார்க்கும் வித்தை
நீ
விலகும் போது தானே வாய்க்கிறது.

இணையத்தின் இருக்கைகளில்
ஒரே பக்கத்தில்
ஒரு வார்த்தையும் படிக்காமல்
இமைகளை விலக்கி வைத்து
விழித்திருக்கிறேன்.

ஆனாலும்
உள்ளுக்குள் எதிரொலிக்கிறது
நீ கிசுகிசுத்துப் போன
காதோரக் கதைகள்.

என் படுக்கையைச் சுற்றிலும்
என்
கனவு சுவாசித்துக் கிடக்கிறது
நிறம் மாறிய காற்று,

கொடியது என்பது
இளமையில் வறுமையா ?
இல்லை
இளமையில் வெறுமையா?

காணா கவலை நெருக்கினால்
கவிதை எழுதுங்கள்
என்றாய்,
வினாடிக்கொரு தரம்
உள்ளுக்குள் உச்சரிக்கிறேன்,
உனக்குச் சொந்தமான
என் கவிதையை.

விட்டு விடுதலையாகி…

 

விடுதலை தேடியே
வினாடிகள் ஓடுகின்றன.

அலுவலக மேலதிகாரியின்
மின்னஞ்சல் போர்களில்
குற்றுயிராகி
போர்க்களம் சாய்கையிலும்,

நம்பிக்கை நங்கூரங்கள்
சங்கிலி அறுத்து
தனியே பாய்கையிலும்,

ஏமாற்றத்தின் விலாசங்களுடன்
அலையும்
சுருக்குக் கயிறுகளில்
எச்சரிக்கைக் கழுத்துகள்
எதேச்சையாய் விழுகையிலும்,

விடுதலைச் சன்னல்களைத்
தேடி அலையும்
தவறி வந்த பட்டாம்பூச்சியாய்
மனம் அலையும்.

குடும்ப உறவுகளின்
குத்தல் பேச்சுகளிலும்,
நெடுநாள் நட்புகளின்
திடுக்கிடும் திருப்பங்களிலும்
அவை தொடரும்.

அங்கீகார மேடைகள்
புறக்கணிப்புப் பத்திரத்தை
விவரமாய் வாசிக்கையிலும்

சங்கீதக் காதலி
மறுப்புக் கடிதமெழுதி
வேறெவரையோ நேசிக்கையிலும்

அங்கிங்கெனாதபடி
பீலி பெய் சாகாடும் நிலையில்
எப்போதும்
விடுதலையைத் தேடியே
அலைகிறது மனம்

துயரச் செருப்புகளைத்
தூர உதறி
மாலையில் வீடு நுழைகையில்
தாவியணைக்கும் மகளின் கரங்களில்
வினாடியில்
அடிமையாகும் மனம்,
அப்போது மட்டும்
விடுதலையை வெறுக்கும்.

விடுதலை

 

பாவத்தின் பதுங்கு குழிகளில்
படுத்துக் கிடக்கையில்
புலப்படும்
விடுதலையின் மகத்துவம்.

சில்மிச சிந்தனையின்
சன்னலைச் சாத்துகையில்
காமத்தின்
கதவு திறந்து கொள்தலும்

வெட்கத்தின் திரைச்சீலையை
சரிசெய்து திரும்புகையில்
மோகத்தின்
முந்தானை சரிந்து விழுதலும்

விருப்பத்தின்
திரிகளில் எரிவதில்ல
பெரும்பாலும்.

விரல்களிடையே
புகையும் பகைவனையும்
மௌன மரணத்தின்
மதுப் பந்திகளையும்
தொடங்கி வைத்த
பிள்ளையார் சுழி நினைவிலில்லை.

பிறந்த நாள்
புத்தாண்டு என
தற்காலிக தீர்மானங்களுக்காய்
சில மைல்கற்கள்
வருடம் தோறும் புதுப்பிக்கப்படும்.

குற்ற உணர்வு
நெற்றியில் சுட,

இப்படம் இன்றே கடைசி
போல
படுக்கையில் பிரசவிக்கும்
இரவு நேர தீர்மானங்களை

விடியல் சூரியன்
மாற்றி எழுதும்
‘நாளை முதல்’ !

விடுதலையாய் சுற்றும்
மனம்
அடிமையாய் திரும்புதலும்,

அடிமையாய் உழலும்
மனம்
விடுதலையை வேண்டுதலும்

என
விடுகதை
வாழ்க்கை வியப்பளிக்கும்.
விடுதலை நோக்கி
மீண்டும் நடக்கும்.

தொலை நகரம்

 

இன்னும் கொஞ்ச தூரம் தான்
கால்களைக் கொஞ்சம்
வலுவாக்கு.

அடுத்தவன் கனவுகளுக்குள்
படுத்துக் கிடக்கும்
உன் பார்வைகளின்
சோர்வகற்று.

அறுவடைக் காலத்தில்
நண்டு பிடிப்பதை விட
கதிர் அறுப்பதல்லவா
அவசியம்,

வா,
இன்னும் கொஞ்ச தூரம் தான்.

அதோ தெரிகிறதே
ஓர் வெளிச்ச பூமி
அங்கு தான் செல்லவேண்டும்.

பரிச்சயமான
பிரதேசமாய் தோன்றுகிறதா ?
அது வேறெங்கும் இல்லை
உன்னுள் தான் இருக்கிறது.

நீதான்
வெகுதூரம் சென்று விட்டாய்.

அப்பா என் உலகம்


அப்பா
இல்லாத உலகத்தை
கற்பனை செய்யவே
மிகவும் பயந்து கொண்டிருந்தவன்
நான்.

சிறுநீரகம்
சிறிது சிறிதாய்ச்
சிதையும் வலிகளைத் தாங்கிக் கொண்டும்,

டயாலிஸிஸ் சோர்வின்
நடுக்கங்களை
உடல் முழுதும் ஏந்திக் கொண்டும்,

ஒரு நாளைக்கு
அரை டம்ளர் என்னும்
தண்ணீர் அளவில் தவித்துக் கொண்டும்

கட்டிலின் ஓரமாய்
சுருண்டு படுத்திருந்த போதும்
எங்களைப் பார்த்துப்
புன்னகைக்கத் தவறியதேயில்லை.

தண்ணீர் தான் உலகிலேயே
சுவையான பொருள்
என்று
ஒருமுறை
அவர் சொன்னபோது உடைந்தேன்.

தினமும்
நான் அருந்தும் தண்ணீர்
அப்பா நினைவில்
உப்புக் கரிக்கிறது.

தன் வலியை
மரணத்தின் முந்தைய வினாடி கூட
எங்களுக்கு
வெளிப்படுத்தாமலேயே
புன்னகைத்த மனம் அவருக்கு.

அவர் இல்லாத வாழ்க்கையும்
ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.

நண்பர்களுடன்
சிரித்துக் கொண்டும்,

உறவினர்களுடன்
பேசிக் கொண்டும்,

பிடித்த புத்தகங்களைப்
படித்துக் கொண்டும்….

இரவுப் படுக்கைக்குப்
போகும் போது மட்டும்
தெளிவாய்க் கேட்கிறது
சுற்றியிருக்கும் மெளனத்தைக் கிழித்துக் கொண்டு
அப்பாவின் குரல்.

‘சாப்பிட்டியாடே ?’

இதயத்தில் ஊடுருவிய வாள்

.
விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.

முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.

உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.

துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.

நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.

மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.

கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.

இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.