கூந்தல் காலம்

hair.jpg

அடடா…
அவள் மிகவும் அழகி,
கூந்தல் நீளம்
முழங்காலை எட்டித் தொடும்,
நிறமோ
உருகி ஓடும் இரவு.
வியந்தாள் பாட்டி.

சிக்கெடுக்க
சிரமப்பட்டதால்
பாதி முதுகோடு
நின்று போயிற்று
அடுத்த தலைமுறையின் கூந்தல்.

காதுகளைத் தாண்டிவிட்டாலே
கத்தரிக்கப்படுகிறது
இப்போது.

வெள்ளைமுடியைக் கருப்பாக்க
சாயம் பூசிய
சாயங்காலங்கள்
சாய்ந்து விட்டன.

கருப்பாய் இருக்கக்
கவலைப்பட்டு
இப்போதெல்லாம்
கொடிகள் போல
அசைகின்றன
பலவண்ணக் கூந்தல்கள்.

நீளமான
கருப்புக் கூந்தலோடு
யாரேனும்
நடந்தால்
சிரிக்கக் கூடும்
எதிர்கால வீதிகள்

smile3.jpg

ஒரு பார்வை மட்டுமே…

l21.jpg

பிரியமே,

நீ யாரோ
எவரோ நானறியேன்.

ஒரு வசந்தகால வளைவில்
சரேலென
என்
விழிச்சக்கரங்களைத் திருப்புகையில்
உன்னைச் சந்தித்தேன்.

பின்
திருப்பப்பட முடியா நிலையில்
சுருண்டுகிடக்கின்றன
என் நினைவுகள்.

பின்பொரு நாள்
ஓர்
குளிர்காலக் கூரையருகில்
கசிந்த மெல்லிசையிலும்,

மாலை நேர
மழைத்துளி ஒன்றின்
ஜீவப் பாய்ச்சலிலும்,

கடத்தி வரப்பட்ட
காட்டாறு போல
புரண்டு படுத்தன
உன் நினைவுகள்

காலங்கள் தரும்
உன்னதமானவற்றில்
உன்னைக் கண்டேன்,

நீ
ஒரு முறை கூட
என்னைக் காணவில்லையே
எனும் உண்மையை மட்டும்
இலையுதிர் காலத்துக்காய்
ஒத்தி வைத்திருக்கிறேன்

உன்னை மறந்து விட்டேன்

g.jpg

நான்
மறந்து விட்டேன்
நீ தான் நம்புவதில்லை.

ஆழ்துயில் கனவுகளுக்கு
அப்பால் அலையும்
நினைவுப் பிரதேசங்களில்
துள்ளித் திரியும்
வெள்ளாட்டுக் கூட்டங்களாய்
உன் அழைப்பொலி.

இன்னும்
ஈரம் மாறாமல் உன்
முதல் முத்தமும்,
வெப்பம் மாறாத
கடைசிக் கண்ணீர் துளியும்.

இதயம் துடிக்கும்
ஓசை
காதுகளுக்குக் கேட்குமென
கற்பித்தது நீ தானே.

சிரிப்புகளையும்
புல்லரிப்புகளையும்
பறித்துக் கோர்த்த
மாலைப் பொழுதுகள்
மங்கவில்லை.

உன்னை நான்
மறந்து விட்டேன்.

இந்த
நினைவுகளைத் தான்
எப்படி
நினைக்காதிருப்பதென
தெரியவில்லை.

நினைவுகளை
நினைவுகளால் தான்
அழிக்க முடியுமோ ?

என்று வாய்க்கும் எனக்கு
அப்படி ஓர்
அடைமழைக் காலம்

ஒரு காதலனின் கவலை

lavu2.jpg 

வணக்க முறையாக
மூக்கோடு
மூக்கு உரசுபவர்கள்,

முத்தமிட்டுப்
புன்னகைப்பவர்கள்,

கட்டியணைத்து
தட்டிக் கொடுப்பவர்கள்,

இப்படியான
ஒரு தேசத்தில் இல்லாமல்
போனதைக் குறித்து
கவலைப்படுகிறேன்.
நீ எதிரே வருகையில்.

நீயின்றி நீயிருப்பாய்…

l2.jpg
தொட்டு விட விரல்கள்
துடி துடிக்கும்
அருகினில் நீயின்றி
படபடக்கும்
இருவிழி ஓரங்கள்
நீர்துளிர்க்கும்
அதிலும் உன்முகம்
எதிரொளிக்கும்

கனவுக்குள் உன் பிம்பம்
குடை பிடிக்கும்
அதிகாலை போர்வைக்குள்
அடம்பிடிக்கும்
போலியாய் துரத்தினும்
மனம் அதட்டும்
குளியலைறைக் கதவையும்
அதுதிறக்கும்.

நீயின்றி நீயிருப்பாய்
மனம்சிலிர்க்கும்
என்றேனும் பிரிவாயோ
உயிர்வியர்க்கும்
உறவுக்குப் பெயரென்ன
தலைகுழம்பும்
பெயருக்கு தேவையென்ன
உள்வினவும்

எப்போது பூக்கவேண்டும்
செடி அறியும்
தப்பாமல் அதுபூக்கும்
நிலை நிலைக்கும்
இப்போது ஏன்பூத்தாய்
வினா வினவும்
கேள்வியே மூடமடா
மனம் சிரிக்கும்.

அரும்பியதை விரும்பியதை
உயிர் அணைக்கும்
திரும்பியதும் திசையெங்கும்
அனல் அடிக்கும்
உரிமையென உள்நெஞ்சம்
உனை அணைக்கும்
இல்லையென சொல்னால் மெய்
வெந்து தணியும்.

·