பாகுபலி 2 : எனது பார்வையில்

Image result for Bahubali 2

உலகெங்கும் மக்களின் ரசனையின் தெர்மாமீட்டர் வெடித்துச் சிதறுமளவுக்கு வெப்பம் கூட்டிய படம் பாகுபலி. இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது அதன் வசூல் கணக்கு பல புதிய சரித்திரங்களை திருத்தி எழுதியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய தேதியில் இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களின் பட்டியலில் கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் ராஜமௌலி. ஆளானப்பட்ட இயக்குனர் ஷங்கரையே சிறிதாக்கி விஸ்வரூபமெடுத்திருக்கிறார் என்று சொல்லலாம்.

ஒரு திரைப்படத்தை இடைவேளையோடு முடித்து விட்டு, “முடிந்தது போயிட்டு வாங்க.. மிச்சம் அடுத்த பாகத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என ரசிகர்களை அனுப்பி விட ஏகப்பட்ட தில் வேண்டும். அப்படிப்பட்ட தில்லுடன் முதல் பாகத்தை முடித்தார் இயக்குனர். அதையும் ரசிகர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு, அடுத்த பாகம் எப்போது வரும் என காத்திருந்தார்கள். ‘ஏன் கட்டப்பா பாகுபலியைக் கொன்றார் ?’ என்பதை சமூக வலைத்தளங்கள் அலசிக் காயப்போட்டன.

இப்போது இரண்டாம் பாகத்தில் அதற்கான விடைகளுடனும், வியப்புகளுடனும் வலம் வருகிறார் இயக்குனர். ஹைதர் காலத்துக் கதை தான் இது. கதையின் அடி நாதம் என்று பார்த்தால் இதில் புதுமையாக எதுவும் இல்லை. ஆனால் அதை பரபரப்புகளுடனும், விறுவிறுப்புடனும் காவிய வாசனை தெளித்து, கிராபிக்ஸின் கரங்களைப் பிடித்து, இசையின் தோளில் அமர்ந்து மிரட்டியிருக்கிறார் இயக்குனர்.

மகிழ்மதி தேசத்தின் கோட்டைகளுக்குள் புகுந்து, அந்த வனத்துக்குள் விளையாடி, மேகத்தில் பறந்து, நரம்புகள் புடைக்க இருக்கைகளை இறுகப்பிடித்து, நீதி வென்றதென புன்னகையுடன் எழும்பும் போது தான் திரையரங்கில் இருக்கிறோம் எனும் உணர்வே வருகிறது. அந்த அளவுக்கு அந்த பிரம்மாண்டத்தின் படிக்கட்டுகளில் பசை போட்டு அமர்த்தி வைக்கிறார் இயக்குனர்.

இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் என ஒருவரைக் கை காட்டி விட முடியாது. பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா என பல பெயர்களைச் சொல்ல வேண்டும். அத்தனை பேரும் சேர்ந்து இந்தப் பிரம்மாண்டத்தை, நம்பும் படி செய்து விடுகின்றனர். நாயகனுக்கு இணையாக‌ வில்லன். விசுவாசமான சத்தியராஜுக்கு இணையாக நயவஞ்சக நாசர், மிரட்டும் ரம்யா கிருஷ்ணனுக்கு இணையாக கம்பீர அனுஷ்கா என கதாபாத்திரங்கள் உழவு மாடுகளைப் போல வெகு நேர்த்தியாகக் கட்டப்பட்டிருக்கின்றன.

அதிக பட்ச மிகைப்படுத்தலுடன் செய்யப்பட்டிருக்கும் சண்டைக் காட்சிகளும், சாகசக் காட்சிகளும் ஸ்பைடர் மேன்களை வெட்கமடையச் செய்யும். ஆனாலும் ரசிகர்கள் அதை கைதட்டி ரசிக்கின்றனர். சண்டைக் காட்சிகளின் நீளம் அனுமர் வால் போல நீண்டு கொண்டே இருக்கும் ஆனாலும் ரசிகர்கள் ஆர்வமாய் பார்க்கின்றனர். காரணம் காட்சிப்படுத்தலும், இசையும். மரகதமணியின் இசை மிரட்டல் ரகம் என்பது அதைக் குறைத்து மதிப்பிடுவது. அது படத்தின் மிகப்பெரிய பலம் என்பதே சரியாக இருக்கும்.

பாடல்காட்சிகளை படத்தோடு இணைய விட்டிருப்பது படத்தின் வேகம் தடைபடாமலிருக்க உதவுகிறது. பாடல்களைப் படமாக்கிய விதம் ரசிகனை சிகரெட் புகைக்க வெளியே அனுப்ப மறுக்கிறது. அதிலும் குறிப்பாக பாய்மரப் படகுப் பயணமும், அதன் பாய்களே துடுப்புகளாக மாறி மேக அலைகளில் மிதந்து வருவதும் கண்களுக்கு வியப்பு.

காதலும் காதல் சார்ந்த இடங்களும் முதல் பாகம் என்றால், வீரமும் வீரம் சார்ந்த இடங்களும் பிற்பாதி. இரண்டுமே வசீகரிக்க வைத்திருக்கிறது. கவிப்பேரரசின் இரத்தம் கார்க்கி வசனங்களை நேர்த்தியாக எழுதியிருக்கிறார். பாடல் வரிகளும் ரசிக்க வைக்கின்றன.

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் எனும் மில்லியன் டாலர் கேள்விக்கான விடையை சொல்லி, அதை ரசிகர்கள் ஏற்கும்படி செய்து, அதன்பின்பும் சத்தியராஜை ரசிக்கும்படி செய்ததில் இருக்கிறது இயக்குனரின் பிரம்மாஸ்திரம் ! அந்த இடத்தில் அவர் சறுக்கியிருந்தால் பாகுபலி, பலியாகியிருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அதே போல கதா நாயகன் அரசனாக இருந்தாலும், சாமான்யனாக இருந்தாலும் அவன் மீதான கம்பீரமும் மரியாதையும் சற்றும் குலையாமல் இருப்பது திரைக்கதையின் லாவகம்.

லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ், ஹாரி பாட்டர், அவதார் என விஸ்வரூபங்களையும் வியப்பான கற்பனைகளையும் ஹாலிவுட்டில் மட்டுமே பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு அது உள்ளூரிலேயே கிடைத்திருப்பது இனிய ஆச்சரியம். இதே படத்தை ஹாலிவுட்டில் எடுத்தால் இன்னும் ஒரு பத்து மடங்கு செலவாகியிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

வெறும் பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி வலம் வராமல், கதாபாத்திரங்களுக்கிடையே உணர்வுப் பிணைப்பை உருவாக்கி உயிருடன் உலவ விட்டிருப்பதில் படம் உயிரோட்டம் பெறுகிறது. நீதி வெல்ல வேண்டும், வஞ்சம் வீழ வேண்டும் எனும் திரையுலக விதி ரசிகனை திருப்திப்படுத்தி அனுப்புகிறது.

சிவகாமியைக் கொல்ல நாசர் சதித்திட்டம் இடுவதை அறிந்தாலும் கட்டப்பா அதை சிவகாமியிடம் சொல்லாமல் விடுகிறார். விசுவாசத்தின் வெளிச்சமாக உலவும் கட்டப்பாவின் கதாபாத்திரத்தில் அங்கே சிறிய இடைவெளி விழுகிறது. அதே போல, மக்கள் கூட்டத்தை எப்போது காட்டினாலும் குறிப்பிட்ட பத்து பேரை மட்டுமே கேமரா சுற்றி வருவதும் இந்த பிரம்மாண்டப் படத்தில் நெருடலாகவே இருக்கிறது. இருபத்து ஐந்து வருடங்களுக்குப் பின்பான கூட்டத்திலும் அதே தலைகளை நரை முடியுடன் பார்ப்பது உறுத்துகிறது.

மூன்று மொழிகளில் என்று சொல்லிவிட்டு தெலுங்கில் மட்டுமே கதாபாத்திரங்கள் பேசித் திரிகின்றன. உதடுகள் மட்டுமே அசையும் நெருக்கமான குளோசப் காட்சிகளில் கூட பன்மொழி படமாக்கல் நிகழவில்லை என்பது கண்கூடு. அதே போல, பாடல் வரிகள் ரசிக்க வைத்தாலும் வாயசைவுக்கு வானளாவ இடைவெளி.

முதல் பாகத்தில் தீர்க்கமாய் யோசித்து சாசனம் பேசும் சிவகாமி இந்தப் படத்தில் உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவெடுக்கிறார். அதுவும் திரைக்கதையின் முக்கிய முடிவுகளைக் கூட சற்றும் விசாரிக்காமல் முடிவெடுக்கிறார் என்பது சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது.

இவைகளெல்லாம் குறைகள் என்பதை விட தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள் என்று சொல்வதே சரியானது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், பாகுபலி இந்தியத் திரையுலகில் தவிர்க்க முடியாத திரைப்படம். மருதநாயகத்தை படமாக்கினால் இந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதன் நம்பிக்கை. பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் ஒரு நாள் உலகை மிரட்டும் என்பதன் உத்தரவாதம்.

எதிர்பாராத நிகழ்வுகளின் கூட்டுத் தொகை தான் வாழ்க்கை
நம்ப முடியாத நிகழ்வுகளின் கூட்டுத் தொகை தான் திரைப்படம்.

பாகுபலி !
ரசனைகளின் அதிபதி !

*

நாவல் : வடலி மரம்

நாவல் : வடலி மரம்; ஆசிரியர் பால்ராசையா
—————————————————————

vadali

ஒருபக்கக் கதை – என்றால் சட்டென ஞாபகத்துக்கு வந்து விடும் பெயர் ‘ஐரேனிபுரம் பால்ராசையா’. குமுதம், குங்குமம், ராணி, இத்யாதி இத்யாதி என தமிழில் வெளிவரும் பெரும்பாலான இதழ்களில் இவருடைய பெயர் அடிக்கடி தென்படுவதுண்டு.

அவருடைய முதல் நாவலான ‘வடலிமரம்’ நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குமரி மாவட்டத்தையே கதைக் களமாக்கி, அந்த ஊர் மக்களையே கதாபாத்திரங்களாக்கி, அவர்களுடைய மொழியையே எழுத்தாக்கி, அவர்களுடைய உணர்வுகளையே நாவலாக்கியிருப்பதில் வடலிமரம் சட்டென அன்னியோன்யமாகிவிடுகிறது.

வடலி என்பது சின்னப் பனைமரம். பனையேறுதலை வாழ்க்கை முறையாக்கிக் கொண்ட குமரி  மாவட்டத்தின் கடந்த தலைமுறையினருக்கு வடலி என்று சொன்னாலே ஒரு புகைப்படம் நிச்சயம் மனதில் எழும். தலைமுறைகள் மாறிவிட்டன, இப்போது வடலிகளின் இடங்களெல்லாம் ரப்பர்களின் தேசமாகிவிட்டது. எனவே வடலியோடு கூட மரத்தையும் இணைத்தே அந்த காட்சிப்படுத்தலை நிகழ்த்த வேண்டியிருக்கிறது.

ஒரு காதல். மேல் சாதி என கருதிக்கொள்பவருக்கும், கீழ் சாதி என அழைக்கப்படுபவருக்கும் இடையே நிகழ்கின்ற ஒரு காதல். அது சாதியின் கவுரவத்துக்காக பாதி வழியில் அவசரமாய் அறுக்கப்படுகிறது. நூலை அறுத்து விட்டபின் பட்டம் எங்கோ கண்காணா தேசத்தில் முட்களிடையே சிக்கி அறுபடுகிறது. நூலோ நிலத்தில் விழுந்து மிதிபடுகிறது. ஒரு கனவு கலைக்கப்படுகிறது. இது தான் நாவலின் கதை.

ஒரு நாவலைப் படிக்கும் போது சில விஷயங்களை நாம் கவனிப்பதுண்டு. அது புதுமையான ஒரு செய்தியைத் தாங்கி வருகிறதெனில் அந்த நாவலுக்கான கதைக்களம் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு விடும். கதைக்களனையும், மண்ணின் அடையாளங்களையும் பதிவு செய்கிறதெனில் அது புதுமையான செய்திகளைத் தாங்கி வரவேண்டுமென்பதில்லை. இரண்டும் ஒரு சேர அமையப்பெற்றால் இலக்கிய சுவைக்கு இரட்டை இன்பம் என்பதில் சந்தேகமும் இல்லை.

என்னைப் பொறுத்தவரை, வடலிமரம் இரண்டாவது வகையில் வந்து சேர்கிறது. ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் காதலும், அது சந்திக்கின்ற வலியும், அதை மிகவும் ஏளனமாய்ச் சித்தரிக்கின்ற மேல்சாதி சிந்தனை சித்தாந்தங்களுமே வடலி மரத்தில் காணக்கிடைக்கின்றன. வாசித்து முடிக்கும் போது ‘தொடுவெட்டி சந்தைல போயி நாலு ஏத்தன் கொல வேண்டியோண்டு வந்தது போல இருக்கு’.

கண்ணை மூடினால் எங்கள் ஓட்டு வீடு தெரிகிறது. வீட்டுக்குப் பின்னால் உள்ள தோட்டத்தில் கம்பீரமாய் நிற்கின்றன பனை மரங்கள். நிறுத்தி வைத்த பீரங்கிகளைப் போல அவை கர்வம் கொள்கின்றன. பூமியில் அழுத்தமாய் ஊன்றப்பட்ட வியப்புக் குறிகள் அவை. அவற்றில் மிருக்குத் தடி சாய்த்து ஏறுகிறார் தங்கப்பன். காலில் திளாப்பு மாட்டி, இடுப்பில் குடுவை கட்டி,   அதில் இடுக்கியைச் சொருகிக் கொண்டு சரசரவென ஏறுகிறார். லாவகமாய் மேலே ஏறி உட்கார்ந்து பாளை அருவாத்தியை எடுத்து பூ சீவி கலையத்தைக் கட்டுகிறார்.. சுண்ணாம்பு தேச்சா அது அக்கானி, இல்லேன்னா கள்ளு. அவர் கலையத்தைக் கட்டிக் கொண்டிருக்கும் போதே ஒரு குரல் என்னை எழுப்புகிறது.

“டாடி.. ஐபேட்ல அயர்ன் மேன் 3 இன்ஸ்டால் பண்ணலாமா பிளீஸ்…” மகன் கெஞ்சும் மழலைக் கண்களோடு நிற்கிறான். புன்னகைக்கிறேன். அவனுடைய அயர்ன்மேன் காலத்துக்கும், எனது அக்கானி காலத்துக்கும் இடையேயான இடைவெளி இட்டு நிரப்பக் கூடியதா என்ன ?

கண்ணை மூடிக் காண்கின்ற கனவுகளை வடலி மரம் மூலம் மீண்டும் ஒரு முறை பால் ராசையா சாத்தியமாக்கியிருக்கிறார். கம்பன் வீட்டுத் தறியும் கவிபாடும் என்பது போல குமரி மாவட்ட இளைஞர்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு வகையில் இலக்கியத்தோடு தொடர்புடையவர்களாகவே இருப்பது வியப்பளிக்கிறது. எழுதுகிறார்கள், வாசிக்கிறார்கள், விவாதிக்கிறார்கள், சண்டை போடுகிறார்கள், சகட்டு மேனிக்கு இலக்கிய கூட்டங்கள் நடத்துகிறார்கள். ரஜினி கமல் சண்டையெல்லாம் அங்கே குறைவு. சுந்தர ராமசாமியா இல்லை குமார செல்வாவா ? என்பன போன்ற சண்டைகள் தான் அங்கே அதிகம். அவர்கள் சண்டையில் உதிர்பவை கூட இலக்கியமாகவே இருப்பது தான் ரொம்பவே ரசிக்க வைக்கும் விஷயம்.

அவருடைய நாவல் வெளியீட்டு விழாவும் அப்படியே தான் இருந்தது. சின்ன அரங்கம் தான். அந்த அரங்கத்தில் சுமார் ஐம்பது பேர். அதில் சாகித்ய அகாடமி விருது வாங்கிய இருவர். நாவலாசிரியர்கள் பத்து பேர். பேராசிரியர்கள் மூன்று பேர். பத்திரிகையாசிரியர்கள் ஒன்பது பேர். பத்திரிகை நடத்துபவர்கள் மூன்று பேர். என ஒரு இலக்கிய மாநாடு போலவே நடந்தது. குமரி மாவட்டத்தில் ரப்பர்ல பால் வெட்டும் வேலைக்கு ஆள் கிடைப்பது தான் கஷ்டம். இலக்கிய விழாவுக்கு ஆள் கிடைப்பதில் சிக்கலே இல்லை !

வடலி மரம் ஒரு சினிமாவுக்கான பரபரப்புடன் செல்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு திருப்பங்களை தன்னுள்ளே வைத்து ஒரு ஃபாஸ்ட் புட் போல பயணிக்கிறது. காரணம் பால் ராசையாவின் ஒருபக்கக் கதைகளின் தாக்கம் என நினைக்கிறேன். சட்டென தொடங்கி, சரேலென ஒரு திருப்பத்துடன் முடிக்கும் கதை பாணியை நாவலிலும் கையாண்டிருக்கிறார் போலும். அதே போல அவருடைய நாவல் ஒரு நாடகத்துக்கான காட்சிப் படுத்தலுடனும் கூட இருக்கிறது. அதற்கு அடிப்படையில் அவர் ஒரு நாடக ஆசிரியர் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க வாய்ப்பில்லை.

கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையே பயணிக்கும் வடலிமரம் நாவல் தனது காலத்தைப் பதிவு செய்திருக்கிறது, தனது அடையாளங்களைப் பதிவு செய்திருக்கிறது, காலம் காங்கிரீட் கலவையில் புதைத்துக் கொண்ட வார்த்தைகளை மீள் பதிவு செய்திருக்கிறது, டெக்னாலஜி அலைகளில் இழுத்துச் செல்லப்பட்ட குடும்ப உறவுகளை காட்சிப்படுத்தியிருக்கிறது.

எழுத்தாளர் பால் ராசையா அவர்களை வாழ்த்துகிறேன்.

வேர்கள் இன்னும் ஆழமாகும்,
அப்போது விளைச்சல் இன்னும் அமோகமாகும்.

சேவியர்.

நூல் நினைவுகள் – 1

நூல் 1 : ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும்

( கவிதை நூல், 2001, ரிஷபம் பதிப்பகம். )

oru mazhai iravum

I

நினைவுகளின் கூடாரங்களில் எப்போதுமே “முதல்” அனுபவங்களுக்குச் சிறப்பிடம் உண்டு. அதில் இருக்கும் சிலிர்ப்பும், சிறப்பும், தவிப்பும் அடுத்தடுத்த அனுபவங்களில் மெல்ல மெல்ல கரைந்து போய்விடுவதுண்டு. “பள்ளிக்கூடம் தான் உலகிலேயே மிகக் கொடிய சாத்தான்” என உறுதியாய் நம்பி அழுதுகொண்டே பள்ளிக்கூடத்தில் நுழையும் குழந்தைகளின் முதல் பயணம். “உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க” எனும் அக்மார்க் சாதாரணக் கேள்விக்கே நெற்றியின் மையத்தில் நூலாய் வியர்த்து எங்கே ஆரம்பிப்பதெனத் தெரியாமல் தடுமாறும் முதல் இன்டர்வியூ. எப்படிச் சொல்வதெனத் தெரியாமல் மூன்றுமாதக் கண்ணாடிப் பயிற்சிக்குப் பின்னும் தொண்டைக்குழியில் மரணமாகிப் போகும் வார்த்தைகளுடன் போராடும் முதல் காதல் பகிர்தல். அச்சத்துக்கும் வெட்கத்துக்கும் இடையே ஓரவிழியால் அவனைப் பார்த்து, சரியா பாக்கலையே என பதட்டப்படும் பின்னல் பெண்ணின் உள் அறைத் தவிப்பு. அச்சப் பட்டு வெட்கமும், வெட்கப் பட்டு அச்சமும் வெளியேறிப் போன ராத்திரியில் இதயத் துடிப்பு டால்ஃபி டிஜிடலில் காதுக்கே கேட்குமாறு காத்திருக்கும் முதலிரவுக் கட்டில் நுனி. உயிரிலிருந்து உயிரைப் பிரித்தெடுத்து, தாயென அவளுக்குப் பெயரிட்டு, வலி பின்னும் நிலையிலும் கண்களால் தனது மழலையை முதன் முதலாய் எட்டித் தொடும் தாயின் தவிப்பு. என முதல் நிகழ்வுகளுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு.

முதல் கவிதைத் தொகுதியும் அவ்வாறே. ஒவ்வொரு படைப்புக்குப் பின்னும் தனக்குத் தானே கிரீடம் சூட்டிக் கொள்ளும் எல்லா எழுத்தாளர்களின் ஆழ்மனதிலும் ‘புத்தகம்’ எனும் கனவு நிச்சயம் உறைந்திருக்கும். என்னுடைய கனவும் அத்தகைய கனவு தான். எப்படியாச்சும் ஒரு கவிதைப் புத்தகம் போட்டு விட வேண்டும்.

தினம் ஒரு கவிதை எனும் குழு எழுத்தாளர் சொக்கனால் ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த காலம் அது. 90களின் இறுதிப் பகுதி. என்னுடைய கவிதைகளுக்கெல்லாம் முதல் விமர்சகனும், முதல் ரசிகனும், முதல் ஆசானும் அவர் தான். அடிக்கடி அந்தக் குழுவில் வெளியான கவிதைகள் நிறைய நண்பர்களைக் கொண்டு வந்து சேர்த்தது. போற வழியில் காலில் கல் இடித்தால் கூட அதற்கு ஒரு கவிதை எழுத வேண்டுமென தவித்த காலம் அது. நீ ஒரு நவீன காளமேகம் டா, இம் ன்னு சொல்றதுக்குள்ளே இத்தனை கவிதை எழுதறியே என சொக்கன் நகைச்சுவையுடன் பாராட்டுவார்.

அப்போது அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்த காலம். கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு புக்காச்சும் போடணும் என்று மனசுக்குள் ஒரு எண்ணம். சிற்றிதழ்கள், இணைய இதழ்கள் ( அப்போதெல்லாம் இணைய இதழ்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இருந்தன ) என வெளியாகும் கவிதைகளைப் பார்த்தே அப்பா பரவசத்தின் உச்சிக்குப் போவார். கிராமத்தில் இருப்பவர்களிடமெல்லாம் எதேச்சையாகப் பேசுவது போல திட்டமிட்டு என் கவிதையைப் பற்றியும் ரெண்டு வார்த்தை பேசுவார். மடித்து பாக்கெட்டில் வைக்கப்பட்டிருக்கும் கவிதை கட்டிங்கைக் காட்டுவார். கவிதைக்காக வீட்டுக்கு வரும் மணிஆர்டர்கள் அவருக்கு தங்கப்பதக்கம் போல. எனக்குத் தெரிந்து இணைய இதழ்களிலேயே அம்பலம் இதழ் தான் படைப்புகளுக்குத் தவறாமல் பணம் கொடுத்த ஒரே இணையப் பத்திரிகை !

போதாக்குறைக்கு “நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போற சேவியர் தான் தினம் ஒரு கவிதையில் எழுதறவரா ? நெஜமாவா ? ” என மனைவியின் அலுவலகத்தில் யாரோ கேட்டார்களாம். ‘தினம் ஒரு கவிதைன்னா என்ன ?’ என மனைவி அப்பாவியாய்க் கேட்டார். ‘கவிதைன்னா என்ன’ ன்னு கேட்டா பதில் சொல்றது தான் கஷ்டம், இது சிம்பிள் என அவருக்கு விளக்கினேன். எல்லாமாகச் சேர்ந்து எனக்குள் ஒரு புத்தகம் வெளியிடும் ஆசையை விதைத்து விட்டன.

சென்னையில் நண்பர் சரவணன் தான் உதவிக்கு வந்தார். அப்போதே முதல் முன்னுரையை வைரமுத்து அல்லது நா.முத்துக்குமாரிடம் தான் வாங்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன். நா.முத்துகுமாரா அது யாரு என நண்பர்கள் கேட்டார்கள். பதினான்கு வருடங்களுக்கு முன் அவர் அவர் அவ்வளவு பிரபலமாகியிருக்கவில்லை. எனக்கு அப்போதே வைரமுத்துவுக்குப் பின் நா.மு எனும் சிந்தனை வலுவாய் இருந்தது. கிடைக்கின்ற ஒரு மாத விடுப்பில் இந்தியா வந்து வைரமுத்துவிடம் முன்னுரை வாங்குவது கடினம் என்பதைப் புரிந்தபின் நா.முத்துக்குமாரிடம் கவிதைகளைக் கொடுத்தேன்.

ஒரு மாலை வேளையில் கோடம்பாக்கம் டீக்கடையில் ஒரு ஸ்கூட்டரில் வந்தார். அக்மார்க் கவிஞருக்குரிய ஜோல்னாப் பை. தாடி ! வந்த கையோடு ஒரு தம் பற்ற வைத்துவிட்டுக் கவிதைகளை வாங்கிக் கொண்டார். சில நலம் விசாரிப்புகள், மீண்டும் பற்ற வைத்துக் கொண்ட தம், டீ என ஒரு அரை மணி நேரம் அவருடைய உரையாடல் மிக எளிமையாக, இனிமையாக கழிந்தது. கவிதைகளை மேலோட்டமாய் ஒரு புரட்டு புரட்டியதிலேயே அவருக்குக் கவிதைகள் மீது ஒரு சின்ன நம்பிக்கை வந்திருக்கும் போல. ஜோல்னாப் பைக்குள் போட்டுக் கொண்டார்.

கவிதைகளைப் படித்து விட்டு, ‘ரொம்ப நல்லாயிருக்கு’ என்று பாராட்டினார். இந்தக் கவிதைத் தொகுப்புக்கு நான் முதலில் வைத்த பெயர் ‘ஒரு மழைத்துளி நனைகிறது’. அது கொஞ்சம் ஓல்ட் ஸ்டைலா இருக்கு. “வாழை மரத்தில் உட்காரும் கொக்குகள்” ன்னு வையுங்க. உங்க கவிதை வரிகள் தான் நல்லாயிருக்கும் என்றார். வைத்திருக்கலாம். எனக்கென்னவோ அது அவ்வளவாய்ப் பிடிக்கவில்லை. ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும் – ன்னு வைக்கவா ? அது இன்னொரு கவிதைத் தலைப்பு என்றேன். சிரித்துக் கொண்டே சரி என்றார்.

அவருடைய முன்னுரை, என்னுடைய கவிதைகளை விட நன்றாக இருந்தது என்பது தான் உண்மை ! அதன் பின் அவருடனான நட்பு நீடித்தது, பாடல்கள் வெளியாகும் போதெல்லாம் அதுகுறித்து போனிலும் மின்னஞ்சலிலும் உரையாடுவோம். சந்திக்கும் போதெல்லாம் பாடலில் ஒளிந்திருக்கும் ஹைக்கூக்கள் குறித்துப் பேசுவோம். தமிழ்த் திரையுலகம் அவரை ஆஸ்தான பாடகராக்கியபின் அவருடன் பேசுவதும், உரையாடுவதும் குறைந்து போய்விட்டது. அவர் ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு வந்தபின் அது மறைந்தே போய்விட்டது ! நட்சத்திரம்ன்னா வானத்துல தானே இருக்கணும் !! இன்றும் ஏதேனும் விழாக்களில் சந்தித்துக் கொண்டால் ஒரு சின்ன அறிமுகத்திலேயே எப்படி இருக்கீங்க, எழுதறீங்களா ? என்பார் சிரித்துக் கொண்டே. மாறாத அதே இயல்புடன்.

புத்தகம் தயாரானது, புத்தகத்தின் முதல் பிரதியைப் பிரித்து அந்த புதிய நூல் வாசத்தை உள்ளிழுத்த நிமிடங்கள் இன்னும் ஞாபகங்களில் நிரம்பியே இருக்கிறது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல முதல் நூல் இன்னும் நெஞ்சுக்கு நெருக்கமாகவே இருக்கிறது !
*

நூலுக்கு நா.முத்துக்குமார் அளித்த முன்னுரை இது !
—————————————————————————
வாழை மரத்தில்
உட்காரும் கொக்குகள்

வண்ணத்துப் பூச்சிகளும், காலி சிகரெட் பெட்டிகளும், கனத்த இரும்புத் துண்டங்களும்; சக்கரங்கள் உரசிப் போன சூட்டுக்கு வெப்பம் வாங்க வரும் பாம்புகளும், ஏதோ ஒரு குழந்தை கை தவறி விட்ட சாயம் போன பந்தும், எப்போதாவது வந்து போகும் ஒற்றை ரயில் கூட்ஸ் ரயிலும், என எல்லாவற்றையும் வழித்துணையாகக் கொண்டு ராட்சஸத் தனமாய் நீண்டுக் கிடக்கும் தண்டவாளக் கோடுகளுக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு சின்ன சிலேட்டுக் குச்சியைப் போன்றது தான் தமிழில் இன்றைய இளங்கவிஞர்களின் நிலை.

வேறு எந்த மொழியை விடவும் தமிழில் மட்டுமே சொற்களுடன் சூதாட கவிதையைக் களமாகத் தேர்ந்தெடுப்பவனுக்கு மிகப்பெரிய சவால் காத்துக் கிடக்கிறது. அவனுக்கு முன்னால் இரண்டாயிரம் வருடத்திய சூதாட்டப் பலகை; எந்தக் காயை எடுத்து வைத்தாலும் அதன் மூலக் காயையோ, அதற்கிணையான வேறு தாயக்கட்டைகளையோ எடுத்து வைக்கிறது.

காந்தி ரோட்டிலோ, பஜார் வீதியிலோ, பெயர்ப்பலகையில் புழுதி பறக்கக் காத்திருக்கும் ஃபோட்டோ ஸ்டுடியோக்களில் பேனாவைக் கையிலோ, கன்னத்திலோ வைத்துக் கொண்டு ஆர்வமாய்ப் புகைப்படம் எடுத்துக் கொண்டு கவிதா போதையுடன் கவிதை எழுதவரும் இளங்கவிகள் ( சினிமாவில் பாட்டு எழுது இளங்கவிகள் அல்ல ) காலப் போக்கில் கீழ்க்கண்ட பிரிவுகளைச் சந்திக்க நேர்கிறது.

அவையாவன

பொதுவுடமை சிந்தாந்த ஸ்டேஷனரி ஸ்டோர்சில் சிவப்பு மை வாங்கி “வாடா தோழா, புரட்சி செய்யலாம்” என அழைக்கும் கவிதைகள்.

தாமரை பூக்கும் குங்குமக் குளக்கரையில், உள்ளொளி தரிசனம், ஆன்மீகப் பேரெழுச்சி என முங்கிக் குளிக்கும் காவி வேட்டிக் கவிதைகள்.

நாற்காலி/நாலுகாலி என்று பிரசுரமாகும், கவிதைகளுக்குப் பத்துரூபாய் கொடுக்கும் ஜனரஞ்சிதக் கவிதைகள்.

நண்பா, உனக்கும் எனக்கும் காயா? பழமா ? நீ கையில் கத்தி வைத்திருக்கிறாய் நான் காட்பரீஸ் வைத்திருக்கிறேன் என்று தொடங்கி நட்பு முறிவைப் பேசும் கவிதைகள்.

பஸ் டிக்கெட் போலென் இதயமும் கிழிந்து விட்டது, புதுச் செருப்பைப் போல உன் காதலும் கடிக்கிறது, உனக்காக தாஜ்மகால் கட்டுவேன்; தண்டவாளத்தில் தலை வைக்கலாம் வா என்று தொடங்கும் 143 கவிதைகள்.

ஆத்தா, ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா, தொன்மத் தமிழுக்கு அடையாளமாகத் தாடி வளத்தா, எனத் தொடங்கும் நாட்டுப்புற மரபு சார்ந்த வட்டார வழக்குக் கவிதைகள்.

தனிமையும் தன்னிரக்கமும் கொண்ட என் அறைக்குள் நிராசையின் கடலுக்குள்ளிலிருந்து சப்த அலைகளைக் கொண்டு வந்தாய் எனத் தொடங்கும் காலச்சுவட்டுத் தன்மானக் கவிதைகள்.

மேற்கண்ட பிரிவுகளைக் கடந்தும், ஏதோ ஒரு பிரிவில் மயங்கியும் எல்லாவற்றையும் போலி செய்தும் என தமிழ்க் கவிதைகள் பாஞ்சாலியின் சேலை போல நீண்டு கொண்டேயிருக்கின்றன.

II

மேற்சொன்ன சூழலில் தனது முதல் தொகுப்புடன் அறிமுகமாகிறார் கவிஞர். சேவியர். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தை அடுத்த பரக்குன்றைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் கணினிப் பொறியாளராகப் பணிபுரியும் இளைஞர். அவ்வப்போது இவரது கவிதைகளை சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் படித்திருக்கிறேன்.

சேவியர் கவிதைகளில் விவசாய வாழ்க்கைக்கும், விஞ்ஞான வாழ்க்கைக்குமான ஒரு மெல்லிய ஊசலாட்டம் மிகத் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மரவள்ளிக் கிழங்கின் மூக்கில்
மிளகாய்ப் பொடி தேய்த்து
கரை மணலில் உட்கார்ந்து
கடிக்கும்
மத்தியான வேளைகள்
நுனி நாக்கை ரத்தச் சிவப்பாக்கும்

என்றும்

என்
சின்னக் கைகளில்
சாம்பல் கிள்ளி
வயலில் இடுவதாய்ச் சொல்லி
வீசும் போதெல்லாம்
கண்களுக்குள் தான் விழுந்திருக்கிறது

என்றும் எழுதி விட்டு;

அமெரிக்க வாழ்க்கையின்
பிரம்மாண்டங்களில் பிழியப்பட்டு
என் சிறுவயது
சுவாசத்தைத் திருடிச் சென்ற
வயல்காற்றின் ஈரம் தேடி
கிராமத்துத் திண்ணையில் நான்

என எழுதுகிற போது ஒரு ஏக்கம் மெலிதாகக் கண் விழிக்கிறது.

படித்துக் கொண்டே வருகையில் சில கவிதையின் விவரணைகள் (Descriptions) அடடா ! என வியக்க வைக்கின்றன. மொழியின் பள்ளத்தாக்குகளில் புதையுண்டு போய்விட்ட தற்காலிக தமிழ்க் கவிதைகளில் மிக அரிதாகவே இப்போதெல்லாம் சங்க இலக்கியத்துக்கு இணையான விவரணைகளைக் காண முடிகிறது.

நெடுஞாலை மெக்கானிக் பற்றியும், நாடோடிக்கு மலைமகளின் கடிதத்தைப் பற்றியும் எழுதும் மகாதேவன் ( ஆம் நண்பர்களுக்குள் அது தான் நடந்தது ), மழைப் பூச்சி சொன்ன திசையையும், கல் குறிஞ்சியையும் காட்டுப் பூக்களைப் பற்றியும் எழுதும் தேன்மொழி ( இசையில்லாத இலையில்லை )

நெடிய வரப்பின் அடியில் ஒளிந்து
பீடி ருசிக்கும் கைலி இளைஞர்கள் – என்றும்,

வாழை மரத்தில் உட்கார முயன்று
தோற்றுத் தோற்று
வரப்புக் குச்சிகளில் அடைக்கலமாகும்
சலவை செய்த கொக்குகள்
சருகு மிதிக்கும் அணில் குஞ்சுகள்
சேறு மிதித்து நடக்கும் தவளைகள் – என்றும்,

கிழக்குப் பக்கத்தில்
கட்டி வைத்திருந்த
கோழிக் கூட்டுக்குள்
முட்டை தேடி முட்டை தேடி
முடிந்து போகும்
பாட்டிகளின் காலைகள் – என்றும் எழுதும் சேவியர், என தமிழ்க் கவிதையை வாழை வைத்துக் கொண்டிருக்கும் இளங்கவிகளின் வருகை நம்பிக்கையூட்டுகிறது.

இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கவிதையாக என்னைப் பாதித்தது “அவரவர் வேலை அவரவர்க்கு’ என்ற கவிதை. தமிழ்க் கவிதை உலகத் தரத்திற்கு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்தக் கவிதை ஒரு உதாரணம். மிகச் சாமர்த்தியமாக ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறுகதையும் இந்தக் கவிதையில் காணக் கிடைக்கிறது.

இதற்கு இணையான இன்னொரு கவிதை, ‘அமெரிக்காவின் அடர்ந்த குளிர் இரவில்’ அனுபவமும் மொழியும் ஒன்றாகக் கலந்து அடர்த்தியாக வார்த்தெடுக்கப் பட்டக் கவிதையாக இதைச் சொல்லலாம்.

சேவியரிடம் தமிழ் கூறும் கவியுலகம் எதிர்பார்ப்பது இதைப் போன்ற கவிதைகளைத் தான். இரண்டாயிரம் வருடத்திய தமிழ்க் கவிதையின் கிரீடத்திற்கு சேவியர் தன் பங்கிற்கு சில அழகியக் கவிதைகளைத் தந்துள்ளார். அதற்காக அவரை வாழ்த்துவோம்

நா. முத்துக்குமார்
சென்னை
22-12-2001

 

யோகியாரின் பருந்துப் பார்வை !

மன விளிம்புகளில் : ஒரு பருந்துப் பார்வை (யோகியார்)
Kaviyogi_Vedham1கவிதைகள் வெறும் வார்த்தைகளின் தேர்வலம் அல்ல; அவை உணர்வுகளின் ஊர்வலம்–என அட்டகாசமாகத் தனது முன்னுரையில் நம்பிக்கையுடன் ஆரம்பிக்கும் ‘சேவியரின்’ ‘மன விளிம்புகளில்’ என்ற கவிநூலை நிதானமாக,சொல்விடாமல் படித்தேன்.
பல கவிகளில் தேன்வரிகள்,புதிய சிந்தனைகள்,கற்பனை வளம் யாவும் மிளிரக் கண்டு மகிழ்ந்தேன்.இதுகவிதை அல்ல என ஆரம்பிக்கும் தன் முதல் பாட்டிலேயே
நம் மனத்தைக் கீழ்வரும் வரிகளால் கவர்ந்துவிடுகிறார்;

‘”தோகைகளைப் பாடிவிட்டு,
மயிலைச் சூப் வைத்துக் குடிக்கச் சம்மதமில்லை எனக்கு
–”

என அழகுறச்சொல்லிவிட்டு,
‘விளக்குகளை ஏற்றி, வீதிகளில் வைப்பதே
பாதசாரிகட்குப் பயன்
..

என்று சொல்லி தன் கவிதைகளால் ரசிகன் மனத்தைக் கவர்ந்து அவனை ஒரு ஒளிப்பாதையில் அழைத்துச் செல்லவேண்டும்..என்ற தன்(ஆர்வ) நிலையைத் தெளிவுறக் காட்டுகிறார்;
காணாமல் போன கல்வெட்டுகள்’-என்ற அடுத்த கவியின் மூலம் நாம் எதனைச் சிறப்பாகச் செய்கிறோம்/செய்துவிட்டோம் என இறுமாப்பு கொள்கிறோமோ அது காலத்தால் மட்டுமே நிர்ணயிக்கப் படுகிறது;
நம் செயல்,புகழ் இவற்றை நாம் அன்பு செய்பவர்களிடமே எதிர் பார்க்கமுடியும் என்று சொல்லாமல் சொல்கிறார்.இப்படி அவர் வரிகளின்மூலம், ‘நேரடியாக தம் கருத்தைச் சொல்லாமல் உவமை, உருவகம் போன்றவற்றின் மூலம்
மிக அழகாக ஒரு புதிய ‘யுத்தி’யைக்கடைப்பிடித்துக்காட்டுகிறார்.

இவர் சொல்வது புரிகிறது: ஏனெனில் வாசகனுக்குத் தான் சொல்வது புரியவேண்டும் என மெனக் கெட்டிருக்கிறார்.பல உவமேயங்களை, சிந்தனைகளை(தம் மூளையைக்கசக்கி–ஆனால் இயல்பாகத்தோற்றும் படி)
இதற்காகக் கையாண்டுள்ள அவர் திறம் வியக்கத்தக்கது;உ-ம்; ” எதுவுமே உன் மரணப்படுக்கையில்..

இரண்டு கேள்விகளே
பெருமூச்சாய் விடும்;அவை,
நீ யாரை அன்பு செய்தாய்;
உன்னை யார் அன்பு செய்தார்கள்
?”

ஆகா!என்ன அழகான ‘கோடிட்டுக் காட்டுதல்!

இப்படி தம் கவிச் சொற்கள் மூலம் இயல்பான வாழ்க்கை நடைமுறைத் தத்துவத்தை, இன்றைய சமுதாய அவலங்களை ஆழமாகத் தொட்டுக் காட்டுகிறார். இந்த உத்தி பலருக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்;
அடே மனிதா! நீ என்றும் இயல்பாய் இருந்து தொலையேன்!

எதிரி நகைச்சுவையாக ஏதோ சொன்னாலும் அன்புடன் சிரியேன்;
இன்று எதிரில் இருக்கும் இலைகளை,பூக்களை வருட உன் மனம் விரும்புகிறதா? அதில் கூச்ச-நாச்சம்,அக்கம் பக்கம் பாராமல் இயல்பாக அதைச் செய்து மகிழேன்; ஏன் பிறர்க்காக(அவன் என்ன சொல்வானோ என -)உன் இயல்பை மறைத்து வேண்டுமென்றே நீ எப்போதும் கஷ்டப்படுவதுபோல் பிறர்க்குக் காட்டிக்கொள்கிறாய்? அதில் உனக்குஎன்ன மகிழ்ச்சி? (பிறருடைய ‘த்ருஷ்டி” தன் மேல் பட்டுவிடுமோ என்று இப்போதெல்லாம், தன் மகிழ்வைக்கூட பலர்  மறைத்துக்கொள்வதைக்காண்கிறேன்)
அவர்கட்கு சேவியர் நல்ல சவுக்கடி கொடுத்துள்ளார்;

இந்தக்கணத்தின் இன்பம் நாளை உன்னைத்தீண்டாமல் போகலாம்;
எனவே உன் இதயத்தைக் காயப்படுத்தும் கவண்களின் முதல் சுவட்டிலேயே
நீ ஜாக்கிரதையாக இரு:(அதாவது உபனி”த்’ சொல்வதுபோல் துன்ப எண்ணங்களை ‘ஆழ் மனத்தில்’ போட்டுக்கொண்டு அவத்தைப்படாதே;)

என மிக அருமையாக இன்றைய மனிதனுக்கு எடுத்துச் சொல்கிறார்.பலே! என
சொல்லத்தோன்றுகிறது.

இதுபோன்ற அறிவுரைகள் ‘வெள்ளைக்காகிதம்’ எனக்குப்பின்னால் வாருங்கள்”கீழ்நோக்கும் ஏணிகள்’–போன்ற பல கவிகளில் விரவிக்கிடக்கின்றன;
சுருக்கமாகச் சொல்லப்போனால் பல புதிய கவி வீச்சுக்களை- இவர் வரிகளில் கண்டு பிரமித்தேன்; புதுக் கவிதைக்கு இதுதான் இலக்கணம் என்று இவர் கவிதையை வைத்து அடித்துச் சொல்வேன்;

ஆம்! இப்போதைய வார ஏடுகளில் புதுக்கவி.. எனும் பேரில் வெறும் வரட்டு- வார்த்தைக் கூச்சலே காண்கிறேன். அவற்றைக் காண்கிற (வெறுத்துப்போன) எனக்கு சேவியர் கவிதை புதிய நல்ல ஒத்தடம் கொடுத்தது; சுகம் அளித்தது; நெஞ்சில் பரவச ஒளி தோன்றி மகிழ்வளித்தது;
நிஜமே அழகு; இயல்பே அழகு; படைப்புக்களின் மகத்துவம் இயல்புகளில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறது; பூவுக்கு இதழழகு;கடிகாரத்துக்கு முள்ளே அழகு(உண்மையன்றோ?) ஆகவே எதையும் இயல்பாகப் பார்க்கக் கற்றுகொள் நண்பா!
நீயாக இயல்பான வி”யங்களில் போய் ,வேறு விதமாகக் கற்பனை செய்துகொண்டு துன்புறாதே!

புரிந்துகொள்!..ஆம்!

நீ யாரையோ பிரமிக்கும் அதே கணம்
யாரோ உன்னைப் பார்த்தும் பிரமிக்கிறார்கள்
..’
என்று யதார்த்தத்தை அழகாகப் பிரதிபலிக்கிறார் கவிஞர்

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்; இடமில்லை; நீளமாகிவிடும் இவ்வலை.
நிசமாக எனக்கு இந்நூலில் பிடித்த சிறந்த கவிகள்;

“மழலைக்கால சிந்தனைகள்’
தொலை நகரம்’
இதுவும் பழசு'(நம் புதிய சிந்தனை என ஒன்றுமில்லை’யாவும் பிரபஞ்சத்தில்
ஏதோ ஒருவகையில்’எண்ணங்கள்’ அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன; என்கிறார்; என்ன தன்னடக்கம்- கருத்து இயல்பில், உண்மைதானே!)
யான் கூட ஒருசமயம் இப்படி எழுதினேன்;

..”‘காஸ்மா என்னும் ‘காப்சூலில் அன்பனே!
எந்தத் தத்துவமும்,எந்தபுதுக் கருத்தும்
வித்தில் மறைந்துள காயின்விச் வரூபம்போல்
ஒளிந்துளது! உனது’ என்பது ஒன்றுமில்லை..”

பொதுவாக இவர் கவிதைகளில் ‘வெளியே’ பார்க்கும்வரட்டுத் தன்மையைவிட
‘உள்ளே” பார்த்துத் தெளிவாய் கவிக்காப் சூலில் அளிக்கும் ஞானம்
நிறையவே உள்ளது என உணர்வுபூர்வமாயறிந்துகொண்டேன்.

வாழ்க! வளர்க சேவியர்!
(கவி யோகி வேதம்)

 

சுஜாதாவும், ஜெயமோகனும் பின்னே ஞானும்.

அறிவியல் புனை கதையா – அதை எப்படி எழுதறது ? என யோசித்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் 2001 ல் அம்பலம் இதழில் “இன்னொரு வகை இரத்தம்” எனும் எனது அறிவியல் புனைக் கதை ஒன்று பிரசுரமானது. அறிவியல் புனைக் கதை சுஜாதா அவர்களின் அம்பலம் இணைய இதழில் வெளிவந்தது ஆனந்தம் அளித்தது.
.
எனினும், அறிவியல் புனைக் கதைக்கு இலக்கணங்கள் ஏதும் உண்டா என இப்போது நான் குழம்புவது போலவே அப்போதும் குழம்பினேன். எனது குரு தான் என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்தார்.
.
எனக்கு கவிதைகள் தான் செல்லக் குழந்தைகள். சிறுகதையெல்லாம் எழுதத் தெரியாது என்பதே இன்றைக்கும் என்னைப் பற்றிய எனது நிலைப்பாடு. கல்கியிலெல்லாம் நிறைய பல கதைகள் வெளிவந்த பின்னும் உங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரலியா என என்னை உரிமையுடன் கடிந்து கொள்ளும் எனது குருவினால் தான் சிறுகதைகள் அவ்வப்போது எழுதுகிறேன்.
.
இருக்கட்டும், 2005ம் ஆண்டு மரத்தடி – திண்ணை இணைந்து நடத்திய அறிவியல் புனைக் கதைப் போட்டியில் சுஜாதா நடுவராகக் கலந்து கொண்டார். நானும் ஏலி ஏலி லாமா சபக்தானி என்று ஒரு கதையை அனுப்பி வைத்தேன். ஆனால் அந்த கதைக்கு முதல் பரிசு தருவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை.
.
அதற்குப் பிறகும் அறிவியல் புனைக்கதைகளெல்லாம் நிறைய எழுதவில்லை. ஒன்றோ இரண்டோ அங்கும் இங்கும் எழுதியதோடு சரி. நண்பர் சிரில் அலெக்ஸ் நடத்திய போட்டியில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எனது நவீனன் சிறுகதைக்கு மூன்றாவது பரிசு அளித்திருப்பதைப் பார்க்கும் போது பயமாய் இருக்கிறது.
.
ஒருவேளை எனக்கு அறிவியல் புனைக்கதை எழுத வருகிறதோ ? பாவம் வாசக நண்பர்கள் !!!

நில் நிதானி காதலி : யுகபாரதி பார்வையில்

ஒரு கல்கோனா / இரண்டு கமர்கட்டு :  யுகபாரதி.

அ.

அரைகிலோ கத்திரிக்காய், நூறு கிராம் துவரம் பருப்பு, இருநூறு கிராம் நல்லெண்ணெய், எட்டணாவுக்கு பச்சை மிளகாய், கொசுறாகக் கருவேப்பிலை, கொத்தமல்லித் தளை. இந்தப் பட்டியலோடு கடைக்குப் போய் பொருள் வாங்கி வந்ததுண்டு. எதற்காக இதை அம்மா வாங்கி வரச் சொன்னாள் என புத்தியால் யோசித்ததில்லை. யோசித்தாலும் சமைப்பதற்கென்று மட்டும் நினைக்கத் தோன்றும். அரைகிலோ கத்திரிக்காய்க்குப் பதிலாக ஒருகிலோவோ, நூறு கிராம் துவரம் பருப்புக்குப் பதிலாக ஐம்பது கிராமோ வாங்கத் தோன்றுவதில்லை. எனில் அம்மாவின் கட்டளையை அது மீறுவதாகும்.

காதல் கவிதைகளை வாசிப்பதிலும் எனக்கு இந்த மாதிரியான ஒரு அணுகுமுறை தான். எழுதியவனின் கட்டளையை மீறியோ, குறைத்தோ யோசிக்கத் தோன்றவில்லை. திருமணத்துக்குப் பிறகும் சேவியர் எழுதுகிற காதல் கவிதைகள் யாரைத் திருப்திப்படுத்துமோ ? எந்தெந்த அளவுக்கு எதை எதை சேர்க்க வேண்டுமென்கிற பக்குவம் தெரிந்த அம்மா போல எதற்கு எழுதுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். எத்தனையோ கவிதைகள் எழுதிவிட்ட பிறகும் காதலின் தொடக்கம் கவிதையில் மையம் கொள்கிறது. தெற்கத்தி சமையலில் கடுகுபோல பொரியும் சத்தமே பிரதானம் இலக்கியப் பசிக்கு.

ஆ.

மூணு பேண்ட், எட்டுச் சட்டை, இரண்டு போர்வை, ஒர் பட்டுப்புடவை மொத்தம் சலவை செய்த துணிக்கு முப்பது ரூபாய். முன்பிருந்த பாக்கியை சேர்த்து அறுபத்தி ஏழு ரூபாய். துண்டு சீட்டில் எழுதி வருகிற சலவைக்காரரிடம் நான் அல்லது நாம் கேட்பதில்லை. ஒரே தொழிலைச் செய்வதில் அலுப்பு வரவில்லையா ? வந்தாலும் இதை அவன் செய்யவே வேண்டும் எனில் அது அவனது ஜீவனம். இல்லாவிட்டால் வாழ முடியாது. கவிதை எழுதாவிட்டால் செத்து விடுவோமோ சேவியர் ? எழுத முடியாமல் போனதற்காக தற்கொலை செய்ததுண்டா யாராவது ?

இ.

கடுமையான காய்ச்சல். குமட்டலெடுக்கிறது. தலைபாரம். தூக்கம் வரவில்லை. மருத்துவரிடம் எதற்காகப் புலம்புகிறோம் ? மருந்து உண்டு எனத் தெரிந்தும் உடம்பு சரியில்லை என்பதற்காக ஏன் ? எதற்காகத் துக்கப் படுகிறோம் ?காதலித்தவள் வராது போன துக்கம் மறு நாள் வருகையில் தீரும் தான். எனினும் எதற்காகக் குமைகிறோம் ?

தெரிந்தும் தெரியாமலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
புரிந்தும் புரியாமலும் தவித்துக் கொண்டிருக்கிறோம்
வருந்தியும் வருந்தாமலும் இந்த வாழ்வை ரசித்துக் கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கை காதலைப் போல வாட்டம் கவிதையைப் போல.

நிற்பதற்குள் நிதானமிழந்து விடுகிறது காலம். நினைப்பதற்குள் நெருங்கி வருகிறது மெளனம். மெளனமும் காலமும் இரட்டைக் குழந்தைகள். காதல் மெளனம், கவிதை காலம்.

காதலையும் நேரத்தையும்
வைத்து
நிறையக் கவிதைகள்.
எனக்கு
அதற்குக் கூட நேரமில்லை
உன்னைச் சந்தித்தபின்.

பரீட்சைக்குப் பணம் கட்டணும்பா, இன்றைக்குத் தான் கடைசி தேதி கட்டாட்டி பரீட்சை எழுத முடியாது. வாத்தியார் வீட்டுக்கு அனுப்பிச்சிருவார். வறுமை கல்வியைத் தின்கிறது. கல்வி பொறுமையிடம் வம்பு செய்கிறது. காலத்தால் மானப் பெரிது என்பது பரீட்சையின் போது எழுதுகோலுக்கு மை கொடுப்பது என்றார் என் வாத்தியார். மை அன்பு, எழுதுகோல் கவிதை. சேவியரிடம் இருக்கிறது காதலுக்கான கவிதைகள் நிரம்பி வழியும் நீரூற்று.

காளிமார்க் சோடா, ஒரு எலிமிச்சை அல்லது கொஞ்சம் உப்பு, இஞ்சி டீ, வசதியிருப்பின் ஸ்பெஷல் டீ, ரோட்டுக்கடையில் ரெண்டு புரோட்டா கூடவே ஆம்லெட், மிளகு தூவிய ஆகப்பாயில் , உணவு செரிக்க ஒரு வாழைப்பழம் – எந்த நேரத்தில் எது பிடிக்கும் ? பரிமாறுபவரிடம் பட்டியல் கேட்டு அடுத்த நொடியே ஆணையிடுகிறோம். எல்லாவற்றிலும் பிடிப்பதல்ல இருப்பவற்றில் பிடித்த அணுகுதல் அது. போலவே தான் வாழ்க்கை. கிடைத்தது உண்டு, கிடைத்ததை நினைத்து, கிடைப்பதோடு கழிகிறது நாள். கவிதை அவ்விதமில்லை. நினைப்பதைக் கிடைக்கச் செய்வது, உண்பதை வரவழைப்பது, கழிப்பதற்காக உருவாக்குவது.
வலிமையில்லாமல் எதுவும் சாத்தியமில்லை பூமியில்; கவிதையைத் தவிர. சேவியரின் கவிதைகள் மென்மையை ஆடையாக, முகப் பூச்சாகக் கொண்டிருக்கின்றன. இந்த மென்மை எத்தகையது ? குழாய் நீரின் வேக சத்தத்திற்கும் பயந்து விடுகிற மென்மை. தமாதமானாலும் நிதானமாகச் செயல்படுகின்ற காதல்.

இறுதியாக சேவியரின் கவிதைகள் படித்து நான் போடும் பட்டியல் . பத்து கிலோ சர்க்கரை, பதினாறு குடுவை தேன், முப்பது கிலோ கற்கண்டு, இருபத்தியாறு கிலோ நாட்டு வெல்லம், ஒரு கிலோ பாதாம் பருப்பு , நூற்றி எட்டு ரூபாய் முந்திரிக்காய், மேல் தூவ பதப்படுத்திய திராட்சை, வாசத்துக்கு ஏலக்காய். இத்தனை சேர்த்தும் தெவிட்டாதக் காரணம் அது காதலாயிருக்கிறது. காதலோடு இருக்கிறது. காதலை உடுத்தி, காதலைத் தேடி கண்ணாமூச்சி ஆடுகிறது. இவை எனக்குப் பிடிப்பதற்கு நிறையக் காரணமுண்டு.

சேவியரின் அன்புக்கு என்னைப் பிடிக்கிறது.
எதையும் காப்பாற்றுபவருக்குத் தான் சேவியர் என்று பெயர்
நிறைய பிரியமுடன்
யுகபாரதி

பின் குறிப்பு : நில், நிதானி, காதலி என்னும் எனது கவிதை நூலுக்காக யுகபாரதி எழுதிய முன்னுரை இது. சுவாரஸ்யமாக இருந்ததால் இங்கே பதிவு செய்கிறேன் ?

ஈழக் கவிஞருடன் ஒரு சந்திப்பு.

ஈழக் கவிஞர் ஒருவரைச் சந்தித்து உரையாடும் வாய்புக் கிடைத்தது. பணி நிமித்தமாக இந்தியா வந்திருந்த அவர் நேரம் ஒதுக்கி என்னைச் சந்தித்து எனது இல்லத்தில் சற்று நேரம் உணர்ச்சி பூர்வமான உரையாடலில் செலவிட்டது உண்மையிலேயே மனதுக்கு நிறைவாய் இருந்தது.

மல்லியப்பு சந்தி எனும் கவிதைத் தொகுப்பின் மூலமாக தமிழ் இலக்கியத்தோடும், தமிழ் ஈழ வரலாற்றோடும் தனக்குள்ள நெருக்கத்தை அடையாளப்படுத்தியிருக்கிறார் கவிஞர் நண்பர் திலகர் ( மயில்வாகனம் திலகராஜா ).

மல்லியப்பு சந்தி என்பதை சட்டென்ற வாசிப்பில் மல்லிகைப்பூ சந்தி என நினைத்த என்னிடம் மல்லியப்பு சந்தி என்பது ஈழப் போராட்டக் களத்தின் நுழைவாயில் என்றும், அது எப்படி ஈழப்போராட்டத்தோடு தொடர்புடையதாகியது என்றும் விளக்கினார் கவிஞர்.

குருதியின் ஈரமும், கண்ணீரின் ஈரமுமாய் விளக்கும் ஈழத்தின் சோகத்தையும், கோபத்தையும், ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் கவிஞரின் உரையாடல் பிரதிபலித்தது எனில் அது மிகையல்ல.

தலித் இலக்கியத்தை தலித் தான் எழுதவேண்டும், ஈழத்தை ஈழம் சார்ந்தவர் தான் எழுதவேண்டும் எனும் குரல்களோடு எனக்கு பெரிய அளவில் மாற்றுக் கருத்து இல்லை எனினும், தலித்தின் சோகத்தையோ, ஈழத்தின் தார்மீக உரிமையையோ அந்தந்த இன மக்களின் உணர்வுகளோடு ஒன்றி உள்வாங்கிக் கொள்ள முடிகின்ற எந்த ஒரு எழுத்தாளனும் உண்மையை நேர்மையுடன் பிரதிபலிக்க முடியும் என்பதே எனது கருத்தாகும்.

மலைவாசிகளின் வாழ்க்கையை ஒருவேளை ஒரு மலைவாசி எழுத முடியாமல் போகலாம், எனில் மலைவாசி மக்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைய முடிகின்ற எழுத்தாளர்கள் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும்.

எனினும், சூழலில் வாழும் எழுத்தாளன் அதை எழுதும் போது அதன் வலிமை பன்மடங்கு கூடுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

கவிஞர் திலகரும் தனது கவிதைகளில் ஈழத்தையும், சமூகத்தையும், ஈழ அரசியல் வாதிகளுக்கு உள்ளே இருக்கின்ற போலித்தனங்களையும் கவிதைகளில் வார்த்திருக்கிறார். பொதுவாகவே ஈழக் கவிதைகள் சிங்கள எதிர்ப்பாகவும், தமிழனின் கண்ணீர் குரலாகவும், போராட்டக் குரலாகவும் மட்டுமே வெளிவரும். இவருடைய கவிதைகள் தமிழ் வீதிகளில் நிலவும் போலித்தனங்களைக் கூட சற்று சுட்டிக் காட்டுகின்றன.

ஈழப் போரின் தற்போதைய உண்மை நிலவரத்தையும், தமிழீழம் உருவானால் உண்மையிலேயே மக்கள் நிறைவடைவார்களா ? இல்லை இன்னும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுவார்களா எனும் ஐயம் பல்வேறு தமிழ் தலைவர்களிடம் நிலவுவதாகவும் கவிஞர் தனது உரையாடலின் ஊடாக தெரிவித்தார். விட்டுக் கொடுத்தல் எனும் சிந்தனையே கால்நூற்றாண்டு கால குருதி சாட்சிகளின் சாவுக்கு அவமரியாதை செய்வதாய் அமைந்து விடக் கூடும் எனும் பயமும் பல்வேறு தமிழ் தலைவர்களிடம் நிலவுவதாக அவரது பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

மல்லியப்பு சந்தி – ஒரு கவிதை நூல் எனுமளவில், கவித்துவப் படைப்பாக்க அளவில் முழுமையான திருப்தி தரும் நூலாக அமைந்தது என்று சொல்ல முடியவில்லை. எனினும் உள்ளடக்கம் சார்ந்த விஷயங்களில் வலியும், சோகமும், ஏக்கமும், எதிர்பார்ப்பும் என ஓர் ஈழக் குரல் ஓங்கி ஒலிப்பதை நூல் பிரதிபலிக்கிறது.

நான் பார்த்ததிலே : ஒரு குறும்பட விமர்சனம்

 


என்று மடியும் எனும் குறும்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு வாய்த்தது. முத்துக்குமார் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தமிழியலன் எனும் மின் துறைப் பொறியாளர் ஒருவர் நடித்துள்ளார்.

அடக்குமுறையினால் கிராமத்தில் நிலத்தை இழந்த ஒரு தந்தை தனது மகனைக் காண சென்னை வருகிறார். சென்னையில் கால் செண்டர் ஒன்றில் பணிபுரியும் மகன் தந்தையிடம் பேசக் கூட நேரம் இல்லாமல் இருக்கும் நிலையைக் கண்டு நொந்து மனம் வருந்தி கிராமத்துக்கே திரும்புகிறார் என்பதே இந்த பத்து – பதினைந்து நிமிடக் குறும்படத்தின் கதை.

நகரத்துக்கு வரும் தந்தை மகனின் அலங்கோலமான அறையைச் சுத்தம் செய்வதும், மகன் மாலையில் வந்ததும் தந்தையிடன் பேசாமல் சோர்வுடன் தூங்குவதும், காலையில் விடிந்ததும் தந்தையிடம் பேச நேரமின்றி அலுவலகம் விரைவதும் என காட்சிகள் மனதை உருக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன.

இந்தப் படத்தில் நடித்திருந்த தமிழியலன் அவர்கள் கால் ஊனமுற்றவர். அந்த கதாபாத்திரத்தின் ஏக்கத்தையும், வலியையும் முகத்திலும் கண்களிலும் தேக்கி அவர் நடித்திருந்த விதம் அருமையாய் இருந்தது.

அவரைத் தொடர்பு கொண்டு பாராட்டினேன். மிகவும் அடக்கமாக எனக்கு நடிப்பில் ஆசை ஏதும் இல்லை என்றார். அப்படியானால் தொடர்ந்து நடியுங்கள் என்றேன். சிரித்தார்.

படத்தின் இயக்கம், இசை, நடிப்பு என அனைத்துமே சிறப்பாக இருந்தாலும் ஒரே ஒரு குறை படத்தில் நெருடலாகவே இழையோடுகிறது.

சென்னை இளைஞனின் பரபரப்பான வாழ்க்கையையும், மேலை நாட்டு ஆதிக்கத்தையும், பின்னுக்குத் தள்ளப்படும் உறவுகளையும் பதிவு செய்வதற்காக படத்தின் கதை மிகைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது.

கிராமத்திலிருந்து நகரத்தில் தன்னைக் காண வரும் தந்தையிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் மகன் தூங்குவான் என்பதும், காலையில் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்று விடுவான் என்பதும், தாய் பாசத்துடன் தந்தனுப்பிய பண்டத்தை கையில் வாங்கிக் கூட பார்க்க மாட்டான் என்பதும் துளியும் நம்பும்படியாக இல்லை. அதுவும் கிராமப் பின்னணியிலிருந்து தந்தையின் அன்பை அனுபவித்து மகிழ்ந்த ஒரு இளைஞன் இப்படி நடந்து கொள்ள வாய்ப்பே இல்லை.

எனினும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களும், நவீனங்களும் நமது வாழ்வில் ஏற்படுத்திய இழப்புகளை வலியுடனும், வலிமையுடனும் பறைசாற்றுகிறது இந்தக் குறும்படம்.

யெஸ். பாலபாரதியின் “அவன் – அது = அவள்” : நூல் விமர்சனம்

நேற்று யெஸ்.பாலபாரதி அவர்கள் எழுதிய “அவன் – அது = அவள்” எனும் நாவலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

திருநங்கையர் குறித்த அக்கறையும், பாசமும் சமீபகாலமாக அதிகரித்திருப்பது மனித நேயத்தின் வேர்களில் இன்னும் ஈரம் உலராமல் இருக்கிறது என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

கிழக்கு வெளியிட்ட நான் வித்யா, தோழமை வெளியிட்ட அரவாணிகள் இரண்டு நூலையும் தொடர்ந்து மூன்றாவதாக வாசிக்கும் நூல் இது என்பதால் இந்த நாவல் தரும் அனுபவம் வலி கூட்டுகிறது.

திருநங்கையரின் உண்மையான அனுபவங்களின் வாக்கு மூலங்களையும், அவர்களுடைய வாழ்க்கையின் துயரங்களையும் ஓர் ஆவணமாக்கிய விதத்தில் பாலபாரதி வெற்றியடைந்திருக்கிறார்.

எளிமையான தெளிவான நடையும், சொல்லும் விஷயங்களை வரிசைப்படுத்திய நேர்த்தியும் நூலின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. பல இடங்களில் நூலை மூடி வைத்துவிட்டு சற்று இடைவெளி கொடுத்து, கனத்த இதயத்தை எடையிழக்க வைத்து, வாசிப்பைத் தொடர வேண்டியிருந்தது என்பது கலப்படம் இல்லாத உண்மை.

குறிப்பாக ‘கோபி’ யின் முதல் துயரம் சக மனிதன் மீதான கரிசனையற்ற ஓர் காட்டு வாசிக் கூட்டத்தின் ஆணிவேர்களில் கோடரியாய் இறங்கியிருக்கிறது. வாசிக்கும் போதே அந்த சமூகக் கூட்டத்தில் ஓர் புழுவாய் நெளியும் அவஸ்தையும், அவமானமும் சூழ்ந்து கொள்கின்றன.

கடைசி கட்டத்தில் நிர்வாணச் சடங்கை விவரிக்கும் போது திருநங்கையரின் துயரத்தின் ஆழம் மனதை மூழ்கடிக்கிறது. துயரங்களின் புதைகுழியையே வாழ்க்கையின் இருப்பிடமாகக் கொண்ட சகோதரிகளின் கண்ணீர் துளிகளின் பிரதிகள் நம்மிடமிருந்தும் வழிகின்றன.

அழுகையின் அடர் இரவில் எழும் மின்மினிகளின் பளிச்சிடுதலாய் திருநங்கையரின் காதல் உணர்வுகளையும், மோகப் பகிர்வுகளையும் விரிவாகவே ஆசிரியர் விளக்குமிடத்தில் ஆபாசத்தையும் மீறி கண்கள் பனிக்கின்றன.

இன்றைய அவசர உலகம் கவனிக்க மறுத்த துயரங்களில் கூடாரத்தில் இவர்களுடைய வாழ்க்கையும் அடங்கும். இதை நாவல் என சொல்லவேண்டாம் என ஆசிரியர் கேட்டுக் கொண்டாராம். வலி மிகுந்த உண்மைகளே இதில் வலம் வருகின்றன என்பதால் இருக்கலாம்.

எடுத்துக் கொண்ட கருவுக்காக பாலபாரதியை முழுமையாகப் பாராட்டலாம். நாவல் எனும் வகையில் சில குறைகளையும் காண முடிகிறது. குறிப்பாக ‘நிர்வாணம்’ உட்பட சில காட்சிகளை அழுத்தமாய் விவரித்த அளவுக்கு நாவலின் முடிவுப் பகுதியும் விளக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிறைவுப் பகுதி ஓடும் பஸ்ஸிலிருந்து சட்டென குதித்துவிட்ட அவஸ்தையையே தருகிறது. முழுமையாக அந்த பகுதிக்குள் நுழைய முடியாமல் அந்த அவசரம் தடுத்துவிடுகிறது. இந்த நிலை நாவலின் இடையிடையே நேர்கிறது.

எனினும், தனது முதல் நாவலின் மூலமாக ஓர் அழுத்தமான களத்தை எடுத்துக் கொண்டு அதற்காய் சமரசங்கள் செய்து கொள்ளாமல், நிஜத்தின் வலியையும், வலியின் நிஜத்தையும் ஆழமாய் பதிவு செய்த வகையில் ஆசிரியர் தனித்துவம் பெறுகிறார்.

——————————– ——————————– ——————————– 

பல ஆண்டுகளுக்கு முன் திருநங்கையர் பற்றி நான் எழுதிய கவிதையின் சில வரிகள் நினைவுக்கு வருகின்றன.

அவர்கள் என்ன
விண்ணப்பம் செய்து
விண்ணிலிருந்து
விழுந்தவர்களா ?
ஏதோ ஒரு கருவறையின்
கதவுதிறந்து பிறந்தவர்கள் தானே.

——————————– ——————————– ——————————– 

தோழமை வெளியீடு
9444302967
பக்கங்கள் 184
விலை  : 120

கிழக்கு பதிப்பகத்தில் எனது புதிய நூல்

கிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு.

வரலாறுகள் சிலிர்ப்பூட்டுபவை மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நமக்கு முன்னால் அலட்சியமாய் விரிக்கப்பட்டிருக்கும் காலத்தின் அகோரமான சுவடுகளையும், வலிகளையும் நம் முன்னால் விவரிப்பவையும் கூட.

மதமும் அதன் கோட்பாடுகளும் வலுவாக ஊன்றப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் முளைத்தெழும் எந்த ஒரு புதிய மதமும் நெருஞ்சிகளுக்கிடையே நெருக்கப்படும் கீரைச் செடிபோல கிழிபட்டே ஆகவேண்டும். நிராகரிப்புகளும், அவமானங்களும், துரத்தல்களும், நசுக்கல்களும் மட்டுமே பந்தி விரிக்கப்பட்டிருக்கும் ஒரு பாசறை அது.

ஆழமான வேர்களைக் கொண்டிராத கொள்கைகளும் கோட்பாடுகளும் வலுவிழந்து எதிர்ப்புச் சக்கரங்களில் எழமுடியாதபடி நறுக்கப்படுவதன் காரணமும் இது தான். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு கோட்பாடோ, மதமோ, இயக்கமோ பல நூற்றாண்டுகள் போராட வேண்டியிருக்கும் என்பதன் சாட்சியாய் நிற்கிறது கிறிஸ்தவ வரலாறு.

எல்லா வரலாற்று நிகழ்வுகளுக்கும் உரித்தான பரபரப்பும், வியப்பும், வலியும், பிரமிப்பும் கிறிஸ்தவ வரலாற்றுக்கும் உண்டு. கிறிஸ்தவம் கடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பிப் பார்க்கையில் எழும் உணர்வுகளுக்கு என்ன பெயடுவதென்று தெரியவில்லை.

கிறிஸ்தவம் எல்லா மதங்களுக்கும் உள்ள பலத்தோடும், பலவீனத்தோடும் தான் பரவி வந்திருக்கிறது என்பதை கிறிஸ்தவ வரலாற்றின் குருதிக் கறை படிந்த பக்கங்கள் விளக்குகின்றன. பிறரால் தாக்கப்பட்ட கிறிஸ்தவம் வெளித் தாக்குதல் நின்றபின் உள்ளுக்குள் போர்களைத் தீவிரப்படுத்திய நிகழ்வுகள் ஏராளம்.

யார் பெரியவன், எது சரியானது எனும் போராட்டங்களின் பிள்ளைகளாக இன்று உலகெங்கும் பரவிக் கிடக்கும் கிறிஸ்தவக் குழுக்களில் எது சரியானது ? எல்லாம் சரியானதெனில் ஏன் இத்தனை பிரிவுகள் ? கிறிஸ்தவம் புனிதமா ? அவமானமா ? என வரலாறு சொல்லும் விஷயங்களின் சுவாரஸ்யம் நீள்கிறது.

கிறிஸ்தவ வரலாற்று நூல்களை சிறு வயது முதலே படித்து வந்த அனுபவம் இந்த நூலை சரியான கோணத்தில் எழுத எனக்கு துணை செய்திருக்கிறது. எந்தப் பிரிவு கிறிஸ்தவத்தையும் சாராமல் உண்மை நிலையை அதன் புனிதக் கூறுகளோடும், புழுதிக் கூறுகளோடும் , அமைதி வாசனையோடும், போரின் நெடியோடும் உண்மையை உள்ளபடி சொன்ன திருப்தி இருக்கிறது.

கிறிஸ்தவ வரலாற்றை முழுமையாய் சொல்லவேண்டுமெனில் ஆயிரம் பக்கங்களேனும் எழுதவேண்டும். குறைந்த பட்சம் ஐநூறு பக்கங்களேனும் தேவைப்படும். ஆனால் அந்த வரலாற்றை அதன் முக்கியத்துவம் சிதையாமல், புள்ளி விவரங்களால் போரடிக்காமல், வெறும் 210 பக்கங்களுக்குள் அடக்கி விட முடிந்ததையே முதல் வெற்றி என நினைத்துக் கொள்கிறேன்.

நண்பர்கள் பென் கிருபா, சுதாகர் மற்றும் சில இறையியல் வல்லுனர்களின் உதவி இல்லாவிட்டால் இந்த நூல் முழுமையடைந்திருக்க வாய்ப்பே இல்லை.

இந்த நூலினை வெளியிட்டிருக்கும் கிழக்கு பதிப்பகம் இந்த நூலுக்காக நிறைய உழைத்திருக்கிறது. இதிலுள்ள வரலாற்றுத் தகவல்களை சரிபார்த்ததுடன் இந்த நூலிலுள்ள விவிலியப் பெயர்களை வெகுஜன வாசிப்புக்குத் தக்க வகையில் ஆங்கிலப் படுத்தி பெருமை கிழக்குப் பதிப்பகத்துக்கே சாரும். நூலை வெளியிட்டமைக்காகவும், நூலை சிறப்புற வடிவமைத்தமைக்காகவும் கிழக்குப் பதிப்பகத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ 100