பாரதி : ஒரு சமூகவியல் பார்வை

one.jpg

இந்நூல் பாரதி பற்றியும், பாரதி ஆய்வு பற்றியும் சில அடிப்படையான பிரச்சனைகளைக் கிளப்புகிறது. முக்கியமாக வரலாற்றுப் பொருள்முதல் வாத நோக்கில் பாரதி அணுகப்படுகின்ற பொழுதும் தெளிவுபடுத்தப் படுகின்ற பொழுதும் ஏற்படும் ஆய்வுச் சிக்கல்கள் பிரக்ஞை பூர்வமாகப் புலப்படுகிறது. பாரதியின் மதக் கோட்பாடுகள், மார்க்சியப் பரிச்சயமின்மை ஆகியவற்றை அழுத்தமாய் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது.

எனும் பலத்த பீடிகையோடு வந்திருக்கும் “பாரதி – ஒரு சமூகவியல் பார்வை” எனும் நூலை வாசிக்க நேர்ந்தது.

தேர்ந்த விமர்சகர்களான அ.மார்க்ஸ், பெ. மணியரசன் ஆகியோர் பாரதி பற்றி பல கோணங்களில் இந்நூலில் அலசியிருக்கிறார்கள்.

1982 களில் இந்த நூல் வெளியாகி இப்போது இரண்டாம் பதிப்பை தோழமை பதிப்பகம் மூலம் காண்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

கலை இலக்கியம், மதம், சமூகம் என்னும் மூன்று தளங்களில் முக்கியமாக பாரதி இந்த நூலில் ஆராயப்படுகிறார். பாரதியின் பாடல்களை விட அதிக இடங்களில் பாரதியின் உரைநடையே மேற்கோள் காட்டப்பட்டிருப்பது போல ஒரு தோற்றமும் எழுகிறது.

பெரும்பாலும் இந்த நூலில் முழுக்க முழுக்க பாரதியை சரியான, மிகச்சரியான நபராய் மட்டுமே காட்டவேண்டும் எனும் ஆசிரியர்களின் நோக்கு ஆழமான வாசிப்பில் தெரியவருகிறது. அந்த பார்வையுடன் அணுகும் போது முழுமையான திருப்திக்குள் நுழைய முடிகிறது..

சில கட்டுரைகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தவிர்த்த இடங்களைப் பற்றிய அலசல் ஆசிரியர்களின் நோக்கத்தை இன்னும் ஊர்ஜிதப்படுத்துகிறது.

பாரதி பற்றி சமீபகாலமாக வாசிக்க நேர்ந்த எதிர் நூல்கள் எனக்கு அறிமுகமாகாமல் போயிருந்தால் பாரதி குறித்த இந்த நூல் பிரமிப்பூட்டியிருக்கும்.

ஆனால் சமீப காலமாய் வெளியான சில நூல்கள் பாரதியின் இன்னோர் பார்வையாய், அல்லது உள்ளார்ந்த சிந்தனை இப்படி இருந்திருக்கலாமோ எனும் ஐயத்தைக் கிளறுவதாய் அமைந்திருந்தன. அத்தகைய ஒரு வாசிப்புப் பின்னணியில் இந்த நூலை அணுகும் போது விமர்சக வட்டத்தில் கைதேர்ந்த இருவர் பாரதிக்கு வாசித்திருக்கும் பாராட்டுப் பத்திரமாகவே வெளிப்படுகிறது.

பாரதியை ஒரேயடியாகப் பாராட்டிவிடவோ, அவருடைய படைப்புகளின் வீரியத்தை முழுமையாக மறுதலித்து விடவோ முடியாத சூழலே இன்று நிலவுகிறது. அத்தகைய பின்னணியில் இந்த நூல் பாரதியின் பலவீனங்களையும் சேர்த்தே அலசியிருந்தால் இன்னும் சிறப்பானதாய் இருந்திருக்கும்.
பதிப்பகம் : தோழமை
விலை : 75/-
9444302967

கிழவனல்ல, கிழக்குத் திசை.

periyar.gif
வார இறுதியில் வாசிக்க நேர்ந்தது “கிழவனல்ல, கிழக்குத் திசை” நூல்.

பெரியாரின் உரைகளும், ஓவியர் புகழேந்தி அவர்களின் பெரியார் ஓவியங்களும் என சுவாரஸ்யமாக இருக்கிறது இந்த சிறு நூல்.

பிரமிப்பூட்டும் பல விஷயங்களின் தொகுப்பாக இருக்கிறது இந்த நூல்.

வியப்பு ஒன்று : புத்தக தயாரிப்பு. கருப்பு வண்ணத்தில் தங்க நிற பெரியாரின் முகம், பெரிய நூல்களுக்கான தடிமனான அட்டை, அடையாள நூல் என வியக்க வைக்கிறது செலவைப் பற்றிக் கவலைப்படாத தயாரிப்பு.

வியப்பு இரண்டு : ஓவியங்கள். “திசை முகம்” என்னும் தலைப்பில் ஏற்கனவே பல ஓவியக் கண்காட்சிகளைக் கண்ட ஓவியங்கள் இவை. தாடிக் கிழவரின் வயதான முகத்தை இருபத்து ஐந்து விதமாக மிகச் சிறப்பாக வரைந்திருக்கிறார் ஓவியர்.

வியப்பு மூன்று : உரைத் தேர்வு. பெரியாரின் உரை எதை எடுத்தாலும் சிறப்பாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும் இந்த நூலுக்காக பெரியாரின் பன்முகப் பார்வையை வெளிப்படுத்தும் விதமாக இருபத்து ஐந்து உரைகளைத் தொகுத்திருக்கின்றார் பெ. மணியரசன்.

சுமார் எழுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே “எதிர்காலத்தில் எல்லோர் சட்டைப்பையிலும் கம்பியில்லா சாதனம் இருக்கும்” என்று பெரியார் சொல்லியிருப்பதை வாசிக்கும் போது செல்பேசி செல்லமாய் சிணுங்குகிறது.

தனது மனைவியின் மறைவு பற்றிப் பேசும்போது பெரியாரின் துணிச்சல் வியக்க வைக்கிறது. தன் மனைவி வீட்டில் ஓர் அடிமை போலவே இருந்தார் எனவும், பேச்சில் பெண்களை உயர்த்திய அளவுக்கு வீட்டில் பெண்ணை நான் உயர்த்தவில்லை, நான் ஒரு நல்ல வாழ்க்கைத் துணையாய் இருக்கவில்லை என உண்மையை சற்றும் தயக்கமின்றி பேசும் பெரியாரின் துணிச்சல் இன்றைய தலைவர்களிடம் காண முடியாதது.

காந்தியடிகளுடனான உரையாடலில், பார்ப்பனர்கள் யாருமே நல்லவர்கள் இல்லை என பெரியார் சொல்ல, காந்திஜி அதை மறுக்கிறார். எனக்குத் தெரிந்த ஒரு நல்ல பார்ப்பனரைச் சொல்லவா என காந்திஜி கோபால கிருஷ்ண கோகலே பெயரைச் சொல்கிறார். உடனே பெரியார், மகாத்மா கண்ணுக்கே ஒரு பார்ப்பனர் தான் நல்லவராய் தெரிகிறார் எனின் என்னைப் போன்ற சாதாரண பாவியின் கண்ணுக்கு யாரும் தெரியாததில் ஆச்சரியமில்லை என்கிறார். பெரியாரிடம் இருந்த சூழலுக்கு ஏற்ப சட்டென, தன் நிலையை விட்டுக்கொடுக்காமல் பதிலிறுக்கும் தன்மை இந்த உரையாடலில் வெளிப்படுகிறது.

வள்ளுவரும், பாரதியாரும் பழமைக் கருத்துக்களைச் சொன்னவர்களே, பாரதி தாசன் தான் புதுமைக் கருத்துக்களைச் சொன்னவர் என்று பாரதி – பாரதிதாசன் மீதான தனது பார்வையை வைக்கிறார்.

இப்படி பெரியாரின் மாறுபட்ட குணாதிசயங்களையும், பார்வைகளையும் இந்த நூல் ஒரு பருக்கைப் பதம் பார்த்திருக்கிறது.

பெரியாருடைய வாழ்க்கையின் பரிமாணங்களையோ, அவருடைய கொள்கைகளின் ஆழத்தையோ அறிந்து கொள்ளவேண்டும் எனும் நோக்கில் அணுகவேண்டிய நூல் அல்ல இது. ஓவியங்களால் பெரியாருக்குச் செய்யப்பட்டிருக்கும் மரியாதை என்றே கொள்ளவேண்டும்.

வெளியீடு : தோழமை
விலை ரூ. 110/-
9444302967

எபிரேய சாலமோன் vs தமிழ் வள்ளுவர்

valluvar.jpg VS solomon.jpg

திருக்குறளைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க இயலாது எனுமளவுக்கு தமிழ் மொழிக்கு அற்புதமான ஒரு பொக்கிஷத்தைத் தந்தவர் வள்ளுவர். கி.மு. முதல் நூற்றாண்டில் ( கி.மு. 31 ) வாழ்ந்தவர். அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று அறைகளுக்குள் வாழ்வின் அத்தனை தத்துவங்களையும் அடக்கிய ஞானி அவர்.

.
ரோமக் கவிஞர் ஓவிட் என்பவர் ( 43 BC – 18 AD ) மட்டுமே அவருடைய காமத்துப் பாலை கொஞ்சம் ஒத்து எழுதியவர். கன்பூசியஸ் சில இடங்களில் ஒத்துப் போகும் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார், அதைத் தவிர்த்தால் அறத்துப் பால், பொருள் பாலைப் பொறுத்தவரை திருவள்ளுவர் தனிக்கொடி நாட்டியவர் தான்.
நிற்க.,

கிமு 970 – 928, காலகட்டத்தில் வாழ்ந்த மன்னர் சாலமோன். கடவுளிடம் ஞானம் வேண்டிப் பெற்றவராக, சிறந்த தத்துவ ஞானியாகப் போற்றப் படுவவர் தான் சாலமோன். அந்தக் காலத்தில் எருசலேமை தலைமையாகக் கொண்ட யூதா மற்றும் இஸ்ரேல் நாடுகளை நாற்பது ஆண்டுகள் ஆண்டவர் தான் சாலமோன்.

.

தன்னுடைய வாழ்வின் இரண்டாவது கட்டத்தில் வாழ்வே மாயம் என்று பல்டிக் கொள்கைகளை அடித்தாலும், முதல் பாதியில் அருமையான நீதிமொழிகள் தந்திருக்கிறார்.
இங்கும் நிற்க.,

இரண்டு வேறுபட்ட காலங்களில் வேறுபட்ட இடங்களில், வேறுபட்ட மொழிகளில் வாழ்ந்தவர்கள் தான் இவர்கள் இருவரும். இருந்தாலும் திருவள்ளுவருடைய சிந்தனைகள் பல இடங்களில் தன்னைவிட பத்து தலைமுறைக்கு முந்தியவரான சாலமோனின் சிந்தனைகளைக் நிறைய இடங்களில் உரசிச் சென்றிருக்கிறது என்பது ஓர் ஆச்சரியம்.

 சாலமோனின் எபிரேய மொழிச் சிந்தனைகளை, நம் தமிழ் நாட்டு வள்ளுவர் உள்வாங்கினாரா ? இல்லை இவை இணைச் சிந்தனைகளா என்பதை ஆராய்ச்சியாளர்கள் தான் முடிவு செய்ய முடியும்.

சில முக்கியமான உதாரணங்களைக் கூறவேண்டுமென்றால்,

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்.

நீதி மொழி : 25 : 21,22  ல் சாலமோன் இதையே, எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உண்ணக் கொடு, தாகத்தோடு இருந்தால் குடிக்கத் தண்ணீர் கொடு. என்கிறார். இவ்வாறு செய்வதால் நீ அவன் தலையில் எரி தழலைக் குவிப்பாய்.

புறம் தூய்மை நீரான் அமையும், அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

இந்தக் குறளும், நீ.மொ 27: 19 – ல் சாலமோன் குறிப்பிடும்,
” நீரில் ஒருவர் தம் முகத்தைக் காண்பார், தம் உள்ளத்தில் ஒருவர் தம்மைக் காண்பார் ”
என்பதும் ஒத்த சிந்தனையைச் சொல்கின்றன.

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.

 – தகுதிடையவரின் அன்புக்குப் பாத்திரமாக இருப்பினும், சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவது அரிதாகும். எனும் குறளும்

நீ.மொ. 10 :4 , வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும், விடாமுயற்சியோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
நீ.மொ. 13 :14 , சோம்பேறிகள் உண்ண விரும்புகிறார்கள் உணவோ இல்லை
நீ.மொ 20.4 , சோம்பேறி பருவத்தில் உழுது பயிரிட மாட்டார், அவர் அறுவடைக்காலத்தில் விளைவை எதிர் பார்த்து ஏமாறுவார்.
 என்றெல்லாம் சோம்பேறிகளின் நிலையை அழகாக வெளிப்படுத்துகிறார். அதிலும் குறிப்பாக நீ.மொ. 19:24 ல், சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார், ஆனால் அதை வாய்க்குக் கொண்டு போக சோம்பலடைவார். என்று மிகைப்படுத்தி முத்தாய்ப்புக் கருத்துக்களை வைக்கிறார்.

வேலொடு நின்றான் இடுவென் றுதுபோலும்
கோலோடி நின்றான் இரவு.

 ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக் காரனின் மிரட்டலைப் போன்றது.

வள்ளுவரின் இதே கருத்து ,

(நீ. மொ 28:15) கொடுங்கோல் மன்னன் ஏழைக்குடிமக்களுக்கு முழக்கமிடும் சிங்கமும், இரைதேடி அலையும் கரடியும் போலாவான்.

(நீ.மொ. 28:16 ) அறிவில்லாத ஆட்சியாளன் குடிமக்களை வதைத்துக் கொடுமைப் படுத்துவான்.

( நீ.மொ. 29:4 ) நியாயம் வழங்குவதில் அரசர் அக்கறை காட்டினால் நாடு செழிக்கும். அவர் வரி சுமத்துவதில் அக்கறை காட்டினால் நாடு பாழாய்ப் போகும்.

என்றெல்லாம் சாலமோன் வாயால் கூறப்பட்டிருக்கிறது.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்  கெல்லாம் இனிது

 – பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

இதை சாலமோன் மிகச் சுருக்கமாக, (நீ.மொ. 10:1) – ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை மகிழ்விக்கின்றனர். அறிவற்ற மக்களோ தம் தாய்க்குத் துயரம் வருவிக்கின்றனர் எனக்குறிப்பிட்டு, பின்

(நீ.மொ 23 : 25 ) – இல், நீ உன் தந்தையையும் தாயையும் மகிழ்விப்பாயாக, உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய்வாயாக என்று அறிவுரையும் வழங்குகிறார்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.( 70 )

 – ஆஹா, இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பேறு என்று ஒரு மகன் புகழப்படுவது தான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும்.

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்

 – நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைகிறாள்
 
போன்ற குறள்களைக் கூட இங்கே குறிப்பிடலாம்.
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
( 1075 )

 – தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும் போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர் போல காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தில் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.

நீ.மொ. 10 :13 இதே கருத்தைச் சொல்கிறது.
அந்தனர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் ( 543 )

 ஓர் அரசின் செங்கோன்மை தான் அறவோன் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்

(நீ. மொ. 20.8 ) மன்னன்  நீதி வழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும் போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்து விடுவான் என்கிறார் சாலமோன்.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும் (284 )

 களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்மத்தை உண்டாக்கும்.

( நீ.மொ. 21 :7 ) பொல்லார் நேர்மையானதைச் செய்ய மறுப்பதால், அவர்களது கொடுமை அவர்களை பாழடித்து விடும்.

அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு ( 288 )

 நேர்மையுள்ளவன் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்கு வழியான வஞ்சக வழியில் செல்லும்.

(நீ.மொ. 12 : 20 ) சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக் கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்.
(நீ.மொ 12 : 17 ) உண்மை பேசுவோர் நீதியை நிலை நாட்டுவர், பொய்யுரைப்போரோ வஞ்சகம் நிறைந்தோர்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. ( 100 )

 -இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விடுத்து கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.

(நீ.மொ : 15:1 ) கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்.

பேராண்மை என்பதறுகண் ஒன்றுற்றக் கால்
ஊராணமை மற்றதன் எஃகு ( 773 )

 – பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆன்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் போற்றப்படும்.

( நீ.மொ. 25 : 21 ) – எதிரி பசியாய் இருந்தால் அவனுக்கு உணவு கொடு, தாகமாயிருந்தால் குடிக்கக் கொடு.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். ( 44 )

 – பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலே தேன் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

( நீ.மொ. 22:9 ) கருணை உள்ளவன் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பான், அவரே ஆசி பெற்றவர்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று ( 259 )

 – நெய் போன்ற பொருட்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதை விட உண்பதற்காக ஓர் உயிரப் போக்காமலிருப்பது உயர்ந்தது.

( நீ.மொ. 21:3 ) – பலி செலுத்துவதை விட நேர்மையும் நியாயமுமாக இருப்பதே ஆண்டவருக்குப் உவப்பளிக்கும்.

இந்தக் குறள் அப்படியே அதன் பொருளை பிரதிபலிக்காவிட்டாலும், பலி செலுத்துவதை விடச் சிறந்தது நேர்மை நியாயம் என்று சாலமோன் குறிப்பிடுகிறார், வள்ளுவர் அதை மிருக வதைக்காக பயன் படுத்துகிறார்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை ( 400 )

 – கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும், அதற்கொப்பான சிறப்பான செல்வம் வேறு எதுவும் இல்லை.

( நீ.மொ .16:16 ) பொன்னை விட ஞானத்தைப் பெறுவதே மேல், வெள்ளியை விட உணர்வைப் பெறுதலே மேல்.
( நீ.மொ 3 : 13 ) – இலும், மேற்கூறிய பொருளே கூறப்படுகிறது.
(நீ.மொ : 8 : 11 ) பவளத்திலும் ஞானமே சிறந்தது, நீங்கள் விரும்புவது எதுவும் அதற்கு நிகராகாது.

இந்தக் குறள் சாலமோனின் செய்தியை அப்படியே சுமக்கிறது, தரம் குறையாமல்.

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றாதவர் ( 649 )

 – குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள், பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.

( நீ. மொ : 17: 27 ) தம் நாவைக் காத்துக் கொள்பவரே அறிவாளி, தம் உணர்ச்சிகளை அடக்குபவரே மெய்யறிவாளர்.

நாவடக்கம் பற்றி சாலமோன் மேலும் நிறைய விளக்கங்கள் தருகிறார்,

(நீ.மொ 17 : 28 ) பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவனாய் கருதப் படுவான், தன் வாயை மூடிக் கொள்பவன் அறிவுள்ளவன் எனப்படுவான்.

(நீ.மொ 17 : 14 ) வாக்குவாதத்தைத் தொடங்குவது மதகைத் திறந்து விடுதல் போலாகும்: வாக்குவாதம் மேலும் வளரும் முன் அதை நிறுத்திவிடு.
( நீ. மொ 18 : 7 ) மதிகேடர் பேசத்துவங்கினால் வாக்குவாதம் பிறக்கும், அவரது பேச்சு அவருக்கு அடி வாங்கித் தரும்.
( நீ. மொ 18 : 20 ) ஒருவர் நாவினால் எதை விதைக்கிறாரோ அதையே உண்பர் : தம் பேச்சின் விளைவை அவர் துய்த்தாக வேண்டும்.
(நீ.மொ 18 : 21 ) வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே; வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர்.

வகையறிந்து வல்லமை வாய்சேரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர் ( 721 )

 – சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்

 எனும் குறளும் இங்கே ஒப்பிடத் தக்கதே.

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்


( நீ.மொ : 15 :22 ) எண்ணிப் பாராமல் செய்யும் செயல் தோல்வியடையும், பலர் திட்டமிட்டுச் செய்யும் செயல் வெற்றியடையும்.
( நீ.மொ 19 : 2 ) எண்ணிப் பாராமல் செயலில் இரங்குவதால் பயனில்லை, பொறுமையின்றி நடப்பவர் இடறி விழுவார்.

வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்றப் படின் ( 272 )

 – தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவன், துறவுக் கோலத்தால் அடையும் பயன் ஒன்றுமில்லை

( நீ.மொ 19 :1 ) முறைகேடாய் நடக்கும் செல்வரை விட மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றும்
நாமம் கெடக்கெடும் நோய் ( 360 )


 – விருப்பு வெறுப்பு, அறியாமை இவை இல்லாதவர்களை துன்பம் அண்டாது

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும் ( 553 )

 – ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்துகொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.
( நீ.மொ : 29: 4 ) நேர்மையானவன் ஆட்சி அமைத்தால் மக்கள் மகிழ்ச்சியோடிருப்பர், பொல்லார் ஆட்சி செலுத்தினால் அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பர்.
( நீ. மொ 29 :12 ) ஆட்சி செலுத்துகிறவன் பொய்யான செய்திகளுக்கு செவிகொடுக்கிறவராயின், அவருடைய ஊழியரெல்லாம் தீயவர் ஆவார்.
( நீ.மொ 14 : 34 ) நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்.

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச் சொல்லுவார் ( 719 )

 – நல்லோர் நிறந்த அவையில் மனதில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றோர், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமலிருப்பதே நலம்.

( நீ. மொ : 16 :19 ) – மேட்டிமையானவர்களோடு கொள்ளையடித்த பொடுளை பகிர்ந்து கொள்வதை விட, மனத் தாழ்ச்சியோடு சிறுமைப்பட்டவர்களோடு கூடி இருப்பது நலம்.

இந்த குறளும், நேரடியான பொருளைச் சொல்லவில்லை எனினும், இதுவும் அதனை ஒத்த ஒரு நேர் சிந்தனையே.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல் ( 979 )

 – ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும், ஆணவத்தின் எல்லைக்கே சென்றுவிடுவது சிறுமை எனப்படும்

( நீ. மொ : 22:9 ) – கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர், அவரே ஆசி பெற்றவர்.

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின் ( 111 )

 – பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒரு தலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவு நிலமை எனும் தகுதியாகும்.

( நீ.மொ: 28 : 21 ) – ஓரவஞ்சனை காட்டுவது நல்லதல்ல.

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும் ( 911 )

 – அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுபவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.

(நீ.மொ : 2:16)   ஞானம் உன்னை கற்பு நெறி தவறிவளிடமிருந்தும், தேனொழுகப் பேசும் விலைமகளிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும்
(நீ.மொ : 2:18)    அவளது வீடு சாவுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது, அவளின் வழிகள் இறந்தோரிடத்துக்குச் செல்கின்றன.
(நீ.மொ : 2:19) அவளிடம் செல்லும் எவனும் திரும்பி வருவதேயில்லை; வாழ்வெனும் பாதையை அவர்கள் மீண்டும் அடைவதேயில்லை.
(நீ.மொ : 6:24)  (அறிவுரை, ) உன்னை விலைமகளிடமிருந்தும், தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும்.

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயந்தூக்கி நள்ளா விடல்.( 912 )

பொருள்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று ( 913 )

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி நவர் ( 914 )

பொது நலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி நவர் ( 915 )

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள் ( 916 )

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் ( 917 )

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு ( 918 )

வரைவிலா மாணிழையார் மெந்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு ( 919 )

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. ( 920 )

0

உட்கப் படாஅர் ஒளியிழப்பார் எஞ்ஞான்றும்
கட்காதல் கண்டொழுகுவார் ( 921 )

 – மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்.

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார் ( 922 )

 
 – மது அருந்தக் கூடாது, சான்றோரின் நன்மதிப்பு தேவையில்லை என்போர் மட்டும் அருந்தலாம்.

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு ( 924 )

 
 – மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

( கள்ளுண்ணாமையில் வள்ளுவர் – குறள்கள் 930 வரை )

பெரும்பாலான அறிவுரைகள் நீதிமொழிகளில் காணப்படுகின்றன.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுவாஞ்சொல் இன்மை அறிந்து ( 645 )

 – இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

( நீ.மொ : 25 :8 ) ஏதோ ஒன்றைப் பார்த்தவுடன் வழக்கு மன்றத்துக்குப் போகாதே : நீ கூறுவது தவறென்று வேறொருவர் காட்டிவிட்டால் அப்போது நீ என்ன செய்வாய் ?
( நீ. மொ 25 : 11 ) தக்க வேளையில் சொன்ன ஒரு சொல், வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனிக்குச் சமம்.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.( 427 )

 – ஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படி இருக்குமென அறிவுடையவர்கள் தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

( நீ.மொ: 27:12 ) எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேகி மறைந்து கொள்வான், அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு ( 467 )

 – நன்றாக சிந்தித்த பின்பே செயலில் இறங்க வேண்டும், இறங்கியபின் சிந்திக்கலாம் என்பது தவறு.

என்னும் குறள் கூட இந்த நீதி மொழியோடு ஒப்பிடத் தகுந்ததே.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும் (114 )

 – ஒருவர் நேர்மையானவரா இல்லையா என்பதை அவருக்குப் பின் எஞ்சி நிற்கப் போகும் புகழ்சொல்லைக் கொண்டோ  அல்லது பழிச் சொல்லைக் கொண்டோ தான் நிர்ணயிக்கப்படும்.

( நீ.மொ : 20 :7 ) எவர் களங்கமற்ற நேர் வாழ்க்கை நடத்துகிறாரோ, அவருடைய பிள்ளைகள் அவர் காலத்துக்குப் பின் நல்ல பெயர் பெறுவார்கள்.

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர் ( 430 )

 – அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.

( நீ.மொ: 3 : 35 ) ஞானமுள்ளோர் தங்களுக்குள்ள பெரும் மதிப்பைப் பெறுவார்கள், அறிவிலிகளோ இழப்பார்கள்.

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு ( 963 )

 – உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும் அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போலக் கெடும் ( 283 )

 கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்துக் கொண்டு போய்விடும்.

( நீ. மொ ; 20 :17 ) வஞ்சித்துப் பெறும் உணவு முதலில் சுவையாய் இருக்கும் பின் அது வாயில் மணல் கொட்டியது போலாகும்.

குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை ( 758 )

 – தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்காமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்றுக் காண்பதைப் போன்றதாகும்.

( நீ.மொ : 18 : 11 ) செல்வர் தம் செல்வத்தை அரண் என்றும், உயர்வான மதில் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லோரும் செய்வர் சிறப்பு ( 752 )

 – பொருள் உள்ளவர்களை புகழ்வதும், பொருள் இல்லாதவரை இகழ்வதும் தான் இந்த உலக நடப்பாக உள்ளது.

( நீ.மொ : 14 : 20 ) ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் எனக் கருதுவர், செல்வர்க்கோ நண்பர் பலர் இருப்பர்.

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு ( 688 )

 – துணிவு, துணை , தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

( நீ.மொ : 13 : 17 ) தீய தூதர் தொல்லையில் ஆழ்த்துவார், நல்லதூதரோ அமைதி நிலவச் செய்வார்.

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு ( 849 )

 – அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான், அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்

( நீ.மொ : 18 :2 ) மதிகேடர் எதையும் அறிந்துகொள்ள விரும்ப மாட்டார், தம் மனதிலுள்ளதை வெளியிடவே விரும்புவார்.

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.( 184 )

 – நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பாராமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுதல் தவறு
( நீ.மொ : 18 : 8 ) புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உணவை உண்பது போல, அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி ( 226 )

 – பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைபிடிப்பதை விட ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

( நீ. மொ : 22 :9 )  கருணை உள்ளவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்.
( நீ. மொ: 28 : 27 ) ஏழைகளுக்குக் கொடுப்பவர்களுக்கு குறைவு ஏதும் ஏற்படாது, அவர்களைக் கண்டும் காணாதது போல இருப்போர் சாபங்களுக்கு ஆளாவார்.

உடம்போடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று ( 890 )

 – உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடி வாழ்வது ஒவ்வொரு நொடியும் அச்சம் கொள்ளத்தக்க விதமாய், ஒரு சிறு குடிலினுள் பாம்புடன் வாழ்தல் போன்றதாகும்.
( நீ. மொ : 21 : 9 ) மாடிவீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதை விட சிறு கிடிசை வாழ்க்கையே மேல்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு ( 127 )

 – ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும், இல்லையேல்  அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்

( நீ.மொ : 12:13 ) தீயோர் தம் பொய்யுரையில் தாமே சிக்கிக் கொள்வர், நேர்மையாளர் நெருக்கடியான நிலையிலிருந்தும் தப்புவர்.

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை ( 657 )

 பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதை விட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.

( நீ. மொ : 16 : 8 )  தீய வழியில் சம்பாதிக்கும் பெரும் பொருளை விட, நேர்மையோடு ஈட்டும் சிறு தொகையே மேல்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு ( 1 )

 – அகரம் எழுத்துக்களுக்கும், ஆதி பகவன் உயிர்களுக்கும் முதன்மை.

( நீ. மொ : ) தெய்வ பயமே ஞானத்தின் ஆரம்பம்.

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின் ( 403 )

 – கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள் கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்
( நீ. மொ : 17 : 28 ) பேசாதிருந்தால் மூடனும் ஞானி என்றே கருதப்படுவான், தன் வாயை மூடிக் கொள்பவன் அறிவுள்ளவன்.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி ( 118 )

 – ஒருபக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் வழங்குதலே சிறந்தது.

( நீ.மொ 11 :1 ) கள்ளத் துலாக்கோல் ஆண்டவருக்கு அருவருப்பானது, முத்திரைப் படிக்கல்லே அவர் விரும்புவது.
(நீ. மொ : 20 :10 ) பொய்யான எடைக் கற்களையும், பொய்யான அளவைகளையும் பயன்படுத்துகிறவர்களை ஆண்டவர் வெறுக்கிறார்.
 
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதிவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து ( 112 )
 
 – நடுவு நிலையாளன் செல்வத்துக்கு அழிவில்லை. அது வழி வழித் தலை முறியினருக்கும் பயன் அளிக்கும்.

( நீ. மொ 13 :22 ) நல்லவருடைய சொத்து அவருடைய மரபினரைச் சேரும் !

நீதியாய் இருக்கவேண்டும் என்று மேலும் நிறைய இடங்களில் சாலமோன் குறிப்பிடுகிறார்.

அவற்றில் சில :-

( நீ.மொ . 11 : 31 ) நீதியாளன் இவ் வுலகிலேயே கைம்மாறு பெறுவான்.
( நீ.மொ 12 : 28 ) நேர்மையாளனின் வழி வாழ்வு தரும். முரணானவனின் வழி சாவில் தள்ளும்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல். ( 113 )

 நடுவு நிலமை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மை தரக் கூடியதாக இருப்பினும் அந்தப் பயனை கைவிட்டு நடுவு நிலமையைத் தான் கடைபிடிக்க வேண்டும்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி ( 115 )

 ஒருவர் வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை. அந்த இரு நிலைமையிலும் நடுவு நிலையாக இருப்பதே பெரியோற்க்கு அழகாகும்.

கற்றதனால் ஆயபயன் கொல் வாலறிவான்
நற்றான் தொழார் எனில் ( 2 )

 – தன்னைவிட அறிவில் பெரியவர் முன் பணிவோடு நிற்காதவற்கள் கற்ற கல்வியினால் பயன் இல்லை .

( http://www.maraththadi.com/article.asp?id=1741 )

 ஓர் ஆழமான அலசல் நிகழ்த்தப்படுமானால் இன்னும் பல சுவாரஸ்யமான ஒற்றுமைகளும், வரலாற்று உண்மைகளும் வெளிவரக் கூடும்.

காட்சிக் கவிதை : அழகின் சிரிப்பு – ஒரு அனுபவப் பகிர்வு

village-life.jpg
தமிழோசையில் பணிபுரியும் நண்பர் யாணன் அவர்கள் கடந்த வாரம் நட்பு ரீதியாக என்னைச் சந்தித்தபோது “அழகின் சிரிப்பு” என்னும் குறுந்தகடு ஒன்றை அளித்துச் சென்றார்கள்.

இந்த வார இறுதியில் தான் அதை பொறுமையுடன் அமர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

பனை, பூ, ஏரி, மலை பற்றிய காட்சிக் கவிதைகள் என்னும் அடைமொழியுடன் அமைந்திருந்தது அந்த குறுந்தகடு.

பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி தான் அதைப் பார்க்கத் துவங்கினேன். பார்க்கத் துவங்கிய சில நிமிடங்களிலேயே முழுமையாக ஈர்த்துக் கொண்டது படைப்பு.

கவிஞர் பச்சியப்பனின் கவிதைகளும், “சந்தனக் காடு” வ.கெளதமனின் இயக்கமும், அன்புச் செல்வன் அவர்களின் இசையும் என்னை வலுக்கட்டாயமாக இழுத்து கிராமத்தின் தெருக்களில் இறக்கி விட்டன.

பனை குறித்த காட்சிக் கவிதையில் பனைமரம் பள்ளிச் சிறார்களுடன் நெகிழ்ச்சிக் கதைகள் பேசியது.

மலை குறித்த கவிதையில் மலையும், மலை சார்ந்த இடமும் மிக நேர்த்தியாகப் படம் பிடிக்கப்பட்டு பின் அது எப்படி கல்குவாரியாய் போனது என்பதை கனக்கக் கனக்கச் சொல்லியிருந்தனர்.

மண்ணின் இரத்த நரம்புகளாய் பாய்ந்து கொண்டிருந்த நதி எப்படி மண்ணில் மரணித்து காங்கிரீட் வனங்களை முளைப்பித்தது எனும் கதை கிராமத்து மணத்தை நாசியில் ஏற்றியது. குழந்தைகள் கூட்டமாக கும்மாளமிடுவதும், நவீன யுகத்தில் மொட்டை மாடியில் அளந்து வைத்த சதுர அடிகளில் கிரிக்கெட் விளையாட நிர்ப்பந்திக்கப்படுவதுமாய் வாழ்வின் துயர மாற்றங்களும், இழப்புகளும் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.

கடைசியாக வந்த பூ என்னும் கவிதை கலங்க வைத்தது. பாட்டி ஒருத்தியின் வாழ்க்கை வரலாறாய் விரிந்த அந்த கவிதை, கிராமத்துப் பெண் ஒருத்தியின் வாழ்வியல் எல்லைகளையும், அவளுடைய ஆழ்மனக் கிடங்குகளில் எரியும் அமிலக் காடுகளையும் அழகாய் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது.

பாசத்தின் உச்சத்தில் உட்கார்ந்திருந்த பெண் கணவனை இழந்தபின் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிராகரிப்புகள் என்னவென்பதை பார்வையாளர்களின் கண்கள் பனிக்கப் பனிக்க சொல்லியிருந்தனர். பார்த்து முடித்தபின் வேறேதும் செய்யத் தோன்றாமல் வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தேன்.

எல்லா கவிதைகளுமே இயற்கையை விட்டு மனிதன் விலகிச் சென்ற தூரங்களின் அவஸ்தைகளையும், இட்டு நிரப்பப்பட முடியாத இழப்புகளின் பள்ளத்தாக்குகளையும், தொலைந்ததையே அறியாமல் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையின் இயலாமையையும் அழகுற படம் பிடித்திருந்தன.

இப்படி ஒரு  ‘காட்சிக் கவிதை’ பார்த்ததில்லை எனுமளவுக்கு என் மனதை வெகுவாகக் கனக்கச் செய்த அந்த குறுந்தகடைப் பரிசளித்த நண்பருக்கு எப்படித் தான் என் நன்றிகளைத் தெரிவிப்பதோ ?

குறுந்தகடு வேண்டுவோர் அணுக வேண்டிய முகவரி :

பதனிச கம்யூனிகேசன்ஸ்.
தொ,பே : 2472 4848
மின்னஞ்சல் sowmiyaanbu@yahoo.co.in

நூல் விமர்சனம் : தலை நிமிர்ந்த தமிழச்சிகள்

thalai.jpg 

பைம்பொழில் மீரான் அவர்கள் எழுதிய “தலை நிமிர்ந்த தமிழச்சிகள்” எனும் நூலை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது.

இலக்கியம், திரைத்துறை, அரசியல் உட்பட பல துறைகளில் சிறந்து விளங்கிய தமிழச்சிகளைப் பற்றிய ஒரு அறிமுகமாக மலர்ந்துள்ளது இந்த நூல்.

ஒளவையார் (அவ்வப்போது அவ்வையார் என்கிறார்) , காரைக்காலம்மையார், ருக்மணி தேவி அருண்டேல், வீணை தனம், கே.பி. சுந்தராம்மாள், குந்தவை, மனோரமா, மணியம்மையார் நாகம்மையார் உட்பட சுமார் ஐம்பது பேரைக் குறித்த விளக்கமான குறிப்புகள் இந்த நூலில் கிடைக்கின்றன.

ஒரு அவசரமான தகவல் புரிதலுக்கு இந்த நூல் பெருமளவில் உதவி செய்கிறது. தேர்ந்தெடுத்த நபர்களைக் குறித்த தகவல்களைச் சேமித்திருப்பதிலும், சலிக்காத நடையைக் கொண்டிருப்பதிலும் நூலாசிரியரின் உழைப்பு தெரிகிறது.

ஆணாதிக்க சமுதாயத்தில் பதிவு செய்ய மறந்து போன பெண்களைக் குறித்த வரலாறுகள் என்று முன்னுரையில் சொல்லும் பைம்பொழில் மீரானின் கூற்று முழுமையாக ஒத்துக் கொள்வதற்கில்லை. நூலில் இருக்கும் ஒளவையாரோ, மனோரமாவோ, கே.பி சுந்தராம்மாளோ மற்ற பல நபர்களோ இருட்டடிப்பு செய்யப்பட்ட நபர்கள் அல்ல என்பது கண்கூடு.

எனினும், ஒரு தொகுப்பாகக் கிடைக்கும் போது பல செளகரியங்கள் உள்ளன. பாதுகாத்து வைப்பது உட்பட.

ஓர் அவசர தகவல் சரிபார்த்தலுக்கு உதவும் நூலாகவும் இதை கணக்கில் கொள்ளலாம்.

நூலில் உள்ளடக்கம் இல்லாதது ஒரு மிகப்பெரிய குறை. அதிலும் குறிப்பாக இத்தகைய தொகுப்புகளில் உள்ளடக்கம் மிக மிக தேவையானது.

தோழமை வெளியீடாக வந்துள்ள இந்த நூல் தகவல் விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.

தோழமை வெளியீடு
பக்கங்கள் 320
விலை ரூ.150/-
தொடர்பு எண் : 944302967

நூல் விமர்சனம் : இருள் விளக்க அழுகண்ணீர்ப் பாடல் (ஆதிக்க சாதிக்கு எதிராக 1925ல் எழுந்த ஒரு சாமானியனின் குரல்)

நூல் விமர்சனம் : இருள் விளக்க அழுகண்ணீர்ப் பாடல்
– ஆதிக்க சாதிக்கு எதிராக 1925ல் எழுந்த ஒரு சாமானியனின் குரல்
azhu.jpg

பழைய நூல்களைப் படிப்பது எப்போதுமே பல விதமான அனுபவங்களை அள்ளித் தரும். நூல் எழுதப்பட்ட காலத்தின் இலக்கியத் தன்மை, சமூகக் கட்டமைப்பு, கலாச்சார அமைப்பு முறை போன்றவற்றை அறிவதற்கும் ஒப்பீடு செய்வதற்கும் பழைய நூல்கள் பேருதவி செய்கின்றன.

அந்த வகையில் 1925ம் ஆண்டு கோவிந்தாச்சாரியாரவர்கள் என்பவர் எழுதிய இருள் விளக்க அழுகண்ணீர்ப் பாடல் என்னும் நூல் மறுபதிப்பாக வந்து உதவியிருக்கிறது.

ஆதிக்க சாதிக்கு எதிராக 1925ல் எழுந்த ஒரு சாமானியனின் குரல் என்னும் அடை மொழியுடன் ‘தோழமை’ வெளியீடாக சமீபத்தில் மறு பதிப்பாகி வெளியாகியிருக்கிறது இந்த நூல்.

அந்தணரும் சூத்திரரே அல்லாது வேறு இல்லை
செந்தணலைப் போல தெளிந்து தொழில் பார்ப்பார்
மந்தபுத்தியோடுலகை மாற்றி உடல் வளர்க்கும்
தொந்திப் பிராமணர்கள் கண் அந்தணர்களாவாரோ

என மரபு வடிவிலே நெடுங்கவிதை ஒன்று அழுகண்ணீர்ப் பாடலாக விரிகிறது.

ஆங்கிலேயர்கள், ஆரியர்கள் என கவிதையில் தெரியும் விஷயங்களில் ஆங்கிலேயர் தவிர்த்த பல விஷயங்கள் எழுபத்தைந்தாண்டு கால இடைவெளிக்குப் பின்னும் சமூக சூழலுக்கு பொருந்தக் கூடியதாக இருக்கிறது.

ஞான விளக்கொளி என்னும் உரை நடைப்பகுதியில்..

நம்மை எல்லோரும் உயர்ந்த சாதிக்காரன் அறிவுள்ளவளென்று சொல்லுவார்கள் என்று தினந்தோறும் காலை நாலு மணிக்கு எழுந்து காவேரிக்குப் போய் ஸ்நானம் செய்யாதீர்கள். வியர்த்தால் குளியுங்கள், பசித்தால் புசியுங்கள், இப்படிச் செய்யாவிட்டால் பல வியாதிகள் உண்டாகும். காலையில் குளித்து விபூதி அல்லது நாமம் தரித்தால் ஒருவன் உயர்ந்தஜாதியாவானா ? விபூதி நாமம் முதலிய வைக்காத கிறிஸ்தவர், துலுக்கர்கள் அதிகாலையில் குளிக்கிறதில்லையா ?

பஞ்சகச்சம் ஒருவனை சாதியில் உயர்வாக்காது. சில பெண்கள் மண்ணையும் பொன்னையும் அடைவதற்காக விபச்சாரம் செய்து பட்டாடைகளைக் கட்டிக் கொண்டு தங்களை உயர்ந்த சாதியென்று சொல்லுகிறார்கள். அது சுத்தப் பிசகு.

பசு யானை முதலிய மிருகங்களைத் தொட்டுக் கும்பிடலாம், பஞ்சறிவுள்ள மனிதர்களை தொட்டுக் கும்பிடலாகாதா ?

நீங்கள் வயிறு புடைக்கச் சாப்பிடும்போது உங்களை அவசரமாய் தேடி வருபவனிடம் பேசலாகாதா ? பேசினால் நீங்கள் தாழ்ந்த சாதியாய் விடுகிறீர்களா ?

சிவனைத் தொழுபவனல்லவோ சைவன் ? மாமிசம் சாப்பிடாதவனா ? மாமிசச் சத்து உண்ணாத மனிதனே இல்லை.

அகலிகை, துரோபதை, சீதை முதலிய ஐந்து கன்னிகளின் சரித்திரமாகிய இராமாயணம் முதலிய கட்டுக் கதைகளை நடுத்தெருவில் பிரசங்கம் செய்யச் சொல்லிக் கேட்காதீர்கள்.

இராமாயணமென்பது “சீதையென்னும் பரம் பொருளை இராவணனென்னும் மாயை கொண்டு போயிற்று அதை அனுமானென்னும் மனக்குரங்கை வசமாக்கினால் சீதையை அடையலாம்” என்பது தான்.

பாரதமென்பது “துரோபதைக்கு ஐந்து கணவராகிய பாண்டவர்களை (ஐம்புலன்களை) யாண்டு ஆறாவது கர்னன்மேலேயிச்சையென்பது பரம்பொருள் மேலிச்சை கொண்டாள் என்பதே.


இப்படியெல்லாம் பெரும்பாலும் மத நம்பிக்கைக்கு எதிராகவும், சாதிய சிந்தனைகளுக்கு எதிராகவும் நூல் முழுக்க கோவிந்தாச்சாரியார் அவர்கள் கோபத்தை வரிகளில் வரிந்து கட்டியிருக்கிறார்.

கவிதைகள் உரைநடை என கலந்து கட்டப்பட்டிருக்கும் இந்த நூலில் காதல் கவிதைகளும், சில எதற்கென்றே தெரியாத கவிதைகளும் கூட இருக்கின்றன.

சுயமரியாதை இயக்கம் உருவான காலத்தில் ஒரு தச்சுத் தொழிலாளியால் எழுதப்பட்ட இந்த நூல் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாய் எழுந்த ஒரு சமூகப் பிரதிநிதியின் உஷ்ணப் பெருமூச்சாய் சுடுகிறது.

திராவிட இயக்கம் வீச்சாக தலையெடுப்பதற்கு முன்பே இந்தப் படைப்பு வெளிவந்திருப்பது வியப்புக்குரியது என்று தன்னுடைய முன்னுரையில் குறிப்பிடுகிறார் இந்த பழைய நூலைக் கண்டெடுத்து பாதுகாத்து மறு பிரசுரத்துக்கு அளித்திருக்கும் திரு. ஒளிச்செங்கோ அவர்கள்.

ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்கும் தகுதி இந்த நூலுக்கு இருப்பதாக நான் கருதவில்லை. அதே வேளையில் எழுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கிறோம் என்பதையும், அந்த காலத்தில் எழுந்த சமூக, சாதீய, விடுதலை ரீதியான உணர்வுகளையும் அறிந்து கொள்ள இந்த நூல் சற்று உதவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை..

தோழமை வெளியீடு
9444302967
பக்கங்கள் 55
விலை ரூ. 30/-

( Picture taken from www.viruba.com )

தலைமுறை : நூல் விமர்சனம்

img_3166-small.jpg

( சுந்தர புத்தன் )
கூட்டமாக இருக்கும் ரயில் பெட்டியில் நெருக்கி நுழைகையின் உரசிச் செல்லும் மக்களில் சில கவிஞர்கள் இருக்கக் கூடும், சில ஓவியர்கள் இருக்கக் கூடும், சில விமர்சகர்கள் இருக்கக் கூடும்.

தூரத்து புதர்மறைவில் கிடக்கும் பொருளை மோந்து பார்த்து முன்னேறும் மோப்ப நாயின் சக்தியுடன், முகத்தைப் பார்த்து கலைஞர்களை அடையாளம் காணும் வலிமை மனுக்குலத்துக்கு வாய்க்கவில்லை.

எனவே தான் அறிமுகங்கள் அவசியமாகின்றன. பாட்டியின் சுருக்குப் பைக்குள் துழாவும் விரல்களுக்கு சுருக்குப் பையே உலகம். இந்த சுருக்குப் பைகளைப் போல உலகம் அமைந்து போன கலைஞர்கள் ஏராளம் ஏராளம்.

அத்தகையவர்களை அறிமுக வெளிச்சத்தில் பிடித்து நிறுத்தும் பணியைச் செய்ய பெரும்பாலான திறமை சாலிகளால் முடிவதில்லை. மனிதாபிமானமும், சக கலைஞனை மதிக்கும் பரந்த மனமும் இருப்பவர்களால் மட்டுமே அத்தகைய பணியைச் செய்ய இயலும்.

அந்த வகையில் இலக்கிய உலகின் முன்னால் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் பணியைச் செய்திருக்கிறது சுந்தர புத்தன் அவர்களின் “தலைமுறை”.

புதிய பார்வை இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்திருக்கும் இந்த நூலில் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் சிலர் வெளிச்சப்பரப்புக்குள் வந்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய தொல் குடிகளின் பாரம்பரிய இசைக்கருவியை மீட்டும் குமார் அம்பாயிரம், கார்ட்டூன்களை வீரியக் கருவியாய் பயன்படுத்தும் முகிலன், மலையாள கலாகிராமத்து உஞ்ஞி கண்ணன், குறும்பட ரேவதி, கிழக்கு பதிப்பக பத்ரி என சம்பந்தம் இல்லாத பல துறைகளிலுள்ளவர்களை முன்னிலைப்படுத்தியிருக்கும் பாங்கு வியக்க வைக்கிறது.

சுந்தரபுத்தன், பேராச்சி கண்ணன், ரவி சுப்ரமணியம், கார்முகில், அண்ணாமலை, கனகசபை என ஆறு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்திருக்கும் இந்த நூலில் சுமார் முப்பது பேருடைய அறிமுகம் கிடைக்கிறது.

இந்த நூலை பலர் எழுதியிருந்தாலும் கட்டுரைகளுக்கிடையே மிகப்பெரிய நடை வித்தியாசம் இல்லாமல் இருப்பது உறுத்தலற்ற வாசிப்புக்கு பெரிதும் உதவுகின்றது. எனினும் எழுத்தாளர்களின் கட்டுரைக் கட்டமைப்பில் மெலிதான ஒரு வித்தியாசத்தை உணராமல் இருக்க முடியவில்லை.

அறிமுக நூலுக்குரிய ஒரு சலிப்புத் தன்மை ஏற்படாமல் இலக்கியக் கட்டுரைகளை எழுதும் நேர்த்தியுடன் இந்த கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பது ரசிக்கும் படி அமைந்திருக்கிறது.

எனினும் அறிமுகமாகாத இளைஞர் அறிமுகம் என்னும் கொள்கையுடன் வெளிவந்திருக்கும் நூலில் ஜாக்குவார் தங்கம், பிரான்சிஸ் கிருபா போன்ற பரவலாய் அறியப்பட்ட நபர்களும் இடம் பெற்றிருப்பது சற்றே முரண்.

அருவி வெளியீடாய் வெளி வந்திருக்கும் இந்த நூல் கட்டமைப்பு, வடிவமைப்பு நேர்த்தியில் குறைபாடுகளின்றி சிறப்பாக வந்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

அருவி வெளியீடு
பக்கம் 112
விலை ரூ. 40
9444302967

சார்த்தரின் சொற்கள் : நூல் விமர்சனம்

sar.jpg
பிரஞ்ச் தத்துவஞானியான ஜீன் பால் சாத்ரூ ( சார்த்தர் ) வைப் பற்றியும் அவருடைய எழுத்துக்களைக் குறித்தும் எனக்குக் கிடைத்த முதல் அறிமுகம் கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்களிடமிருந்து தான். அவர் மிகவும் சிலாகித்துப் பேசும் சார்த்தர் எனக்கு பிடிபடாதவராகவே இருந்தார்.

‘மனிதனின் இருத்தல் அவனைச் சுற்றிலுமுள்ள உலகத்தைப் படைக்கிறது’ என்பது போன்ற ஆழப் பரந்து விரியும் தத்துவார்த்த சிந்தனைகளின் சொந்தக்காரர் அவர் என்பதனாலேயே அவர் மீதான பிரமிப்பு விரிவடைந்தது. எனினும் அவருடைய நூல்கள் எதையும்  முழுமையாய் வாசித்ததில்லை.

சமீபத்தில் தான் அவருடைய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘சொற்கள்’ எனும் நூலைப் படிக்க நேர்ந்தது. ஐம்பத்து ஒன்பதாவது வயதில் சார்த்தர் எழுதிய “The Words” எனும் நூலின் தமிழாக்கத்தை எழுத்தாளரும், மருத்துவருமான திரு வசந்த் செந்தில் தந்திருக்கிறார்.

ஐம்பத்து ஒன்பது வயதான ஒருவருடைய மழலைக்கால நிகழ்வுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த நூலைக் கொள்ளலாம்.

சார்த்தரின் மழலைக்காலக் கனவுகளில் அன்றைய சமூக அரசியல் முகமும் கூடவே வருவது அவருடைய அனுபவத்தின் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை.

தன்னுடைய தத்துவார்த்த சிந்தனைகளை மழலைக்கால அனுபவங்களின் வாயிலாகவும் அவர் சொல்ல முயற்சித்திருப்பது சார்த்தரின் ஆளுமையை உறுதிப்படுத்தியிருக்கிறது.

அதனாலேயே அவருடைய மழலைக்கால நினைவுகள், மழலைக்காலத்துக்கே உரிய துடிப்பை சற்று இழந்து விடுகிறது.

வசந்த் செந்தில் தன்னுடைய கவிதைகளுக்கு துள்ளல் நடையையும், கட்டுரைகளுக்கு எள்ளல் நடையையும் கொண்டிருப்பவர். இந்த மொழிபெயர்ப்புக்கு அவர் கடினமான ஒரு நடையை பயன்படுத்தியிருக்கிறார்.

ஒரு வேகமான வாசிப்பை அவருடைய மொழிபெயர்ப்பும், பக்கங்கள் கணக்காக விரியும் பத்திகளும் தடுத்து நிறுத்திவிடுகின்றன. ஒருவகையில் நிதானமான வாசிப்பையே சொற்கள் எதிர்பார்க்கின்றன என்று அவர் கருதியிருக்கக் கூடும்.

ஆனால் ஒரு டப்பிங் ஆங்கிலப் படம் பார்த்த உணர்வு மேலிடுவதற்கு அவருடைய மொழிபெயர்ப்பே முழு பொறுப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நினைவுகளை மீண்டெடுப்பது சுவாரஸ்யம். அதுவும் மழலைக்கால நினைவுகளை திரும்பிப் பார்ப்பது அதைவிட சுவாரஸ்யம். அந்த சுவாரஸ்யத்தையும் சீரியஸாகச் செய்து பார்த்திருக்கிறார் சார்த்தர்.

சார்த்தர் என்னும் தத்துவ மேதையின் பாசாங்கற்ற மழலைக்கால அனுபவங்களை தத்துவ வெளிச்சத்தில் வாசித்துப் பார்க்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை இந்த நூல் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

பக்கம் 238 : விலை 125/-
தோழமை வெளியீடு
5டி, பொன்னம்பலம் சாலை,
கே.கே. நகர்,
சென்னை 78
9444302967

ஆல்ஃரெட் ஹிட்ச்காக் – நூல் விமர்சனம்

alfred.jpg

அமெரிக்காவின் யூனிவர்சல் ஸ்டுடியோஸ் போயிருந்தபோது ‘ஹிட்ச்காக்’ காட்சியரங்கிற்கும் செல்ல நேர்ந்தது. ஹிட்ச்காக்கின் பெரும்பாலான படங்களை வியந்து பார்த்தவன் என்பதால் ஏற்பட்ட உந்துதல் அது எனவும் கொள்ளலாம்.

பல காட்சிப் பொருட்களுக்குப் பின் கடைசியாக ஹிட்ச்காக் இயக்கிய ‘சைக்கோ’ படத்தின் உலகப்புகழ் பெற்ற அந்த குளியலறைக் கொலைக்காட்சியை செய்து காண்பித்தார்கள். ஹிட்ச்காக் அந்த காட்சியை எப்படி படம் பிடித்தார் என்பதை ஒவ்வொரு காட்சியாக செய்து காண்பித்ததைப் பார்த்தபோது தான்
அந்த ஒரு காட்சிக்குப் பின்னால் இருந்த அவருடைய கற்பனையும் உழைப்பும் தெரிந்தது.

குளியலறை இரண்டாக பிளந்துகொள்ள காமரா முன்னோக்கிச் செல்லும் அந்த காட்சியமைப்பே வியக்க வைத்தது. அதன்பின் அன்று இரவு மீண்டும் சைக்கோ படத்தைப் பார்த்தேன். இயக்குனர் பார்வைக்கும் ரசிகனின் பார்வைக்குள் இடையே உள்ள இடைவெளியை உணரும் வாய்ப்பாய் அது அமைந்தது.

இது நடந்து நீண்ட வருடங்களுக்குப் பின் நேற்று திரு.மு. கமலக்கண்ணன் எழுதிய ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் எனும் நூலைப் படிக்க நேர்ந்தது. தோழமை வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலை எழுதியிருக்கும் கமலக்கண்ணன் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியர்.

ஹிட்ச்காக்கின் பெரும்பாலான படங்கள் குறித்த ஒரு தெளிவான விமர்சனமாக இந்த நூலைக் கொள்ளலாம். ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நிகழ்ந்த சுவாரஸ்யமான செய்திகளையும் சொல்லும் போது படத்தோடும் இயக்குனரோடும் அதிக மரியாதை தோன்றுகிறது.

உதாரணமாக சைக்கோ படத்தைப் பார்த்த பின் தொலைபேசிய தாய் ஒருத்தி தன் மகள் ஷவரில் குளிக்க மறுக்கிறாள் என்று சொல்ல, அப்படியானால் அவளை டிரைகிளீனிங் செய்யுங்கள் என்று ஹிட்ச்காக் செய்த குறும்பு திகிலுக்குள் குடியிருக்கும் ஜிலீரை வெளிக்காட்டுகிறது.

திரைப்படங்களுக்குத் தக்க படங்களையும் தேர்வு செய்திருப்பதில் இந்த நூலைத் தயாரித்தவர்களின் உழைப்பு தெரிகிறது.

கடைசி கட்டத்தில் ஹிட்ச்காக் பேட்டிகள் சிலவற்றையும் கொடுத்திருப்பதில் அவருடைய பார்வையை புரிந்து கொள்ள முடிகிறது. வெறும் திகில் இயக்குனராக அவரை அறிந்திருப்பவர்களுக்கு அவருடைய மாறுபட்ட அறிவை புரிந்து கொள்ள வைக்கிறது நூல்.

ஒவ்வோர் திரைப்படத்தைக் குறித்த சிறு அறிமுகமும், நடிகர்கள் குறித்த அறிமுகமும், தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிமுகமும் நூலுடன் வாசகனை ஒன்றிப் போக வைக்கிறது.

ஹிட்ச்காக்கின் ஆரம்ப கால மெளனப்படங்களைக் குறித்து நூல் மௌனம் சாதிக்கிறது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் சுவாரஸ்யங்களைத் தரவும் இந்த நூல் தவறியிருக்கிறது.

எனினும் மொத்தத்தில் ஆல்ஃரட் ஹிட்ச்காக் எனும் திகில் திரையுலக ஆளுமையை இந்த நூல் சரிவர படம்பிடித்திருக்கிறது.

தோழமை வெளியீடு

( பக்கங்கள் 160, விலை ரூ.100/- )
5டி, பொன்னம்பலம் சாலை,
கே.கே. நகர்,
சென்னை 78
9444302967

சேவியர் கவிதைகள் காவியங்கள் – சொக்கன் பார்வையில்

( உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை வெளியிட்ட ‘சேவியர் கவிதைகள் காவியங்கள்’ என்னும் தொகுப்புக்கு எழுத்தாளர் சொக்கன் அவர்கள் தந்த முன்னுரை ) சேவியர் – கவிதைகள் & காவியங்கள்

புகழ்பெற்ற ‘டைம்’ ஆங்கிலப் பத்திரிகையின் சமீபத்திய இதழொன்றைக் கடைகளில் பார்த்தேன், இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அதன் அட்டையில் இடம்பெற்றிருந்தார். அதைக் கண்டதும், அனிச்சையாய் ஒரு ‘ஆஹா’ செய்தேன், சந்தோஷமான ஆஹா, உற்சாகமான ஆஹா, பெருமை கலந்த ஆஹா, லேசாய்ப் பொறாமையும் கலந்த ஆஹா !

ஏனெனில், டைம் இதழின் அட்டையில் இடம்பிடிப்பது சாதாரண கௌரவமில்லை. சேவாகின் மானசீக குருவாக அவர் நினைக்கிற சச்சின் டெண்டுல்கர்கூட, இந்த பெருமையைப் பெறுவதற்கு பத்தாண்டுகளுக்குமேல் தொடர்ச்சியாய் விளையாடி, ஏகப்பட்ட நல்லபேர் வாங்கவேண்டியிருந்தது, 1999ல் டைம் இதழின் அட்டையை சச்சின் அலங்கரித்தபோது, அவர்தான் இந்த பெருமையைப் பெற்ற முதல் இந்திய வீரராய் இருந்தார், அவருடைய ‘மறுபிரதி’ என்று எல்லோராலும் ஆரவாரத்தோடு வரவேற்கப்படும் இளம் திறமையாளர் வீரேந்திர சேவகிற்கு, இருபத்தைந்து வயதிற்குள் டைமின் அட்டை கௌரவம். பெருமையோடு, பொறாமைப்படாமல் வேறென்ன செய்வதாம் ?

கிட்டத்தட்ட அதேபோன்றதொரு கலவை உணர்ச்சியைத்தான், நண்பர் சேவியரின் அனைத்து கவிதைகள், காவியங்கள் அழகான முழுத்தொகுப்பாய் வரவிருக்கும் சேதி கேட்டபோது அனுபவித்தேன். இந்த இளம் வயதில் ஒரு கவிஞரின் அனைத்து படைப்புகளும் நூல்வடிவம் பெறுவது எத்தகைய கௌரவம் ! அவரது திறமைக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்திருக்கிற பரிசாகவே இந்த பெருமையைக் கருதுகிறேன். பெருமிதம் கொள்கிறேன் !

எங்கள் ‘தினம் ஒரு கவிதை’ இணையக் குழுவோடு வளர்ந்த படைப்பாளி, எங்கள் ‘ஆஸ்தான கவி’ சேவியர் என்பதால் இந்த சந்தோஷம் இரட்டிப்பாகிறது, அவரை நேரில் பார்த்ததைவிட, இந்த இணையக்குழுவின் மூலமாகவும், குழுவின் பரிசீலனைக்கு அவர் அனுப்புகிற கவிதைகளின்வழியாகவும், பிற மின்மடல்களின்வாயிலாகவும் சந்தித்ததுதான் அதிகம், ஆகவே, அவருடைய படைப்புகள் அனைத்தையும், அவர் இயங்குகிற உற்சாகத்தையும், வேகத்தையும் அருகேயிருந்து ரசித்த பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

கவிதைகளைப் பொறுத்தவரை சேவியர் ஒரு புயல்.

ஒவ்வொரு வாரமும் ஏழெட்டு கவிதைகளாவது ‘தினம் ஒரு கவிதை’யின் பரிசீலனைக்குத் தவறாமல் அனுப்பிவிடுவார் சேவியர், மேலேமேலே கவிதைகளை அடுக்கி, நம்மைத் திக்குமுக்காடச் செய்கிற அவரது வேகம் எப்போதும் ஆச்சரியப்படுத்தும், அதேசமயம், வேகமாய்ச் செய்ததற்கான ஒரு அடையாளமும் கவிதைகளில் இருக்காது – ஒவ்வொன்றும் வெவ்வேறு புதுப்புது விஷயங்களைத் தொடுகிற கவிதைகள், ஒவ்வொன்றிலும் கச்சிதமான செய்நேர்த்தி., மென்மையான நடை, நல்ல வார்த்தைத் தேர்வு, நல்ல முத்தாய்ப்பு, நல்ல கருத்துகள் – ‘புயலுக்குள் ஒரு தென்றல் இருக்கிறது’ என்று ஒரு ஜென் சொலவடை உண்டு (உண்டா என்ன ?!) அது சேவியருக்குப் பொருந்தும்.

புதுமுயற்சிகளுக்கு எப்போதும் தயாராய் இருக்கிறவர் சேவியர், குறிப்பாய் சவால்கள் இவருக்கு ரொம்பவே பிடிக்கும் – இந்தக் காரணத்தாலேயே, ‘தினம் ஒரு கவிதை’க்காக அவ்வப்போது சிறு தொகுப்புகள் தயாரிக்கும்போது, அவற்றிலெல்லாம் சேவியரின் பங்களிப்பு தவறாமல் இருக்கும், சில விசேஷ தலைப்புகளை மையமாய்க் கொண்டு தயாராகும் இந்தக் கவிதைக் கொத்துகளுக்காக எழுதுவதென்பது, ஏற்கெனவே தைக்கப்பட்ட சட்டைக்கேற்ப, நம் உடம்பைக் குறுக்கி அல்லது விரித்துக்கொள்கிற கம்ப சூத்திரம்தான் ! ஆனால் அப்போதும், தன் கவிதைத் தரத்தை விட்டுக்கொடுத்துவிடாதபடி உழைக்கிறவர் சேவியர், கொடுத்த தலைப்பிற்குப் பொருத்தமாய், அதேசமயம் தனிப்பட்டமுறையில் – stand alone – பார்க்கிறபோது தரமான கவிதையாகவும் சேவியரின் அந்தப் படைப்புகள் மிளிரும்.

‘அந்த காலத்து ஐந்திணைகளையும் புதுக்கவிதையில் பயன்படுத்துவதுபோல் ஒரு தொகுப்பு கொண்டுவருவதாய் இருக்கிறேன் சேவியர், பாலைத் திணைக்கு நீங்கள் எழுதலாமே’ என்று வேண்டுதலாய் ஒரு மின்மடல் அனுப்பிவிட்டு வீட்டுக்குச் செல்வேன், மறுநாள் காலை என் மின்னஞ்சல் பெட்டியைத் திறக்கையில், பாலைத் திணையில் ஐந்து புதுக்கவிதைகளாவது காத்திருக்கும் ! இப்படி இம்-மென்பதற்குள் கொடுத்த தலைப்புகளிலெல்லாம், அதுவும் ஐந்து அல்லது ஆறுக்குக் குறையாத கவிதைகளை ஒரு ராத்திரிக்குள் எழுதி அனுப்பிவிடுகிற சேவியரை, ‘நவீன காளமேகம்’ என்று நான் வேடிக்கையாய் அழைப்பதுண்டு !

ஒரு கவிதையின் மேன்மைக்கு உண்மையான உணர்வுகள் எந்த அளவு முக்கியமோ, அதே அளவு கச்சிதமான தகவல்களும் அவசியம் என்று நினைக்கிறவர் சேவியர். ஒவ்வொரு கவிதைக்கும் அவர் தயாராகிற விதம், பரவசமூட்டும் ஒரு அனுபவம், அதற்காக தன் நினைவு அடுக்குகளிலிருந்தும், இணையத்திலும், பிற நண்பர்களிடமும் அக்கறையோடு அவர் தகவல்கள் சேகரிப்பது வழக்கம். அப்படி ஆழ்ந்த ஈடுபாட்டோ டு சேர்க்கும் விஷயங்களை, வெறுமனே பட்டியலிடும் படைப்புகளாய் தன் கவிதைகளை அமைத்துவிடாமல், அழகியல் உணர்வோடு அவற்றைக் கோர்த்துக் கவிதையாக்கும் வித்தகர் இவர்.

அதேபோல், ஒவ்வொரு விஷயத்தைச் சொல்லும்போதும், அதற்கான சரியான வார்த்தைகளைத் தேடித் தேடிச் சேர்ப்பதும், மிகப் பொருத்தமான உவமைகளுக்காக பாடுபடுவதையும் கண்கூடாய்ப் பார்த்திருக்கிறேன் – முந்தின நாள் இரவு ஒரு கவிதை அனுப்பியிருப்பார், மறுநாள் அலுவலகம் செல்வதற்குள் இன்னொரு மின்னஞ்சல் வந்திருக்கும், ‘பழைய கவிதையை மறந்துவிடுங்கள், ஒரு சிறு மாற்றம் செய்து, இதோ மீண்டும் அனுப்பியிருக்கிறேன்’ என்பார், இரண்டு கோப்புகளையும் திறந்து, ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரே ஒரு வார்த்தை மாறியிருக்கும், ஆனால் அந்த மாற்றம் கவிதையின் தரத்தைப் பலமடங்கு உயர்த்தியிருக்கும், தனக்கு முழுத் திருப்தி உண்டாகிறவரை தன் முயற்சியில் சளைக்காத நவீன விக்ரமாதித்யன் என்று இவரைச் சொல்லிவிடலாம். (இந்த உதாரணத்தைச் சொன்னதற்காக, நல்ல கவிதையை வேதாளம் பிடிப்பதற்கு ஒப்பிடுகிறேன் என்று யாரும் என்னை உதைக்கவராமலிருப்பார்களாக !)

உதாரணமாய், ஒருமுறை ‘வண்ணக் கவிதைகள்’ எனும் தலைப்பில், ஐந்து கவிஞர்கள் ஆளுக்கொரு வண்ணம்பற்றி கவிதைகள் எழுதினார்கள், சேவியர் வெள்ளை நிறம்பற்றி எழுத ஒப்புக்கொண்டிருந்தார். வழக்கம்போல் அந்தப் பொருளில் ஐந்து கவிதைகள் அனுப்பியிருந்தார், ஐந்தையும் வாசித்தேன், அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். என்றாலும், அவருக்கு எழுதிய நன்றி மடலில், ‘இந்தமுறை உங்கள் ஐந்து கவிதைகளில் எனக்கு முழுத் திருப்தி அளித்ததாக எதுவும் இல்லை சேவியர், ௾ருப்பதில் சிறந்ததைத்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ என்று பொருள்படும்படி எழுதிவிட்டேன்.

அந்த மடல் மென்மனது சேவியரைத் தைத்துவிட்டது, மறுநாள் அதே தலைப்பில் இன்னும் சில கவிதைகளை முயன்று, ‘இவற்றுள் ஏதேனும் உங்களுக்கு முழுத் திருப்தி அளிக்கிறதா ?’ என்று தவிப்போடு கேட்டிருந்தார், படைப்பாக்கத்தின் உன்னத நிலையைத் தொட்டுவிடுவதற்கான அவரது ஏக்கத்தை அன்று புரிந்துகொண்டேன். ௾ந்த ஏக்கமும், சாதிப்பதற்கான சுய ஊக்கமும்தான் அவரை இன்றைய நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது, எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்களின் ‘புது நானூறு’ (சிறந்த நானூறு புதுக்கவிதைகள்) வரிசையில் அவரது படைப்பிற்கு இடம்பிடித்துத்தந்திருக்கிறது, இந்திய ஜனாதிபதி பாரதரத்னா டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவரின் இதயத்தைத் தொட்டு, மனம்நிறைந்த பாராட்டு வாங்கித்தந்திருக்கிறது !

அமெரிக்காவில் இருந்துகொண்டு தமிழ்வளர்க்கிற இந்த இளம்கவிஞர், ‘விரைவில் இந்தியா வருகிறேன்’ என்று முதன்முதலாய்த் தொலைபேசிய தினம் எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது, ‘இந்த தடவை இந்தியா வரும்போது ஒண்ணு, கல்யாணம் செஞ்சுக்கணும், அல்லது ஒரு கவிதைத் தொகுப்பு கொண்டுவரணும்’ என்று குறும்பு கலந்த ஆர்வத்தோடு சொன்னார் சேவியர், ‘முதல் விஷயத்தை நீங்கள் கவனியுங்கள், கவிதைத் தொகுப்பு தானாய் வரும்’ என்று சொல்லிவைத்தேன், அதேபோல் அவரது திருமணம் முடிந்த சில நாள்களுக்குள், சேவியரின் முதல் கவிதைத் தொகுப்பு, ‘ஒரு மழை இரவும், ஓராயிரம் ஈசல்களும்’ வெளியானது ! அதன்பின் ‘மன விளிம்புகளில்’ எனும் இரண்டாவது தொகுதி சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல், இந்த முழுத்தொகுப்பு, அவரது திறமையைத் தமிழ்கூறு நல்லுலகிற்கு எடுத்துச்செ(சொ)ல்லும் என்னும் நம்பிக்கை எனக்குண்டு.

இந்தத் தொகுப்பைப் பார்க்கையில், சட்டென்று கண்ணில் படுகிற ஒரு விஷயம், ரொம்பவே சந்தோஷமளிக்கிறது. இயற்கை, காலமாற்றங்கள், காதல், குடும்பம், சமூகம் என்று ஒவ்வொரு தலைப்பிலும், ஒரு சிறு தொகுப்பு வெளியிடுமளவு ஏராளமான கவிதைகளை எழுதியிருக்கிறார் சேவியர். இவை யாவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டவை என்றாலும், இவற்றை இந்தமுறையில் தொகுத்து வாசிக்கும்போது, கவிஞரின் சிந்தனை வீச்சையும், ஒரே துறைசார்ந்த விஷயங்களை, பிரச்சனைகளை வெவ்வேறு கோணங்களிலிருந்து அவர் கையாளும் விதத்தையும் வியக்கமுடிகிறது. குறிப்பாய், காலமாற்றங்கள் குறித்த சேவியரின் கவிதைகளை, இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த பகுதி என்று குறிப்பிட்டுச் சொல்வேன் !

அவரே அடிக்கடி சொல்வதுபோல், சேவியரின் வேர்கள் அவரது ௾ளம்பருவ கிராமத்தில் ௾ருக்கின்றன, ஆகவே, நாகரீகத்தின் மற்றோர் எல்லையாக கருதப்படும் நகரங்களுக்குப் புலம்பெயர்ந்த ஒரு கிராமத்தானின் குரலாகவே அவரது பல கவிதைகள் ஒலிக்கின்றன. ௾ந்த மாற்றத்தை, அதன் விளைவுகளை, ௾ழப்புகளை, லாபங்களை அவர் தனது கவிஞனின் கண்களால் பார்த்து, அலசி, வர்ணித்து எழுதும்போது, வாசிக்கிறவர்கள் தங்களையே அதில் பார்த்துக்கொள்ளமுடிகிறது.

புரியாமல் எழுதுவதில் இவருக்கு நம்பிக்கையில்லை, ஒரு படைப்பு அதன் வாசகரை எளிமையாய், முழுமையாய்ச் சென்றுசேரவேண்டியது, படைப்பாளி அனுபவித்த அதே வலியை, அல்லது சந்தோஷத்தை அவருக்குள் உண்டாக்குவதை அவசியமாய்க் கருதுகிறார் சேவியர். அழகியல் உணர்ச்சியோடும், நேர்த்தியோடும் சொல்லப்படவேண்டிய கவிதைகள், தம்முள் சில நல்ல கருத்துகளையோ, உறுத்தாத, உரக்கச் சொல்லாத அறிவுரைகளையோ சுமந்து சென்றால், அது கலா-துரோகமில்லை என்பதும் இவரது நம்பிக்கை, இந்த எண்ணத்தின் பிரதிபலிப்புகளாகவே சேவியரின் பெரும்பாலான படைப்புகள் அமைந்திருக்கின்றன.

சேவியரின் கவிதைகள் பலதும், குறுங் கதைகளாகத் தோன்றுகின்றன. இதற்குக் காரணம், கவிதையின் கடைசிப் பகுதிக்கு அவர் தரும் முக்கியத்துவம், முத்தாய்ப்பு வரிகளில், அதுவரை கிடைத்த வாசகானுபவம் முழுமையடையவேண்டும் என்பதில் அவர் காட்டுகிற அக்கறை, அவரது படைப்புகளை, கச்சிதமாய் சொல்லப்பட்ட சிறுகதைகளோடு ஒப்பிட்டு மகிழச் செய்கின்றன.

அதேபோல் சேவியரின் காவியங்கள், கவிதை நடையில் எழுதப்பட்ட சிறுகதைகளாக / குறுநாவல்களாகவே தோன்றுகின்றன. ஆனால் அவற்றிலும்கூட, வியக்கவைக்கும் பல வர்ணனைகளை எழுதியிருக்கிறார் சேவியர், கதை என்ற அளவில் இவற்றை அணுகும் வாசகன் ஏமாற்றமடையச் சாத்தியமுண்டு, ஆனால் இப்படி லேசான கதைக் கருக்களை எடுத்துக்கொண்டு, அவற்றை அலங்கரித்து, தலைவாரிப் பூச்சூட்டி அழகுபடுத்துவதிலேயே சேவியரின் முழு கவனமும், வெற்றியும் இருக்கிறது. ஆகவே, இவற்றையும் நீள்கவிதைகளாகவோ, உரைவீச்சுகளாகவோ அணுகி வாசிப்பது நிறைவளிக்கிறது.

ஆர்வமுள்ள படைப்பாளிக்கு, எல்லைகளில் பிரியமிருப்பதில்லை. ஆகவே, சேவியரும் வழக்கமான கவிதைகள் தாண்டிய புது முயற்சிகளில் தொடர்ச்சியாய் ஈடுபட்டுவருகிறார். இயேசு கிறிஸ்துவின் வாழ்வைப் புதுக்கவிதையில் சுருக்கமாகவும், அழகாகவும் சொன்ன அவரது ‘இறவாக் காவியம்’ மற்றும் சாலமோன் நீதிமொழிகளைப் புதுக்கவிதை வடிவில் தருகிற முயற்சி ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை. புனைகதைகள் எழுதுவதிலும் ஆர்வம்மிக்க சேவியரின் சிறுகதைகள் முன்னணி இதழ்களில் வெளியாகியிருக்கின்றன, அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இசை ஆல்பம் ஒன்றிற்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார், தற்போது அன்னை தெரசாவின் வாழ்வைப் புதுக்கவிதை வடிவில் தருகிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இவர்.

சேவியரின் மனைவி திருமதி. ஸ்டெல்லா அவரது இலக்கிய ஆர்வத்துக்கு உறுதுணையாய் இருக்கிறார், தன் கணவரின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவருகிறார் இவர், ஆகவே விரைவில் சேவியரின் கவிதைத் தொகுப்புகள் ஆங்கிலத்திலும் வெளிவரத்துவங்கும் என்று நம்பலாம்.

இரைச்சலான இன்றைய திரைப் பாடல்களில்கூட, நல்ல கவிதை வரிகளைத் தேடிக் கண்டெடுத்து ரசிக்கும், பகிர்ந்துகொள்ளும் கவிதைப் பித்தர் சேவியர், அவரோடு நட்புரீதியில் பழகும் எவரையும், நல்ல கவிதைகளின்பக்கம் இழுத்துப்போய்விடுவது அவரது மிகநல்ல பழக்கங்களுள் ஒன்று.

நான் அவரிடம் அடிக்கடி சொல்வதுபோல், வயது அவரது பக்கம் இருக்கிறது. அவருடைய அனைத்து முயற்சிகளுக்கும், எல்லாம்வல்ல இறைவன் துணைநிற்பானாக !

நான் சத்தியமாய்க் கவிஞனில்லை, கவிதை ரசிகன், ஆகவே சேவியரின் ரசிகன், நண்பன், அவரது பல கவிதைகளை இணையத்தில் பதிப்பித்தவன் என்கிற நட்புரிமையில்தான் இந்த முன்னுரையை எழுதியிருக்கிறேன், அதே உரிமையோடு சேவியருக்கு ஒரு விண்ணப்பம் அல்லது கோரிக்கையையும் முன்வைக்கிறேன். இன்றைய இலக்கிய உலகில் இயங்குகிறவர்கள், தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்துக்கொண்டுதான் முன்னேறவேண்டிய சூழ்நிலை, இந்த சுய ஊக்கம் – self motivation – சேவியரிடம் அளவுக்கு அதிகமாகவே உண்டு, அந்த அதீத உற்சாகத்தில் நிறைய எழுதுகிறார், ரொம்ப நல்ல விஷயம், ஆனால், வருங்காலத்தில், இந்த வேகத்தால் அவரது எழுத்தின் தரம் நீர்த்துப்போய்விடாதபடி அவர் கவனமாய்ப் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம், ஏனெனில், இனி அவரது படைப்புகள் அவருக்கு மட்டுமில்லை, தமிழ்க் கவிதை உலகிற்கும் சொந்தம் !

அதேபோல், சமகாலக் கவிதை முயற்சிகள், நூல்கள்பற்றிய தனது கருத்துகளை அவர் பதிவுசெய்யவேண்டியது அவசியம். கவிதையோடு, நல்ல உரைநடைக்கும் சொந்தக்காரரான சேவியர், நூல் விமர்சனங்கள், அறிமுகங்கள், அலசல்கள் போன்றவற்றில் ௾ன்னும் அதிக முனைப்போடு ஈடுபடவேண்டும் என்பது என் விருப்பம், அது அவரது படைப்புருவாக்கத்திறனை பல எல்லைகளுக்குக் கொண்டுசெல்லும் என்று நான் திடமாய் நம்புகிறேன், வேண்டுகிறேன்.

கடைசியாய் ஒரு விஷயம், இப்படியொரு அற்புதமான முழுத்தொகுப்பு வெளியிடுமளவு சாதித்தபிறகும், ‘நான் என்ன பெரிதாய்ச் செய்துவிட்டேன் ?’ என்று அமரருள் உய்க்கும் அடக்கத்தோடு கேட்கிறார் பாருங்கள், அதற்கு ஒரே ஒரு அர்த்தம்தான் – இன்னும் நிறைய சாதிக்கப்போகிறார் இவர், எல்லாவற்றுக்கும் முன்கூட்டிய வாழ்த்துகள் சேவியர், கைதட்டக் காத்திருப்பவர்களின் கடையேன் யான் !

என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
ஆத்தூர்.
(03 05 2003)