இன்னொரு ஜனனம் – ஒரு அறிவியல் புனைக் கதை


வினயன் சொல்லச் சொல்ல விழிகளில் அதிர்ச்சியும், வியப்பும் ஒன்று சேர இமைக்க மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள் பிரியதர்ஷனி. வினயன் ஒரு சின்னச் சிரிப்போடு தொடர்ந்து கொண்டிருந்தான்.

மனிதனுடைய மூளையில் எதை வேண்டுமானாலும் எழுதலாம். அவன் படிப்பவை, கேட்பவை எல்லாமே அவனுடைய மூளையின் வெவ்வேறு பாகங்களில் பதிவாகி இருக்கும் அவற்றை இன்னொரு மனிதனின் மூளைக்குள் பிரதியெடுக்க என்னால் முடியும். அது தான் என்னுடைய ஆராய்ச்சியின் முடிவு.

உனக்கு இப்போது சங்கீதம் தெரியும், ஆனால் பரதநாட்டியம் பற்றி எதுவும் தெரியாது, ஆனால் இன்னொரு பரத நாட்டிய மேதை கிடைத்தால் அவளுடைய மூளையிலிருந்து எல்லாவற்றையும் உன்னுடைய மூளைக்குள் பதிவு செய்ய முடியும்.
இதை வைத்துக்கொண்டு என்னால் ஏராளமான கலைஞர்களை உருவாக்க முடியும், ஏராளமான பண்டிதர்களை உருவாக்க முடியும், ஏராளமான கவிஞர்களை உருவாக்க முடியும்.. எல்லாம் நிமிடத்தில்.. சொல்லி விட்டு பிரியாவைப் பார்த்தான் வினயன். இன்னும் பிரியாவால் எதையும் நம்ப முடியவில்லை. அவளுக்கு முன்னால் பெயர் தெரியாத ஏதேதோ கருவிகள். முகம் தெரியாத ஏராளம் கேள்விகள்.

வினயனை நான்கு வருடங்களாக பிரியாவிற்குப் பழக்கம், அவன் ஏதோ ஆராய்ச்சி செய்கிறான் என்பது மட்டுமே தெரிந்திருந்தது ஆனால் என்ன ஆராய்ச்சி என்பது புதிராகவே இருந்தது அவளுக்கு. ஆராய்ச்சி என்ற போது ஏதோ வேதியல் செய்முறைபோல ஏராளம் சோதனைக்குழாய்கள், அமிலங்கள் இப்படி ஏதோ செய்கிறான் என்று தான் நினைத்திருந்தாள். இப்போது அவனுடைய மிக நேர்த்தியான ஒரு ஹை-டெக் ஆராய்ச்சிக் கூடத்தைப் பார்க்கப் பார்க்க பரவசமாகத் துவங்கினாள். பிரியா வும் கணிப்பொறித் துறையில் தான் பணியாற்றுகிறாள்.
கணிப்பொறி பற்றிய ஆழ்ந்த அறிவு அவளுக்கு இருந்தது. சொல்வதை துல்லியமாக புரிந்து கொள்ளும் திறனும், கேள்விகள் மூலம் அறிவை ஆழப்படுத்துவதும் அவள் உடன்பிறப்புக்கள். வினயனின் ஆராய்ச்சி பற்றி அறிந்து கொள்ளவேண்டும் என்னும் ஆர்வம் அவளிடம் கொப்பளித்தது. அந்த ஆர்வம் கேள்விகளாக விழுந்துகொண்டிருந்தன.

சரி வினயன், இந்த சோதனை எந்த அளவில் இருக்கிறது ? யாரையாவது பரிசோதித்துப் பார்த்திருக்கிறாயா ?
மெதுவாய்க் கேட்டாள் பிரியா.
சோதனை ஏறக்குறைய முடிந்துவிட்டது. இதெல்லாம் புதிய சிந்தனை இல்லை, ஞானிகள் எல்லாம் செய்யும் மனோவசியத்தின் அறிவியல் வெளிப்பாடு என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஆழ்மனதிற்குள் சென்று அவனுடைய மனதை கேட்டறியும் முறையின் அடுத்த கட்டம் தான் இது. தியானத்தில் ஞானிகள் செய்யும் ஒருவிதமான மன உரையாடலின் முன்னேற்ற வடிவம். உன் கண்ணைப்பார்த்துக் கொண்டே உன்னை வசியப்படுத்தி அதன்மூலம் உன்னை ஒரு கருவியாகச் செயல் படுத்தக் கூடிய மனோவசிய முறை பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய்.

மனதை ஒருமுகப்படுத்தி அதன்மூலம் சக்தியை உருவாக்கி அதன்மூலம் தீ வரவழைக்கும் ஞானிகளைப்பற்றி நான் படித்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு அவை வெறும் பிதற்றல்களாய்த் தோன்றியதுண்டு. ஆனால் இப்போது அதைப்பற்றிய ஆழ்ந்த படிப்பும், அறிவியல் அறிவும் தான் என்னை இப்படி ஒரு கண்டுபிடிப்புக்காய்த் தூண்டியது. இது என்னுடைய ஒரு கனவு. முதலில் ஒரு நாயின் மூளைச் செய்திகளை ஒரு பூனைக்குச் செலுத்திப் பார்த்தேன். அந்த பூனை நாய் போல நடந்து கொண்டது… இன்னொரு பூனையைத் துரத்தியது. அது தான் என்னுடைய ஆரம்ப வெற்றி. பிறகு படிப்படியாய் முன்னேறி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். இதோ அந்த மூலையில் பார், அந்த செல்லுக்குள் முதல் மனிதனை உட்காரவைத்து,  அடுத்த செல்லுக்குள் இரண்டாவது மனிதனை அமரச் செய்து அறிவியல் ரீதியாய் அவர்களுடைய மனசை அமைதிப்படுத்துவேன். பிறகு இதே’ இந்த கணிப்பொறியில் அதற்கான டிரான்ஸ்பர் கீ யை அமுக்கினால் வேலை முடிந்துவிட்டது. ஜெராக்ஸ் எடுக்கும் வேலை போல சிம்பிள் ஹ… சொல்லி விட்டு பெருமை பொங்க பிரியாவைப் பார்த்தான் வினயன்.

அது சரி வினயன், ஒரு மூர்க்கத்தனமான மனிதனையும் ஒரு சாதுவான மனிதனையும் இந்த ஆராய்ச்சியில் பயன் படுத்தினால், குணங்கள் மாறிவிடாதா ? – கேள்வி பிரியாவிடமிருந்து வந்தது.

இல்லை பிரியா, மூளையில் எல்லா விஷயங்களும் ஒரே இடத்தில் பதிவு செய்யப்படுவதில்லை. அதற்காக வேறு வேறு அறைகள் தனித்தனியாக இருக்கின்றன. உனக்கு எது தேவையோ அதை நீ எடுத்துக்கொள்ள முடியும். நீ ஒரு நாட்டிய மேதையாகலாம், இல்லையேல் அந்த நாட்டிய மேதையின் ஆழ்மன உணர்வுகள் மட்டுமே வேண்டுமென்றால் அதைக்கூட பெற்றுக் கொள்ளலாம். ஒரு காந்தி கிடைத்தால் ஓராயிரம் காந்திகளை உருவாக்க முடியும். ஒரு தெரெசா கிடைத்தால் ஓராயிரம் தெரெசாக்களை உருவாக்க முடியும்… அது மட்டுமல்ல வேண்டுமானால் ஓராயிரம் ஹிட்லர்களைக்கூட உருவாக்க முடியும்.இது ஒரு விதமான குளோனிங் என்று கூட சொல்லலாம். அது உருவத்தைத் தீர்மானிக்கிறது, இது உள்ளடக்கத்தால் உருவாக்கப்படுகிறது.

அதுமட்டுமில்லை பிரியா….ஏற்கனவே உனக்குள் இருக்கின்ற பதிவுகளை அழிக்கக் கூட முடியும். இது தான் கேட்-வே, இதன் உள்ளே நுழைந்தால் உனக்குத் தேவைப்படும் எல்லா விஷயங்களும் ஒரு மெளஸ் கிளிக் தூரத்தில் தான். உதாரணமாக, இதோ இந்த எரேஸ் பட்டன் வழியாக உள்ளே சென்றால் மனிதனுடைய நினைவுகளை அழித்து விட முடியும். இதோ இதுதான் டிரான்ஸ்பர் ஆப்ஷன், இது தான் முக்கியமானது, இதன் மூலம் தான் ஒரு மூளையிலிருந்து இன்னொரு மூளைக்கு விஷயங்களைப் பிரதியெடுக்க முடியும். இதோ இந்த ரிவர்ஸ் ஆப்ஷனை உபயோகப் படுத்தினால் டிரான்ஸ்பர் தலை கீழாக நடக்கும்… ஒவ்வொரு விஷயமாக வினயம் விளக்கத் துவங்கினான். இதுவரை தன் கண்டுபிடிப்பைப் பற்றி யாரிடமும் அவன் விளக்கியதில்லை. இப்போது தான் பிரியாவிடம் சொல்கிறான். பிரியாவை ஆச்சரியக்கடலுக்குள் அமிழ்த்தவேண்டும் என்பது மட்டுமே அவனுடைய எண்ணமாக இருந்தது. பிரியா எல்லாவற்றையும் கூர்மையாக கேட்டுக் கொண்டிருந்தாள்

என்னால் .. இதையெல்லாம் நம்ப முடியவில்லை வினயன்… பிரியாவின் குரலில் ஒருவித நடுக்கம் புதிதாகத் தொற்றியிருந்தது.
இதில் ஒன்றுமே இல்லை பிரியா… அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சி, என்ன தெரியுமா ? மனிதர்கள் பேசுபவை எல்லாம் வெவ்வேறு ஒலி அலைகளில் காற்றில் மிதந்து கொண்டிருக்கின்றனவாம், பட்டத்தின் வால் போல. அவற்றை அதற்குரிய சரியான அலைவரிசையில் சென்று எடுத்து வரமுடியுமாம்.
உதாரணமாக, இயேசு போதித்தவற்றை எல்லாம் காற்றிலிருந்து இழுத்து எடுக்க முடியும். அப்படி இழுத்தால் என்னவாகும் ? இயேசுவின் போதனைகள் என்று ஒலிநாடாக்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான டாலர்களை குவிக்கும். இவையெல்லாம் வித்தியாசமான சிந்தனைகள் பிரியா. நீ நினை, அது நடக்கும்.. அது தான் இப்போதைய தாரக மந்திரம். நீ புகழ் பெற வேண்டுமென்றால், உன்னிடமிருந்து புதிய சிந்தனைகள் செயல்பாடுகள் வெளிப்பட வேண்டும். இல்லையேல் நீ ஒன்றுமில்லாமல் வெறும் வேடிக்கைக் கூட்டத்தின் இன்னொரு அங்கமாக ஆகிவிடுவாய்.
தெளிவாகப் பேசினான் வினயன்.

அப்படியானால், ஒரு மனிதனுடைய சிந்தனைகளை கணிப்பொறிக்குள் புகுத்தமுடியுமா ? இல்லை கணிப்பொறியிலிருந்து சிந்தனைகளை நேரடியாக மனிதனுடைய மூளைக்குள் செலுத்த முடியுமா ? ஆர்வம் மேலிட கேள்விகளைத்தொடர்ந்து கொண்டிருந்தாள் பிரியா.

இல்லை பிரியா.. அது சாத்தியமில்லை. மனம் ஒரு வித்தியாசமான பெட்டகம். உன்னைப்பொறுத்தவரை மனசு என்பது வெறும் மனசு. அதற்கு உன்னால் விளக்கம் சொல்ல முடியாது. மனசாட்சி என்பது வெறும் மனசாட்சி. மனசாட்சி என்ன என்று உன்னிடம் கேட்டால், நல்லவற்றைச் செய்யவேண்டும் என்று உன்னுள்ளிருந்து உனக்குச் சொல்லும் ஏதோ ஒன்று தான் மனசாட்சி என்று நீ சொல்வாய். அப்படியென்றால் உள்ளுணர்வு என்றால் என்ன ? மனசாட்சியும் உள்ளுணர்வும் ஒன்றா ? இவையெல்லாம் பெரிய ஞானிகளால் ஆராயப்பட்ட, இன்னும் துல்லியமாய் வரையறுக்க முடியாத சிந்தனைகள். அந்த உள்மன சிந்தனைகள் மூளையின் பகுதிகள் தான், அவற்றை என்னால் இன்னொரு ஊடகத்தில் பிரதியெடுக்க முடியவில்லை. இன்னொரு மூளைக்குள் தான் புகுத்த முடியும். ஆனால் இனிவரும் தலைமுறை என்னால் முடியாததைச் சாத்தியப்படுத்தும்.

இப்போது மக்கள் இதையெல்லாம் வெறும் பேத்தல் என்று தான் சொல்வார்கள். உலகம் உருண்டை என்று சொன்னவனை மதவாதிகள் கொன்று போட்டார்கள். ஆனால் பின்னாளில் அது நிரூபிக்கப் பட்டது. வானத்தில் பறக்க முடியும் என்றவனை மனநிலை சரியில்லாதவன் என்றார்கள் ஆனால் இப்போது அது உலகத்தையே சுருக்கிவிட்டது. அதே போலத் தான் என் கண்டுபிடிப்பும். இன்னும் சொல்லப்போனால், நீ காணும் கனவுகளை காம்பாக்ட் டிஸ்க் களில் பிடித்து விடிந்ததும் உனக்கே போட்டுக் காட்டும் காலம் தொலைவில் இல்லை. சொல்லிவிட்டு சிரித்தான் வினயன்.

அது சரி, இந்த கண்டுபிடிப்பை பிரகடனப் படுத்தி விட்டாயா ?

பிரகடனமா ? இல்லை என்னைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய், சில தலைப்புச் செய்திகளோடு மட்டும் தீர்ந்து போவதில்லை என்னுடைய ஆசை. மூலிகைப் பெட்ரோலையும் என் கண்டுபிடிப்பையும் ஒரே எடை கல்லில் தான் எடை போடும் இந்த அரசாங்கம். அந்த மூலிகைப் பெட்ரோல் விஷயம் உண்மையானதா என்பதை ஆராயாமலேயே அவனுடைய பின்னணிகளைத் தோண்டி அவனை செல்லாக் காசென்று முத்திரை குத்தியது நம் சமூகம். இவனால் எதுவும் சாதிக்க முடியாது என்னும் எண்ணத்தை மட்டுமே காதுகளில்  மாட்டிக்கொண்டு கேள்விகள் கேட்டது படித்தவர் கூட்டம். அரசியல் லாபம் இல்லாத எந்த விஷயத்தையும் தொடுவதில்லை என்று கண்களைக்கட்டிக் கொண்டது அரசாங்கம்.

மூலிகைப் பெட்ரோல் உண்மையா பொய்யா என்பது என்னுடைய விவாதமில்லை, ஆனால் படிக்காத ஒரு சாமானியனால் எதையும் சாதிக்க முடியாது என்று ஒரு மனநிலை கொண்டிருக்கும் மக்களைப்பற்றியது தான் என் விவாதம். ஐ.ஐ.டி யில் செய்வது மட்டும் தான் ஆராய்ச்சி என்று மூக்குக் கண்ணாடிக்குள் தீர்மானிக்கும் விஞ்ஞானிகளைப் பற்றியது தான் என்னுடைய விவாதம். எனக்கு இந்த அரசாங்கத்தின் இழிச்சொற்கள் தேவையில்லை. என்னுடைய சிந்தனைகளே வேறு.
வினயன் சொல்லத் துவங்கினான். அவன் சொல்லச் சொல்ல, பிரியா அதிர்ச்சியின் உச்சத்துக்கு தள்ளப்பட்டாள்.

என்ன சொல்றே? இது .. இது துரோகம் இல்லையா ?

எது துரோகம் ? என்னுடைய எட்டு வருட உழைப்பு இது இதை நான் வீணாக்க விரும்பவில்லை. இந்த முதல் வேலைக்கு மட்டும் எனக்குக் கிடைக்கப் போவது இருபது மில்லியன் டாலர்கள். வேலை இது தான். இந்தியாவின் மிகப்பெரிய விஞ்ஞானி ஒருவரின் மூளையை ஒரு பாகிஸ்தான் இளம் விஞ்ஞானிக்குள் பிரதியெடுத்துக் கொடுக்க வேண்டும். விஞ்ஞானியக் கடத்திவருவதெல்லாம் என் வேலையில்லை. அதற்கெல்லாம் அவர்களே ஏற்பாடு செய்கிறார்கள். இது வெற்றிகரமாக முடித்தால் அடுத்தபடியாக இந்தியாவின் இராணுவ ரகசியங்கள், மிகப்பெரிய கணிப்பொறி அறிவுகள் இவற்றை எல்லாம் வெளி நாட்டுக்கு விற்பனை செய்வேன். ரகசியங்கள் வெளியான விஷயம் யாருக்கும் தெரியப்போவதில்லை. கடத்தப்பட்டான், விடுவிக்கப்பட்டான் என்னும் செய்திகள் மட்டுமே வெளியே தெரியும். ஆனால் நான் உலகம் முழுவதும் என்னுடைய எல்லைகளை விரிவு படுத்துவேன். சொல்லிக்கொண்டே போனான் வினயன்.

இதுவரை ஆச்சரியமாய், வியப்பாய்க் கேட்டுக் கொண்டிருந்த பிரியா கலவரமானாள். அவள் மனதிற்குள் ஆயிரம் எச்சரிக்கை மணிகள் ஒலித்தன.
இல்லை.. இதை ஆதரிக்கக் கூடாது. இதை அழித்தே ஆக வேண்டும். எப்படி எப்படி…. அவள் மனம் ஏதோ ஒன்றுக்காய் தேடியது.

என்ன பிரியா ? பயமாயிருக்கா ?  என்னோட அறிவை உனக்குள் செலுத்தி நான் இதை சோதித்துப் பார்க்கவா ?
சிரித்தபடி கேட்டான் வினயன். அவனுடைய மனம் கணக்குப் போட்டது. இந்த சோதனையின் வெற்றியின் மடியில் உன் மரணம் விழப்போகிறது.
இந்த சோதனை வெற்றி பெற்றால், நான் என்னுடைய பாதையில் துணிவாய் செல்ல முடியும். மெலிதான ஒரு புன்முறுவல் வினயனின் உதடுகளில் ஓடியது.

வினயன் கணிப்பொறியில் சில செட்டப்களைச் செய்ய ஆரம்பித்தான். பிரியா ஒருவித பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அதோ அந்த செல்லுக்குள் உட்கார்ந்துகொள், அந்த வாசனையை நுகர். கொஞ்ச நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்துக்குப் போவாய், நான் அந்த செல்லுக்குள் உட்கார்கிறேன். இந்த கணிப்பொறி தானியங்கியாய் செயல்பட்டு ஐந்து நிமிடங்களில் என்னுடைய மூளையில் இருப்பவற்றை உன்னுடைய மூளைக்குள் செலுத்திவிடும் சொல்லிவிட்டு ஒரு செல்லை நோக்கி நடந்தான் வினயன். பிரியா அடுத்த செல்லுக்குள் நுழைந்தாள்.அவளுடைய மனசின் செல்கள் எச்சரிக்கை செய்தன. மூச்சை பிடித்து நிறுத்து… சுவாசிக்காதே… அவன் சுவாசித்து மயங்கும் வரை பொறுத்திரு. பிறகு கணினியை நாசமாக்கு.

மூச்சை இழுத்துப் பிடித்து கண்களை மூடினாள் பிரியா. அடுத்த செல்லில் வினயன் மயக்க நிலையைத் தொட்டதும் வெளியே குத்தித்தாள். நுரையீரல் நொறுங்குமளவுக்கு மூச்சை உள்ளே இழுத்தாள். கணிப்பொறியை நோக்கி ஓடினாள். வினயன் விளக்கியவை எல்லாம் அவளுடைய மனதிற்குள் படமாக ஓடின. கணிப்பொறியை நெருங்கி கேட்-வேயில் நுழைந்தாள்… அவசரமாக டிரான்ஸ்பர் ஆப்ஷனுக்குள் நுழைந்து ரிவர்ஸ் ஆப்ஷனை அமுக்கினாள். தாங்க்ஸ் வினயன், நீ மட்டும் இவற்றைப்பற்றி விளக்காமல் இருந்திருந்தால் என்னால் இதை இயக்க முடியாமல் போயிருக்கும். வாளெடுப்பவன் வாளால் மடியவேண்டுமென்பது அறிவியல் யுகங்கள் மாறினாலும் மாறிவிடாது போலிருக்கிறது… தனக்குளே கொல்லிக்கொண்டாள் பிரியா.

இனிய நண்பா, இந்த தேசதுரோக செயல்களை என்னால் அனுமதிக்க முடியாது. என்னை மன்னித்து விடு. இப்போது இந்த கணிப்பொறி உன்னுடைய மூளையைச் சலவை செய்துவிட்டு, என்னிடமிருக்கும் சங்கீத அறிவை மட்டும் உனக்கு பகரப் போகிறது. நீ வெளியே வந்து சங்கீதம் பற்றி பேசும் போது இந்த கணினியை நான் மொத்தமாய் அழித்துவிடுவேன். இல்லாவிட்டால் கூட இதைப்பற்றி உனக்கு விளக்க யாரும் இங்கே இருக்க மாட்டார்கள். உன் அறிவை நான் மதிக்கிறேன். ஆனால் அந்த அறிவை மறைத்து நிற்கும் உன்னுடைய தீய எண்ணத்தை நான் வெறுக்கிறேன். நான் அழிப்பது ஒரு அரிய கண்டுபிடிப்பைத் தான், ஆனால் காப்பாற்றப் போவது என் தேசத்தை… மனசுக்குள் சொல்லிக் கொண்டே சென்று தன் செல்லுக்குள் புகுந்து நறுமணத்தை சுவாசிக்கத் துவங்கினாள் பிரியா. கணிப்பொறி தன் வேலையை ஆரம்பித்தது.