விசா கிடைக்குமா ?

அமெரிக்கன் கவுன்சிலேட் நுழைவு வாயில் பரபரப்பான இந்திய முகங்களால் நிறைந்து கிடந்தது.

மேய் மாதத்தின் அக்கினி வெயிலும், மேம்பாலத்தின் வாகனப் புழுதியும் உடம்புக்குள்ளிருந்த நீரை எல்லாம் வியர்வையாக வெளியேற்றிக் கொண்டிருந்த மதியப் பொழுது. நுழைவு கேட்டை ஒட்டியபடி இருந்த வாயிலின் அருகே ஒரு செயற்கைக் குளிரூட்டப்பட்ட அறை. உள்ளே இருந்தவனுக்கு சென்னை வெயிலின் வீரியம் புரிந்திருக்க நியாயமில்லை. வெகு நிதானமாய் ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டிருந்தான்.

கையிலிருந்த பாஸ்போர்ட்டையும், தயாராய் எழுதி வைத்திருந்த விண்ணப்பப் படிவங்களையும் கவுண்டரின் குளிரூட்டப்பட்டிருந்த அறையில் இருந்தவரிடம் நீட்டினேன். பாஸ்போர்ட்டின் முன் அட்டையின் பின்பக்கம் ஒட்டப்பட்டிருந்த என்னுடைய அதரப் பழசான புகைப்படத்தையும், சம்பந்தமே இல்லாதது போல் இருந்த என்னுடைய முகத்தையும் மூன்று முறை உற்று உற்றுப் பார்த்தான். பின் விண்ணப்பப் படிவத்தை ஒரு முறை புரட்டிப் பார்த்துவிட்டு காரணமே இல்லாமல் ஒரு பெருமூச்சையும் விட்டுக் கொண்டு அனைத்தையும் என்னிடமே திரும்பக் கொடுத்துவிட்டு அருகிலிருந்த கதவை நோக்கிக் கையைக் காட்டினான்.

அவன் சுட்டிக் காட்டிய வாசலில் நின்றிருந்த காவலாளியைப் பார்த்தபோது பாவமாய் இருந்தது. இலட்சத்து எத்தனாவது முறை என்று தெரியவில்லை அதே கேள்விகளை வரிசை பிசகாமல் என்னிடமும் கேட்டான்.

‘மொபைல் போன், சிடி, எலக்ட் ரானிக் ஐட்டம்ஸ், க்ளோஸ்ட் கவர்ஸ் ஏதும் வெச்சிருக்கீங்களா சார்’

‘இல்லை..’ என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டு என்னிடமிருந்த பைலை மட்டும் அவரிடம் நீட்டினேன். அதை மட்டும் தான் கையோடு எடுத்துப் போயிருந்தேன். அவருடைய பங்குக்கு அவரும் ஒருமுறை அதை வியர்வைக் கரங்களால் தொட்டுப் பார்த்து விட்டுத் திருப்பித் தந்தார். அவருடைய இடது கை கதவைத் திறந்து விட்டது.

கதவு திறந்ததும் அறைக்குள் நிறைந்து கிடந்த சில்லென்ற காற்று முகத்தில் முத்தமிட்டு வரவேற்றது. மாதம் முழுவதும் அடுப்படியில் வேலை பார்த்த சமையல்கார அம்மா அதற்கான ஊதியத்தைக் கைகளில் வாங்கும் போது மனசுக்குள் நிறையும் ஒருவிதமான உணர்வு என்னுடைய வியர்வை மேனிக்கும் வந்திருக்க வேண்டும், உடம்பு கொஞ்சம் இறுக்கம் தளர்ந்து இயல்புக்கு வந்தது.

‘பைலை குடுங்க சார்’ குரல்வந்த திசையில் மெட்டல் டிடக்டர் கையுடன் ஒருவர். அடக்கடவுளே.. இன்னும் எத்தனைக் கதவுகள் தாண்டிப் போகவேண்டுமோ !!

‘மொபைல் போன், சிடி, எலக்ட் ரானிக் ஐட்டம்ஸ், க்ளோஸ்ட் கவர்ஸ் ஏதும் வெச்சிருக்கீங்களா சார்’

வெச்சிருந்தா முதல் கேட்லயே என்னை விட்டிருக்க மாட்டாங்களே … என்று மனசுக்குள் மிதந்த பதிலை நீங்கள் எதிர்பார்ப்பது போல நான் சொல்லவில்லை.
‘இல்லை’ என்று மிகச் சிக்கனமாகவே சொல்லி வைத்தேன்.

‘இதோ இடதுபக்கமா இருக்கிற டி.டி சர்வீசஸ் ல நானூற்று நாற்பத்து ஒரு ரூபாவைக் கட்டிடுங்க’ சொல்லிவிட்டு அவர் கைகாட்டிய திசையில் லெட்ஜரும் கையுமாய் இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் கையில் தயாராய் வைத்திருந்த நானூற்று நாற்பத்து ஒரு ரூபாயைக் கொடுத்தேன். அவர்கள் அதற்குரிய பில்லைத் தந்துவிட்டு கைகாட்டிய திசையில் இன்னொரு கவுண்டர்.

மீண்டும் பாஸ்போர்ட், விண்ணப்பப் படிவம் இரண்டையும் கவுண்டரின் கீழே இருந்த மெல்லிய இடைவெளி வழியாக நீட்டினேன்.

‘செக் குடுங்க…’ உள்ளிருந்த பெண்மணி தன்னுடைய வாயருகே நீண்டு கொண்டிருந்த மைக்கைச் செல்லமாய்ப் பற்றி மெலிதான ஆங்கிலத்தில் கேட்க நான் என்னுடைய கையிலிருந்த பைலை பரபரப்பாய்ப் புரட்டி அதிலிருந்த நான்காயிரத்து நானூறு ரூபாய்க்கான காசோலையை எடுத்து உள்ளே நீட்டினேன். அதை இடதுகையால் எடுத்து வலதுபுறமாய் வைத்துவிட்டு அவள் பிரிண்ட் செய்து தந்த ரசீது நூறு டாலர்கள் என்றது.

‘இதை எடுத்துக் கொண்டு அடுத்த கவுண்டருக்குப் போங்க’

கிளைகள் தாவித் தாவி ஓடும் குரங்கு போல மனிதர்கள் கவுண்டர் கவுண்டராய்த் தாண்டிக் கொண்டிருக்க நானும் தாவினேன்.

அடுத்த கவுண்டருக்கான வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து, கவுண்டரை நெருங்கினேன். வரிசையில் எனக்கு முன்னால் நின்றிருந்த இளம் பெண் பெண் விண்ணப்பத்தில் ஒட்டியிருந்த புகைப்படம் சரியில்லை என்று திருப்பி அனுப்பப் பட்டாள்.

‘விண்ணப்பத்தில் இருக்கும் விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப் பட வேண்டும். ஐம்பதுக்கு ஐம்பது அளவில், பின்பக்கம் வெள்ளை யாக இருக்கும் படியாகவும், மிகவும் நெருக்கமாக எடுக்கப் பட்ட குளோசப் புகைப்படம் தான் வேண்டும். நீங்கள் ஸ்டுடியோவுக்குப் போகும் போது அமெரிக்க விசாவுக்கு என்று கேட்டால் அவர்கள் சரியாக எடுத்துத் தருவார்கள். உங்களுடைய அப்பாயின்மெண்ட் டைம் இரண்டு மணி. இன்னும் அரை மணி நேரத்துக்குள் நீங்கள் வந்தாக வேண்டும்’ என்று சலனமே இல்லாமல் செதுக்கி எடுத்த ஆங்கிலத்தில் அவள் சொல்கையில் கேட்டுக் கொண்டிருந்த அந்த இளம் பெண்ணுக்கு ஏசி யிலும் வியர்த்தது.

ஏதும் பதில் பேசவோ, விளக்கங்கள் கொடுக்கவோ முடியாது அங்கே. போ.. என்றால் போக வேண்டும். வா என்றால் வரவேண்டும் அவ்வளவு தான். அந்தப் பெண் கவலையுடன் வரிசையிலிருந்து விலகிச் செல்ல நான் என்னுடைய ஆவணங்களை நீட்டினேன். என்னுடைய பாஸ்போர்ட்டை மெல்லிதான ஒளிக்கற்றை விழுந்து கொண்டிருந்த ஒரு ரீடர் கருவியின் கீழே காட்டிவிட்டு கம்ப்யூட்டர் திரையை உற்றுப் பார்த்தாள் அவள். என்னுடைய தகவல்கள் எல்லாம் அந்தத் திரையில் தெரிந்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் சரிபார்த்து விட்டு திரும்பத் தந்தாள் அவள்.

இனிமேல் எங்கே போகவேண்டும் ? இன்னும் எத்தனை கவுண்டர்கள் காத்திருக்கின்றனவோ ? இத்தனையும் நிகழ்ந்தாலும் விசா கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மனதுக்குள் கேள்விகள் வரிசை வரிசையாக எறும்புக் கூட்டம் போல ஊர்ந்து கொண்டிருந்தன.

‘சார்.. அந்த பில்டிங்க்கு போங்க சார்’ நீல நிற ஆடை போட்டிருந்த செக்யூரிட்டி வழிகாட்டிய திசையில் நடந்தேன்.

எதிர்பார்த்தது போலவே அந்த அறையிலும் ஒரு செக்கிங். சம்பிரதாயக் கேள்விகள். அவர்கள் அங்கிருந்து என்னை ஒரு பெரிய ஹாலுக்கு அனுப்பி வைத்தார்கள்.

எதிர்பார்க்கவேயில்லை இத்தனை பேர் இங்கே காத்திருப்பார்கள் என்று. அனுமர் வால் போல நீண்டிருந்தது விசாவுக்காய் காத்திருந்த மக்களின் கூட்டம். எல்லோரும் சொல்லி வைத்தார் போல வெள்ளை, அல்லது அது சார்ந்த நிறத்தில் ஆடை அணிந்திருந்தார்கள்.

அது ஏனோ தெரியவில்லை. அமெரிக்கா சென்று விட்டால் முக்கால் பேண்டும், சாயம் போன டி சர்ட் ம் போட்டு அலையும் மக்கள் எல்லாம் அமெரிக்க கவுன்சிலேட் உள்ளே மட்டும் ஏன் முழுக்கை சட்டையும், கழுத்துப் பட்டையும் அணிந்து வருகிறார்களோ ! தேவையில்லாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கையிலிருந்த டோ க்கன் தொள்ளாயிரத்து இருபத்து ஒன்பது என்றது. அங்கே அறுநூற்று எத்தனாவதோ எண் அழைக்கப் பட்டுக் கொண்டிருந்தது.

நின்று கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று புரிந்து கொண்டு ஓரமாய் ஒரு இருக்கையில் அமர்ந்தேன்.

வரிசையாய் பத்து கவுண்டர்கள். எல்லா கவுண்டரின் உள்ளேயும் அமெரிக்க முகங்கள். இது வரை நான் தாண்டி வந்த கவுண்டர்களிலெல்லாம் இந்திய முகங்கள் தான். ஒவ்வொரு கவுண்டரின் முன்னும் வரிசைகள்.

அமெரிக்க உச்சரிப்பில் கேள்விகள் தெறித்துக் கொண்டிருந்தன.

‘ஏன் அமெரிக்கா போகிறாய் ?’

‘என்ன வேலை உனக்கு அங்கே ? ஏன் அமெரிக்கர் ஒருவரால் இந்த வேலையைச் செய்ய முடியாதா ?

‘எத்தனை நாட்கள் அங்கே தங்குவாய் ?’

‘எங்கே தங்குவாய் ? என்ன வேலை ?’

‘திரும்ப இந்தியாவுக்கு வருவாயா ? வருவாய் என்பதற்கு என்ன நிச்சயம் ?
ஒவ்வொரு கேள்விக்கும் தலையைக் குனிந்து பவ்யமாக மேடம் அல்லது சார் என்று முடிவது போல பணிவாக விழுந்தன பதில்கள். கேள்விகள் கட்டளைகளாகவும், பதில்கள் எல்லாம் அடிமைகளில் குரல்களாகவும் ஒலித்துக் கொண்டிருந்தன அங்கே.

ஓட்டிக் கொண்டிருக்கும் காருக்கு முன்னால் சைக்கிள்காரன் ஒருவன் குறுக்கே வந்தாலே பொறுமையிழந்து கத்தும் மக்கள் அவர்கள். சைக்கிள் காரன் தானே, இந்த வெயிலில் அவன் கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டுகிறான், காரில் இருக்கும் நாம் கொஞ்சம் பொறுமையாய் போகலாம் என்றெல்லாம் யோசித்துப் பார்க்காத மக்கள் அங்கே கவுண்டர்களின் முன்னால் கவசங்களையெல்லாம் கழற்றி வைத்து விட்டுத் தெண்டனிட்டுக் கிடந்தார்கள்.

கவுண்டருக்குள்ளே இருப்பவர்கள் எல்லோரும் கடவுளர்களாகவும், அவர்கள் அருள்பாலித்து வழங்கப் போகும் விசா வரத்துக்காக பாத்திரமேந்திக் காத்திருக்கும் பக்தர்கள் போல மக்களும் எனக்குத் தோன்றினார்கள். நானும் அப்படித்தான் போய் நிற்கவேண்டியிருக்கும் என்னும் நினைப்பே எனக்குள் அருவருப்பாய் உறுத்தியது.

பிரசவத்துக்காகக் காத்திருக்கும் மகளைப் பார்க்க அமெரிக்கா செல்லத் துடித்துக் கொண்டிருந்த ஒரு பெற்றோருக்கு என் கண்முன்னால் விசா மறுக்கப் பட்டது. அவர்களுடைய மகளுக்கு அமெரிக்க வங்கியில் போதுமான அளவுக்குப் பணம் இல்லையாம்.

படிப்புக்காக அமெரிக்கா செல்வதற்காக இருந்த சில மாணவர்களும் நிராகரிக்கப்பட்டார்கள். இங்கே யாருக்கு விசா வழங்கப்படும், யாருக்கு வழங்கப்படாது என்பதெல்லாம் புரியாத புதிர். ஒரே தகுதியுள்ள இருவரில் ஒருவர் அழைக்கப்படுவார், ஒருவர் துரத்தப்படுவார். எதிர்த்துப் பேசவோ, வாதிடவோ எந்த வாய்ப்பும் இல்லை. எல்லோருடைய முகங்களும் பதட்டத்தின் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தன. கடைசி வரிசையில் இரண்டு கத்தோலிக்கப் பாதிரியார்கள். அவர்களும் கைநிறைய ஆவணங்களோடு காத்திருந்தார்கள்.

ஏழாவது எண் கவுண்டரில் கையில்லாத மேலுடை அணிந்திருந்த ஒரு பெண்மணி சகட்டு மேனிக்கு விண்ணப்பங்களை நிராகரிப்பதாகவும், இரண்டாவது கவுண்டரில் அமர்ந்திருக்கும் ஆண் இதுவரை யாரையும் நிராகரிக்கவில்லை என்றும் தகவல்கள் பின் இருக்கையில் பரிமாறப்பட்டன.

நாம் விரும்பிய வரிசையில் சென்றுவிடவும் முடியாது. நம்முடைய எண்ணை அழைத்து எந்த கவுண்டரில் போகச் சொல்கிறார்களோ அங்கே தான் நாம் சென்றாக வேண்டும். நம் கடவுளை நம் பிறப்பு தீர்மானிப்பது போல, நமக்குரிய கவுண்டரை அழைப்பு தீர்மானிக்கிறது.

என்னை பத்தாவது கவுண்டரில் அழைத்தார்கள்.

பதட்டமும், வேண்டுதலும் நிறைத்துக் கொண்டு முன்னால் சென்று நின்றேன். என்னையும் அறியாமல் என் முதுகில் ஒரு பணிவு வந்து சம்மணமிட்டு அமர்ந்து கொண்டது.

இப்போது கேட்கப் போகும் நான்கைந்து கேள்விகள் தான் என்னுடைய பயணத்தை நிர்ணயிக்கப் போகின்றன. வேலைக்கான நேர்முகத் தேர்வு போன்ற ஒரு சூழல். உனக்குத் தெரிந்த ஆயிரம் பதில்களுக்கு மரியாதை இல்லை, தெரியாத ஒரு பதிலுக்கான தண்டனை நிச்சயம் உண்டு.

‘எதற்காக அமெரிக்கா செல்கிறாய் ?’ என் முன்னால் விழுந்தது கேள்வி.

இரண்டு மணிநேரமாக இருக்கையில் காத்திருந்த எனக்கு இவர்கள் என்னென்ன கேள்விகள் கேட்கப் போகிறார்கள் என்பதெல்லாம் அத்துப்படியாகியிருந்தது. எல்லா கேள்விகளுக்குமுரிய பதிலை இந்த ஒரு கேள்விக்குப் பதிலாய்க் கொடுத்தேன்.

உள்ளே இருந்தவன் என்னை கொஞ்சம் வித்தியாசமாய்ப் பார்த்தான். தலையை ஆட்டினான்.

‘உங்களுக்கு விசா வழங்கப்படும், முதலாவது கவுண்டரில் சென்று பணத்தைக் கட்டுங்கள்’. அவர் சொன்னபோது மனசுக்குள் நிம்மதி நிழல் நீண்டது.

அதுதான் கடைசிக் கவுண்டர். அங்கே இரண்டாயிரத்து இருநூறு ரூபாய்க்கான டிமாண்ட் டிராஃப்ட் ஐக் கொடுத்துவிட்டு, ஐம்பது டாலருக்கான ரசீதைப் பெற்றுக் கொண்டு,  கவுன்சிலேட்டை விட்டு வெளியே வந்தபோது மாலையாகி இருந்தது.

இப்போது தான் நான் நானாகி இருந்தேன். இதுவரை போர்த்தியிருந்த பணிவு, அடக்கம் எல்லாவற்றையும் அவிழ்ந்து அந்தக் கட்டிடத்துக்குள் எறிந்து விட்டு வெளியே வந்து சென்னையின் அழகான வெப்பக் காற்றை முகர்ந்தேன். இப்போது அது மிகவும் ஆசுவாசமாய் இருந்தது.

‘ஐயா…. ஏதாச்சும்……’ கை நீட்டியபடி வந்தார் ஒரு பிச்சைக்காரர்.

பாக்கெட்டைத் துழாவி ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை அவருடைய தட்டில் போட்டேன். அவர் குனிந்து, பணிந்து,  நன்றி ஐயா என்று சொல்லிக் கொண்டே கடந்து போனார். அந்த வினாடியில் மனசுக்குள் வந்து போனது, நான் கவுண்டருக்கு வெளியே பணிவுடன் நின்றிருந்ததும், உள்ளே இருந்தவன் எனக்குப் விசா பிச்சையை வழங்கியதும்.

பிச்சைக்காரனிடமிருந்து நமக்குக் கிடைக்கப் போகும் கண நேர மரியாதைக்காகவும், நன்றிக்காகவும் தான் நாம் பிச்சையிடுகிறோமோ ?
மனம் என்னிடம் கேட்ட போது தூரத்தில் அந்தப் பிச்சைக்காரர் வேறொருவனுக்கு மரியாதை வழங்கிக் கொண்டிருந்தார்.