உடலைப் பேண பத்து கட்டளைகள்

 

ss 

 

உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்.

  

 1. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி அலுவல்களுக்கிடையே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம். படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப்பயிற்சி என எவ்வளவோ செய்யலாம்.
 2.  

   

 3. தினமும் மூன்று வேளை மூக்கு முட்ட அசைவப் பொருட்களை உடலுக்குள் திணிப்பதை கொஞ்சம் ஒத்தி வையுங்கள். எல்லாம் அளவாய் ஒருப்பதே ஆரோக்கியமானது. தினமும் ஐந்து முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். பெரும்பாலானவை வேக வைக்காததாக இருக்க வேண்டியது முக்கியம். சில காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம்.  
 4.  

 5. சோர்வாய் இருக்கிறது ஒரு காபி குடிப்போம், போரடிக்கிறது ஒரு காபி குடிப்போம், நண்பர் வந்து விட்டார் ஒரு காபி குடிப்போம் என எதெற்கெடுத்தாலும் காபி அருந்துவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள். தூய்மையான தண்ணீர், எலுமிச்சை சாறு, செயற்கை இனிப்பு கலக்காத பழச்சாறு, கிரீன் டீ போன்றவற்றை அதற்கு மாற்றாக அருந்தப் பழகுங்கள். 
 6.  

 7. நல்ல பழக்கங்களைக் கொண்டிருப்பது முக்கியம். குறிப்பாக புகைத்தலை முழுமையாய் விட்டு விடுங்கள். மது அருந்துதல், எதிர்மறை எண்ணங்களை வளர்த்தல் போன்ற அனைத்துமே உடலுக்கு ஊறு விளைவிப்பவை. எனவே நல்ல பழக்கங்கள், நல்ல சிந்தனைகள் இவை முக்கியம்.
 8.  

 9. மோசமான கொழுப்பு நிரம்பிய உணவுகளை தூரமாய் ஒதுக்குங்கள். குறிப்பாக, சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா போன்ற அதிக கொழுப்பு உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். நலமான வாழ்வுக்கு உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம், அதற்கு தேவையற்ற கொழுப்புப் பொருட்களை ஒதுக்குவது மிக மிக அவசியம்.
 10.  

 11. உணவில் உப்பு சேர்ப்பதை மட்டுப்படுத்துங்கள். அளவுக்கு அதிகமான உப்பு உடலில் பல்வேறு நோய்களைக் கொண்டு வரும். அதிகம் உப்பை உட்கொள்ளும் போது உடலில் சோடியம் அளவு அதிகரிக்கிறது, இது மினரல்களின் சமநிலையைப் பாதிக்கிறது. உயர் குருதி அழுத்தத்துக்குக் கூட இது காரணமாகி விடுகிறது. அதிக உப்பு ரொம்ப ரொம்ப தப்பு என மனதுக்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். 
 12.  

 13. உண்பதை நன்றாக மென்று உண்ணுங்கள். அதிக நேரம் மென்று உண்ணும் பொருள் உங்கள் உடலுக்கு அதிக பயனளிக்கும். தேவையற்ற கொழுப்பு சேர்வதிலிருந்தும், வாயுத் தொல்லை, செரிமானப் பிரச்சினை போன்ற அனைத்திலிருந்தும் அது உங்களைத் தப்புவிக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலிலுள்ள அசுத்தங்களை வெளியேற்ற அது உதவும். முக்கியமாக, உணவு உண்டபின் குளிர்ந்த நீரைக் குடிக்கவே குடிக்காதீர்கள். மிதமான சூடுள்ள தண்ணீரையே அருந்துங்கள். 
 14.  

 15. இனிப்புப் பொருட்களை உண்பதை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கொழுப்பு, இன்சுலின், டிரைகிளைசெரிட்ஸ் போன்றவற்றின் அளவு உடலில் அதிகரித்து உடலின் எதிர்ப்புச் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கச் செய்யும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாங்கும் பொருளில் குளுகோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், கார்ன் சுகர் என எழுதப்பட்டிருப்பவை எல்லாம் இனிப்புப் பொருட்களே !
 16.  

   

 17. எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது உடலின் மிக முக்கியமான தேவை. இல்லையேல் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு உடைவு நோய் வந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விடும். எனவே உடலுக்குக் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கக் கூடிய உணவுகளை தவறாமல் உண்ணுங்கள். எலும்பின் உறுதியை நீர்த்துப் போகச் செய்யும் குளிர்பானங்களை (கோக், பெப்ஸி வகையறாக்கள்) முழுமையாய் ஒதுங்குங்கள். காலை வெயிலிலும் கொஞ்ச நேரம் உலவுங்கள் வைட்டமின் டி இலவசமாய்க் கிடைக்கும்.
 18.  

 19. தேவையான ஓய்வு, தேவையான தூக்கம், மனதை இலகுவாக்குதல் இவையெல்லாம் மிக மிக முக்கியம். வேலை வேலை என எந்நேரமும் அலையாமல் உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களை தினமும் சற்று நேரம் செய்யுங்கள். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அன்பாகவும், இனிமையாகவும் செலவிடும் நிமிடங்கள் ஆரோக்கிய உடலுக்கும் உத்தரவாதம் !
 20.  

  நன்றி : தமிழ் ஓசை – களஞ்சியம்

குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களும், பாதுகாப்பு நடவடிக்கைகளும்.

kid.jpg

( இந்த வார தமிழ் ஓசை நாளிதழின் களஞ்சியம் இணைப்பில் வெளியான எனது கட்டுரை ) சமீபத்தில் அமெரிக்க அரசு பாதுகாப்பு காரணங்களைக் காட்டி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான விளையாட்டுப் பொருட்களை திரும்ப அனுப்பி விட்டது. இந்த விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்குக் கேடு விளைவிக்கக் கூடியவை என்பதே இந்த முடிவின் காரணமாகும். 

. நச்சுத்தன்மை அதிகமான வர்ணப்பூச்சுகளைப் பயன்படுத்துதல், பென்சில் போன்றவற்றில் குழந்தைகளுக்கு ஊறு விளைவிக்குமளவுக்கு லெட் தன்மை அதிகம் இருத்தல் உட்பட பல்வேறு காரணங்கள் இந்த தடைக்குக் காரணமாக வெளியிடப்பட்டுள்ளன. உலகெங்கும் பெற்றோரின் கவனத்தை ஈர்த்திருக்கும் இந்தச் செய்தி குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கும் போது செயல்பட வேண்டிய எச்சரிக்கை உணர்வை அதிகரித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன ? 

 1. முதலில் விளையாட்டுப் பொருள் எந்த வயதினருக்கானது என்பதைக் கவனியுங்கள். விளையாட்டுப் பொருளின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் வயது குழந்தைகளின் பாதுகாப்போடும் தொடர்புடையது. ஐந்து வயது குழந்தைக்கான விளையாட்டுப் பொருள் இரண்டு வயது குழந்தைக்கு ஆபத்தானது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
 2. விலைகுறைந்த உலோகப் பொருட்களை வாங்கி குழந்தைகளுக்கு அணிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். அந்த ஆபரணங்களை குழந்தை வாயில் வைத்துக் கடித்தால் நச்சுத் தன்மை உடலில் பரவும் அபாயம் உண்டு.
 3. காந்தப் பொருட்கள் இணைக்கப்பட்டிருக்கும் விளையாட்டுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். தவறுதலாக விழுங்கப்படும் காந்தப் பொருட்கள் உயிருக்கே ஆபத்தாய் முடியும்.
 4. குழந்தைகளின் அறிவை வளர்க்கும் விதமான விளையாட்டுப் பொருட்களை அதிகம் வாங்க வேண்டும். குழந்தைகளுக்கு புத்தகங்கள் கூட விளையாட்டுப் பொருட்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 5. மூன்று வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கு வாங்கும் விளையாட்டுப் பொருட்கள் சிறு சிறு பாகங்களாக இல்லாமல் பெரியதாக, நன்றாக இணைக்கப்பட்டதாக இருக்கும் படி வாங்க வேண்டும்.
 6. .குழந்தைகளுக்கு பென்சில், வர்ணமடிக்கும் பொருட்கள், வர்ண பென்சில்கள், சாக்பீஸ்கள் வாங்கும்போது தரமானதாக குழந்தைகளுக்காகவே உருவானதாக இருக்க வேண்டியது அவசியம்.
 7. பலூன்கள் எச்சரிக்கையுடன் விளையாடப்பட வேண்டியவை. பலூன்களினால் உயிரிழப்புகள் பல ஏற்பட்டுள்ளன. எனவே சிறுவர்களுக்கு பலூண்களை விளையாடக் கொடுப்பதை தவிர்த்தல் நலம்.
 8. இணையத்தில் பொருட்கள் வாங்கினால் அந்த பொருள் குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்த பின்பே வாங்குங்கள். வாங்கிய விளையாட்டுப் பொருள் உடைந்து விட்டால் வீணாகிறதே என்று கவலைப்படாமல் உடனே அப்புறப்படுத்தி விடுங்கள். இல்லையேல் அவை குழந்தைகளைக் காயப்படுத்திவிடக் கூடும்.
 9. தீப்பிடிக்காத விளையாட்டுப் பொருளாக வாங்குங்கள். அதிலும் ரோமம் போன்றவை உள்ள விளையாட்டுப் பொருட்கள் ஒவ்வாமை, வயிறு சம்பந்தமான நோய்களை உண்டு பண்ணும் என்பதால் அவற்றைத் தவிருங்கள்.
 10. நச்சுத்தன்மையுடைய பெயிண்ட்கள் உள்ள விளையாட்டுப் பொருட்களை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும். விலை அதிகமான விளையாட்டுப் பொருட்கள் தரமானவை என்னும் பொதுவான எண்ணத்தையும் ஒழிக்க வேண்டும்.

 குழந்தைகளின் பொழுதுகளை ஆக்கப்பூர்வமாகச் செலவிடும் விதமான விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. 

. குழந்தைகள் இன்றைய நவீன உலகின் ஊடகங்களுக்கு அடிமையாகி விடாமல் தவிர்க்க அவர்களுக்கு நல்ல விளையாட்டுகளை அறிமுகப்படுத்துவதும், விளையாட்டுகளில் ஊக்கப்படுத்துவதும் அவசியம். அதே நேரத்தில் அவற்றில் உள்ள சிக்கல்களைக் குறித்த விழிப்புணர்வை பெற்று எச்சரிக்கையுடன் இருத்தலும் இன்றியமையாதது.

விஷ வாயு : தீதும் நன்றும் பிறர் தர வாரா

விஷ வாயு :

organic.jpg

( கடந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை )

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் போபாலில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவும் அதன் விளைவாக நிகழ்ந்த அதிர்ச்சிகரமான மரணங்களும் இன்னும் மக்களின் கண்களில் அனலாய் வீசிக்கொண்டிருக்கிறது என்பதையே சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட மெல்லிய விஷ வாயு கசிவு ஏற்படுத்திய பீதி சுட்டிக் காட்டுகிறது. அந்த பீதி அகலும் முன்னமே ஹுண்டாய் கார் கம்பெனியில் நிகழ்ந்த விஷ வாயு கசிவும் உயிரிழப்புகளும் மேலும் பீதியை கிளப்பி விட்டிருக்கிறது.

பல இலட்சம் சப்பானில் நிகழ்ந்த அணு குண்டு தாக்குதலுக்கு அடுத்தபடியாக , ரசியாவில் நிகழ்ந்த அணு உலை வெடிப்பு போல போபால் பல ஆயிரம் உயிர்களைப் பலிவாங்கி உலகின் கண்களைக் குளமாக்கியது வரலாறை விட்டு விலகப் போவதில்லை. உயிர்பலியைத் தவிர்த்து கருவிலிருக்கும் குழந்தையைக் கூட ஊனமாக்கிச் சென்ற விஷவாயுக் கசிவு மக்களிடையே இன்னும் துயரம் மிகுந்த உயிர்ப்புடன் உலவி வருகிறது என்பது கண்கூடு.

பொதுமக்களிடையே நிகழும் பீதி அலட்சியப் படுத்திவிடக் கூடியதல்ல. ரசாயனக் கூடங்களிலிருந்தோ , அணுமின் நிலையங்களிலிருந்தோ பாதுகாப்பை மீறிக் கசியும் வாயுக்கள் பெரும்பாலும் மனிதனுக்கு தீங்கு விளைவிப்பவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த வாயுக்களில் இருக்கும் ஆர்கானிக் , ஹைட்ரோகார்பன் போன்றவற்றின் அளவை வைத்தே பாதிப்பின் வீரியம் கணக்கிட முடியும்.

சென்னையில் கசிந்த விஷவாயு உயிருக்குச் சேதம் விளைவிக்கக் கூடியதல்ல எனவும், கண் எரிச்சல், மூச்சு விடுதலில் சற்று சிரமம் என்னும் நிலையைத் தாண்டி பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தாது என்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த பின்பே மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது.

பொத்தாம் பொதுவாக கசியும் வாயுவை சுவாசித்த உடனேயே மரணம் நிச்சயம் என்று பயப்படத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் நமது வீடுகளின் உள்ளேயே ஆர்கானிக் வாயு உலவிக் கொண்டே தான் இருக்கிறது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ? அது தான் உண்மை.

வீட்டிற்கு அடிக்கும் வர்ணப் பூச்சு (பெயிண்டிங்), வார்னிஷ், பெரும்பாலானகிளீனிங்பொருட்கள் இவையெல்லாம் ஆர்கானிக் வாயுக்களை வெளிவிடக் கூடியவையே. இன்னும் கூட தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில் பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே நல்ல காற்றை சுவாசித்துவிட்டு வீட்டிற்கு உள்ளே ஆர்கானிக் வாயுவை சுவாசிக்கும் நிலமையே பலருக்கும்.

எனினும் இதுகுறித்து அதிகமாய் பயப்படத் தேவையில்லை. பெரும்பாலும் இந்த வாயுக்களில் குறைந்த விஷத் தன்மையே காணப்படும். பயன்படுத்தப் படக் கூட கால அளவைப் பொறுத்து இந்த பாதிப்பு வேறுபடும் . உதாரணமாக வீட்டு வேலைக்காரப் பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றவர்களை விட அதிகம்.

வீடுகளில் இருக்கும் ஆர்கானிக் வாயுக்களின் பாதிப்பிலிருந்து தப்ப நல்ல காற்றோட்டமான சூழலும், பயன்படுத்தாத ஆர்கானிக் தன்மை கலந்த பொருட்களை அப்புறப்படுத்துவதும் அவசியம் . குறிப்பாக பெயிண்ட் போன்றவை மீதமானால் அவற்றை அப்புறப்படுத்துவதே நல்லது.

மெத்லின் குளோரைடு, பென்சேன் போன்ற மூலக்கூறுகள் அடங்கிய பெயிண்ட் வகைகளை அதன் உறைகளிலிருந்து கண்டறிந்து கவனமாக கையாள வேண்டும். வீட்டு உபயோகப் பொருட்களுடன் அவற்றைக் கலந்து வைக்கவே கூடாது.

ஆலைகளில் ஏற்படும் விஷ கசிவைக் கண்டுபிடிக்க புதிய உத்தியாக புற ஊதாக்கதிர் காமராக்கள் வந்துள்ளன. இவை பல மீட்டர் தூரத்திலிருந்தே மெல்லிய கசிவைக் கூட கண்டுபிடித்துவிடும் திறன் கொண்டவை. வீரியமுடைய வாயுக்கள் எனில் இவை பல நூறு மீட்டர் தூரத்திலிருந்தே கண்டுபிடித்துவிடும்.

ஆலைகளிலிருந்து விஷவாயு கசிவைத் தவிர்க்க அரசு நிர்ணயித்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்பட வேண்டும். ஆலைகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த சோதனைகள் நடுநிலையுடன் நிகழ்த்தப்பட வேண்டும்.

 • கசிவு ஆபத்து நிகழ்ந்தால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆலை தொழிலாளர்களுக்கும், ஆலை இருக்கும் இடத்திலுள்ள பொதுமக்களுக்கும் அரசும் நிறுவனமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
 • இத்தகைய ஆலைகள் இருக்கும் இடங்களில் அரசே ஆம்புலன்ஸ் உதவி, மருத்துவ உதவி போன்றவற்றுக்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
 • பணியாளர் ஒருவரின் அலட்சியமே போபாலில் வாயு எமனாய் உருவெடுத்தது. எனவே அத்தகைய அலட்சியங்கள் அணு அளவு கூட நடக்காத நிர்வாகம் ரசாயன ஆலைகளில் நிச்சயம் வேண்டும்.
 • விஷ வாயு கசிவு போன்ற அபாயங்கள் நிகழும் போது நிர்வாகம் துரிதகதியில் சுற்றியிருக்கும் மக்களுக்கு தகவலைத் தெரிவிக்க வேண்டும். சைரன், ஆலை ஒலி, ஒலிபெருக்கி அறிவிப்பு என ஏதேனும் ஒன்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
 • சாலைகளில் ஓடும் வாகனங்களிலிருந்து வரும் புகையின் அளவைஎமிஷன் சோதனைமூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
 • வீடுகளில் பயன்படுத்தப் படாத பெயிண்டிங் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
 • வீடுகளை நல்ல காற்றோட்டமாக இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.
 • காற்றோட்ட வசதியில்லாத அறைகளில் ஹைட்ரோகார்பன் போன்ற விஷத் தன்மையுடைய பொருட்கள் இல்லாத சாதாரணமான பூச்சுகளைப் பயன்படுத்துவது சிறந்தது.
 • வீட்டு உபயோகப் பொருட்களையும் பாத்திரங்கள், கழிவறை போன்றவற்றை சுத்தப்படுத்தும் பொருட்களையும் ஒரே இடத்தில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 • குழந்தைகளுக்கு வாங்கும் பல விதமான பொம்மைகளில் கூட இத்தகைய விஷத் தன்மை இருக்கிறது. அத்தகைய பெயிண்டிங் அடங்கிய பொருட்களை குழந்தைகளுக்கு அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சில எளிய வழிமுறைகளை நம்முடைய அன்றாட வாழ்வில் செயல்படுத்துவதன் மூலம் சிறு சிறு பாதிப்புகளை தவிர்க்க முடியும்.

ஆலைகள் போன்ற பெரிய வாயு கசிவு நிகழும் வாய்ப்பு உள்ள இடங்களை நிர்வாகமும், அரசும் சரிவர கவனித்து பேரிழப்புகளிலிருந்து சமூகத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்.

கோபத்தைக் கொல்ல பத்து வழிகள்

anger.jpg

( இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை )

கோபம் என்னும் வார்த்தையின் மீதே சில வேளைகளில் நமக்குக் கோபம் வருவதுண்டு. அந்த அளவுக்கு கோபத்தை எப்படியெல்லாமோ, எங்கெங்கெல்லாமோ காட்டி வாழ்க்கையின் அர்த்தத்தையும், இனிமையையும் தொலைத்து விடுகிறோம் பல வேளைகளில். 

கோபம் உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்குகிறது. கோபத்தின் வருகை அதிகரிக்க அதிகரிக்க உறவு வேர்கள் அறுபடத் துவங்குகின்றன. பின் அர்த்தமற்ற ஒரு வாழ்க்கையை சிலுவையைப் போல தோளில் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம்.கோபம் நமது உறவுகளுடன் சேர்த்து சமூகத்தில் நமக்கு இருக்கும் தொடர்புகளையும், நற்பெயரையும் கூட சிதைத்து எறிகிறது.  இன்றைய நாகரீக வாழ்வில் அதிகரித்து வரும் மண முறிவுகளுக்கு கோபத்தின் பங்கு பெரும்பாலானது.

கோபம் நமது உயர்வுகளையும், உறவுகளையும் பாதிப்பதுடன், உடலளவிலும் மன அளவிலும் நம்மை பல சிக்கல்களுக்கு ஆட்படுத்தி விடுகிறது. பல நோய்கள் கோபத்தின் குழந்தைகளாய் இன்று பலருடன் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.  

கோபத்தின் விளைவுகளை இரண்டு விதமாக ஆராய்ச்சியாளர்கள் பிரிக்கிறார்கள். ஒன்று நாம் பிறர் மீது கோபப்படுவதும் அதன் மூலம் ஏற்படும் சிக்கல்களும். இன்னொன்று பிறர் மீது கோபப்பட முடியாத சூழலில் நமக்குள்ளேயே வெடித்துச் சிதறும் கோபம்.  மேலதிகாரியின் மீதான கோபம் வெளிக்காட்ட முடியாமல் உள்ளுக்குள்ளேயே வெடிக்கும் வகையைச் சார்ந்தது.

எப்படியெனினும், கோபம் வாழ்வின் முன்னேற்றத்துக்கும், இனிமைக்கும், அமைதிக்கும், அர்த்தத்துக்கும் தடையாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் இருக்கிறது மனிதனுடைய வாழ்வின் அர்த்தமும் அவனுடைய பக்குவத்தின் வெளிப்பாடும். பலர் கோபத்தைக் கட்டுப்படுத்தும் விதம் பற்றி பல விதமாகப் பேசியிருக்கிறார்கள். 

. அவற்றில் என்னைக் கவர்ந்த பத்து தகவல்களை இங்கே தருகிறேன்.

 anger.jpg 

1. கோபம் வரும்போது நன்றாக மூச்சை இழுத்து விடவேண்டும். நுரையீரலின் தரை தொடும் பிராணவாயு உடலுக்கு சற்று இறுக்கம் தளர்க்கும். பத்து எண்கள் வரை மிகவும் மெதுவாக எண்ணிக் கொண்டே ஆழமாக மூச்சை இழுத்து விடுவது மிகவும் பயனளிக்கும்.

.

  anger.jpg

.2. நம் இடத்தில் அடுத்த நபர் இருந்தாலோ, அல்லது அந்த நபரின் இடத்தில் நாம் இருந்தாலோ இதே நிலமை வந்திருக்குமா ? வருதல் நியாயம் தானா என கண்களை மூடி சிறிது நேரம் யோசிக்கலாம்.

. anger.jpg 

.3. இந்த கோபத்தைத் தூண்டிய செயல் பத்து ஆண்டுகள் கழிந்த பின்னும் கவனத்தில் கொள்ளத் தக்கதா என சிந்தியுங்கள். நாம் வேகமாய் வாகனம் ஓட்டும்போது ஒருவர் குறுக்கே ஓடுவது நமது கோபத்தைக் கிளறியிருந்தால் அது கோபத்துக்குத் தகுதியானதில்லை என்பதை விளங்கிக் கொள்ள இது பயன்படும். 

.anger.jpg 

.4. இந்த கோபத்துக்கான காரணி நமக்கு ஏற்படுத்தும் பாதகங்களைச் சிந்தியுங்கள். வரிசையில் ஒருவர் இடையே புகுந்து விட்டால் ஏற்படும் ஐந்து நிமிட இழப்பு வாழ்க்கையில் எத்தகைய பாதிப்பையும் பெரும்பாலும் ஏற்படுத்துவதில்லை என்பதை உணர இது வழி செய்யும். 

.anger.jpg  

.5. இதே போன்ற ஒரு பிழையை நீங்கள் செய்திருக்கவும் வாய்ப்பு உண்டு அப்படியெனில் அந்த நிகழ்வுக்காக நீங்கள் உங்கள் மீதே கோபப்பட்டீர்களா என சிந்தியுங்கள்.

anger.jpg

. 6. இந்த செயல் உங்களுக்கு எதிராக வேண்டுமென்றே செய்யப்பட்டதா என யோசியுங்கள். பெரும்பாலும் இல்லை என்றே பதில் வரும். இல்லை என பதில் வந்தால் அதை விட்டு விடுங்கள். அதுகுறித்து கோபமடைந்து உங்கள் பொன்னான நேரத்தையும், உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். 

. anger.jpg 

.7. நல்ல ஒரு உன்னதமான சூழலை கண்களை மூடி கற்பனை செய்யுங்கள். உங்கள் அருமை மகள் உங்களை ஓடி வந்து கட்டியணைக்கலாம், உங்களுக்கு உயரிய விருது ஒன்று வழங்கப்படலாம், காதலியுடன் காலார நடக்கலாம்  இப்படி ஏதாவது. அல்லது கடந்த காலத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. இது சூழலின் இறுக்கத்தை பெருமளவு தளர்த்தும்.

. anger.jpg 

.8. அந்த இடத்தை விட்டு நாகரீகமாக கடந்து சென்று விடுங்கள். சூழல் மாறும் போது சிந்தனைகள் மாறும். நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு வினாடியும் நமது கோபத்தை மட்டுப்படுத்தும். நாம் கோபமாய் செய்யும் செயல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யோசிக்க நமக்கு இந்த இடைவெளி கற்றுத் தரும்.

. anger.jpg 

.9. பேசுங்கள். உறவுகளுக்கு இடையேயான தவறான புரிதல்களை வெளிப்படையான உரையாடல் சரிசெய்யும்.

anger.jpg  

10. மன்னியுங்கள்! இந்த பண்பு இருந்தால் கோபமற்ற சூழலை உங்களால் எளிதில் உருவாக்க முடியும். புன்னகையுடன் கூடிய மன்னிப்பை வழங்கவும், மன்னிப்பு கேட்கும் துணிச்சலை வளர்த்துக் கொள்ளவும் பழகுங்கள்.

anger.jpg  

.இந்த பத்து தகவல்களும் கோபத்தை அடக்க, அல்லது கோபத்தை மிதப்படுத்த உதவும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்க்கை நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் விலையுயர்ந்த மாணிக்கக் கல் போன்றது. அதை கோபமென்னும் சேற்றில் மூழ்கடித்துச் சிதைத்து விடாமல்,  மனித நேயம் எனும் உயரிய பண்பை மணிமுடியாகச் சூடி அழகுபார்ப்போம்.

.வானம் பக்கம் வரும்,

.வாழ்க்கை அர்த்தப்படும்..