கவிதை செய்தல்

 

சிலர்
அரிசியில்
கல் பொறுக்குவது போல
கவிதை செதுக்குகிறார்கள்.

.

சிலர்
களைகளைப் பிடுங்கையில்
பயிர்களும்
பிடுங்கப் படுமோ
எனும் பயத்தில்
அப்படியே விட்டு விடுகிறார்கள்.

.

சிலர்
எதை விடுப்பது
என்பதை அறியாமல்
திகைத்துப் போய்
தவறானதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்

புடவைக் கடையில்
தீபாவளிப் புடவையெடுக்கும்
பெண்களைப் போல

.

சிலர்
எடுப்பதில் முத்திரை பதித்து
தொடுப்பதில்
தகராறு செய்வார்கள்.

.

மொத்தத்தில்
எல்லோரும் கைகளில்
கவிதை வைத்திருக்கிறார்கள்
அடுத்தவர்கள்
குறை சொல்ல வசதியாக.