பாலாஜி சக்திவேல் vs பாலு மகேந்திரா

balumahendra.jpg

சாருநிவேதிதாவின் மூன்று புத்தகங்கள் வெளியிடும் விழா நேற்று சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடந்தது.

எஸ்.ரா, அழகிய பெரியவன் என எழுத்தாளர்களும், பாலுமகேந்திரா, பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் என இயக்குனர்களும் நிரம்பியிருந்த விழாமேடையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தது நடிகை ஜோதிர்மயி அருகிலேயே அவருடைய காதைக் கடித்தபடி சாரு நிவேதிதா.

சாருநிவேதிதாவின் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள், இலக்கியம் குறித்த கட்டுரைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் என மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

வழக்கமான புத்தக வெளியீட்டு விழாவின் இலக்கணங்களை மீறாமல் எல்லோரும் சாருவின் அருமை பெருமைகளை மேடையில் முழங்கிக் கொண்டிருந்தனர்.

சொல்லி வைத்தது போல எல்லோருமே சாரு திரைப்படத் துறைக்கு வரவேண்டும் என்னும் கோரிக்கையையும் வைத்தனர்.

விழாவில் பாலுமகேந்திராவின் பேச்சு ஒரு நிஜமான கலைஞரின் உணர்வு பூர்வமான வெளிப்பாடாக இருந்தது.

சாரு நிவேதிதா தன்னுடைய நூலில் பாரதிராஜாவைப் புகழ்ந்து பேசிக் கொண்டு பாடல்கள் இல்லாத திரைப்படங்களை பாரதிராஜா எடுத்தால்( கேப்டன் மகள் – என்று ஒரு படம் வந்ததை சாரு மறந்து விட்டாரா ?) அவை அடூர் கோபாலகிருஷ்ணனின் படங்களோடு ஒரே தராசில் வைத்து எடையிடப் படக்கூடிய வலிமை படைத்ததாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

இதை சுட்டிக் காட்டிய பாலுமகேந்திரா, என்ன சாரு, என்னுடைய வீடு சந்தியாராகம் எனும் இரண்டு படங்களுமே பாடல்கள் இல்லாமல் எடுக்கப்பட்டது தான். அவை பெருமைக்குரிய படங்கள் இல்லையா ? அவற்றைக் குறித்த ஒரு தகவல் கூட இல்லையே என்று பேசியபோது உணர்ச்சி வசப்பட்டு நாதழுதழுத்தார். அழுகையை மறைக்க சில வினாடிகள் தேவைப்பட்டது அவருக்கு.

ஒரு நிஜமான கலைஞர் தன்னுடைய படைப்பிற்குக் கிடைக்க வேண்டிய கவுரவத்தை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவருடைய பேச்சு சுட்டிக் காட்டியது.

ஒரு நியாயமான விமர்சகன் ஒரு விஷயத்தை வெளிப்படையாய் எழுதும் போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை உரக்கச் சொல்வதாகவும் அமைந்தது அது.

அவர் சொன்ன இன்னொரு விஷயம் மிகவும் கனமானது.

பாலாஜி சக்திவேல் தன்னுடைய கல்லூரி திரைப்படத்தில் பேருந்தோடு சேர்த்து மூன்று மாணவிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தை வியாபார நோக்கில் சொல்லியிருந்ததாக நேரடியாகவே குற்றம் சாட்டினார்.

இத்தகைய துயரமான நிகழ்வு ஒரு கனமான ஆவணப் படமாக எடுக்கப்பட வேண்டியதேயன்றி ஆடல் பாடல்களுக்கு இடையே காட்டப்பட வேண்டியதல்ல. என்னை பல நாள் தூக்கமிழக்கச் செய்த அந்த மாணவிகளின் ஓலத்தை இப்படி வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தியது சரியல்ல என்று குறிப்பிட்டார்.

ஒருவேளை டிரைலரில் அந்த காட்சி இடம்பெற்றிருந்தால், ஒரு சண்டை, ஒரு  பாடலுக்கு இடையே அந்த நிகழ்வும் காட்டப்பட்டிருந்தால் அதன் அழுத்தம் எவ்வளவு மலினப்பட்டிருக்கும் என்பதை அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

பாலுமகேந்திராவின் மீது நான் வைத்திருந்த மரியாதையை சற்று அதிகரிக்கச் செய்தது அவருடைய வெளிப்படையான பேச்சு. அதுவும் பாலுமகேந்திரா எனக்கு குரு என்று பாலாஜி சொல்லியிருக்கும் சூழலில் தைரியமாக மேடையிலேயே பாலு பேசியது அவருடைய கருத்தின் மீது அவர் கொண்டிருந்த பற்றுறுதியைக் காட்டியது.

பல வேளைகளில் திரையுலகம் செய்கின்ற பிழை இது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வியாபார நோக்கத்துக்காக சோகமான நிகழ்வுகளை கமர்ஷியல் அம்சமாக்கி விடுகின்றனர்.

படுகொலைகள், இயற்கைச் சீற்றங்கள் போன்ற அனைத்துமே ஆடல் பாடல்களுடன் அரங்கேறும் போது அந்த நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு எழும் சோகம் கொஞ்ச நஞ்சமல்ல.

இப்படித்தான் நான் எப்போதும் மதிக்கும் பிரமிப்புக்குரிய கவிப்பேரரசு வைரமுத்து ஒருமுறை எழுதினார்…

சுனாமி சீற்றத்தினால் பல்லாயிரம் உயிர்கள் மாண்டதற்கு கண்ணீர்க் கவிதை வடித்த கையோடு ஒரு திரைப்படத்திற்குப் பாடல் எழுதினார்.

சின்னச் சின்னச் சிகரங்கள் காட்டி
செல்லக் கொலைகள் செய்யாதே

எனும் சில்மிஷப் பாடல்.

கட்டிக் கொண்டு கையாடச் சொன்னது காமச் சாமியோ
நான் கட்டும் ஆடை களவாடப் பார்க்கும் நீதான் சுனாமியோ ? என்று.

சுனாமி ஏற்படுத்திய சோகம் சற்றும் விலகாத சூழலில் எப்படி ஒரு கவிஞரால் கட்டும் ஆடையைக் களவாடப் பார்க்கும் காமுகனாக, சில்மிஷத் தென்றலாக சுனாமியை பார்க்கத் தோன்றியது என்னும் அதிர்ச்சி எனக்குள் இப்போதும் உண்டு.

பாலுமகேந்திராவின் நியாயமான கேள்வியும், சமூகப் பிரக்ஞையும் அனைத்து படைப்பாளிகளுக்கும் வேண்டும். தங்கள் படைப்புத் திறனும், வியாபாரமும் மட்டுமே பேசப்பட வேண்டும் எனும் வேட்கையை இத்தகைய துயரத் தருணங்கள் குறித்த நிகழ்வுகளிலேனும் சற்று குறைத்து பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்தில் அமர்ந்து படைப்புகளைச் செய்யும் சமூக பங்களிப்பும் மனித நேயமும் வளர வேண்டும்.