சிறுவர் பக்கம் : தேனொழுகும் பேச்சு

Image result for kids

ஒரு காட்ல ஒரு நரி இருந்துச்சு. அமைதியா ஒரு இடத்தில் பதுங்கி இருந்தபடியே ஏதாச்சும் விலங்கு வந்தா புடிச்சு சாப்பிடணும்ன்னு காத்திட்டு இருந்தது. அந்த நேரம் பாத்து ஒரு சின்ன ஆட்டுக்குட்டி தூரத்துல நடந்து வந்துட்டே இருந்தது. ஆட்டுக்குட்டியைப் பாத்ததும் நரிச்கு செம குஷி. எப்படியும் இந்த ஆட்டைப் புடிட்டு அடிச்சு சாப்டணும்ன்னு சப்புக்கொட்டிகிட்டே காத்திருந்தது.

ஆடு கொஞ்சம் பக்கத்துல வந்ததும், மெல்ல மெல்ல ஆட்டை நோக்கி நடந்துச்சு. உஷாரா இருந்த ஆட்டுக்குட்டிக்கு அந்த மெல்லிய  சத்தம் கேட்டது. உடனே ஆட்டுக்குட்டி உயிரைக் கையில புடிச்சுகிட்டு ஒரே ஓட்டமா ஓடிப் போச்சு. நரி விடுமா ? பின்னாடியே துரத்திட்டு ஓடிச்சு. ஆனா அதால அவ்வளவு வேகமா ஓட முடியல.

ஆட்டுக்குட்டி ஓடிப் போய் மலைல இருந்த ஒரு கோயிலுக்குள்ள போய் பதுங்கிடுச்சு. நரிக்கு பயங்கர ஏமாற்றம். ஆனா அதை வெளிக்காட்டாம கோயில்ல இருந்த ஆடு கிட்டே அன்பா பேசற மாதிரி நடிக்க ஆரம்பிச்சுது.

“ஏய்ய்… ஆட்டுக்குட்டி. நீ செமயா ஓடினே.. இன்னிக்கு நான் வெச்ச போட்டில நீதான் பஃஸ்ட் பிரைஸ். வெளியே வா, உனக்கு ஒரு பரிசு தரேன்…” நரி சொன்னது.

“பரவாயில்லை, இரண்டாவதா வந்த நீயே அதை எடுத்துக்கோ. நான் உனக்கு தர பரிசா நீ நினைச்சுக்கோ” ஆடு பதில் சொன்னது.

“நீ பாக்க ரொம்ப அழகா இருந்தே, உன் முகத்தைப் பாக்கணும்னு தான் நான் தொரத்தினேன். கொஞ்சம் ஒரு தடவை முகத்தை காட்டி சிரிச்சிட்டு போ” நரி வஞ்சகம் பேசியது.

“ஓ.. அப்படியா…. என்ன பண்ண ? ஓடி ஓடி முகம் களைச்சு போயிருக்கு. இன்னொரு நாள் மேக்கப் எல்லாம் போட்டுட்டு வந்து உன்னைப் பாக்கறேன்” என்றது ஆடு.

நரிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடைசியாக சொன்னது.

“ம்ம்.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன். இப்போ பூசாரி வருவான். கோயிலுக்குள்ள ஆடு நிக்கிறதைப் பாத்தா அவ்ளோ தான். புடிச்சு பலி போட்டுடுவான்” நரி மென்மையாய் மிரட்டியது.

ஆடு சளைக்கவில்லை, “உள்ளே இருந்து ஆண்டவனுக்காக பலியாகிறது, வெளியே வந்து உன் பசிக்கு பலியாகறதை விட நல்லது தான்” என்றது.

நரி வேறு வழியில்லாமல் வந்த வழியே திரும்பிச் சென்றது.

இப்படித் தான் நிறைய பேர் நம்மிடம் பேசற பேச்சும் இருக்கும். பேசும்போது ரொம்ப நல்ல அன்பா பேசற மாதிரி பேசுவாங்க. ஆனா எல்லோரும் நல்ல மனநிலையோட பேசுவாங்கன்னு சொல்ல முடியாது. எல்லார் கிட்டேயும் அன்பா இருக்கணும், ஆனா எல்லார் சொல்றதையும் நம்பக் கூடாது. அந்த ஆட்டுக்குட்டி மாதிரி புத்திசாலித்தனமா இருக்கணும்.

பொதுவா நம்ம கிட்டே கெட்ட எண்ணத்தோட பேசறவங்க நம்ம கிட்டேயிருந்து ஏதாச்சும் தகவலை எதிர்பார்ப்பாங்க.

“அப்பா டெய்லி நைட் தான் வருவாரா ? ஹோம் வர்க் எல்லாம் செய்ய உனக்கு கஷ்டமா இருக்குமே?” என்று அன்பாகக் கேட்பது போலக் கேட்பார்கள். “டெய்லி நைட்டா தான் வருவாரு. அம்மா தனியா தான் இருப்பாங்க. வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க.” என்று கதை கதையாய் பேசினால் திருடர்களுக்கு ரொம்ப வசதியாகி விடும். அப்படியெல்லாம் பேசக் கூடாது.

“அப்பாகிட்டயே அதைக் கேட்டுக்கோங்க” என்று சொல்லி விட்டு ஒரு புன்னகையோடு போய்விட்டால் அவர்கள் அமைதியாகிவிடுவார்கள்.

யாராவது ஒரு சாக்லேட் நீட்டிவிட்டு உங்களிடம் ஏதாவது தவறான செயல் செய்யச் சொன்னால் உஷாராகி விட வேண்டும். இலவசமாய் ஒருவர் ஒரு பொருளை உங்களுக்குத் தருகிறார் என்றால் அவர் உங்களிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார் என்பது தான் பொருள். அப்புறம் அவருக்கு நீங்கள் ஏதோ ஒன்றைச் செய்யவேண்டிய கட்டாயம் வந்து விடும். அதனால் “இலவசமா, வேண்டவே வேண்டாம்” என மறுத்து விட வேண்டும்.

யார் என்ன கேட்டாலும் அதுக்கெல்லாம் பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை. தேவையானது என்று தெரிந்தால் மட்டும் பதில் சொன்னால் போதும். இல்லையேல், ‘சாரி.. “, “தெரியாது…”, “வீட்ல கேளுங்க…” இப்படி ஏதாச்சும் ஒரு பதிலைச் சொல்லி விட்டு நீங்கள் போய்விடலாம்.

“டீக்கு போடணும், அந்த சீனி பாட்டிலை எடு” ந்னு அம்மா சொன்னா உப்பு பாட்டிலை தெரியாம எடுப்பீங்க தானே ? உப்பும் சர்க்கரையும் ஒரே மாதிரி இருந்தாலும் அது ரெண்டுமே வேறு வேறு குணாதிசயம். அதே மாதிரி தான் மக்களும். “நல்லா இருக்கியா ?” என இரண்டு பேர், இரண்டு விதமான மனநிலையோடு, இரண்டு விதமான எண்ணங்களோடு பேச முடியும். எனவே அதை மனதில் வைத்திருக்க வேண்டும்.

பொதுவா நம்மை ஏமாத்த நினைக்கிறவங்க முதல்ல நம்மை ரொம்ப பாராட்டுவாங்க. ரொம்ப அன்பா இருக்கிற மாதிரி நடிப்பாங்க. “சே.. இவ்ளோ அன்பா பேசறவங்க கேட்டா நாம எப்படி மறுத்துப் பேசறது” ? அப்படி ஒரு எண்ணம் நம்ம மனசில வர மாதிரி நடந்துப்பாங்க. ஆனா, அதையெல்லாம் கண்டுக்க கூடாது.

அம்மாவோ, அப்பாவோ எவ்வளவு தான் திட்டினாலும் அவர்கள் நம்முடைய நன்மையை மட்டுமே மனசில வெச்சிருப்பாங்க. வெளியாட்கள் எவ்வளவு தான் நம்மைப் பாராட்டினாலும் அவர்கள் நம்ம பெற்றோர் மாதிரி நம்மை அன்பு செய்யவே மாட்டார்கள். அதனால, என்ன நடந்தாலும் எப்பவுமே அம்மா அப்பா கூட அன்பாவும், கோபப்படாமலும் இருக்கணும்.

சுருக்கமா சொல்லணும்னா, தேனோழுக பேசற மக்கள் கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்.

Kids Speech : தாய்மொழிக் கல்வி

Image result for Kid speech
அனைவருக்கும் அன்பின் வணக்கம்.

தாய்மொழி என்பது நமது அன்னையின் வழியாய் நாம் கற்றுக் கொள்ளும் மொழி. நாம்மழலைகளாய் இருக்கும் போது நமது காதுகளில் ஒலிக்கும் மொழி தாய் மொழிதான். நாம் குழந்தையாய் இருக்கும்போது நமது நாவில் நாட்டியமாடுவது தாய் மொழி தான். நாம் கல்வி கற்க ஆரம்பிக்கும் போது நமது நெஞ்சில் நிலைப்பது தாய் மொழிதான்.

ஒரு தாய் எப்படி குழந்தைக்கு அன்னியோன்யமாய் இருக்கிறாரோ, அதே போல தான் தாய் மொழியும் அன்யோன்யமாய் மாறிப் போகிறது. ஏனென்றால் அது தாய் கற்றுத் தரும் மொழி. அன்போடு கலந்து அன்னை ஊட்டும் அமுத மொழி அது. அது நமது உயிரோடும், உணர்வோடும் கலந்தது.

தாய் சொல்லிக் கொடுக்கும் மொழியில் கற்கும் போது, பாடங்கள் எளிதாகவும், முழுமையாகவும் புரிகின்றன. தாய்மொழி வசப்படாதவர்களுக்கு, அயல் மொழி புரிவதில்லை. நாம் எப்போதுமே எல்லா விஷயங்களையும் தாய்மொழியில் புரிந்து கொள்ளவே முயல்வோம், எனவே தான் தாய்மொழியில் கற்பது எளிதாகிப் போகிறது.

ஒப்புரவற்ற அறிவை வளர்த்துக் கொள்ள தாய்மொழிக் கல்வி உதவும். எப்படி ? தாய்மொழியில் கற்கும்போது மிக வேகமாகக் கற்றுக் கொள்ள முடியும். தாய் மொழியில் கற்கும் போது சந்தேகங்களை மிக விரைவாகவே நிவர்த்தி செய்ய முடியும். தாய்மொழியில் கற்கும்போது பல விஷயங்களை அதோடு ஒப்பிட்டுப் படிக்க முடியும். இப்படிப் பல்வேறு வசதிகள் நமக்கு இருக்கின்றன.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மொழி எம் தமிழ் மொழி. உலக மொழிகளிலேயே அது பழமையானது என்கிறது யுனெஸ்கோ. உலகில் மொழிகள் தோன்றும் முன்பே உயிர்களின் குரல்களில் தமிழ் இருந்தது என்கிறது, “மொழிகளின் தாய்” எனும் ஆராய்ச்சி நூல்.
இலக்கியத்தையும், வானியலையும், கணிதவியலையும் உருவாக்கிப் பகிர்ந்த மொழி எம் தாய் மொழி.

இந்தத் தாய் மொழியையே எமது முன்னோர் பேசினர், அவர்கள் மூலமாக நமக்குக் கிடைத்த கலாச்சாரப் பகிர்வுகளும், பண்பாட்டு விழுமியங்களும் நம்மை உருவாக்கியிருக்கின்றன. அந்த பண்பாடுகளையும், பழங்கங்களையும் போற்றிக் காக்க தாய்மொழிக் கல்வி நமக்கு மிகவும் பயன்படுகிறது.

என் தாய்மொழி என்பது எனது அடையாளம். எனது தாய் மொழி என்பது எனது மண்ணின் அடையாளம். எனது தாய் மொழி என்பது என் கலாச்சார பண்பாட்டின் அடையாளம். என் தாய்மொழி என்பது என் வாழ்வின் அடையாளம். எனவே தான் தாய் மொழியில் கல்வி கற்க பேரவாவும் பெருமிதமும் கொண்டுள்ளேன்.

நன்றி வணக்கம்